Last Updated : 23 Jul, 2015 09:05 AM

 

Published : 23 Jul 2015 09:05 AM
Last Updated : 23 Jul 2015 09:05 AM

தேவை: கபில்தேவ்களா, குருநாத்களா?

கிரிக்கெட் வாரியத்தால் கபில்தேவ்களை அல்ல; குருநாத் மெய்யப்பன்களைத்தான் உருவாக்க முடியும்!

‘அப்படியானால் தோனியின் கதி?’- இதுதான் சென்னை சூப்பர் கிங்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் ஆகிய இரு அணிகளுக்கும் இரு ஆண்டுகள் தடை விதிக்கப்பட்ட பிறகு சராசரியான ரசிகர்கள் மனதில் எழுந்த கேள்வி. ஐ.பி.எல்லின் இந்த இரு அணிகளின் உரிமையாளர்கள் / உயர் மட்ட நிர்வாகிகள் இருவர் சூதாட்டத்தில் ஈடுபட்டதற்கான ஆதாரத்தை அடிப்படையாகக் கொண்டு, உச்ச நீதிமன்றம் நியமித்த நீதிபதி லோதா தலைமையிலான குழு இந்தத் தீர்ப்பை வழங்கியது. ஐ.பி.எல்லை ரசித்துப் பார்த்த பலருக்கும் அதிர்ச்சி தந்த இந்தத் தீர்ப்பு, ஐ.பி.எல். போட்டிகளில் மலிந்திருப்பதாகக் குற்றம்சாட்டப்படும் ஊழல்களுக்கான நிரூபணமாகவே பார்க்கப்படுகிறது.

இந்தச் சம்பவம் அடுத்த ஆண்டு ஐ.பி.எல். போட்டித் தொடரைப் பற்றிய கேள்விகளை எழுப்புகிறது. தொடக்கத்திலிருந்தே பல்வேறு குற்றச்சாட்டுகளுக்கு ஆளாகிவரும் ஐ.பி.எல். தொடர் நின்றுபோனால், அதனால் கிரிக்கெட்டுக்கு எந்த நஷ்டமும் இல்லை. ஐ.பி.எல்லின் உருவாக்கத்திலேயே முறைகேடுக ளுக்கான விதை இருப்பதைக் கவனிக்க வேண்டும். இந்திய அணியின் முன்னாள் கேப்டனும் இந்திய கிரிக்கெட்டின் மகத்தான சாதனையாளர்களில் ஒருவருமான கபில்தேவின் துணையுடன் ஜீ குழுமம் உருவாக்கி வெற்றிகரமாக நடத்திவந்த தொடரான ஐ.சி.எல்லைப் பார்த்துதான், இந்திய கிரிக்கெட் வாரியம் தானே இதுபோன்ற ஒரு தொடரை நடத்துவதாக அறிவித்தது. அதில் ஒன்றும் தவறு இல்லை. ஆனால், இதில் தான் மட்டுமே ஜொலிக்க வேண்டும் என்னும் நோக்கத்துடன் ஜீ குழுமத்தின் கடையை மூடவைத்த விதம்தான் கண்டனத்துக்குரியது.

ஆதிக்க வெறி

ஐ.சி.எல்லில் விளையாடுபவர்களுக்கு இந்திய வாரியம் நடத்தும் போட்டிகளில் பங்குபெறத் தடை விதித்தது. ஐ.சி.எல்லில் விளையாடும் பிற நாடுகளின் ஆட்டக்காரர்கள் இந்திய அணியுடனான போட்டிகளில் கலந்துகொள்ள முடியாது என்ற நெருக்கடியையும் கொடுத்தது. இந்திய அணியுடன் ஆடுவதால் கிடைக்கும் லாபங்களைக் கருத்தில் கொண்ட பிற வாரியங்கள் இந்திய வாரியத்துக்குக் கட்டுப்பட்டன. இந்திய வாரியத்தின் பண பலமும் நட்சத்திர வீரர்கள் அனைவரும் அதன் பிடியில் இருப்பதும் அதன் ஆதிக்க வெறிக்குத் துணை நின்றன. இந்த பலத்துடன் போட்டி போட முடியாமல் ஐ.சி.எல். பின்வாங்கியது. அதில் இடம்பெற்றவர்கள் இந்திய வாரியத்தின் மன்னிப்பைப் பெற்றுக்கொண்டு ஐ.பி.எல்லில் ஆடத் தொடங்கினார்கள்.

புறக்கணிக்கப்பட்ட கபில்தேவ்

ஐ.சி.எல்லில் பங்குபெற்றதற்காக கபில்தேவையே புறக்கணிக்கும் அளவுக்கும் இந்திய வாரியம் சென்றது. முன்னாள் ஆட்டக்காரர்களுக்குக் கொடுக்கப்பட்ட சன்மானத் தொகை (தலா ரூ 1.5 கோடி) கபில்தேவுக்குக் கொடுக்கப்படவில்லை. அவர் கிரிக்கெட் விவகாரங் களிலிருந்து முற்றாக ஒதுக்கிவைக்கப்பட்டார். ஒதுக்கப் படுதலின் வலியை ஒரு அளவுக்கு மேல் தாங்க முடியாத கபில்தேவ், 2012-ல் ஜீ குழுமத்தின் நிறுவனத்தில் வகித்துவந்த பொறுப்பை ராஜினாமா செய்து, வாரியத்துக்கு நட்புக் கரம் நீட்டினார். வாரியம் அவருக்கும் ‘மன்னிப்பு’ வழங்கியது. அதன் பிறகே அவருக்கு ரூ. 1.5 கோடி வழங்கப்பட்டது.

எந்த அரசு மாறினாலும் அதிகாரத்துடனான வாரியத்தின் தொடர்பு மட்டும் பலவீனமடைவதே இல்லை. வாரியத்தின் தலைமைப் பொறுப்புகளில் இருப்பவர் களைப் பாருங்கள். ஜக்மோகன் டால்மியா, நிவாசன், லலித் மோடி, சரத் பவார்… எல்லோருமே வணிக அல்லது அரசியல் அரங்கில் பெரிய கைகள். ஒரு முறையாவது பிஷன் சிங் பேடி, சுனில் கவாஸ்கர் போன்ற யாரேனும் இந்த வாரியத்தின் தலைவராக முடியுமா? முடியாது. கிரிக்கெட் திறமைசாலிகளின் விளையாட்டு என்றால், அதன் நிர்வாகம் பெரும் பணக்காரர்களின் பொழுதுபோக்கு.

வக்கில்லாத வாரியம்

வாரியத்தின் பண பலம், இந்திய கிரிக்கெட் விவகாரங்களில் அதற்கு இருக்கும் முழுமையான அதிகாரம் ஆகிய இரண்டும்தான் உலகின் மிகச் சிறந்த ஆட்டக்காரர்களையும் பயிற்சியாளர்களையும் ஐ.பி.எல்லுக்குள் ஈர்த்தன. தன் சொந்த முயற்சியால் ஒரே ஒரு திறமைசாலியைக்கூட உருவாக்கும் வக்கு இல்லாத வாரியம், பணத்தை வாரி இறைத்துத் திறமைசாலிகளை வாடகைக்கு எடுத்தது. எட்டு அணிகள் உருவாக்கப்பட்டன. ஆட்டக்காரர்கள், பயிற்சியாளர்கள், பல விதமான பணிகளுக்கான உதவியாளர்கள் என, ஒவ்வொரு அணியிலும் கிட்டத்தட்ட 50 பேர் திரட்டப் பட்டார்கள். எட்டு முதலாளிகள், அந்த முதலாளிகளின் பிரதிநிதிகளாய்ப் பல ‘நிர்வாகிகள்’, அவர்களது உறவினர்கள், நிறுவன ஊழியர்கள் என மேலும் நூற்றுக் கணக்கானவர்கள் கிரிக்கெட் அரங்கில் புதிதாக நுழைந் தார்கள். ஒரே ஒரு அணியை மட்டும் நிர்வகிக்கும்போதே ஃபிக்ஸிங் போன்ற புகார்கள் எழுந்திருக்கின்றன. இத்தனை அணிகள், அதில் தொடர்புடைய இத்தனை பேர் என்று வரும்போது எல்லாவற்றையும் யார் கண்காணிப்பது? எப்படிக் கண்காணிப்பது?

சூதாட்டம் என்பது மனித மனத்தின் அடிப்படை உணர்வுகளில் ஒன்று என்பதை மறுப்பதற்கில்லை. ‘இன்னிக்கு மழை பெய்யும், என்ன பந்தயம்?’ என்பது போன்ற பேச்சுக்களை இயல்பாகக் கேட்க முடியும். எனவே, களத்தில் நடக்கும் ஆட்டத்தை வைத்துப் பல்வேறு இடங்களில் பல்வேறு நபர்கள் சூதாடிக் கொண்டிருப்பதைத் தடுக்கவே முடியாது. அதை ஆட்டத்துடன் தொடர்புபடுத்த முடியாது. ஆனால், அந்தச் சூதாட்டக்காரர்களுடன் அணியின ருக்கோ அணிகளுக்கு நெருக்கமானவர்களுக்கோ தொடர்பு இருந்தால் அங்குதான் வில்லங்கம் தொடங்குகிறது. குருநாத் மெய்யப்பனுக்கும் ராஜ் குந்த்ராவுக்கும் சூதாடிகளுடன் இருந்த தொடர்பு அம்பலமாகியிருக்கிறது. ஆனால், ஒவ்வொரு அணியிலும் மெய்யப்பன்களும் குந்த்ராக்களும் இருக்க வாய்ப்பிருக்கிறது என்பதுதான் யதார்த்தம்.

சூதாடிகளுக்கு ஆட்டம் குறித்த தகவல்கள் முக்கியம். களம் இறங்கவிருக்கும் 11 பேர் பற்றிய விவரம் முதலான பல தகவல்கள் முக்கியமானவை. தேசிய அணிகளில் ஆடி, விதிமுறைகளை நன்கு அறிந்த ஆட்டக்காரர்கள் நடத்தை விஷயத்தில் குறைந்தபட்ச உத்தவாதம் இருக்கிறது என்று அனுமானித்துக்கொள்ளலாம். ஆனால், ஒரு ஆட்டத்தில்கூட ஆட வாய்ப்புக் கிடைக்காத பலர் தங்களுக்குக் கிடைக்கும் தகவல்களை எப்படிப் பயன்படுத்துவர்கள் என்பதற்கு உத்தரவாதம் இல்லை. அதிலும் அவர்களை வாடகைக்கு எடுத்த முதலாளிகள், அவர்களது உறவினர்கள் கேட்டால் சொல்ல முடியாத நிலையில் அவர்கள் இல்லை. இந்தத் தகவல்கள் சூதாடிகளுக்கு முக்கியம். இந்தச் சூதாடிகளுடன் முதலாளிகளின் வட்டாரத்தில் இருப்பவர்களுக்குத் தொடர்பு இருந்தால் என்ன நடக்கும்?

ஐ.பி.எல்லை ஒழித்துவிட்டால் நிலைமை சரியாகி விடுமா? வாய்ப்பே இல்லை. பெரும் பணக்காரர்களின் பிடியில் இருக்கும் வாரியத்தையே கலைத்து கிரிக்கெட் நிர்வாகத்தை முற்றிலுமாகச் சீரமைக்க வேண்டும். நாடு முழுவதும் உள்ள சிறியதும் பெரியதுமான மைதானங்களும் தனிநபர்களின் முன்முயற்சியால் நடத்தப்படும் பயிற்சி மையங்களும்தான் இன்றைய / நாளைய தோனிகளையும் அஸ்வின்களையும் உருவாக்குகின்றன. வாரியம் அல்ல. அதன் அதிகார மமதை கொண்ட தலைமை அல்ல. கபில்தேவுக்கு மன்னிப்பு வழங்கும் அதிகாரம் இருப்பதாக நினைத்துக் கொள்ளும் வாரியத்தால் கபில்தேவ்களை உருவாக்க முடியாது. குருநாத் மெய்யப்பன்களைத்தான் உருவாக்க முடியும். நமக்குத் தேவை கபில்தேவ்களா, குருநாத்களா என்பதை முடிவுசெய்ய வேண்டிய தருணம் இது.

வாரியத்தின் அத்துமீறல்களையும் அடங்காப்பிடாரித் தனத்தையும் இப்போதும் கட்டுப்படுத்தவில்லை என்றால், இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் யாராலும் கட்டுப்படுத்த முடியாத ஏகபோக ராஜ்ஜியமாக மாறி, கிரிக்கெட்டை மேலும் சீரழித்துக்கொண்டே இருக்கும்.

- அரவிந்தன், தொடர்புக்கு: aravindan.di@thehindutamil.co.in

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x