Published : 09 Jul 2015 08:52 AM
Last Updated : 09 Jul 2015 08:52 AM

தலைவெட்டி முனியப்பனும் புத்தரும்

கிராமப்புறத் தெய்வங்கள் பலவும் பவுத்த, சமணப் பின்னணியில் பிறந்து, பல்வேறு மாற்றங்களால் சிறுதெய்வங்களாகின.

சமீபத்தில் சேலம் கோட்டைப் பகுதியிலிருக்கும் முனியப்பன் கோயிலுக்குச் சென்றிருந்தேன். கோயில் வளாகம் ஏறக்குறைய 15 சென்ட் பரப்பில் அமைந்துள்ளது. அரசமரப் பிள்ளையார் கோயில் தனித்து அமைந்திருந்தாலும், மூன்று தனித்தனி அறைகளில் வீற்றிருக்கும் சாமிகளே இக்கோயிலின் பிரதான தெய்வங்கள். பிள்ளையாரும் திருமலையம்மனும் இருபுறமும் இருக்க, நடுவில் முனியப்பன் சிலை கொண்ட அறை. இந்துசமய அறநிலையத் துறையின் கீழ் உள்ள இக்கோயிலில், 2011-ல் குடமுழுக்கு நடத்தப்பட்டு, இம்மூன்று அறைகோயில்களும் நிறுவப்பட்டுள்ளன.

கோயிலின் இன்றைய வடிவம் 2011-ல் உருவானது. அதற்கு முன்பு முனியப்பன் சிலை மட்டுமே இருந்துள்ளது. இக்கோயில் இப்போதும் முனியப்பன் பெயராலேயே அறியப்படுகிறது. இங்கு தலைவெட்டி முனியப்பன் என்று சொன்னால் மட்டுமே, யாருக்கும் கோயிலைத் தெரிகிறது. அறநிலையத் துறை சார்பாக வைக்கப்பட்டிருக்கும் பெயர்ப் பலகையிலும் இப்பெயரே இடம்பெற்றிருக்கிறது.

முனியப்பன் சிலையின் தலை வெட்டப்பட்டு, பின்பு ஒட்டவைக்கப்பட்டது என்பதே பெயருக்கான காரணம். அது ஒட்டவைக்கப்பட்டுள்ளதைச் சிலையின் அமைப்பைப் பார்த்தவுடனே சொல்லிவிட முடியும். சிலையின் தலை நேராக இல்லாமல் சற்றே இடதுபுறம் திரும்பியுள்ளது. தலைக்கும் உடம்புப் பகுதிக்கும் கடப்பாரையை விட்டு ஈயத்தால் ஒட்டவைக்கப்பட்டது என்றார் பூசாரி. கடந்த கால வழிபாட்டுமுறையின் எச்சத்தைத் தாங்கி நிற்கும் பெயர் இது.

தலைவெட்டப்பட்ட சிலைகள் தமிழகத்தின் வேறு சில இடங்களில் கிடைப்பதையும் அச்சிலைகளின் வடிவ ஒழுங்கையும் வைத்து அவை புத்தர் சிலைகள் என்று ஆய்வாளர்கள் அறுதியிட்டுள்ளனர். தலைவெட்டி முனியப்பன் சிலையின் முழுத் தோற்றத்தைக் காணும் யாரும் அது புத்தர் சிலை என்பதைப் பார்த்தவுடனே கூறிவிடலாம். ஆனால், அது இன்றைக்குப் புத்தராக அறியப்படவில்லை. ஆனால், பெருவாரியான மக்களால் வழிபாடு நடத்தப்படுகிறது.

சமணம் ஓங்கிய மதுரை

மதுரைக்கு அருகிலுள்ள பாண்டிக்கோயிலும் தலைவெட்டப்பட்ட சிலையுள்ள மற்றொரு கோயில். வெகுமக்களின் செல்வாக்கு பெற்ற அக்கோயிலின் பிரதான தெய்வம் பாண்டிமுனி. சிலையின் உடல் பகுதி வேறாகவும் தலைப் பகுதி வேறாகவும் உள்ளது. சிலையின் படத்தில் தலைப் பகுதியைக் கையால் மறைத்துவிட்டுப் பார்த்தால், புத்தர் என்று குழந்தைகூடச் சொல்லிவிடும். உடல் பகுதி புத்தர் என்று ஆய்வாளர்கள் துணிந்துள்ளனர். ‘தென்னாட்டில் தலைவெட்டி முனீஸ்வரன் கோயில் என ஒன்று உண்டென்றும், அக்கோயிலில் உள்ள உருவம் புத்தரின் உருவம் போன்று உள்ளதென்றும் சொல்லப்படுகிறது’ என்று மயிலை சீனிவேங்கடசாமி கூறுவது இக்கோயிலைத்தான். சமணம் ஓங்கியிருந்த மதுரைப் பகுதியில் பவுத்தமும் இருந்தது என்பதற்கான அடையாளம் இந்தச் சிலை. தலை இல்லாத புத்தர் சிலையில், பிற்காலத்தில் மிரட்டும் கண்களுடன் வேறொரு தலை ஒட்டப்பட்டு பாண்டிமுனியாக வணங்கப்படுகிறார்.

தமிழகத்தில் வயல்வெளி, ஏரிக்கரை, பாழடைந்த கோயில்களின் அருகில் என்றெல்லாம் புத்தர் சிலைகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. 400 முதல் 1,000 ஆண்டுகள்வரை பழமையான சிலைகள் இவை. 1993 முதல் தஞ்சைப் பகுதியில் பவுத்தம் சார்ந்த கள ஆய்வில் ஈடுபட்டுவரும் பா. ஜம்புலிங்கம் 60-க்கு மேற்பட்ட புத்தர் சிலைகளைக் கண்டறிந்துள்ளார். தலை இல்லாமல் முண்டமான சிலைகளும் தலை மட்டுமே உள்ள சிலைகளும் கண்டறியப்பட்டுள்ளன. தலையும் உடல் பகுதியும் தனித்தனியே கிடைத்துள்ளன. தமிழகத்தில் ஒங்கியிருந்த பவுத்தத்தின் செல்வாக்கையும் அது எதிர்கொள்ளப்பட்ட முறையையும் இது ஒருசேரக் காட்டுகிறது.

அழிக்க முடியாத நம்பிக்கைகள்

சமயம் என்பதையும் பவுத்தம் உள்ளிட்ட பழைய சமயங்களையும் ஐரோப்பியர்களால் அறிமுகப்படுத்தப்பட்ட நிறுவன சமயம் என்ற நவீன பொருளில் புரிந்துகொண்டு, அதன் எழுச்சியையோ வீழ்ச்சியையோ மதிப்பிடுகிறோம். வழிபாட்டு முறையில் கண்ணுக்குப் புலப்படும் வடிவங்கள் பல்வேறு காரணங்களால் மாற்றப்பட்டாலும், நீண்டகால வழக்கத்திலிருந்த நம்பிக்கைகளை உடனடியாக அழிக்க முடிவதில்லை. அந்நம்பிக்கைகள் வேறு பெயரிலும் வடிவத்திலும் நீடிக்கின்றன. பவுத்தம் நிறுவன வடிவில் மறைந்திருக்கலாம். பண்பாட்டு வடிவில் அழியவில்லை.

சமண பவுத்தக் கோயில்கள், சிலைகள், தத்துவங்கள் மற்றும் நம்பிக்கைகள் வைதீக மதங்களால் உள்வாங்கப்பட்டமைகுறித்துப் பல்வேறு ஆதாரபூர்வமான ஆய்வுகள் எழுதப்பட்டுள்ளன. கிராமப்புறத் தெய்வங்கள் பலவும் பவுத்த, சமணப் பின்னணியில் பிறந்து, பின்பு பல்வேறு மாற்றங்களால் சிறுதெய்வங்களாகத் தேங்கின. அய்யனார், சாஸ்தா, தருமராஜா போன்ற கோயில்களை இவ்வகையில் மயிலை சீனிவேங்கடசாமி குறிப்பிடுகிறார். தஞ்சை மாவட்டம் அய்யம்பாளையத்தில் புத்தர் சிலை முனீஸ்வரன் என்ற பெயரில் இப்போதும் வணங்கப்படுகிறது. சேலம் தலைவெட்டி முனியப்பன், மதுரை பாண்டிமுனி போன்ற கிராமப்புறத் தெய்வங்களின் பின்னணி பவுத்த, சமணத் தாக்கத்தை வெளிச்சமிடுகின்றன.

பலியேற்காத சாமிகள்

கிராமப்புறத் தெய்வங்கள் என்றாலே பலியேற்கும் சாமிகள் என்றும் ஒரு கருத்து இருக்கிறது. இதுவும் முழு உண்மையல்ல. பாண்டிமுனி கோயிலில் காவல் தெய்வங்களுக்குத் தரப்படும் பலியையே பாண்டிமுனிக்கான பலியாகப் பலரும் எண்ணி மயங்குகின்றனர். பலி அவரின் பிரதானத்துக்கு வெளியேதான் தரப்படுகிறது. இன்றைக்கும் அய்யனார் உள்ளிட்ட தெய்வங்களின் பரிவாரங்களுக்குப் பலி தரப்படும்போது, பிரதான சாமிக்குத் தெரியக் கூடாது என்று திரையால் மறைப்பது வழக்கம். இதுவும் சமண, பவுத்த செல்வாக்கின் தொடர்ச்சிதான். சேலத்தில் மட்டும் முனியப்பனுக்கு நேரடியாகப் பலி தரப்படுகிறது. நீண்ட காலம் காவல் பரிவாரங்களும் இல்லாமல் தனித்துப் பொட்டல் வெளியில் இருந்துவிட்டு மீண்டும் வணங்கத் தொடங்கியபோது, பரிவாரங்களுக்குப் பதிலாக பலி முனியப்பனுக்கென்றே மாறிப்போனது. 1914-ம் ஆண்டு எழுதப்பட்ட சேலம் கெசட்டில் பலியேற்காத சாமி, பலியேற்கும் சாமியாக மாறிய தருணம்பற்றிய பதிவு இருக்கிறது.

முனி புத்தர்தான்

இச்சிலைகள், புத்தராக இருந்து முனியாக மாற்றப்பட்டன என்பது இதன் பொருளல்ல. மாறாக, முனியே புத்தர்தான். புத்தருக்கான பல்வேறு பெயர்களில் ஒன்றே முனி என்பதற்கு நம் மரபுகளில் ஆதாரம் இருக்கிறது. முனி - புத்தன், முனிசுவ்விரதர் - தீர்த்தங்கரர் இருபத்து நால்வருள் ஒருவர், முனியன் - ஒரு சிறுதேவதை, முனீந்திரன் - புத்தன், அருகன் என்னும் ஐந்து பொருள்களை தமிழ் லெக்சிகன் தருகிறது. பவுத்தப் பின்னணி கொண்ட பெயர்களும் நம்பிக்கைகளும் பவுத்தம் என்றறியாமலேயே மக்களிடம் வேறு பெயர்களில் உலவுகின்றன. அதுதான் பண்பாட்டு அம்சங்களின் தனித்ததன்மை. காலப்போக்கில் பவுத்த ஓர்மை முற்றிலும் மறைந்த இடத்தில் புதிதாகச் செல்வாக்கு கொள்ளும் மரபுகள் பழையவற்றையும் தன்னுடையதாகச் சொல்லிக்கொள்கின்றன. அதுதான் இன்றைக்கு நடந்துவருகிறது. பண்பாட்டு மரபுகளை ஆய்வுசெய்யும்போது கண்ணுக்குப் புலப்படும் உடனடித் தரவுகளை மட்டுமே கணக்கில்கொள்ளாமல், கண்ணுக்குப் புலப்படாத நம்பிக்கைகள், சடங்குகள் ஆகியவற்றையும் குறியீட்டு நோக்கில் ஆய்வுசெய்ய வேண்டும்.

புத்தர் சிலைகளின் தலைகளை மக்களையே உடைக்க வைத்ததாகவும் சான்றுகள் கூறுகின்றன. பவுத்த மதத்தின் மீது நடத்தப்பட்ட மற்றொரு வகையான நுட்பமான தாக்குதல் இது என்று ஆய்வாளர் அருளப்பன் சுட்டிக்காட்டுகிறார். சாமி சிலையின் தலையைத் திருகியெடுத்து உள்ளே பார்த்தால் புதையல் கிடைக்கும் என்று கதையொன்று பரப்பப்பட்டது. இதனால், மக்களே சிலைகளை உடைக்கும் வேலையில் இறங்கினர். பவுத்தத்துக்கு எதிரான பிற செயல்பாடுகளோடு இப்போக்கும் இணைந்தது. பவுத்தப் புற வடிவங்கள் அழிந்த நிலையில், பண்பாட்டு நடைமுறைகள் மட்டுமே மிஞ்சின. பிறகே மக்கள் பழைய உடைந்த சிலைகளை அதே வடிவிலோ உள்ளூர் காவல் தெய்வவடிவில் முந்தைய தொடர்ச்சியையும் இணைத்துப் புதிய வடிவில் வழிபடத் தொடங்கினர். அவையே இன்றைய தலையிழந்த முனிக் கோயில்கள்.

பவுத்தத்தின் பங்களிப்பு

சேலம் தலைவெட்டி முனியப்பன் கோயிலின் பழைய தலவரலாற்று நூலில் உள்ள “தலையைத் திருகித் தனத்தை எடுத்து” என்று தொடங்கும் இப்பாடல் இதையே காட்டுகிறது என்று கூறும் அருளப்பன், “தஞ்சை பெரிய கோயில் மேற்கு வாசலுக்கு வெளியே ஒரு கல்வெட்டின் பாதி ஒருபுறமும் மீதிப் பாதி மறுபுறமும் உள்ளது. அதைச் சேர்த்துப் படித்துப் பொருள் கண்டால் “தலையைக் கிள்ளி தனத்தையெடுத்து என்ற பாடல்” கிடைப்பதாகக் கூறுவதும் இங்கு கருதத்தக்கது.

நம்முடைய இன்றைய வழிபாட்டு முறைமைகளில் பல்வேறு மரபுகளும் இணைந்து நிற்கும் பன்முக நோக்கு இருக்கிறது என்பதை இந்தச் சான்றுகள் காட்டுகின்றன. எழுதப்பட்ட நவீன பவுத்த வரலாற்று நூல்களில் மட்டுமல்லாது, மக்களிடையே பகுதிவாரியாகப் புழங்கிவரும் உள்ளூர் மரபுகளிலும் நம்பிக்கைகளிலும் வைத்து ஆராயும்போதுதான் பவுத்தத்தின் இப்பங்களிப்புகளைப் புரிந்துகொள்ள முடியும்.

- ஸ்டாலின் ராஜாங்கம், சமூக விமர்சகர்,

தொடர்புக்கு: stalinrajangam@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x