Published : 06 Aug 2019 08:14 AM
Last Updated : 06 Aug 2019 08:14 AM

பெரும்பான்மை லடாக் மக்கள் பாஜக முடிவை ஆதரிக்கலாம்... ஏன்?

ஜூரி

காஷ்மீர் மாநிலத்தின் சிறப்பு அதிகாரத்தைப் பறித்ததோடு அல்லாமல், அதன் முழு மாநில அதிகாரத்தையும் பறித்து, ஜம்மு – காஷ்மீர் மற்றும் லடாக் என்று இரு பிராந்தியங்களாக அதை இரு கூறுகளாகப் பிரித்து, அவற்றை ஒன்றியப் பிரதேசமாகவும் அறிவித்திருக்கிறது மத்திய அரசு. இந்த முடிவு காஷ்மீரிலும் ஜம்முவிலும் லடாக்கிலும் ஒரே மாதிரியான உணர்வுகளைப் பிரதிபலிக்கவில்லை. கலவையான உணர்வுகளைப் பார்க்க முடிந்தது. குறிப்பாக, லடாக் மக்களில் பெரும்பான்மை மக்களிடம் ஆதரவு மனநிலை வெளிப்படுவதாக அங்கிருந்து வரும் செய்திகள் சொல்கின்றன. அது எப்படி?

ஏனெனில், புவியியல், கலாச்சாரரீதியாகவே லடாக் தனித்துவமான நிறத்தைக் கொண்டது. மக்கள்தொகையில் 47.4% பேர் முஸ்லிம்கள் என்றால், கிட்டத்தட்ட அவர்களுக்கு இணையாக 45.8% பேர் பௌத்தர்கள். இந்துக்களின் எண்ணிக்கை குறைவு; வெறும் 6.2%. எனினும், முஸ்லிம்களின் பெரும்பான்மைக்கு எதிராக இந்த இரு சமூகங்களும் இணைந்து செயல்படும் போக்கு உருவாகியிருப்பதால், பாஜக ஆதரவு இங்கே மேலோங்கிவருகிறது. 2014 மக்களவைத் தேர்தலில் வெறும் 32 ஓட்டுகள் வித்தியாசத்தில் லடாக் தொகுதியை வென்ற பாஜக, 2019 மக்களவைத் தேர்தலில் மொத்த ஓட்டுகளில் 34% வாக்குகளைப் பெற்று 10,930 வாக்குகள் வித்தியாசத்தில் வென்றது குறிப்பிடத்தக்கதாகும்.

மலையடிவாரப் பிராந்தியம்

காரகோரம் மலைத்தொடரில் உள்ள சியாச்சின் பனிச் சிகரத்திலிருந்து தெற்கில் உள்ள நெடும் இமயமலைத் தொடர்வரை பரந்து விரிந்து கிடக்கிறது லடாக். திபெத்திய வம்சாவழியினரான இந்தோ-ஆரியர்கள் காலங்காலமாக வசிக்கும் பகுதி இது. மக்கள் நெருக்கம் அதிகம் இல்லாத பகுதி. இதன் கலாச்சாரமும் வரலாறும் திபெத்துடன் அதிகம் தொடர்புள்ளது.
வரலாற்றின்படி இந்தப் பகுதியுடன் பல்திஸ்தான் பள்ளத்தாக்கும் சேர்ந்ததுதான். நாடு விடுதலை அடைந்தவுடன் பாகிஸ்தான் திடீரெனப் படையெடுத்து கில்ஜித், பல்திஸ்தான் பகுதிகளைத் தன்வசப்படுத்திக் கொண்டுவிட்டது. ஆக்கிரமிக்கப்பட்ட காஷ்மீருக்கு அவை சென்றுவிட்டன. இந்த விஷயம் தொடர்பில் லடாக்கில் வாழும் இந்துக்களுக்கும் பௌத்தர்களுக்கும் பாகிஸ்தான் மீது கசப்பு உண்டு.

அடிப்படை வசதிகள் குறைந்த பிராந்தியம் லடாக். லெ நகரில் சிறு விமான நிலையம் உண்டு என்றாலும், 1,800 கிமீ நீளத்துக்குத்தான் சாலையே இருக்கிறது. அதிலும் 800 கிமீதான் தார் சாலை. இந்தச் சாலையையும் ராணுவத்தின் அங்கமான எல்லைப்புற சாலை அமைப்பே (பிஆர்ஓ) நிர்வகிக்கிறது. பெரிய தொழில்களுக்கு வாய்ப்புகள் இருந்தாலும், இதுவரை எதுவும் நடக்கவில்லை. காஷ்மீருடன் சேர்ந்திருப்பதால் லடாக் பிராந்தியமும் முன்னேற்றமின்றி இருக்கிறது என்ற பாஜகவின் பிரச்சாரம் முன்னதாக உள்ளூர் மக்களிலேயே ஒரு பகுதியினரிடத்தில் ஊடுருவியிருந்தது.

லடாக்கின் முக்கியத்துவம்

லடாக்கின் மக்கள்தொகை வெறும் 2.74 லட்சம் மட்டுமே. எனினும், நிலப்பரப்பளவில் அது பெரியது: 59,196 சதுர கிமீ அதாவது, 1.30 லட்சம் ச.கி.மீ. பரப்பளவைக் கொண்ட தமிழ்நாட்டின் பரப்பில் கிட்டத்தட்ட 45%. சராசரியாக, ஒரு சதுர கிமீ பரப்பளவுக்கு 4 பேர்தான் வசிக்கின்றனர். இரண்டு மாவட்டங்கள். லெ மற்றும் கார்கில். தலைநகராக லெ அமைந்திருக்கிறது. லடாக்கி, புர்கி, ஷினா, திபெத்தி, இந்தி, பல்தி, உருது ஆகிய மொழிகள் பேசப்படுகின்றன.

லடாக் என்பது உண்மையில் உயரமான பீடபூமியாகும். கடல் மட்டத்திலிருந்து 9,800 அடி உயரத்தில் இருக்கிறது. இமயமலையில் தொடங்கி குன்லுன் மலைத் தொடர்வரை நீள்கிறது. இதில் சிந்து நதியின் மேல் பகுதி பள்ளத்தாக்கும் அடங்கும். இங்கே நிலநடுக்கம் அடிக்கடி ஏற்படும். லடாக்கின் வளமைக்குக் காரணம் சிந்து நதிதான். ஷே, லெ, பாஸ்கோ, டிங்மோஸ்காங் என்ற சிறு நகரங்கள் இதன் கரையிலேயே அமைந்துள்ளன. இந்தியாவில் சிந்து பாயும் பிரதேசம் இது மட்டுமே. லடாக் பகுதியில் மிக உயரமான மலைச் சிகரங்கள் இல்லை. இமயமலையின் மழைமறைவுப் பிரதேசத்தில் இருப்பதால், இது பாலைவனப் பகுதியாகவும் இருக்கிறது. குளிர்காலத்தில் விழும் பனிதான் இங்கு நீராதாரம். இங்கு பயிர் பச்சை அபூர்வம். தண்ணீர் ஓடும் ஓடைகளுக்கு அருகில் மட்டுமே தாவரங்கள் காணப்படுகின்றன.

நாம்கியால் வம்ச ஆட்சியில் வளப்படுத்தப்பட்ட லடாக்கை 1834-ல் ஜொராவர் சிங் என்ற சீக்கியத் தளபதி லடாக் மீது படையெடுத்து, சீக்கியப் பேரரசுடன் இணைத்தார். அடுத்து, இரண்டாவது ஆங்கிலேயர் - சீக்கியர் போரில் சீக்கியர்கள் தோற்றதற்குப் பிறகு ஜம்மு-காஷ்மீர் பிரிட்டிஷாருக்குக் கட்டுப்பட்ட குலாப் சிங்கிடம் ஒப்படைக்கப்பட்டது. பிறகு, டோக்ராக்கள் ஆட்சியில் லடாக்கை ஆளுநர் ஒருவரை நியமித்து நிர்வகித்தனர். 1947-ல் டோக்ரா மன்னர் மகாராஜா ஹரி சிங், காஷ்மீரை இந்தியாவுடன் இணைக்கும் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார். பிறகு, ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் ஒரு பகுதியாகவே லடாக் நீடித்துவந்தது என்றாலும், காஷ்மீர் அரசியல்வாதிகளின் ஆட்சியில் தாங்கள் புறக்கணிக்கப்பட்டுவருகிறோம் என்ற எண்ணம் பெரும்பான்மை லடாக்கியர்களிடம் உண்டு. காஷ்மீர் பள்ளத்தாக்கில் வாழும் பெரும்பான்மை முஸ்லிம்கள் சன்னிகள்; லடாக்கில் வாழும் முஸ்லிம்கள் ஷியாக்கள் என்ற வேறுபாடும் இங்கே கவனிக்க வேண்டியதாகும்.

லடாக் மக்களை இந்திய அரசுக்கு இணக்கமாகச் சிந்திக்கவைத்ததில் பாகிஸ்தானுக்கு ஒரு முக்கியப் பங்கு உண்டு. இந்தியா சுதந்திரம் அடைந்த வேகத்தில் தாக்குதலை முன்னெடுத்த பாகிஸ்தான் படைகள், லடாக் வரை வந்தன. அங்கு தொடங்கி கார்கில் ஆக்கிரமிப்பு வரை பாகிஸ்தான் முன்னேறும்போதெல்லாம் இரு நாட்டுப் படைகளின் விளைவாகப் பதற்றத்தைச் சந்திக்கும் லடாக் மக்கள், இயல்பாக பாகிஸ்தான் எதிர் மனநிலைக்கு ஆளாகிவந்தனர். காஷ்மீர் சமூகத்துக்கு நேரெதிராகப் பெண்கள் செல்வாக்கு செலுத்தும் சமூகம் லடாக்கியர்களுடையது. ஆண்களுக்கு இணையாக பலதாரக் கலாச்சாரம் பெண்கள் மத்தியிலும் உண்டு.
வணிகக் கணக்குகள்

லடாக்கை முன்வைத்துப் பல வியாபாரக் கணக்குகள் இந்திய அரசுக்கும் பெருநிறுவனங்களுக்கும் இருக்கின்றன. முக்கியமானது எரிசக்தி உற்பத்தி. சிந்து நதி பாயும் இடங்களில் வீச்சு அதிகம்; நீர் மின்சார உற்பத்தியைப் பெரிய அளவில் அதிகரிக்க முடியும். லடாக் பகுதியில் காற்றின் வேகம் பல மாதங்களுக்கு அதிகம். ஆகையால், காற்றாலைகள் மூலம் மின்சாரம் தயாரிக்க முடியும். உயரமான பாலைவனப் பகுதியையும் உள்ளடக்கியது என்பதால், சூரிய ஒளியிலிருந்து மின்சாரம் தயாரிக்கவும் நிறைய வாய்ப்புகள் உள்ளன. நிலத்தை வெளியார் குத்தகைக்குக்கூட இங்கே எடுக்க முடியாது என்பதால், வெளிமாநிலங்களைச் சார்ந்த பெருநிறுவனங்கள் இங்கே கால் பதிக்க முடியாத நிலை இருந்தது. இனி, அவர்கள் அங்கே கால் பதிப்பர். இப்போதைய அரசின் முடிவுக்குப் பின்னணியில் இந்த வணிகக் கணக்குகளும் இருக்கின்றன.

எல்லாமும் கூடித்தான் கலவையான எதிர்வினைகளை லடாக்கில் உருவாக்கியிருக்கின்றன!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x