

ஊழல் ஒரு மாநிலப் பிரச்சினையோ, ஒரு நாட்டின் பிரச்சினையோ அல்ல. அது ஒரு உலகளாவிய பிரச்சினை. இதை ஒரேயடியாக ஒழித்துவிடக் கூடிய மந்திரக்கோல் எந்த ஒரு தனிநபரிடமும் இல்லை. ஆனால், வளர்ந்த நாடுகள் முதிர்ச்சியடைந்த ஜனநாயகம், வெளிப்படைத் தன்மை, அதிகாரப் பரவல், பல்வேறு நிலைகளில் ஊழலைக் கண்காணிக்கும் அமைப்புகள், தேர்தல் மற்றும் நிர்வாகச் சீர்திருத்தம், விரைவான விசாரணை முறைகள், கடுமையான சட்டங்கள், தண்டனைகள் என்று ஒரு ஒட்டுமொத்தக் கட்டமைப்பின் கீழ் ஊழலைக் கட்டுப்படுத்துவதில் வெற்றியடைந்திருக்கின்றன.
இந்தியாவில் தாமதமாக ஆரம்பிக்கப்பட்டாலும் இக்கட்டமைப்பை உருவாக்கும் பணிகள் தொடர்ந்து நடந்துவருகின்றன. குறிப்பாக, கடந்த 10 ஆண்டுகளில் இவை வேகம் பெற்றுள்ளன. 1988-ல் கொண்டுவரப்பட்ட ஊழல் தடுப்புச் சட்டத்தில் தொடங்கி, தகவல் அறியும் உரிமைச்சட்டம், ஊழல் கண்காணிப்பு ஆணையம், லோக்பால் மற்றும் லோக்ஆயுக்தா, ஊழலை அம்பலப்படுத்துபவர் பாதுகாப்புச் சட்டம், குறிப்பிட்ட காலவரையரைக்குள் மக்களுக்குச் சேவை வழங்கல் மற்றும் குறை தீர்க்கும் மசோதா, நீதித் துறைப் பொறுப்பேற்பு மசோதா, இரண்டு ஆண்டுகளுக்கு மேல் தண்டனை பெற்ற மக்கள் பிரதிநிதிகள் உடனடியாகப் பதவியிழக்கும் சட்டம், கருப்புப் பண மசோதா என்று ஊழலைக் கட்டுப்படுத்தும் கட்டமைப்புகளைக் குறிப்பாக கடந்த பத்தாண்டுகளில் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு உருவாக்கியது.
இந்நிலையில், ‘ஊழலை ஒழிப்போம்’ என்று சொல்லி ஆட்சிக்கு வந்த மோடி அரசு, ஊழலை ஒழிப்பதற்குக் கடந்த ஓராண்டில் எடுத்த நடவடிக்கைகள் என்ன? பல ஆண்டுகள் போராட்டத்தின் விளைவாக உருவான இந்த அமைப்புகளைச் சத்தமின்றிச் சிதைக்கும் வேலைகளில் இறங்கியிருக்கிறது.
ஊழலை வெளிக்கொணர்வதில் முக்கியப் பங்கு வகிக்கும் தகவல் அறியும் ஆணையம், மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையம், லோக்பால் போன்ற முக்கிய அமைப்புகளுக்கு ஆணையர், உறுப்பினர்கள் இன்னமும் நியமிக்கப்படவில்லை. 37,000 தகவல் அறியும் மனுக்கள் தேங்கிக் கிடக்கின்றன. குறிப்பாக, பிரதமர் அலுவலகம் தகவல் அறியும் மனுக்களுக்குப் பதில் அளிப்பதைப் பெரும்பாலும் தவிர்த்துவிடுகிறது. தவிர, கருப்புப் பண மசோதா, ஊழலை அம்பலப்படுத்துபவர் பாதுகாப்புச் சட்டம் போன்றவை பல்வேறு திருத்தங்கள் மூலம் பலவீனப்படுத்தப்படுகின்றன.
இதில் ஒன்றும் ஆச்சரியம் இல்லை. ஊழல் கண்காணிப்பு அமைப்புகள் விஷயத்தில் குஜராத் முதல்வராக இருந்தபோதே இப்படிச் செயல்பட்டவர்தான் மோடி.
குஜராத்தில் 9 ஆண்டு காலம் லோக் ஆயுக்தா அமைக்காமல் மோடி அரசு தாமதம் செய்தது. இதை எதிர்த்துத் தொடரப்பட்ட வழக்கில் குஜராத் உயர் நீதிமன்றம், நேர்மையான நீதிபதியான ஏ.ஆர். மேத்தாவின் பெயரைப் பரிந்துரைத்து, லோக் ஆயுக்தா அமைக்க உத்தரவிட்டது. அதையும் அரசு அலட்சியம் செய்ததால் ஆளுநர் கமலா பேனிவால் தலையிட்டு ஏ.ஆர்.மேத்தாவை நியமித்தார். இதை எதிர்த்து மோடி அரசு நீதிமன்றம் சென்றது. உயர் நீதிமன்றமும் உச்ச நீதிமன்றமும் ஏ.ஆர் மேத்தாவின் நியமனத்தை உறுதிசெய்தன. உச்ச நீதிமன்றம் “பகுத்தறிவு இல்லாமல் செயல்படுகிறார் மோடி; இதனால் குஜராத்தில் அரசியல் அமைப்பு நெருக்கடி ஏற்படும்” என்று கடுமையாக விமர்சித்தது. இத்தனை கண்டிப்புக்குப் பிறகும் மோடி அரசு நீதிபதி ஏ.ஆர். மேத்தா செயல்படுவதற்கு ஏற்ப எந்த வசதியும் செய்துதரவில்லை. அவர் ராஜினாமா செய்தார். அதன் பிறகு, குஜராத்தில் அமலில் இருந்த வலிமையான லோக் ஆயுக்தா சட்டத்தில் பல திருத்தங்கள் கொண்டுவந்து அதை நீர்த்துப்போகச் செய்து, பெயரளவில் பல்லில்லாத லோக் ஆயுக்தாவை மோடி அரசு நியமித்தது. இந்த நியமனம் லோக்பால் சட்டத்துக்கு எதிரானது.
சட்ட விரோத சுரங்கத் தொழிலை எதிர்த்த, தகவல் அறியும் உரிமைச் சட்ட ஆர்வலர் அமித் ஜெத்வா கொல்லப்பட்டார் (நீண்ட காலமாக லோக் ஆயுக்தாவுக்கு ஆணையரை நியமிக்க வேண்டும் என்று வழக்குத் தொடுத்தவர் இவர்). அரசு எவ்வித நடவடிக்கை யும் எடுக்காமல் மவுனம் சாதித்தது. பின் நீதிமன்றத்துக்கு வழக்கு போனபோது, பாஜக எம்பி டினு போகா சோலாங்கி குற்றவாளி என்று நீதிமன்றம் தீர்ப்பளித்ததோடு, குஜராத் காவல் துறையின் அணுகுமுறையைக் கடுமையாக விமர்சித்தது.
மோடியின் ஓராண்டு நடவடிக்கைகளைப் பார்க்கும்போது, இப்படி ஊழல் வெளிப்படாமல் பார்த்துக்கொள்ளும் குஜராத் மாதிரியைத்தான் மோடி இந்திய அளவில் விரிவுபடுத்துகிறாரோ என்ற சந்தேகம் எழுகிறது.
ஜோதிமணி, செய்தித் தொடர்பாளர், அகில இந்திய காங்கிரஸ் கட்சி. தொடர்புக்கு: jothimanioffice@gmail.com