கிராமியக் கலைகளின் அழிவுக்குக் காரணம் என்ன?

கிராமியக் கலைகளின் அழிவுக்குக் காரணம் என்ன?
Updated on
2 min read

தமிழக கிராமியக் கலைகள் 1980-க்கும் 2000-க்கும் இடையில் உத்தேசமாக 100 அளவில் இருந்தன. இப்போது இவற்றில் 60%-தான் உயிர்வாழ்கின்றன. இந்தக் கலைகள் நலிந்துபோவதற்குரிய காரணங்களை ஆம்/இல்லை என்னும் ஒற்றைப் பதிலில் சொல்ல முடியாது. இதற்குப் பொதுவானதாகவும் சிறப்பானதாகவும் காரணங்கள் உள்ளன. கிராமியக் கலைகளின் நலிவுக்கு அக்கலைகள் நிகழும் வட்டாரங்களின் சாதிகளின் நிலை, மக்களின் வளர்ச்சி, நகரத் தாக்கம், கல்வியறிவு, சூழ்நிலை போன்ற பல விஷயங்களைப் பெரிதும் கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டும்.

தமிழகத்தின் கிராமியக் கோயில்களின் வழிபாடு, விழா, சடங்குகள் போன்றவற்றில் நிகழும் மாற்றங்கள் திட்டமிட்டுச் செய்யப்படுவது என்ற கருத்து தவறானது. இது நுட்பமாய் செய்யப்படாத ஆய்வின் ஊகமே. நெறிப்படுத்தப்பட்ட சமயக் கூறுகள் பொதுவாக மாற்றம் அடைந்ததைப் போலவே கிராமத் தெய்வ வழிபாட்டு நிலைகளிலும் நடந்திருக்கிறது. கிராமிய வழிபாட்டில் தனிப்பட்டவரோ நிறுவனமோ பெருமளவில் தலையிடாமல் மேல்நிலையாக்கம் நடக்கிறது. இந்த மாற்றம் கலைகளையும் பாதித்திருக்கிறது.

கிராமத்துக் கோயில்களைச் சார்ந்தவர்களின் அறிவு சார்ந்த நிலைகளும் பொருளாதார வளர்ச்சிகளும் கோயில் சடங்குகளின் போக்கை மாற்றியிருக்கின்றன. இதனால் சில கோயில்களில் சடங்கு நிகழ்வுகள் நிறுத்தப்பட வேண்டிய சூழல் உருவாகிவருகிறது. உதாரணம், கணியான் ஆட்டம். இக்கலையின் சடங்குக் கூறுக் கலைகளான பேயாட்டம், கைவெட்டு, அம்மன்கூத்து போன்றவை நிகழ்வது குறைந்துவருகிறது. இன்னும் சில ஆண்டுகளில் இவை நின்றுவிடும். இதுபோல வேறு எடுத்துக்காட்டுகளும் உள்ளன.

சமூகக் காரணங்கள்

கலைகளின் மாற்றம், நலிதல் போன்றவற்றுக்குரிய சமூகக் காரணங்கள் கலைஞர்களுக்கும் பொருந்தும். இந்த மாற்றத்தில் பொருளாதார வளர்ச்சியை முக்கியமாகக் கொள்ள வேண்டும். அன்றாடங்காய்ச்சியாக இருந்த கணியான் ஆட்டக் கலைஞர் ஒருவரைச் சந்தித்தேன். அவர் என் நீண்ட நாளைய நண்பர். அவரது மகனுக்கு வருவாய்த் துறையில் உயர் பதவி கிடைத்ததைச் சொன்னார்; அவன் தம்பிக்கும் அரசு வேலை விரைவில் கிடைத்துவிடும் என்றார். காரணம், கணியான் சாதியினரை பழங்குடியினர் பட்டியலில் (எஸ்.டி.) சேர்த்ததுதான். இனி அவர்கள் ஆடப்போவதில்லை என்றார். அரசு அறிவிப்பால் ஏற்பட்ட சாதியின் முன்னேற்றம் இது. சமூக நீதி கடைப்பிடிக்கப்படும்போது அமலாகும்போது அதன் பக்க விளைவுகளாக இதுபோன்ற இழப்புகள் சகஜமானவைதான். இதில் ஊடகங்களுக்கும் சினிமாவுக்கும் பங்கு மிகவும் குறைவு.

தமிழகத்தின் சாதி இறுக்கம், முரண்பாடு காரணமாக கிராமியக் கலை வடிவங்கள் சில அழிந்துவிட்டன. ஒரு சாதிக்காரரை இன்னொரு சாதிக்காரர் விமர்சிக்கும் வழக்காறு தமிழில் உண்டு; அவை கிண்டலின் உச்சமாக இருக்கும். கரகாட்டத் துணைக் கலைகளில் சில இப்படிப் பேசுவதற்கென்றே நடத்தப்படும். எழுபதுகளில்கூட இதைக் கேட்டிருக்கிறேன். ஒவ்வொரு சாதிக்கும் என்றே பட்டப் பெயர்கள் உண்டு; அவற்றின் பலவீனம் பற்றிய குட்டிக் கதைகள் உண்டு. அவர்களின் பண்பாடு பற்றிய பழமொழி, விடுகதை, வழக்காறுகள் உண்டு. இவற்றை உரையாடல் வழி வெளிப்படுத்திய சந்தை காமிக்ஸ் போன்ற சில துணைக் கலைகள் இப்போது நிகழவில்லை. இவற்றை நிகழ்த்திய கலைஞர்களிடம் 80-களில் தொகுத்த விஷயங்களை அந்தரங்கமாகக்கூட உரையாட முடியாத நிலை ஆகிவிட்டது. அப்படியிருக்க... இந்த வழக்காறுகளை அடிப்படையாகக் கொண்ட கலைகளை எப்படி நிகழ்த்த முடியும்.

வேட்டைத் தடையால்…

மதுரை மாவட்டப் பகுதியில் வாழும் மலை வேடர் சாதியினரின் வேட்டைச் சடங்குகளில் ஆடப்பட்ட ஒயிலாட்ட நிகழ்ச்சி இப்போது நடப்பதில்லை. இச்சாதியினர் வேறு சடங்குகளிலேயே ஒயிலாட்டம் ஆடுகின்றனர். தொட்டப்பட்டு நாயக்கர்கள் வேட்டைக்குச் சென்று மீண்டு வரும்போது ஆடிய எக்காளக் கூத்து இப்போது நிகழ்வதில்லை. வேட்டையாடுவது தடை செய்யப்பட்டபோது இக்கலை வடிவங்கள் அழியத் தொடங்கின.

தோல்பாவைக்கூத்துக்குரிய பாவைகளை மான் தோலால் செய்யும் வழக்கம் இருந்தது. அப்போது பாவைகளும் பெரிது; கூத்தரங்கும் பெரிதாக இருந்தது. மான் வேட்டை முழுதும் தடைசெய்யப்பட்டபோது ஆட்டுத்தோலிலேயே பாவைகள் செய்தனர். இதனால், பாவைகளின் வடிவம் குறுகியது; கூத்தரங்கும் சிறியதானது. ஆட்டுத்தோல் இலவசமாகக் கிடைத்த நிலையும் மாறிய பின்பு புதிய பாவைகள் செய்ய முடியாததாயிற்று. இந்தக் கலையின் நலிவுக்கு இது முக்கியக் காரணம். இப்படியாக, வேறு சில கலைகளை உதாரணம் காட்ட முடியும்.

சமூக அந்தஸ்து

நெறிப்படுத்தப்பட்ட கலைஞர்களுக்குரிய சமூக அந்தஸ்து கிராமியக் கலைஞர்களுக்குக் கிடையாது என்பதெல்லாம் தெரியாத விஷயமல்ல. மூன்றாம்தர கர்நாடகக் கலைஞருக்குக் கொடுக்கப்படும் சம்பளம்கூட தரமான கிராமியக் கலைஞர்களுக்குக் கொடுக்கப்படுவதில்லை. அரசு கொடுக்கும் விருதுகளில் கிராமியக் கலைஞர்களுக்கு உள்ள இடமும் 10 சதவீதத்துக்கும் கீழேதான்.

மிகப் பெரும்பாலான கிராமியக் கலைஞர்கள் தங்களின் தலையை மட்டும் நம்பி வாழாதவர்கள். நிரந்தரமான வருமானம் கிடைக்கும் நிலையில் கலைஞர்களின் மரபினர், தங்கள் கலையைப் புறக்கணிப்பதில் தயக்கம் காட்டாத சூழ்நிலை இன்று வந்துவிட்டது.

கிராமியக் கலைகளில் கருவிகள் அல்லது உபகரணங்கள் அடிப்படையில் மட்டுமே நிகழும் கலைகள் அழிவதற்குரிய எல்லாச் சூழ்நிலைகளும் உருவாகிவிட்டன. பொய்க்கால் குதிரை ஆட்டத்துக்குரிய குதிரைக்கூடு செய்வதற்குரிய தொகை உயிருள்ள சாதாரணக் குதிரையின் விலையை விட அதிகம் என்பது பலருக்கும் தெரியாது. இலவசமாகவே மாட்டுத்தோலையும் ஆட்டுத்தோலையும் பெற்று பெரியமேளம், உறுமி, தப்பு போன்ற இசைக் கருவிகளைச் செய்ததையெல்லாம் இன்று நினைத்துப் பார்க்க முடியாது.

கிராமியக் கலைஞர்களின் வாழ்வில் இடைத்தரகர்கள் ஊடுருவி இருப்பது முக்கியமான பிரச்சினையாகிவிட்டது. இதனால், கலைஞர்கள் வஞ்சிக்கப்படுவதும் கலைகளின் அழிவுக்கும் காரணமாகிவிட்டது. பொதுவாக, கிராமியக் கலைஞர்கள் மதுவுக்கு அடிமையாக உள்ளனர். சில பெண் கலைஞர்களும் குடிக்கிறார்கள். இப்படிப்பட்டவர்களிடம் சேமிப்புப் பழக்கமும் இல்லை. அரசுச் சலுகைகள்பற்றியும் பலருக்குத் தெரியாது. உன்னதமான தோல்பாவைக்கூத்துக் கலைஞர் ஒருவர், தன் இறுதிக்காலத்தில் யாசகத்துக்குச் சென்றதை நான் பார்த்திருக்கிறேன். இப்படியெல்லாம் இருக்க... கிராமியக் கலைகளின் அழிவுக்கு ஊடகங்களை மட்டுமே பழிசுமத்துவது ஏனென்று தெரியவில்லை.

- அ.கா. பெருமாள்,

நாட்டுப்புறவியலாளர், ‘சடங்கில் கரைந்த கலைகள்', ‘சிவாலய ஓட்டம்’ உள்ளிட்ட நூல்களின் ஆசிரியர்.

தொடர்புக்கு: perumalfolk@yahoo.com

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in