

தமிழ் வாசகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்த 49ஆவது சென்னை புத்தகக் காட்சி இன்று தொடங்குகிறது. தமிழ்நாட்டின் மிகப்பெரும் அறிவுப் பெருவிழாவாகக் கருதப்படும் இந்தப் புத்தகக் காட்சி, சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் இம்மாதம் 21ஆம் தேதி வரை நடைபெறுகிறது.
தென்னிந்தியப் புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கம் (பபாசி) சார்பில் ஆண்டுதோறும் நடத்தப்படும் சென்னை புத்தகக் காட்சி, இந்தியாவின் மிகப்பெரும் புத்தகக் காட்சிகளில் ஒன்றாகக் கருதப்படுகிறது. இந்தப் புத்தகக் காட்சியை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று மாலை 6 மணிக்குத் தொடங்கி வைக்கிறார்.
இந்த விழாவில், 2026ஆம் ஆண்டுக்கான முத்தமிழறிஞர் கலைஞர் மு.கருணாநிதி பொற்கிழி விருதுக்குத் தேர்வுசெய்யப்பட்ட படைப்பாளிகளுக்கு அவர் விருதுகளை வழங்குகிறார். கவிதைக்காக சுகுமாரன், சிறுகதைக்காக ஆதவன் தீட்சண்யா, நாவலுக்காக இரா.முருகன், உரைநடைக்காக பேராசிரியர் பாரதிபுத்திரன், நாடகத்துக்காக கே.எஸ்.கருணா பிரசாத், மொழிபெயர்ப்புக்காக வ.கீதா ஆகியோர் விருதுகளைப் பெறுகின்றனர்.
இதனைத் தொடர்ந்து வரும் 19ஆம் தேதி பபாசி விருதுகள் வழங்கும் விழா நடைபெறுகிறது. ஐந்திணை பதிப்பகம் சார்பில் குழ.கதிரேசன், சிவகுரு பதிப்பகம், மு.முருகேஷ், கடற்கரய் மத்தவிலாச அங்கதம், ஜா. தீபா,
அ.லோகமா தேவி, செ.பா. சிவராசன், முனைவர் சுந்தர ஆவுடையப்பன் ஆகியோர் வெவ்வேறு பிரிவுகளில் விருதுகளைப் பெறுகிறார்கள். துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பபாசி விருதுகளை வழங்கிப் படைப்பாளிகளைக் கௌரவிக்கிறார்.
1,000 அரங்குகள்: சென்னை புத்தகக் காட்சியில் முதன்முறையாக இந்த ஆண்டு 1,000க்கும் மேற்பட்ட அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன. தமிழ் நூல்களுக்காக 428 அரங்குகளும், ஆங்கில நூல்களுக்காக 256 அரங்குகளும், 24 பொது அரங்குகளும் இடம்பெற்றுள்ளன. தமிழ், ஆங்கிலம் தவிர தெலுங்கு மொழியிலும் புத்தகங்கள் காட்சிப்படுத்தப்பட இருக்கின்றன.