Published : 12 Aug 2019 07:53 AM
Last Updated : 12 Aug 2019 07:53 AM

அமெரிக்க ஜனநாயகம் வாரிசு அரசியலுக்கு எப்படி எதிர்வினையாற்றுகிறது?

வணிகவுலகில் மிகவும் பிரசித்திபெற்ற குடும்பம் அமெரிக்க அதிபர் ட்ரம்பினுடையது; ட்ரம்பின் மகள் இவான்கா இதில் நான்காவது தலைமுறை. பதின்பருவத்திலேயே மாடலிங் துறைக்குள் நுழைந்த இவான்கா, பிறகு தந்தையின் ரியல் எஸ்டேட் தொழிலில் தடம்பதித்தார். ஆடை வடிவமைப்பிலும் இவான்காவின் புகழ் கொடிகட்டிப் பறந்தது. இதுபோக, ஒரு எழுத்தாளராகவும் இவர் வெளியிட்ட புத்தகங்கள் பல கோடி பிரதிகள் விற்றன. 2019-ல் மட்டும் இவான்கா சம்பாதித்த தொகை எவ்வளவு தெரியுமா? இந்திய மதிப்பில் சுமார் ஆயிரம் கோடி! இப்போது கொஞ்சம் கொஞ்சமாக வணிகத்துக்கு விடைகொடுத்துவிட்டு அப்பாவோடு அரசியலில் முழுமூச்சாக இறங்கத் திட்டமிட்டிருக்கிறார் இவான்கா.

“பார், முழுசா சந்திரமுகியா மாறியிருக்கிற உன் மனைவி கங்காவைப் பார்” என்று ஜோதிகாவைப் பார்த்து ரஜினி சொல்வதைப் போல இப்போது இவான்காவைப் பார்த்து அமெரிக்கர்கள் சொல்கிறார்கள், “பார், தன்னை அமெரிக்க அதிபராகவே நினைத்துக்கொண்ட இவான்காவைப் பார்.” விஷயம் இதுதான்: ஜப்பானின் ஒசாகா நகரில் கடந்த மாதம் நடைபெற்ற ஜி20 உச்சிமாநாட்டில் ட்ரம்புடன் இவான்காவும் கலந்துகொண்டார்.

அம்மாநாட்டின்போது பிரெஞ்சு அதிபர் இம்மானுவேல் மெக்ரான், பிரிட்டிஷ் பிரதமர் தெரசா மே, கனட அதிபர் ஜஸ்டின், பன்னாட்டு நிதியத்தின் தலைவர் கிறிஸ்டின் லகார்ட் ஆகியோர் உரையாடிக்கொண்டிருக்க இவான்காவும் தன்னை அந்த உரையாடலுக்குள் நுழைத்துக்கொண்டார். அந்தக் காணொளி அமெரிக்கர்களிடையே பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது. அதிபரின் ஆலோசகராக இவான்கா நியமிக்கப்பட்டதிலிருந்தே ட்ரம்பின் வாரிசு அரசியல் குறித்த விவாதங்கள் தொடங்கிவிட்டதென்றாலும், இந்த உச்சிமாநாட்டில் அது உச்சம் பெற்றுவிட்டது.

‘தேவையில்லாத இவான்கா’ (#UnwantedIvanka) எனும் ஹாஷ்டேகில் இவான்காவின் அரசியல் ஊடுருவலும், ட்ரம்பின் வாரிசு அரசியலும் கேலிச் சித்திரங்களாக சமூக வலைதளங்களில் விமர்சிக்கப்பட்டுவருகின்றன. யூலிசிஸ் எஸ்.கிரான்ட்டுக்கும் ராபெர்ட் எஸ்.லீக்கும் இடையே இவான்கா இருப்பதுபோலவும், போலியோ தடுப்பூசியை இவான்கா கண்டுபிடிப்பதாகவும், உலகப் போரில் ராணுவ வீரர்களுடன் இவான்காவும் போரிடச் செல்வதுபோலவும், டைட்டானிக் கப்பலில் காதல் ஜோடியுடன் இவான்கா பயணிப்பதுபோலவும், இயேசுவின் கடைசி விருந்தில் இவான்கா பங்குபெறுவதாகவும் புகைப்படங்களை வெளியிட்டு விமர்சிக்கிறார்கள் அமெரிக்கவாசிகள்.

‘எவ்வித அரசியல் தகுதியும் இல்லாமல் அதிபரின் ஆலோசகரான இவான்கா, தேவையில்லாத விஷயங்களிலெல்லாம் மூக்கை நுழைக்கிறார். அமெரிக்கா ஒன்றும் குடும்ப வியாபாரம் கிடையாது’ என்று சிடுசிடுக்கின்றன அமெரிக்க ஊடகங்கள். ‘அப்பாவின் அதிகாரத்தில் பயணிப்பதொன்றும் பெருமிதம் கொள்ளத்தக்க விஷயமல்ல இவான்கா’ என்று இன்று வரை நீள்கின்றன அமெரிக்க வாரிசு அரசியல் விவாதங்கள்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x