Published : 16 Aug 2019 07:27 AM
Last Updated : 16 Aug 2019 07:27 AM

360: உடற்பயிற்சிக்குப் பிறகு மேலும் எடை அதிகரிக்க என்ன காரணம்?

உடல் எடை அதிகரிப்பு, ஊளைச்சதைப் பெருக்கம், நீரிழிவு நோய் ஆகியவற்றுக்குப் பிறகு ஏராளமானோர் உடற்பயிற்சி செய்கின்றனர் என்றாலும், பலருக்கும் உடற்பயிற்சிக்குப் பிறகு மேலும் எடை அதிகரிக்கிறது. இதற்குக் காரணம் உடற்பயிற்சிக்குப் பிறகு இழந்த எரியாற்றலை ஈடுகட்ட அதிமாகச் சாப்பிடுவதுதான் காரணம் என்கிறது ஒரு ஆய்வு முடிவு.

அமெரிக்காவின் லூசியானா மாநிலத்தில் உள்ள பெனிங்டன் பயோ-மெடிக்கல் ரிசர்ச் சென்டர், பேடன் ரூஜ் மையத்தைச் சேர்ந்த நிபுணர்கள் புதிய ஆய்வை மேற்கொண்டனர். 18 வயது முதல் 65 வயது வரையுள்ள 171 பேரை ஆய்வுக்கு எடுத்துக்கொண்டனர். அவர்களுடைய உடல் எடை, ஓய்வெடுக்கும் தன்மை, பசி-தாக அளவுகள், தினமும் உட்கொள்ளும் திட உணவு, திரவ உணவு அளவு, உடல் ஆற்றலை அவர்கள் செலவழிக்கும் முறை ஆகியவற்றைப் பதிவுசெய்தனர். மற்றவர்களுடைய அன்றாட வாழ்க்கை முறையும் அவர்கள் செலவழிக்கும் ஆற்றல்களின் அளவும் பதிவுசெய்யப்பட்டன. உடல் எடையில் வாரத்துக்கு ஒரு கிலோவுக்கு 700 கலோரி என்ற அளவுக்கு ஆற்றலைக் குறைத்தனர். உடற்பயிற்சி செய்யாதவர்கள் ஒரு கிலோவுக்கு 200 கலோரி என்று கரைத்தனர். இரண்டு குழுக்களும் ஆறு மாதங்களுக்குத் தொடர்ந்து உடற்பயிற்சிகளை மேற்கொண்டன. அவர்களுடைய உடல் எடைகளில் மாறுதல், பெற்ற ஆற்றல் அளவு, உடல் தகுதி ஆகியவை பதிவுசெய்யப்பட்டன.

இழப்புக்கு ஏற்ப சாப்பிடுவதை அதிகப்படுத்தியதால் அவர்களின் உடல் எடை கூடியது என்பது அறியப்பட்டது. குறைவாகப் பயிற்சி செய்தவர்கள் உடல் எடையில் அன்றாடம் 90 கலோரி கூடியது. மற்றவர்கள் உடலில் 125 கலோரிகள் சேர்ந்தன. ஆக, உடல் எடையைக் குறைக்க உடற்பயிற்சி மேற்கொள்பவர்களின் உணவுப் பழக்கத்திலும் மாற்றம் அவசியம். உடலுக்கு சக்தி தரும், ஆனால் எடையேற்றாத உணவு வகைகளை உண்ணத் தொடங்க வேண்டும். உண்பதில் நேரக் கட்டுப்பாடும் அளவுக் கட்டுப்பாடும் அவசியம்.

பின்தள்ளப்பட்ட சமூக மாணவர்களைப் படிப்பிலிருந்து பாதியில் துரத்துவது எது?

ஐஐடி கல்வி நிலையங்களில் சேர்வதற்காகத் தனிப் பயிற்சி, நுழைவுத் தேர்வு என்று ஏகப்பட்ட நிலைகளைக் கடக்க வேண்டியிருக்கிறது. அப்படி தீவிரப் போட்டியில் வெற்றிபெற்று ஐஐடியில் சேர்ந்த பிறகும்கூட, படிப்பைத் தொடராமல் விலகும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகமாகிவருகிறது. நாட்டிலுள்ள 33 ஐஐடிகளில் கடந்த இரண்டு ஆண்டுகளில் மட்டும் இப்படி 2,461 மாணவர்கள் விலகியிருக்கிறார்கள். டெல்லி, கரக்பூர் ஐஐடிகளிலிருந்து விலகியவர்கள் மட்டும் 57%. டெல்லியிலிருந்து 782 பேரும் கரக்பூரிலிருந்து 622 பேரும் விலகியுள்ளர். மும்பையிலிருந்து 263, கான்பூரிலிருந்து 190, சென்னையிலிருந்து 128 பேர் விலகினர். வேறு கல்லூரிகளில் இடம் கிடைத்துச் செல்வது, வேறு நிறுவனங்களுக்கு வேறு பிரிவுகளில் சேரச் செல்வது, மேல்படிப்புக்கு வெளிநாடுகளுக்குச் செல்வது, முதுகலைப் படிப்புகளில் சேர்வதற்காகச் செல்வது, தனிப்பட்ட காரணங்கள், மருத்துவக் காரணங்கள், வேலைவாய்ப்பு என்று பல காரணங்களுக்காக மாணவர்கள் விலகுகின்றனர் என்று மாநிலங்களவையில் விளக்கம் அளித்திருக்கிறது மனிதவள ஆற்றல் துறை. ஆனால், விலகியவர்களில் 1,171 பேர் பற்றிய தரவுகளை ஆராய்ந்தபோது 47.5% பேர் பட்டியல் இனத்தவர், பழங்குடிகள், இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் என்று தெரிகிறது. இடஒதுக்கீடு பெற்ற மாணவர்கள் அதிக எண்ணிக்கையில் வெளியேறுவதற்கு, மூத்த மாணவர்களின் கேலிப் பேச்சு உள்ளிட்ட இதர அம்சங்களும் காரணமாக இருக்கக்கூடும் என்ற கருத்தும் நிலவுகிறது. உயர் கல்வி நிறுவனங்களில் நிலவும் சாதிரீதியான பாகுபாட்டை விவாதிக்க வேண்டிய சூழலை இது சுட்டுகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x