அறிவோம் நம் மொழியை: கி.ரா. பொழிந்த சொல் மழை

அறிவோம் நம் மொழியை: கி.ரா. பொழிந்த சொல் மழை
Updated on
2 min read

கடந்த வாரம் ‘வாழ்ந்தோடுதல்’ என்ற சொல்லைப் பற்றிக் குறிப்பிட்டிருந்தோம். சில நண்பர்களும் வாசகர்களும் ‘வழிந்தோடுதல்’ என்ற சொல் ‘வாழ்ந்தோடுதல்’ என்று மாறியிருக்கலாம் என்று கூறினார்கள். சில வாசகர்கள் ‘வாழ்ந்தோடுதல்’ என்ற பயன்பாடு தவறு என்றும் கூறினார்கள். இது குறித்துக் கீழத் தஞ்சைப் பகுதியைச் சேர்ந்த பேராசிரியர் தங்க. ஜெயராமனிடம் பேசியபோது அவர், ‘வாழ்ந்தோடுதல்’ என்ற சொல்லுக்கும் ‘வழிந்தோடுதல்’ என்ற சொல்லுக்கும் தொடர் பில்லை என்றே கூறினார். ‘வழிந்தோடுதல்’ என்பது நீர்நிலை, கொள்கலன் போன்றவற்றிலிருந்து நீர் வழிந்து செல்வதைத்தான் குறிக்கும்; ‘வாழ்ந் தோடுதல்’ என்ற சொல் குறிக்கும் பொருள் வேறு; தரையில் குண்டு குழியையெல்லாம் நிரப்பி, சமமான பரப்பாகத் தோற்றமளித்து நீர் ஓடுவதைத்தான் ‘தரை வாழ்ந்தோட மழை பெய்திருக்கிறது’ என்று தங்கள் பகுதியில் பேச்சு வழக்கில் குறிப்பிடுவார்கள் என்று தனது வாதத்தை முன்வைத்தார். இந்த வழக்கின் தோற்றுவாய் தெரியவில்லை என்றாலும் ‘வழிந் தோடுதல்’, ‘வாழ்ந்தோடுதல்’ ஆகிய இரண்டும் வேறு வேறுதான் என்கிறார். இதுகுறித்த ஆதாரபூர் வமான விளக்கங்கள் இருந்தால் வாசகர்கள் அனுப்பிவைக்கலாம்.

மதுரையைச் சேர்ந்த வாசகர் மு. மலைராஜா, மழையைப் பற்றிய அருமையான வழக்கு ஒன்றை அனுப்பியிருக்கிறார்:

“ ‘இன்று நல்ல மழையா?’ என மாமாவிடம் கேட்டேன். ‘மழையில் நின்றிருந்த பசு மாட்டின் கொம்புகூட நனையவில்லை. நல்ல மழை என்றால் மாட்டின் மடி நனைய வேண்டும்’ என்றார்.”

கி.ரா. தொகுத்த வட்டார வழக்கு அகராதியில் மழை பற்றி அவர் கொடுத்திருந்த சொற் களையும் வழக்குகளையும் புதுச்சேரி வாசகர் அமரநாதன் நமக்கு அனுப்பியிருக்கிறார். அந்தப் பட்டியல் இங்கே உங்களுக்காக:

அடைப்பு : விடாமல் பெய்வது

அடைமழை : மேற்படி

இடிமழை

ஊசித்தூறல்

எல்லைக் கட்டிப் பெய்யும் மழை

எறசல் : தடுப்பையும் மீறி மேலே படுவது

எறி தூத்தல்

கல்மழை (ஆலங்கட்டி)

கனமழை

காத்து மழை

கால மழை

கோடை மழை

சாரல்

சிணுங்கல்

*சுழி மழை

துணைமழை

தூவானம்

தூறல்

தை மழை

நச்சு மழை

பஞ்சட்டைத் தூறல்

பட்டத்து மழை

பரவலான மழை

பருமழை

பருவட்டு மழை

பருவமழை

பாட்டம் பாட்டமாய்

பூந்தூறல்

பெருமழை

பே மழை

பொசும்பல்

பொடித்தூறல்

மழை முறுகல்

மாசி மழை

ரவைத் தூறல்

வெக்கை மழை

வேட்டி நனையிறாப்ல

*சுழி: பரவலாகப் பெய்யாமல் இடம் விட்டு இடம் பெய்யும் மழை. “தடவலாகப் பெய்யாமல் சுழிசுழியாகப் பெய்திருக்கு மழை.” (கி.ரா.)

- மழை பொழியும்.

சொல் தேடல்

கடந்த ‘சொல் தேடல்’ பகுதியில் ‘விசா’ என்ற சொல்லுக்கு இணையான தமிழ்ச் சொல்லைக் கேட்டிருந்தோம். வாசகர்கள் சந்திரா மனோகரன், பீ. காதர் நிசாம், கோ. மன்றவாணன், எழுத்தாளர் ஜனனி ரமேஷ், கணேஷ்குமார் போன்றோரின் பரிந்துரை ‘நுழைவிசைவு’( நுழைவு+இசைவு) என்ற சொல். ஜெயினுலாப்தீன் என்ற வாசகர் ‘நுழைவுச்சீட்டு’, ‘வருகைச்சீட்டு’, ‘அனுமதிச் சீட்டு’ ஆகிய சொற்களைப் பரிந்துரைத் திருக்கிறார். ஆனால், ‘நுழைவிசைவு’ என்ற சொல்லே பொருத்தமானதாகத் தோன்றுகிறது. விக்சனரியிலும் இந்தச் சொல்லைப் பரிந்துரைத் திருக்கிறார்கள்.

அடுத்த சொல் தேடல்: ‘ஸ்மார்ட்ஃபோன்’ என்ற சொல்லுக்கு இணையான தமிழ்ச் சொல் என்ன?

- ஆசை,

தொடர்புக்கு: asaithambi.d@thehindutam

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in