செய்திப்பிரிவு

Published : 15 Aug 2019 07:43 am

Updated : : 15 Aug 2019 07:45 am

 

360: நம் தேசியக்கொடியின் சரித்திரப் பயணம்

history-of-our-national-flag

1857-ல் நடந்த சிப்பாய் புரட்சியின்போதே இந்தியாவுக்கென்று ஒரு கொடி பிறந்துவிட்டது. அது பின்னால் வரப்போகும் கொடிகளுக்கு அடையாளமான முன்னோடி. விடுதலை பெறப்போகும் இந்திய நாட்டுக்குக் கொடி அவசியம் என்று முதலில் சிந்தித்தவர் விவேகானந்தரின் சீடரும் ஐரிஷ் நாட்டவருமான சகோதரி நிவேதிதா. கல்கத்தாவில் 1906-ல் நடந்த காங்கிரஸ் மாநாட்டில் அதை அவர் தயாரித்து காட்சிக்கும் வைத்தார். அது சதுர வடிவிலான கொடி. கொடியின் எல்லா ஓரங்களிலும் வரிசையாக 108 எண்ணெய் விளக்குகளும், நடுவில் இந்திரனின் வஜ்ராயுதமும், வந்தே மாதரம் என்று வங்கமொழியில் எழுதப்பட்ட வாசகமும் இடம்பெற்றன.

சகோதரி நிவேதிதாவின் கொடி எல்லா தரப்புக்கும் ஏற்புடையதாக இருக்கவில்லை. சச்சீந்திர பிரசாத் போஸ், சுகுமார் மித்ரா இருவரும் இன்னொரு கொடியை வடிவமைத்தனர். அதை வங்க காங்கிரஸ் தலைவர்களும் காங்கிரஸ் தலைவர் சுரேந்திரநாத் பேனர்ஜியும் அங்கீகரித்தனர். அந்தக் கொடியில், அப்போதிருந்த எட்டு இந்திய மாகாணங்களைக் குறிக்கும் வகையில் பாதி மலர்ந்த எட்டு தாமரை மலர்கள் இடம்பெற்றன. கொடியின் நடுவில் ‘வந்தே மாதரம்’ என்ற வீர முழக்கம் வாசகமாக இடம்பெற்றது. இந்து, முஸ்லிம்களைக் குறிக்க சூரியன், பிறைச் சந்திரன் உருவங்கள் கொடியின் அடியில் இடம்பெற்றன.

ஜெர்மனியின் ஸ்டட்கார்ட் நகரில் 1907-ல் நடந்த இரண்டாவது சோஷலிஸ்ட் மாநாட்டில், மேடம் பிக்காஜி ருஸ்தம் காமா வீராவேசம் நிகழ்ந்த உரை நிகழ்த்திவிட்டு எவரும் எதிர்பாராத நேரத்தில் அக்கொடியை ஏற்றினார். “சுதந்திரத்தை நேசிக்கும் உலக மாந்தர்கள் அனைவரும் இன்றைய மனித குலத்தின் ஐந்தில் ஒரு பங்கு மக்களை அடிமைத் தளையிலிருந்து விடுவிக்க ஒத்துழைக்க வேண்டும்” என்று அப்போது வேண்டுகோள் விடுத்தார்.
1916-17களில் லோகமான்ய திலகர், அன்னிபெசன்ட் தலைமையில் நடைபெற்ற ஹோம்ரூல் இயக்கத்தின்போது ஒரு தேசியக் கொடி பயன்படுத்தப்பட்டது. ஆனால், இது மக்களிடம் வரவேற்பைப் பெறவில்லை.

சுதந்திரப் போரட்டத்துக்குத் தலைமையேற்ற ஆரம்ப காலத்திலேயே தேசியக் கொடியின் அவசியத்தை காந்தி உணர்ந்திருந்தார். காந்தியின் ஆலோசனைப்படி, ஆந்திரத்தின் மசூலிப்பட்டினத்தைச் சேர்ந்த பிங்காலி வெங்கையா இந்திய தேசியக் கொடியை வடிவமைக்கும் வேலையை 1916-ல் தொடங்கினார். வெள்ளை, பச்சை, சிவப்பு ஆகிய மூன்று நிறங்களையும் நடுவில் நீலநிறத்தில் அசோக தர்மசக்கரத்தையும் கொண்டதாக அந்தக் கொடி இருந்தது.

இந்தியாவிலுள்ள பல்வகைச் சமூகத்தினரும் இந்தக் கொடியின் கீழ் ஒன்றுபட்டிருக்க வேண்டும் என்பது காந்தியின் நோக்கமும் விருப்பமும். அந்தப் புதிய வடிவமைப்பிலான கொடியை மகாத்மாக காந்திக்கு பிங்காலி வெங்கையா காட்டினார். நமது சாம்ராஜ்யத்துக்கு விடைகொடுக்க வந்தது இந்தக் கொடி என்று அடையாளம் கண்ட பிரிட்டிஷார் அதை இந்தியாவில் எந்த இடத்திலும் ஏற்றக் கூடாது என்று தடைவிதித்தனர். மீறியவர்களைத் தடியால் அடித்தனர், சிறையில் அடைத்தனர்.

1923-ல் நாக்பூரில் காங்கிரஸ் தொண்டர் படை தேசியக் கொடியைத் தாங்கிக்கொண்டு ஆங்கிலேயர் வசிக்கும் பகுதிக்கு ஊர்வலமாகச் சென்றது. இதைக் காவல் துறையினர் தடுத்தனர். கொடியை எடுத்துச் செல்ல தங்களுக்கு உரிமையுண்டு என்று வாதித்த காங்கிரஸ் தொண்டர்களைக் கைதுசெய்தனர். கொடியை ஊர்வலமாக எடுத்துச் சென்றதற்காக ஆயிரக்கணக்கானவர்கள் சிறையில் அடைக்கப்பட்டனர். முதன்முறையாகக் கைதானவர் சுபத்திராதேவி என்ற பெண்மணி. நாக்பூரில் தொடங்கிய கொடி சத்தியாகிரகம் அகில இந்திய இயக்கமாக வளர்ந்தது. 1923 ஜூலை 8, 9, 10 தேதிகளில் நாக்பூரில் கூடிய அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி இந்த இயக்கத்துக்கு முழு ஆதரவை அளித்தது.


பின்வாங்கிய பிரிட்டிஷ் அரசாங்கம், கொடியை தாங்கிச் செல்லும் உரிமையை ஒப்புக்கொண்டது. இந்தியர்களின் சுதந்திர வேட்கைச் சின்னமாக மாறியது தேசியக் கொடி. 1947 ஆகஸ்ட் 15 பிற்பகலில் டெல்லி ‘இந்தியா கேட்’ பகுதியில் பிரதமர் ஜவாஹர்லால் நேரு இக்கொடியை ஏற்றியபோது, மேகங்களே ஏதுமில்லாத அந்த கோடைக்கால நேரத்தில் அபூர்வமான வானவில் தோன்றியதாக மவுன்ட் பேட்டன் பிரபு வர்ணித்திருக்கிறார். இந்தியர்கள் போராடிப் பெற்ற சுதந்திரத்துக்கு வானவர்கள் செலுத்திய சிரசாஞ்சலிதான் அந்த வானவில் என்பதில் சந்தேகம் என்ன!

360தேசியக்கொடிகொடிரித்திரப் பயணம்National Flagசுதந்திரப் போரட்டம்சிப்பாய் புரட்சிகாங்கிரஸ் தொண்டர்வேட்கைச் சின்னம்
Popular Articles

You May Like

More From This Category

keezhadi-excavation

கீழடிக்கு வயது 2600

கருத்துப் பேழை

More From this Author