விவசாய உற்பத்தியை இரட்டிப்பாக்குமா இயற்கை வேளாண்மை?

விவசாய உற்பத்தியை இரட்டிப்பாக்குமா இயற்கை வேளாண்மை?
Updated on
1 min read

நிதிநிலை அறிக்கையில் பணம் தேவைப்படாத இயற்கைசார் வேளாண்மைக்குக் கொடுக்கப்பட்டிருக்கும் முக்கியத்துவம் மிகவும் வரவேற்கத்தக்கது. இயற்கை வேளாண்மையை மத்திய அரசு பொருட்படுத்தியிருப்பதென்பது புத்தொளியூட்டுவதாக இருக்கிறது. அதேவேளையில், பணம் தேவைப்படாத இயற்கைசார் வேளாண்மையை நடைமுறைப்படுத்துவது தொடர்பான நிதிநிலை அறிக்கையின் குறிப்புகள் தெளிவில்லாமல் இருக்கின்றன. அரசுத் தரப்பில் செய்யப்போகும் உதவிகள் என்னென்ன என்பதும் அறிக்கையில் விளக்கப்படவில்லை.

பணம் தேவைப்படாத இயற்கை சார் வேளாண்மையில் ஜீவாம்ருதம், பீஜாம்ருதம் என்ற இரு உத்திகளை முன்வைக்கிறார் மகாராஷ்டிர விவசாயியும் பத்மஸ்ரீ விருதாளருமான பாலேகர். ஜீவாம்ருதம் என்பது நாட்டு மாடுகளின் சாணம், கோமியம், வெல்லம், பருப்புகளை அரைத்த மாவு, சுத்தமான மண் ஆகியவற்றைக் குறிப்பிட்ட கலவையில் கலந்து தயாரிப்பது; பீஜாம்ருதம் என்பது விதைகள் - நாற்றுகள் மீது சுண்ணாம்புக் கரைசலைப் பூசுவது, வேர்களில் கூளம் ஏற்றிப் பாதுகாப்பது, நிலத்தில் காற்றோட்டம் இருக்கும் வகையில் உழுவது. ஆக, இந்த முறைகளைப் பின்பற்றும்போது உரம், பூச்சிக்கொல்லிகள் வாங்கத் தேவையில்லை என்றாலும் கலவைகளைத் தயாரித்துக்கொள்ள நிச்சயம் செலவாகும். வேறு எது இல்லாவிட்டாலும் விவசாயிகளின் உழைப்பு அவசியம். அதுமட்டுமின்றி, விவசாயியிடம் நாட்டுப் பசு மாடுகளும், நிறையத் தண்ணீரும் இருந்தால்தான் இதை முயன்றுபார்க்க முடியும். இந்நிலையில், இயற்கைசார் வேளாண்மை, பாரம்பரிய விவசாய முன்னேற்றத் திட்டம், மண்வளப் பரிசோதனை அட்டை திட்டம் ஆகிய மூன்றுக்கும் சேர்த்தே ரூ.650 கோடி மட்டும்தான் ஒதுக்கப்பட்டிருக்கிறது. இது நிச்சயம் போதாது.

ரசாயன உரங்கள், பூச்சிக்கொல்லிகளின் பயன்பாடும், வீரிய விதைகள் என்று நம்பி வாங்கும் மரபணு மாற்றப்பட்ட பயிர்களும்தான் விவசாயிகளின் கடன் சுமைக்கும் மன உளைச்சலுக்கும் முக்கியக் காரணம். வேளாண் பொருட்களுக்கான கொள்முதல் விலை உயராத நிலையில், இடுபொருள் விலைகள் கணிசமாக உயர்ந்துவருகின்றன. ஆக, பணம் தேவைப்படாத இயற்கைசார் வேளாண் முறைகளை விவசாயிகள் கையாண்டால், அவர்களது வருவாய் இரட்டிப்பாகும் என்பதையும், அது நிலையானதாக இருக்கும் என்ற நம்பிக்கையையும் அவர்களுக்குக் கொடுக்க வேண்டும். உரம், பூச்சிக்கொல்லி செலவுகளைக் குறைக்க அரசு தீவிரம் காட்டும் அதேசமயம், விளைச்சல் குறையாமலும் பார்த்துக்கொள்ள வேண்டும். நிரந்தரமாகப் பலன்தரக்கூடிய, தொடர் வளர்ச்சி சாகுபடி முறைகளுக்கு விவசாயிகளை மாற்றுவதற்குச் சற்று கால அவகாசம் தேவை. இதை அறிவியல்பூர்வமாக அரசு நடைமுறைப்படுத்த வேண்டும். எல்லாவற்றுக்கும் மேலாக, அரசு பரிந்துரைக்கும் வேளாண் முறைக்கு மாற்றாகத் தத்தமது பகுதிக்கு உகந்த இயற்கைசார் வேளாண் முறையை விவசாயிகள் மேற்கொள்ள அனுமதிக்க வேண்டும். மாறாக, இதைத்தான் பின்பற்ற வேண்டும் என எல்லாவற்றையும் வகுத்துக்கொடுப்பது எவ்வகையிலும் உதவாது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in