Published : 15 Jul 2019 08:12 AM
Last Updated : 15 Jul 2019 08:12 AM

காமராஜரின் 1954-1963: வழிகாட்டும் ஒரு தசாப்தம்!

செல்வ புவியரசன்

கல்வித் துறையில் இன்று தமிழகம் எட்டியிருக்கும் முதலிடத்துக்கு வித்திட்ட ஆட்சியாளர்களில் முதன்மையானவர் காமராஜர். மதிய உணவு, இலவசச் சீருடை, பள்ளிச் சீரமைப்பு இயக்கம் உள்ளிட்ட முக்கியமான திட்டங்களை காமராஜர் முன்னெடுத்தபோது, அவருடன் ஒன்பது ஆண்டுகள் உறுதுணையாக நின்று அத்திட்டங்களை நடைமுறைப்படுத்தியவர் அப்போதைய கல்வித் துறை இயக்குநரான நெ.து.சுந்தரவடிவேலு. ‘நினைவு அலைகள்’ என்ற தலைப்பில் 3 பகுதிகளாக ஏறக்குறைய 2000-க்கும் மேற்பட்ட பக்கங்களில் வெளிவந்த சுந்தரவடிவேலுவின் தன்வரலாறு, காமராஜரை அறிந்துகொள்ள மட்டுமின்றி, இன்றைய அரசியல் சூழலில் அவரிடமிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடங்களையும் நமக்கு உணர்த்துகிறது.

ராஜாஜி ஆட்சிக் காலத்திலும் பின்பு காமராஜர் ஆட்சிக் காலத்திலும் கல்வித் துறை இயக்குநராக இருந்த கோவிந்தராஜுலு, ஆந்திராவின் வெங்கடேஸ்வரா பல்கலைக்கழகத் துணைவேந்தராக நியமிக்கப்பட்டார். அவரை அடுத்து யாரை இயக்குநராக நியமிப்பது என்ற கேள்வி எழுந்தபோது, இந்திய ஆட்சிப் பணித் துறை அதிகாரிகளை நியமிக்காமல், கல்வித் துறையின் மீது ஆர்வமுள்ள 42 வயது சுந்தரவடிவேலுவை நியமித்தார் காமராஜர். கல்வித் துறைக்குப் பொறுப்பேற்கும் அதிகாரி ஆட்சிப் பணித் துறை அதிகாரியாக இருக்க வேண்டும் என்பதைக் காட்டிலும், அத்துறையில் அனுபவம் பெற்றவராக இருக்க வேண்டும் என்ற காமராஜரின் எதிர்பார்ப்புக்குப் பலன் கிடைத்தது.

ராஜாஜியின் ஆட்சிக் காலத்தில் கல்வித் துறையின் துணை இயக்குநராகப் பணிபுரிந்தவர் சுந்தரவடிவேலு. ராஜாஜியின் நன்மதிப்பு பெற்றவர் என்றாலும் அவரைத்தான் கல்வித் துறை இயக்குநராக நியமித்தார் காமராஜர். ‘என்னை ஐயுறாமல் ஏழைப் பங்காளர்களில் ஒருவராகக் கண்டுகொண்டார்’ என்று நெகிழ்ந்திருக்கிறார் சுந்தரவடிவேலு. ஆட்சி மாற்றம் ஏற்படும்போதெல்லாம் சிறப்பாகச் செயல்படும் அதிகாரிகளையும்கூட துறை மாற்றம் செய்யக்கூடிய இன்றைய நிலையில், இதுவும்கூட காமராஜரிடம் கற்க வேண்டிய பாடம்தான். குலக்கல்வித் திட்டம் என்று அறியப்படும் அரை நாள் படிப்புத் திட்டத்தை நடைமுறைப்படுத்தக் கூடாது என்பதே சுந்தரவடிவேலுவின் கருத்தாக இருந்தது. அதுகுறித்து அவர் அளித்த குறிப்பு முதல்வர் ராஜாஜியைச் சென்றடையாமல் இயக்குநர் அலுவலகத்திலேயே முடங்கிவிட்டது.

கல்வித் துறை அலுவலரை மட்டுமல்ல, கல்வித் துறை அமைச்சரையும் அவ்வாறே தேர்ந்தெடுத்தார் காமராஜர். அரை நாள் பள்ளிப் படிப்புத் திட்டத்துக்கு எழுந்த எதிர்ப்பால் ஆட்சியிலிருந்து விலகினார் ராஜாஜி. அவருக்குப் பிறகு யார் முதல்வராகப் பொறுப்பேற்பது என்று காங்கிரஸுக்குள் தேர்தல் நடந்தது. முதல்வர் பதவிக்கான உட்கட்சித் தேர்தலில் ராஜாஜி சார்பாக நிறுத்தப்பட்டவர் சி.சுப்பிரமணியம். தேர்தலில் சி.சுப்பிரமணியத்தை எதிர்த்து வென்ற காமராஜர், தனது அமைச்சரவையில் அவரையே கல்வியமைச்சராக நியமித்தார் என்பதும் ஓர் ஆச்சரியம்தான்.

எழுத்தறிவித்தவன் இறைவன்

இயக்குநராகப் பதவியேற்றுக்கொள்ளும் முன்பு தியாகராயர் இல்லத்தில் காமராஜரைச் சந்தித்து வாழ்த்துப் பெற்றார் சுந்தரவடிவேலு. அப்போதே காமராஜர் அவரிடம் தாம் மேற்கொள்ளவிருக்கும் கல்வித் திட்டங்களுக்கான முன்னேற்பாடுகளைச் செய்யச் சொல்லிவிட்டார். பள்ளி இறுதி வகுப்பு வரை அனைவருக்கும் இலவசக் கல்வி வழங்க வேண்டும், அதுவும் அருகமைப் பள்ளிகளாக அமைய வேண்டும், இருக்கிற வாய்ப்புகளைக் கொண்டே அதைச் செய்து முடிக்க வேண்டும் என்பதுதான் அவர் சுந்தரவடிவேலுவுக்கு விடுத்த முதல் அறிவுறுத்தலாக இருந்தது. கூடவே, ஆசிரியர்களின் ஊதிய உயர்வுக்கும் ஓய்வூதியத்துக்கும் திட்டங்களை வகுக்கச் சொன்னார் காமராஜர். அப்போது அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு மட்டுமே ஓய்வூதியம் வழங்கப்பட்டு வந்தது. உள்ளாட்சிப் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு அளிக்கப்படவில்லை. ஆசிரியர்களுக்கு அவர்களது உழைப்புக்கேற்ற ஊதியம் கிடைக்க வேண்டும் என்பதில் அவ்வளவு கவனமாக இருந்தார் காமராஜர்.

ஆசிரியர்களுக்கு ஓய்வூதியம் வழங்கும் திட்டத்தைத் தொடங்க ராஜாஜியின் ஆட்சிக்காலத்திலேயே ஏற்கெனவே பலர் முயன்று தோற்றுவிட்டார்கள். ஆனால், காமராஜரின் வழிகாட்டுதலில் தொடக்க, நடுநிலை, உயர்நிலைப் பள்ளிகள், கலைக் கல்லூரிகள் ஆகியவற்றில் பணிபுரியும் அனைத்து நிலை ஆசிரியர்களுக்கும் ஓய்வூதியம் வழங்கப்பட்டது. 1955-56 தமிழக அரசின் ஆண்டு வரவு-செலவுத் திட்டத்தில் முதலாவதாக தொடக்கப் பள்ளி ஆசிரியர்களுக்கு ஓய்வூதியம் அறிமுகப்படுத்தப்பட்டது. தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள் 60,000 பேர் அத்திட்டத்தால் நன்மை அடைந்தனர். வேறெந்த மாநிலத்திலும் அப்போது நடைமுறையில் இல்லாத முன்னோடித் திட்டம் அது. 

1955-ல் உயர்நிலைப் பள்ளி ஆசிரியர்களுக்கும் 1961-ல் கல்லூரி ஆசிரியர்களுக்கும் அது விரிவுபடுத்தப்பட்டது.
படித்த, வேலை இல்லாத இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புத் திட்டம் ஒன்றை அறிவித்தார் பிரதமர் நேரு. அத்திட்டத்தைப் பயன்படுத்தி, பள்ளியிறுதித் தேர்ச்சி பெற்றவர்களை வைத்து தொடக்கப்பள்ளி தொடங்கவும் கூடுதல் ஆசிரியர்கள் தேவைப்படும் இடங்களில் புதியவர்களை நியமிக்கவும் காமராஜர் திட்டங்களை வகுத்தார். மத்திய அரசு தமிழகத்துக்கு ஒதுக்கிய நிதியின்படி, ஆறாயிரம் பேரை ஆசிரியர்களாக நியமித்தார். ஒரு மைல் தொலைவுக்குள் பள்ளி இல்லாத 500 பேர் வசிக்கும் சிற்றூர்களில் எல்லாம் தொடக்கப்பள்ளிகள் தொடங்கப்பட்டன.

மதிய உணவுத் திட்டம்

1955 மார்ச் 27 அன்று சென்னை பூங்கா நகரில் சென்னை ராஜ்ஜிய தொடக்கப்பள்ளி நிர்வாகிகள், ஆசிரிய நிர்வாகிகளின் மாநாடு நடைபெற்றது. அப்போது, சென்னை மாநகராட்சிக் கல்வி அலுவலராகப் பணிபுரிந்த அனுபவம் பற்றி சுந்தரவடிவேலுவிடம் உரையாடினார் காமராஜர். மாநகராட்சிப் பள்ளிகளில் மதிய உணவு போடுவதால் வருகை அதிகமாகிறது என்ற தகவலைச் சொன்னார் சுந்தரவடிவேலு. காமராஜரிடமிருந்து எழுந்த கேள்வி ‘இப்போதுள்ள நிலையில் எல்லா ஏழைப் பிள்ளைகளுக்கும் இலவச உணவு கொடுக்கத் தொடங்கினால் எவ்வளவு செலவாகும்?’ என்பதுதான். அந்தக் கூட்டத்திலேயே தனியார் பள்ளிகள் இந்தத் திட்டத்தைச் செயல்படுத்த முயற்சிக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார். மாநிலம் முழுவதும் மதிய உணவு கொடுக்கும் வகையில் திட்டம் தீட்டுமாறு சுந்தரவடிவேலுக்கு ஆணையிட்டார். பயனுள்ள கல்வித் திட்டங்களை எப்படியாவது செயல்படுத்திவிட வேண்டும் என்பதுதான் காமராஜரின் கனவாக இருந்ததேயொழிய, அதற்காகும் செலவைக் கண்டு தள்ளிப்போடும் வழக்கம் அவரிடம் இருந்ததில்லை.

தமிழக அதிகாரிகள் மட்டுமல்ல, டெல்லி அதிகாரிகளின் ஆட்சேபனைகளுக்கும் மத்தியில்தான் மதிய உணவுத் திட்டம் நடைமுறைக்கு வந்தது. அத்திட்டத்தைத் தள்ளிவைக்கும்படி மத்திய அரசு அதிகாரிகள் சொன்னதை காமராஜர் ஏற்றுக்கொள்ளவே இல்லை. ‘மதிய உணவுத் திட்டத்தில் மட்டும் கைவைக்காதீர்கள்’ என்று அத்திட்டத்துக்கான நிதி ஒதுக்கீட்டைப் பெற்றுவந்தார்.
1956-57 வரவு - செலவுத் திட்டத்தில் மதிய உணவுத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. வசதி படைத்தவர்களைக் கொண்டு பள்ளிகளில் அத்திட்டத்தை மேற்கொள்ளவும் வேண்டுகோள் விடுத்தார். ‘வயிற்றுக்குச் சோறிடல் வேண்டும், இங்கு வாழும் மனிதருக்கு எல்லாம்’ என்று பாடிய பாரதியின் மண்ணான எட்டயபுரத்தில் அவர் பயின்ற பள்ளியில் 13.7.1956 அன்று அத்திட்டம் தொடங்கிவைக்கப்பட்டது. அதற்கு முந்தைய நாள் வைப்பாறு பாலத்துக்கு அடிக்கல் நாட்டும் கூட்டத்தில் பேசியபோது, ‘ஊர் ஊராக வந்து மதிய உணவுத் திட்டத்துக்குப் பிச்சையெடுக்கச் சித்தமாக இருக்கிறேன்’ என்று பேசினார் காமராஜர்.

கட்டாயக் கல்வி

எட்டயபுரத்தில் மதிய உணவுத் திட்டத்தைத் தொடங்கிவைத்தபோது, எட்டாம் வகுப்பு வரை கட்டாயம் படிக்க வேண்டும் என்று அரசமைப்புச் சட்டம் கூறுவதைச் சுட்டிக்காட்டிப் பேசினார் காமராஜர். அரசமைப்பு நிர்ணய அவையில் அவரும் ஓர் உறுப்பினராக இருந்தவர். அரசுக்கு வழிகாட்டும் நெறிமுறைகளில் ஒன்றான கட்டாயக் கல்வியை நடைமுறைப்படுத்தியதில் அவரே இந்தியாவின் முன்னோடி.

சுற்றுப் பயணத்தில் வெள்ளையடிக்கப்படாத பள்ளிச் சுவர்களையும் வெளுத்துக் கிடந்த கரும்பலகைகளையும் கண்ட சுந்தரவடிவேலுவின் மனதில் உதித்த திட்டம்தான் பள்ளிச் சீரமைப்பு மாநாடு. பள்ளிக் கட்டிடங்கள், நாற்காலிகள், பாடத் துணைக் கருவிகள் என்று பள்ளிகளுக்கான தேவைகளை எல்லாம் பொதுமக்களின் நன்கொடையால் நிறைவேற்றிக்கொள்ளும் அத்திட்டத்தைப் பாராட்டி வரவேற்ற காமராஜர், ஆண்டுக்கு ஒரு முறையோ இரண்டாண்டுகளுக்கு ஒரு முறையோ இப்படி மாநாடுகளை நடத்தி பள்ளிகளைச் சீரமைத்துக்கொள்ளுங்கள் என்று அத்திட்டத்துக்கு உறுதுணையாக நின்றார்.

மாணவர்கள் மட்டுமல்ல, சாதாரண பொதுமக்களும் படிப்பில் அக்கறை காட்ட வேண்டும் என்று ஆசைப்பட்டவர் காமராஜர். அவருடைய ஆட்சிக் காலத்தில்தான் பொது நூலகங்கள் வளர்த்தெடுக்கப்பட்டன. இந்தியாவிலேயே முதன்முறையாகப் பொது நூலகச் சட்டத்தை இயற்றியது தமிழகம். வட்டத் தலைநகரங்கள் தோறும் கிளை நூலகங்கள் தொடங்கப்பட்டன. பொது நூலகத் துறையோடு கல்வித் துறையும் கைகோத்து நின்றது. 

ஒன்பதாண்டுகள் முதல்வர் காமராஜரிடமும் ஏழரை ஆண்டுகள் கல்வித் துறை அமைச்சர் சி.சுப்பிரமணியத்திடமும் பணியாற்றியிருக்கிறேன், நிர்வாகத் தலையீடு என்று ஒருபோதும் இருந்ததில்லை என்கிறார் நெ.து.சுந்தரவடிவேலு. காமராஜரிடமிருந்து இன்றைய அரசியல்வாதிகள் பின்பற்றுவதற்கு இன்னும் எவ்வளவோ இருக்கின்றன.

- செல்வ புவியரசன்,
தொடர்புக்கு: puviyarasan.s@thehindutamil.co.in

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x