காந்தி பேசுகிறார்: முரண்பாடுகளும் நானும்

காந்தி பேசுகிறார்: முரண்பாடுகளும் நானும்
Updated on
1 min read

முரண்பாடு இருக்கக் கூடாது என்பதை நான் என்றுமே அதிக முக்கியமானதாகக் கருதியதில்லை. நான் சத்தியத்தைப் பின்பற்றுகிறவன். ஒரு விஷயத்தைக் குறித்து நான் முன்னால் சொன்னது எதுவாக இருந்தாலும், அதைப் பொருட்படுத்தாமல் ஒரு விஷயத்தைக் குறித்து குறிப்பிட்ட சமயத்தில் நான் என்ன உணர்கிறேன், என்ன நினைக்கிறேன் என்பதையே நான் சொல்ல வேண்டும்.

நான் காண்பது தெளிவாக, அன்றாடப் பழக்கத்தினால் என் கருத்துகளும் தெளிவானவையாக வேண்டும். எங்காவது வேண்டுமென்றே என் கருத்தை மாற்றிக்கொண்டிருப்பேனாயின், அந்த மாறுதல் தெளிவாகத் தெரிவதாக இருக்க வேண்டும். கவனித்துப் பார்த்தால் மாத்திரமே நாளாவட்டத்தில் வெளிக்குத் தோன்றாத வகையில் ஏற்பட்டிருக்கும் முன்னேற்றத்தைக் காண முடியும்.


முன்னுக்குப் பின் முரணில்லாதபடி தோன்ற வேண்டும் என்பது குறித்து எனக்குக் கொஞ்சமும் கவலையே இல்லை. சத்தியத்தை நாடி நான் சென்றதில் பல எண்ணங்களை விட்டிருக்கிறேன்; புதியவற்றைக் கற்றுக்கொண்டிருக்கிறேன். வயதில் நான் கிழவனாகியிருந்தாலும், உள்ளுக்குள் வளர்ச்சியடைவது எனக்கு நின்றுவிட்டது என்றோ, என் ஊன் கரைந்துபோய்விட்டதும் என் வளர்ச்சி நின்றுவிடும் என்றோ நான் உணரவே இல்லை. கணத்துக்குக் கணம் சத்தியத்தின் - என் கடவுளின் அழைப்புக்குப் பணிய நான் தயாராக இருக்க வேண்டும். எனக்கு இருக்கும் சிரத்தையெல்லாம் அதுதான்.


நான் எழுதப்போகும்போது முன்னால் நான் என்ன சொல்லியிருக்கிறேன் என்பதை எண்ணுவதே இல்லை. ஒரு குறிப்பிட்ட விஷயத்தில் நான் முன்னால் சொல்லியிருப்பதற்கு முரண்படாமல் இருக்க வேண்டும் என்பது என் நோக்கம் அல்ல. ஆனால், ஒரு குறிப்பிட்ட சமயத்தில் எனக்குத் தோன்றும் உண்மைக்கு முரண்படாமல் இருக்க வேண்டும் என்பதுதான் என் நோக்கம். இதன் பலனாக, உண்மையிலிருந்து உண்மைக்கு வளர்ந்திருக்கிறேன்.

என் ஞாபக சக்தியை அனாவசியமான சிரமத்திலிருந்தும் காப்பாற்றியிருக்கிறேன். என்னிடம் முரண்பாட்டைக் காணும் நண்பர்கள் ஒன்று செய்வது நல்லது. என் பழைய கருத்துதான் வேண்டும் என்று அவர்கள் கொண்டாலன்றி, சமீபத்தில் நான் எழுதியவை என்ன பொருள் தருகின்றனவோ அதை அவர்கள் ஏற்றுக்கொள்ளட்டும்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in