Published : 12 Jul 2015 11:02 am

Updated : 13 Jul 2015 16:52 pm

 

Published : 12 Jul 2015 11:02 AM
Last Updated : 13 Jul 2015 04:52 PM

மாணவர்கள் சாதியின் பகடைக்காய்களா?

கடந்த அக்டோபர் மாதம், விடுமுறைக்காகத் தென்மாவட்டத்திலுள்ள என் சொந்த ஊருக்குச் சென்றிருந்தேன். என்னுடன் பள்ளியில் படித்த நண்பன் ஒருவனைப் பல வருடங்கள் கழித்துச் சந்தித்தேன். நண்பனின் வலது கை முழங்கைக்குக் கீழே துண்டிக்கப்பட்டிருக்கும். உள்ளூர் தீப்பெட்டி அலுவலகம் ஒன்றில் கடைநிலை ஊழியராகப் பணிபுரிகிறான். வறுமை வாட்டியெடுப்பதை அவனது தோற்றத்தைப் பார்த்தே சொல்லிவிட முடியும். நாங்கள் பேசிக்கொண்டிருந்தபோது பல வாகனங்கள் இரைச்சலுடன் கடந்து சென்றன. அந்த வாகனத்தில் குறிப்பிட்ட ஒரு சாதியைப் பிரதிநிதித்துவப்படுத்தும்படியான வண்ணத் துணியை நெற்றியில் கட்டியபடி இளைஞர்கள் ஆரவாரத்தோடு சென்றபடி இருந்தனர். அதில் பெரும்பாலானவர்கள் குடித்திருந்தார்கள். 'இந்தப் படை போதுமா… இன்னும் கொஞ்சம் வேணுமா?' என்கிற கோஷத்துடன் சென்ற ஊர்வலத்தை மக்கள் அச்சத்துடன் வேடிக்கை பார்த்தார்கள்.

"இன்னும் நிலைமை மாறவில்லை. அப்படியேதான் இருக்கிறது" எனச் சிரித்தபடி சொன்ன நண்பனின் கண்களில் விரக்தி தெரிந்தது. அந்த விரக்தி என்னுள் பல காட்சிகளை விரித்தது.

90-களின் பிற்பகுதியில் நடந்த தென்மாவட்ட சாதிக் கலவரங்களின் அப்போதைய பிரதிநிதிகள் நாங்கள்தான். இப்போது அதன் மனசாட்சியாய் இருக்கிறோம். இரண்டு சாதிகளுக்குள் தொடங்கிய கலவரம் மற்ற சாதிகளுக்கும் பரவ, போர் மூண்டது. பலர் கொல்லப்பட்டனர். நூற்றுக் கணக்கான வீடுகள் கொளுத்தப்பட்டன. சாதி ஆதரவாளர்கள் மண்டபங்களில் தங்கவைக்கப்பட்டார்கள். அவர்களுக்கு முறைவைத்து உணவு சமைத்துப்போட்டார்கள் சாதிக்காரர்கள். ஊர்க் கூட்டங்கள் நடத்தப்பட்டு உண்டியல் வசூல் செய்யப்பட்டது. சாதிப் பெருமை பேசும் கிராமியப் பாடல்களும் உணர்ச்சி மிக்க உரைகளும் நிகழ்த்தப்பட்டன. உயர்நிலைப் பள்ளி மாணவர்களாக இருந்த எங்களைக் கலவரங்களுக்குப் பயன்படுத்திக்கொண்டார்கள். எங்களுக்குச் சாதி உணர்வு ஊட்டப்பட்டதாக நினைத்துக்கொள்ள வேண்டாம். ஏனெனில், பள்ளி நாட்களிலிருந்தே அது எங்களிடம் இயல்பாகவே வேரூன்றியிருந்தது.

ஹாக்கி விளையாடுவதற்காக நண்பன் ஒருவனது வீட்டில் கூடுவோம். நண்பனுடைய அம்மா எல்லோருக்கும் சமைத்துப் போடுவார். தென்மாவட்டக் கலவரங்கள் உச்சத்தில் இருந்த நேரத்தில், தாலிச் சரடைப் பறிக்க முயன்றபோது கடுமையாகத் தாக்கப்பட்ட ஒரு பெண்மணியைப் பற்றிய செய்தி எல்லாச் செய்தித்தாள்களிலும் வந்தது. அந்தப் பெண்மணி எங்களுக்குச் சமைத்துப் போட்ட நண்பனின் அம்மாதான். அந்தக் கலவரச் சூழலில் அவரது தாலிச் சரடைப் பறிக்க முயன்று, அது முடியாத பட்சத்தில் அவர் மீது கொலைவெறித் தாக்குதல் நடத்தியது, அவர் கையால் சாப்பிட்ட எங்களது பள்ளி நண்பர்களில் ஒருவன்தான். அந்த அம்மாவின் வீடு கொளுத்தப்பட்டது. காரணம், நண்பர்கள் இருவரும் வெவ்வேறு சாதிகளைச் சேர்ந்தவர்கள்.

"திருப்பாச்சி அருவாளைத் தூக்கிக்கிட்டு வாடா வாடா…. சிங்கம் பெத்த பிள்ளையென்று விளங்க வைப்போம் வாடா வாடா" என ஒரு சாதியைச் சேர்ந்த மாணவர்கள் சாதி வெறியுடன் பாடும்போது, இன்னொரு தரப்பு கண்களில் வெறியைத் தேக்கித் தனக்கான நேரத்துக்காகக் காத்திருக்கும். சாதிக் கலவரத்துக்கான காரணம், பெரும்பாலும் பள்ளியில் நடந்த ஒரு சாதிச் சண்டையாகவே இருக்கும். வெளிப்படையான சாதிய வெறியோடு வளைய வரும் மாணவர்களைக் கண்டித்து ஆசிரியர்களாலும் ஒன்றும் செய்ய முடியாது. ஒவ்வொரு மாணவரும் தன் சாதியைச் சேர்ந்த தலைவரின் புகைப்படத்தை நன்கு தெரியும்படி சட்டைப் பையில் வைத்துக்கொண்டு திரியும்போது ஆசிரியர்களால் என்ன செய்ய முடியும்? தேநீர் குடிக்கக்கூட சாதிக் குழுக்களாகச் செல்லும் மாணவர்களுக்கு, ஆசிரியரின் நீதிபோதனைகள் எந்த அளவுக்குப் பயனளிக்கும்?

''இப்போதும் நிலைமை அப்படித்தான் இருக்கிறதா?'' என்று அங்கு பணிபுரியும் என்னுடன் படித்த நண்பரிடம் கேட்டேன்.

''கொஞ்சமும் மாற்றமில்லை. மாணவனைக் கண்டித்தால்கூட, 'உங்கள் சாதியைத் தவிர, மற்ற சாதிப் பையன்களைக் கண்டிக்காதீர்கள்' எனத் தலைமையாசிரியரே அறிவுரை சொல்லும் நிலையில்தான் இருக்கிறது சூழல். பள்ளியில் பணி ஏற்ற முதல் நாளே, ஊர்த் தலைவர் வந்து, 'உங்கள் சாதி என்ன?' என்று முகத்துக்கு நேராகவே கேட்கிறார். பெரும்பாலான மாணவர்கள் அவரவர் சாதி அமைப்புகளை வெளிப்படையாகவே ஆதரிக்கிறார்கள்" என்கிறார் ஆசிரிய நண்பர்.

ஆசிரியரின் கூற்று உண்மையா, இல்லையா என நேர்மையோடு இருக்கும் கல்வியாளர்களைக் கேட்டாலே தெரியும். பெரும்பான்மை சாதியைச் சேர்ந்தவர்கள் வசிக்கும் பகுதிகளில் சிறுபான்மை சாதியைச் சேர்ந்த ஆசிரியர்கள் பணிக்குப் போகத் தயங்குகிறார்கள். அப்படியே பணி ஒதுக்கப்பட்டாலும், பணம் கொடுத்தாவது வேறு இடத்துக்குப் பணி மாறுதல் வாங்கிச் சென்றுவிடுகிறார்களா இல்லையா என்பதையும் அதே கல்வியாளர்களைக் கேட்டால் சொல்லிவிடுவார்கள்.

தொடக்கப் பள்ளி மற்றும் நடுநிலைப் பள்ளி மாணவர்கள் சிறுவர்கள் என்பதால், பெரும்பாலும் சாதி அமைப்புகளின் குறி உயர்நிலைப் பள்ளி, கிராமப்புறக் கல்லூரி மாணவர்கள்தான். ஒரு காலத்தில் சமூகம் சார்ந்த மாணவர் போராட்டங்களுக்குப் பெயர் வாங்கிய தமிழ்நாட்டில், மாணவர் சக்தி சாதி உணர்வுகளுக்காகத் திரட்டப்படுகிறது. நிதர்சனமான இந்த உண்மையை மறைத்து மறைத்து, பூடகமாகச் சொல்லி எதைச் சாதிக்கப்போகிறோம்? எல்லா வகை சாதி ஊர்வலங்களையும், விழாக்களையும் நெருங்கிக் கவனித்துப்பாருங்கள்... நெற்றியில் சாதிக் கொடியைக் கட்டிக்கொண்டு அதிகமாக உலாவருவது மாணவர்கள்தானே?

சில மாதங்களுக்கு முன்புகூட மாணவர்களுக்கு இடையிலான மோதலில், பள்ளியில் கொலை நடந்ததாக வெவ்வேறு செய்திகள் பதிவாகியிருக்கின்றன. இந்தக் கொலையின் புதிர் சாதி முடிச்சுகளில் போய்தான் அவிழும். 'சாதிகள் இல்லையடி பாப்பா' என்ற வரிகளுக்கான அர்த்தத்தை நகர்ப்புற மாணவர்களிடமாவது ஓரளவு எதிர்பார்க்க முடியும். சாதி அமைப்புகள் வலுவாக இருக்கும் கிராமப்புற மாணவர்களிடம் சாதியுணர்வு இருப்பது இயல்பானதுதான் என இந்தச் செய்தியைக் கடந்து செல்வது பிரச்சினையிலிருந்து தப்பித்துக்கொள்ளும் வழிதான்.

சமூக அக்கறை கொண்ட ஆசிரியர்களும் சமூக நலன் விரும்பும் அரசும் கிராமப்புற உயர்நிலைப் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளிலிருந்து விழிப்புணர்வைத் துவங்க வேண்டிய நேரம் இது. 'ஆபரேஷன் 100' என்கிற பெயரில் தென்மாவட்டங்களில் மீண்டும் ஒரு சாதிக் கலவரத்துக்கான சூழல் திரட்டப்படுவதாக அதிகாரபூர்வமற்ற செய்திகள் கசிகின்றன. கலவரத்தில் ஈடுபடத் திட்டமிடும் சாதியைச் சேர்ந்தவர்களும் அதற்கு எதிரான சாதியைச் சேர்ந்தவர்களும் தனித்தனியே திரட்டப்பட்டு, மூளைச் சலவை செய்யப்படுவதாகவும் செய்திகள். இதில் பெருமளவில் சம்பந்தப்பட்டிருப்பது மாணவர்கள் என்பதால், அரசும் சமூக நலன் விரும்பிகளும் உடனடியாக கவனம் செலுத்த வேண்டிய உடனடித் தேவை இருக்கிறது.

என்னுடைய நண்பரின் வலது கை எப்படித் துண்டானது? தென்மாவட்ட சாதிக் கலவரங்கள் உச்சத்தில் இருந்த நேரம்… நாட்டு வெடிகுண்டு தயாரித்தபோது, தவறாகக் கையாண்டதால் அது வெடித்துக் கை துண்டானது.

துண்டானது அவனது வலது கை மட்டுமல்ல; வாழ்க்கையும்தான்!

சந்திர சரவணன்,பத்திரிகையாளர், எழுத்தாளர். தொடர்புக்குsaravanamcc@yahoo.comஅன்பு வாசகர்களே....


இந்த ஊரடங்கு காலத்தில் வீட்டை விட்டு வெளியே வராமல் நமக்கு நாமே சமூக விலகல் ( Social Distancing) செய்து கொள்வோம். செய்தி ஊடகங்களின் வழியே உலகுடன் தொடர்பில் இருப்போம். பொதுவெளியில் இருந்து தனிமைப்படுத்திக் கொண்டு கரோனா பரவலைத் தடுப்பதில் நம் பங்கை முழுமையாக இந்த சமூகத்துக்கு அளிப்போம்.


CoVid-19 கரோனா தடுப்பு / விழிப்புணர்வு கையேடு - இலவசமாக டவுன்லோடு செய்து பயன்பெறுங்கள்!


- வாசகர்கள் நலனில் அக்கறையுடன் இந்து தமிழ் திசை


சாதிக் கலவரம்சாதிப் பிரச்சினைகாதல்தலித்சமூகம்கவுரவக் கொலைசாதி உணர்வுபள்ளிமாணவர்கள்

Sign up to receive our newsletter in your inbox every day!

You May Like

More From This Category

More From this Author