360: ரஜினியும் கராத்தே மணியும்

360: ரஜினியும் கராத்தே மணியும்
Updated on
2 min read

‘ரங்கா’ என்றொரு பழைய ரஜினி படம். அதில் ரஜினி நல்லவர், கராத்தே மணி கெட்டவர். ஒருநாள் ரஜினியிடம் கராத்தே மணி, “இப்படி நல்லவனா இருக்காதே, உருப்படாமப் போவாய்” என புத்திமதி சொல்வார். ரஜினி பதிலுக்கு, “நல்லவனா இருந்தா மன அமைதி கிடைக்கும்” என உபதேசம் செய்வார். இருவரும் அதன் பின் உறங்கச் சென்றுவிடுவார்கள். இரவு முழுக்க ரஜினி சொன்னதை யோசித்து கராத்தே மணி நல்லவராக மாறியிருப்பார். இரவு முழுக்க கராத்தே மணி சொன்னதை யோசித்து ரஜினி கெட்டவராக மாறி, கராத்தே மணியின் வீட்டுப் பொருட்களைக் களவாடிப் போயிருப்பார். அதுபோல, மேல்நாட்டு மது, தொப்பை, சர்க்கரை வியாதி, ரத்த அழுத்தம், உறக்கமின்மை, சீரியல், ஓட்ஸ் உண்ணுதல் போன்று முன்பு மேட்டுக்குடி வர்க்கத்திடம் காணப்பட்ட வழக்கங்கள் இன்று அடித்தட்டு வர்க்கத்திடம் மாறியிருக்கின்றன. பணக்காரர்கள் இன்று கம்பு, கேழ்வரகு என்று பாரம்பரிய உணவுப் பழக்கத்துக்கு மாறிவிட்டார்கள். அடித்தட்டு வர்க்கங்களோ ஃப்ரைட் ரைஸ், கோக், மெக்டானல்ட்ஸ் என மோகம் கொண்டு திரிகிறார்கள்.

- நியாண்டர் செல்வன்

கடவுளைக் காப்பாற்றும் கலைஞன்

டென்னிஸ் விளையாட்டை அதன் அழகியல் அமைதியோடு முழுமைப்படுத்திய ஃபெடரரை டென்னிஸின் கடவுளாகவே உணர்ந்ததுண்டு. பெரும்பாலும் தன்னை உணர்ச்சிகரமாக்கிக்கொள்ளாத ஃபெடரரையும் அவரது ஆட்டத்தையும் தியானக்குறியீடாகவே உணரலாம். ஃபெடரர் அரிதாய்த் தோற்கும் தருணங்களில்கூட சதா மெருகேறிக்கொண்டிருக்கும் ஒன்றின் மீது சிறிய விரிசலைக் கண்டுவிட்டதுபோல எப்போதும் உலகம் துணுக்குறுகிறது.தோல்வியடைந்த ஃபெடரர் தனது நீள்பையைத் தூக்கிக்கொண்டு வெளியேறும்போது தத்துவமிழந்த அந்த டென்னிஸ் மைதானம் வெறுமையடைகிறது. வென்றவரின் ஆரவாரக் கூச்சல், கைதட்டல் எல்லாமே கண்ணுக்குத் தெரியாத ஒன்றால் புறக்கணிக்கப்படுகின்றன.

ஜாகோவிச் ஒரு மூன்றாம்நிலை விளையாட்டு வீரர். மேலும், களங்களில் அவர் வெளிப்படுத்தும் வேடிக்கையும் வினோதமுமான செயல்பாடுகளின் வழியே கலைஞனாகத் தன்னை வெளிப்படுத்திக்கொள்பவர். பந்து பொறுக்கும் சிறுவன் முதல் பார்வையாளராக வந்திருக்கும் முதிய பெண் வரை இவரின் அரங்கச் செயல்பாடுகளுக்கு ரசிகர்கள் உள்ளனர். ஆரம்பத்தில், ஜாகோவிச்சின் இந்தச் செய்கைகள் மீது சிறு சந்தேகமும்,விளையாட்டின் உத்வேகத்தைக் குறைக்கிறார் என்ற எண்ணமும் இருந்தது. மெல்ல மெல்ல வயதில் மூத்த பெண்ணைக் காதலிக்க வைக்கும் இளைஞனைப் போல பிரபஞ்சத்தின் மொத்த காதலையும் தனது சிறிய அன்பின் செயல்களால் ஈர்த்துக்கொண்டார். அப்படியென்றால் ஜாகோவிச் டென்னிஸை எளிமைப்படுத்திவிட்டாரா? அப்படியல்ல, நேர்த்தியும் அமைதியுமாய் டென்னிஸ் மைதானத்தை ஃபெடரர் உறைய வைக்கிறார் என்றால் மகிழ்வின் வர்ணங்களையும் அன்பின் இசையையும் கசியவிடுகிறார் ஜாகோவிச். இந்த வருட விம்பிள்டன் இறுதிப் போட்டியில் ஜாகோவிச்சிடம் ஃபெடரர் தோற்றார்.

மெல்லிய வயோதிகத்தால் துல்லியம் விலகிய ஷாட்கள், கணிப்புக்கு வெளியே தாவிச்சென்ற பந்துகளைப் பார்த்து கண்களாலேயே ‘ஏன் இப்படி நடந்துகொள்கிறீர்கள்’ என்கிற பாவனை. பழைய கடவுளால் கட்டுப்படுத்த முடியாத கணங்களாக இருந்தன அவை. ஏறத்தாழ கடவுளுக்கும் கலைஞனுக்கும் நடந்த போட்டியைப் போலிருந்த அதில் வென்ற ஜாகோவிச் தன் வெற்றியை இரைச்சலாக்கவில்லை; குரூரப் பெருமிதமுமில்லை. எப்போதும்போல ஒரு சிறுவனின் சிரிப்பு. போட்டி முடிந்ததும் வலைக்கு இந்த பக்கம் நின்று ஃபெடரர் கைகுலுக்கும்போது சிறுவனின் முகச்சாயலில் ஜாகோவிச் புன்னகைத்தார். ஃபெடரரால் ரசிக்க முடிந்த ஒரு புன்னகையில் அதுவும் ஒன்றாக இருந்திருக்கக்கூடும். இருவரும் பேசியபடி நடந்துவருகையில் கடவுளை எப்போதும் கலைஞன்தான் காப்பாற்றுகிறான் என்று தோன்றியது.

- பா.திருச்செந்தாழை

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in