Published : 02 Jun 2015 09:09 AM
Last Updated : 02 Jun 2015 09:09 AM

மோடி 365° - மோடியின் தொகுதி எப்படி?

மோடியின் தொகுதி எப்படி?- ஆர்.ஷபிமுன்னா, ஸ்ரீராம் பகவதி

*

உயிர் பிரியவும், அது பிரிந்த பின் இங்கேயே தன் உடலுக்கு இறுதிச் சடங்குகள் நடக்கவுமான வேண்டுதல்களோடு ஒவ்வொரு நாளும் நூற்றுக் கணக்கானோர் வந்தடையும் இடம் காசி. காசியின் பொருளாதாரமே கோயில்களாலும் சுடுகாடுகளும்தான் சுவாசிக்கின்றன என்பது அதீதமான வார்த்தைகள் அல்ல. ஒருபுறம் இது அவர்களுக்கு வரம் என்றால், மறுபுறம் சாபம். ஏனென்றால், அவர்களுடைய பொருளாதாரத்துக்கு இது ஒன்றே வழி. காலங்காலமாகச் செயல்படாதவர்களையே அவர்கள் தங்கள் பிரதிநிதிகளாகப் பார்த்துக்கொண்டிருந்தார்கள். அப்போதுதான் திடீரென்று ஒருநாள் புயல்போல வந்தார் மோடி. “ராஷ்டிர குருவாக (தேசத்தின் தலைவர்) காசி ஆகவில்லை என்றால், இந்தியா விஸ்வ குருவாக (உலகின் தலைவராக) ஆக முடியாது” என்றார். தங்கள் வாழ்நாள் தவம் எல்லாம் நிறைவேறும் என்ற நம்பிக்கை கொண்டார்கள் காசிவாசிகள். ஓராண்டுக்குப் பின் பிரதமரின் தொகுதி - ராஷ்டிர குரு - எப்படியிருக்கிறது?

தன் வாரணாசியின் ரவிந்திராபுரி காலனியில் உள்ள மோடியின் நாடாளுமன்ற உறுப்பினர் அலுவலகம், பிரதமர் அலுவலகம் என்றே அழைக்கப்படுகிறது. இதை நிர்வகிக்க என ஆர்எஸ்எஸ் ஊழியர்கள் இருக்க, வாரணாசியின் மேயர், சட்டப்பேரவை உறுப்பினர் மற்றும் பாஜகவின் மாநிலத் தலைவர் ஆகியோரிடமும் பொறுப்புகள் ஒப்படைக்கப்பட்டுள்ளன. இங்கு பெறப்படும் மனுக்கள் டெல்லிக்கு அனுப்பப்பட்டு, அங்கிருந்து வரும் உத்தரவுகளைப் பொறுத்து கோரிக்கைகள் நிறைவேற்றப்படுகின்றன. முதல் 8 மாதம் வரை தனது தொகுதி வளர்ச்சி நிதியிலிருந்து ஒரு ரூபாய் செலவழிக்காமலிருந்த மோடி, கடந்த இரு மாதங்களில் அனைத்தையும் அள்ளிக்கொடுத்துள்ளார். வெற்றிக்குப் பிறகு, இதுவரை வாரணாசிக்கு மூன்று முறை மட்டுமே வந்திருக்கிறார் மோடி. ஆனாலும், காசிவாசிகள் இதைக் குறையாகக் கருதவில்லை. “மோடிக்கு முன்பு இங்கு நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த முரளி மனோகர் ஜோஷியைவிட மோடி எவ்வளவோ மேல்” என்கிறார்கள்.

மோட்ச சேவைக்கு நற்சான்று

காசிக்கு வெளியிலிருந்து காசிக்கு வருபவர்களும் காசியில் படித்துறைகளை நம்பிப் பிழைப்பவர்களும் முதலில் நற்சான்றிதழ் கொடுப்பது காசி மோட்ச சேவைக்கு.

இறந்த ஏழைகளின் உடல்களை எரிக்கும் இயந்திரத் துக்கு இனி கட்டணம் அளிக்கத் தேவை இல்லை. இதற்கு முன் அதற்கு ரூ.500 கொடுக்க வேண்டும் அல்லது விறகால் எரிக்க ரூ.5,000 செலவிட வேண்டும். மிக அருகில் இருந்தும், அதன் சுற்றுவட்டாரத்தில் இறந்தவர்களின் உடல்கள் காசில்லாமல் மோட்ச நகரம் செல்ல முடியாமல் இருந்த நிலை கடந்த ஆறு மாதங்களாக மாறிவிட்டது. இதற்காக, போன் செய்தால் வரும் அமரர் ஊர்திகள் அந்த உடல்களை இலவசமாகவே மோட்ச நகரம் சேர்ப்பித்துவிடும். ‘ஜல் ஷவ் வாகினி’ (இலவசப் படகுத் திட்டம்) ஒரு சாதனையாகவே இங்கே குறிப்பிடப்படுகிறது. காலங்காலமாக மோட்சம் தேடி இங்கே வரும் முதியவர்களாலும், சடலங்களை எரிக்கக் கொண்டுசெல்வதாலும் இங்கே போக்குவரத்து நெரிசல் மிகவும் அதிகமாக இருந்தது. தற்போது ‘ஜல் ஷவ் வாகினி’ திட்டத்தால் போக்குவரத்து நெரிசல் குறைந்திருக்கிறது என்கிறார்கள். படகுகள் தவிர, சடலங்களைச் சுடுகாட்டுக்கோ இடுகாட்டுக்கோ எடுத்துச் செல்வதற்காக 5 அமரர் ஊர்திகளும் அங்கே இருக்கின்றன.

சிறகடிக்கும் தூய்மை இந்தியா

அடுத்து, காசிவாசிகள் சந்தோஷமாகக் குறிப்பிடுவது ‘தூய்மை இந்தியா’ திட்டம். காசியில் இது நல்ல பலன் தருகிறது. ஒவ்வொரு பருவமழையின் போதும் டன் கணக்கில் வண்டல் மண்ணை கங்கை கொண்டுவந்து கரைகளில் சேர்க்கிறது. கடந்த நவம்பரில், அஸ்ஸியில் பிரதமர் மண்வெட்டி ஏந்தினார். அஸ்ஸியிலிருந்து மணிகர்ணிகாவுக்கு நடந்துவரும்போது போன ஆண்டுக்கும் இந்த ஆண்டுக்கும் நிறைய மாற்றம் தெரிகிறது. வாரணாசியில் மொத்தம் 84 படித்துறைகள் இருக்கின்றன.

முன்பைவிடச் சுத்தமாக இருப்பதாக உள்ளூர்வாசிகள் கூறுகிறார்கள். அதேபோல, மணிக்கன்கா காட் மற்றும் ஹரிச்சந்திரா காட் சுடுகாடுகளைச் சுற்றியுள்ள ஆக்கிரமிப்புகள் உத்தரப் பிரதேச போலீஸாரால் அகற்றப்பட்டதிலும் காசிவாசிகளுக்குப் பெரும் மகிழ்ச்சி. மோடி தத்தெடுத்த ஜெயாபூர் கிராமத்தில் மோடியை ஈர்க்கும் விதமாக நிறையத் தொழிலதிபர்கள் மற்றும் தொண்டு நிறுவனங்கள் சேவையில் இறங்கியிருக்கின்றன.

இதெல்லாம் மோடியின் ஓராண்டில் காசியின் நல்ல கதைகள் என்றால், இவற்றுக்கு இணையாகக் கெட்ட கதைகளும் இருக்கின்றன.’

காத்திருக்கும் நெசவாளிகள்

காசி எனும் வாரணாசியின் ‘பனாரஸ் பட்டு’ உலகப் பிரசித்தி பெற்றது. வாரணாசியின் உயிர்நாடியான நெசவாளர்கள் முன்னேற்றத்துக்குத்தான் முன்னுரிமை எனத் தேர்தல் பிரச்சாரத்தில் தெரிவித்திருந்தார் மோடி. பிரதமர் ஆனதும் நவம்பர் 7, 2014-ல் ரூ.200 கோடியில் நெசவாளர்களுக்கான வர்த்தக மையத்துக்கு அடிக்கல்நாட்டு விழாவும் நடத்தப்பட்டது. ஆனால், அதற்குப் பின் இன்னும் ஒரு செங்கல்கூட எடுத்து வைக்கப்படவில்லை. நெசவாளர்களுக்கு உதவும் வகையில் தொடங்கப்பட்ட வணிக வசதி மையம், கைவினைப் பொருட்களுக்கான அருங்காட்சியகம் போன்ற பெரும் திட்டங்களும் தொய்வடைந்துபோயிருக்கின்றன. அதேபோல, அதிகமாகப் பேசப்பட்ட வாரணாசி-கியோட்டோ இரட்டை ஒப்பந்தத்தால் இதுவரை எந்தப் பலனும் ஏற்படவில்லை.

10 மணி நேர மின் தட்டுப்பாடு

குஜராத்தில் மின்வெட்டு இல்லை என்பதைச் சொல்லியே நாடு முழுவதும் ஓட்டு வாங்கினார் மோடி. ஆனால், காசியில் மிகப் பெரிய பிரச்சினை மின்வெட்டு. “மின்சாரப் பிரச்சினை ஒரு சாபக்கேடுபோல எங்களுக்கு. எல்லாக் காலத்திலும் எங்களைக் கோடையில் வதைக்கிறது” என்கிறார்கள். மோடியின் இந்தத் தொகுதியில் உள்ள ரோஹானியா, சேவாபூரி போன்ற பெரும்பாலான சட்டமன்றத் தொகுதிகள் கிராமப்புறங்களே. அங்கெல்லாம் நாளொன்றுக்கு 10 மணி நேரத்துக்கும் குறைவாகவே மின்சாரம் வருகிறது.

கங்கையைச் சுத்தமாக்கும் பணிபற்றி நாடு முழுவதும் பேசப்பட்டுக்கொண்டிருக்கும் சூழலில், இங்கு கங்கையில் கழிவுநீர் வந்து கலக்கும் 23 கால்வாய்கள் இன்னும் மூடப்படவில்லை. ரூ.18,000 கோடி ஒதுக்கப்பட்டும்கூட பெரும் மாற்றம் ஏதும் தென்படவில்லை. நகராட்சிக் கழிவுகள் அகற்றுவதற்கான மையம் சிதிலமடைந்து கிடக்கிறது. கர்தானா நகராட்சியின் கழிவகற்றும் மையம் 2012-லேயே தயாராகிவிட்டாலும் நடைமுறைச் சிக்கல்களில் அகப்பட்டுக்கொண்டிருக்கிறது. கழிவுநீர்ப் பாதை உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்காகத் தோண்டப்பட்ட சாலைகள் அப்படியே கிடக்கின்றன என்று உள்ளூர்வாசிகள் முறையிடுகிறார்கள். ரதயாத்ரா, போஜுபிர், மெஹ்மூத் கஞ்ச் போன்ற பகுதிகளிலும் கச்சேரி-சாரநாத் சாலையும் பயணிக்கவே முடியாத வகையில் இருக்கின்றன.

காசியில் புதிய முதலீடுகள், தொழில்களுக்கு இன்னும் அறிகுறி தெரியவில்லை என்ற பேச்சும் அடிபடுகிறது. மோடி வெற்றி பெற்ற பின் அவருடன் கைகுலுக்குவதற்கு வரிசையில் நின்ற பெருநிறுவனப் பெருந்தலைகளில் யாருமே இந்தத் தொகுதியில் முதலீடு செய்ய முன்வரவில்லை என்கிறார்கள்.

ஆனாலும், ஒரு நாடாளுமன்ற உறுப்பினராக மோடி வெற்றி நடைபோடுகிறார் என்றே சொல்ல வேண்டும். ஏனென்றால், இதற்கு முன்பு இங்கு நாடாளுமன்ற உறுப்பினர்களாக இருந்தவர்களின் வரலாறு அப்படி. மேலும், ஒரு தேசத்தின் பிரதமரான தங்கள் நாடாளுமன்ற உறுப்பினர் தன் தொகுதியை நிச்சயம் 5 ஆண்டுகளுக்குள் எங்கோ கொண்டுசென்றுவிடுவார் என்ற நம்பிக்கையும் அவர்களிடம் இருக்கிறது!

ஒரு நாடாளுமன்ற உறுப்பினராக மோடி வெற்றி நடைபோடுகிறார் என்றே சொல்ல வேண்டும். ஏனென்றால், இதற்கு முன்பு இங்கு நாடாளுமன்ற உறுப்பினர்களாக இருந்தவர்களின் வரலாறு அப்படி. மேலும், ஒரு தேசத்தின் பிரதமரான தங்கள் நாடாளுமன்ற உறுப்பினர் தன் தொகுதியை நிச்சயம் 5 ஆண்டுகளுக்குள் எங்கோ கொண்டுசென்றுவிடுவார் என்ற நம்பிக்கையும் அவர்களிடம் இருக்கிறது!

ஒரு பெரும் இலக்கு- ரேணுகா நாராயணன்

*

காசியை உலக ஆன்மிகத் தலைநகரமாக மாற்றுங்கள் என்று மோடி விடுத்த அறைகூவல் இன்னமும் பலன் கொடுக்கவில்லை. அதன் படித்துறைகளைத் தூய்மைப் படுத்துவது பெரிய வேலை. அந்தப் படித்துறைகள் சாமானிய மானவை அல்ல. ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளாக வெவ்வேறு கலாச்சாரங்களை நேரில் பார்த்த நேரிய சாட்சிகள் அவை.

காசி என்பது இந்துத்துவத்தின் மையம். தன்னுடைய வாழ்நாளில் ஒரு நாளாவது காசிக்குச் செல்ல மாட்டோமா, கங்கையில் குளிக்க மாட்டோமா, பிறவித் தொல்லைகளையெல்லாம் அதன் நீரோட்டத்தில் மூழ்கடித்துவிட்டு அந்த விசுவநாதரின் திருவடிகளில் சரண் புகுந்து முக்தி பெற மாட்டோமா என்று ஏங்குபவர்கள் பல்லாயிரக் கணக்கானோர் உண்டு. முஸ்லிம்களுக்கு மெக்கா எப்படியோ, கிறிஸ்தவர்களுக்கு வாட்டிகன் எப்படியோ சனாதனிகளுக்குக் காசியும் அப்படியே.

ஜைன தீர்த்தங்கரர்களில் 4 பேர் அவதரித்தது காசி மாநகரில்தான். கிறிஸ்து பிறப்பதற்கு முன் 6-வது நூற்றாண்டில் புத்தர் இந்நகருக்கு வந்திருக்கிறார். இதற்கு அருகில் உள்ள சாரநாத்தில்தான் தனது முதல் 5 சீடர்களுக்கு உபதேசத்தை அருளினார். இந்து, முஸ்லிம் என்று இருதரப்பாரும் கொண்டாடும் புனிதர் சந்த் கபீர்தாசர் பிறந்தது காசி மாநகரே. வாக்கேயகாரர் முத்துஸ்வாமி தீட்சிதர் தன்னுடைய குருநாதருடன் தனது இளம் வயதில் இங்கு வந்து இந்துஸ்தானி இசையையும் பயின்றார். மகாகவி பாரதியார் வந்து பயின்றதும் இங்கேதான்.

1839-ல் மகாராஜா ரஞ்சித் சிங். காசி விசுவநாதர் ஆலயத்துக்குப் பொன்னால் கூரை வேய்ந்தார். இந்தூரைச் சேர்ந்த மகாராணி அகல்யா பாய் 1780-ல் காசி விசுவநாதர் ஆலயத்தைத் திருத்தியமைத்தார். நபா, கபுர்தலா மகாராஜாக்கள் காசிக்குத் தாராளமாக நன்கொடைகளை வழங்கினர். பண்டித் மதன் மோகன் மாளவியா இங்கே சம்ஸ்கிருதக் கல்லூரியை முதலில் தொடங்கினார். பிறகு, பெனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தை நிறுவினார்.

இப்படி ஏராளமான வரலாற்றுப் பெருமைகளுக்கு உரிய காசி மாநகரின் கங்கை படித்துறைகள் ஆரத்திக்கு மட்டுமல்ல; அழகுக்கும் பெயர் போனவை. அவற்றின் அழகையும் தூய்மையையும் மீட்கும் பணி சாதாரணமானது அல்ல. முடியாததை முயற்சித்து அதில் வெற்றியை அறுவடைசெய்யும் மோடி இப்போது அதைத் தொடங்கியிருக்கிறார்!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x