

மவுலிவாக்கத்தில் 11 மாடிக் கட்டிடம் இடிந்து அப்பாவி கூலித் தொழிலாளர்கள் 61 பேர் பலியான பயங்கர சம்பவம் நடந்து இன்றுடன் ஓராண்டு ஆகிறது. நாட்கள் கடந்தாலும், அதிர்ச்சியில் இருந்து இன்னும் மீளமுடியவில்லை. மவுலிவாக்கம் பகுதி இன்னமும் இயல்புநிலைக்கு திரும்பவில்லை என்கின் றனர் அப்பகுதியினர்.
இதயத்தை நொறுக்கிய சம்பவம்
சென்னை போரூர் அடுத்த மவுலி வாக்கத்தில் ‘பிரைம் சிருஷ்டி’ என்ற கட்டுமான நிறுவனம், ‘டிரஸ்ட் கெய்ட்ஸ்’ என்ற பெயரில் 11 தளங்களைக் கொண்ட 2 அடுக்குமாடிக் கட்டி டங்களை கட்டிவந்தது. கட்டுமானப் பணிகள் நடந்துவந்த நிலையில், கடந்த ஆண்டு ஜூன் 28-ம் தேதி மாலை சுமார் 4 மணி அளவில் அதில் ஒரு கட்டிடம் திடீரென சரிந்து விழுந்தது.
கட்டிடத்துக்குள் அப்போது ஏராளமான தொழிலாளர்கள் இருந்தனர். இடிபாடிகளில் சிக்கி அவர்கள் எழுப்பிய மரண ஓலம் மவுலிவாக்கம் மட்டுமல்லாது, ஒட்டுமொத்த தமிழக மக்களின் இதயத்தையும் நொறுக்கியது. இந்த பயங்கர விபத்தில் 61 பேர் பலியாயினர். அவர்களில் பலர் ஆந்திரம், தமிழகத்தைச் சேர்ந்த ஏழை கூலித் தொழிலாளர்கள்.
இடிபாடுகளில் 27 பேர் மீட்பு
இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் தீயணைப்பு வீரர்கள், பேரிடர் மீட்பு குழுவினர், தமிழக கமாண்டோ போலீஸார் என சுமார் 2 ஆயிரம் ஈடுபட்டனர். 20 மோப்ப நாய்கள், நவீன உபகரணங்களும் மீட்புப் பணியில் பயன்படுத்தப்பட்டன. சுமார் ஒரு வார மீட்பு நடவடிக்கையில், 27 பேர் மீட்கப்பட்டனர். அவர்களில் பலரும் அந்த சம்பவத்தின் அதிர்ச்சி யில் இருந்து இன்னமும் மீளவில்லை என்று கூறப்படுகிறது.
கட்டிடத்தில் இடி இறங்கியதே காரணம் என கூறப்பட்டது. கட்டுமானப் பணிகளின்போது நடக்கும் விதிமீறல்களைக் கண்காணிக்கவும், தடுத்து நிறுத்தவும் போதிய அமைப்புகள் இல்லாததே காரணம் என்ற விமர்சனமும் எழுந்தது. இடிந்த கட்டிடத்தின் அருகில் இருந்த மற்றொரு கட்டிடம் சீல் வைக்கப்பட்டது.
விசாரணை அறிக்கை தாக்கல்
சம்பவம் பற்றி விரிவாக விசாரணை நடத்த நீதிபதி ரகுபதி தலைமையில் விசாரணை ஆணையம் அமைத்து முதல்வர் ஜெயலலிதா உத்தர விட்டார். விசாரணை நடத்திய நீதிபதி ரகுபதி 523 பக்கங்கள் கொண்டவிசாரணை அறிக்கையை கடந்த ஆண்டு ஆகஸ்ட் 25-ம் தேதி முதல்வர் ஜெயலலிதாவிடம் அளித்தார்.
இன்று.. கட்டிட விபத்து சம்பவத்தின் முதலாண்டு நினைவு தினம். சம்பவம் நடந்து ஓராண்டாகியும் இன்னும் பதைபதைப்புடனேயே வாழ்வதாக அப்பகுதியினர் கூறுகின்றனர்.
காதில் ஒலிக்கும் மரணஓலம்
விபத்தை நேரில் பார்த்த பிரவுசிங் சென்டர் உரிமையாளர் எம்.பாலசுப்பிரமணியன்: கட்டிடம் இடிந்து விழுந்ததும் தொழிலாளர்களின் மரண ஓலம் கேட்டது. அந்த குரல் இப்போதுதான் கேட்டதுபோல இருக்கிறது. தகவல் கிடைத்ததும் 108 ஆம்புலன்ஸ்கள், தீயணைப்பு வாகனங்கள், அமரர் ஊர்திகள், போலீஸ் வாகனங்கள் வந்தன. பரபரப்பாக மாறி இப்பகுதியே ஸ்தம்பித்துவிட்டது.
இயல்புநிலை திரும்பவில்லை
அப்பகுதியில் வசிக்கும் கட்டுமான டிசைனர் எம்.பாஸ்கரன்: கட்டிடம் இடிந்த பிறகு, இப்பகுதியில் வாடகைக்கு இருந்தவர்கள் வேறு இடங்களுக்கு சென்றுவிட்டனர். 50 மீட்டர் சுற்றளவில் யாரும் இருக்கக் கூடாது என்று அரசு உத்தரவிட்டதால், சொந்த வீட்டில் இருந்தவர்கள்கூட வீட்டை காலி செய்துவிட்டு, வாடகை வீடுகளில் தங்கியிருக்கின்றனர். ‘தடை செய்யப்பட்ட பகுதி’ என்று எச்சரிக்கை போர்டு வைக்கப்பட்டுள்ளது.
யாரும் குடியிருக்க இப்பகுதிக்கு வருவதில்லை. பல வீடுகள் காலியாகவே கிடக்கின்றன. விபத்து நடந்து ஓராண்டு ஆகியும் இங்கு இயல்பு நிலை திரும்பவில்லை.
பாலசுப்பிரமணியன் - பாஸ்கரன் - ஜேசுதாஸ்
நாளை மறுநாள் விசாரணை
மவுலிவாக்கம் சம்பவம் தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றத்தில் திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின், சமூக ஆர்வலர் டிராஃபிக் ராமசாமி உள்ளிட்டோர் சார்பில் தொடரப்பட்ட வழக்கு வரும் 30-ம் தேதி மீண்டும் விசாரணைக்கு வருகிறது. வழக்கின் புலன் விசாரணையை சிபிஐக்கு மாற்றவேண்டும் என்று அவர்கள் கோரியுள்ளனர்.
வழக்கில் காஞ்சிபுரம் ஆட்சியர், சென்னைப் பெருநகர வளர்ச்சிக் குழுமம் சார்பில் பதில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. விபத்து குறித்து விசாரணை நடத்திய சென்னை கிழக்கு மண்டல மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு கூடுதல் துணை ஆணையர் வி.பாலசுப்பிரமணியனும் உயர் நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்துள்ளார்.
வழக்கின் தற்போதைய நிலை குறித்து, மு.க.ஸ்டாலின் தரப்பு மூத்த வழக்கறிஞர் பி.வில்சன் கூறியபோது, ‘‘நீதிபதி ரகுபதி ஆணையத்தின் அறிக்கையை சட்டப்பேரவையில் தாக்கல் செய்ய வேண்டும். பின்னர் அந்த அறிக்கையை நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும் என்று நீதிபதிகள் ஏற்கெனவே உத்தரவிட்டுள்ளனர்’’ என்றார்.
9 பேருக்கும் ஜாமீன்
கட்டிடம் இடிந்தது தொடர்பாக மாங்காடு போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர். கட்டிடத்தை கட்டிய ‘பிரைம் சிருஷ்டி’ கட்டுமான நிறுவனத்தின் உரிமையாளர் மனோகரன், அவரது மகன் முத்துகாமாட்சி, நிறுவனத்தின் இயக்குநர் பாலகுருசாமி, பொறி யாளர்கள் துரைசிங்கம், சங்கர ராமகிருஷ்ணன், கார்த்திக், கட்டிட வடிவமைப்பு பொறியாளர்கள் சுகன்யா, விஜய்பர்கோத்ரா, வெங்கடசுப்பிரமணியன் ஆகிய 9 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
கடந்த ஆண்டு ஆகஸ்ட் 22-ம் தேதி மாங்காடு போலீஸார் குற்றப் பத்திரிகை தாக்கல் செய்தனர். கட்டிட விபத்தில் உயிர் தப்பிய 27 பேர், அருகே வசிப்பவர்கள் உட்பட 367 பேர் சாட்சிகளாக சேர்க்கப்பட்டுள்ளனர். இதற்கிடையே, கைது செய்யப்பட்ட 9 பேரும் ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ளனர். வழக்கு விசாரணை ஸ்ரீபெரும்புதூர் நீதிமன்றத்தில் தொடர்ந்து நடந்து வருகிறது.
இனி வேண்டாம் இன்னொரு பயங்கரம் கடுமையாக்கப்பட்ட கட்டிட விதிமுறைகள்
இடிந்து விழுந்த 11 மாடி கட்டிடம் விதிகளை மீறி ஸ்திரமற்ற முறையில் கட்டப்பட்டிருந்ததாக உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த ஆய்வு அறிக்கையில் சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம் (சிஎம்டிஏ) தெளிவுபடுத்தியிருந்தது. கட்டிடத்தில் பயன்படுத்தப்பட்ட கான்கிரீட்டின் அடர்த்தி, இரும்புக் கம்பிகளின் தரம், கட்டிடத்தின் ஸ்திரத்தன்மை திருப்திகரமாக இல்லை என்று அதில் கூறியிருந்தது. இதையடுத்து, சம்பவம் நடந்த பகுதி தடைசெய்யப்பட்ட இடமாக அறிவிக்கப்பட்டு, அங்கு புதிய கட்டிடங்கள் கட்ட அனுமதி மறுக்கப்பட்டது.
மவுலிவாக்கம் கட்டிட விபத்தின் போது, கட்டிட உரிமையாளர் விதிகளை மீறினார் என்ற புகார் ஒருபுறம் இருக்க, விதிமீறல்களை சிஎம்டிஏ முறையாக கண்காணிக்கவில்லை என்ற புகார் எழுந்தது. நடந்த இழப்புக்கு யார் பொறுப்பு என்ற கேள்வியும் எழுந்தது.
சென்னையில் இதுபோல இன்னொரு அசம்பாவிதம் நடந்துவிடக்கூடாது என்ற எண்ணத்தில் 20 குழுக்கள் அமைத்து சென்னையில் 4 தளங்களுக்கு மேல் கொண்ட அடுக்குமாடி கட்டிடங்களை சிஎம்டிஏ சோதனையிட்டது. கட்டிடங்களின் தூண்கள், ஒவ்வொரு தளத்துக்கும் இடையில் உள்ள இடைவெளி அளவு உள்ளிட்டவற்றை அதிகாரிகள் சோதனையிட்டனர்.
கட்டிட அனுமதி கேட்டு வரும் புதிய விண்ணப்பங்களை பரிசீலிக்க நிபுணர் குழு அமைக்கப்பட்டது. அதில் பொதுப்பணித் துறை அதிகாரிகள், அண்ணா பல்கலைக்கழக ஆய்வாளர்கள் இடம்பெற்றிருந்தனர். அவர்கள் அனைத்து அம்சங்களையும் தீவிரமாக பரிசீலித்த பிறகே அனுமதி வழங்கப்பட்டன.
கட்டிட விதிமுறைகள் கடுமையாக்கப்பட்டன. கட்டிட பணிகள் நடக்கும்போது ஒவ்வொரு காலாண்டுக்கும் பணி விவர அறிக்கையை சமர்பிப்பது கட்டாயமாக்கப்பட்டது. பணிகள் முடிந்து கட்டிடம் தயாரான பிறகு ‘பணி நிறைவு சான்றிதழ்’ வழங்குவதும் கட்டாயமாக்கப்பட்டது. அதாவது, கட்டிட பணிகளுக்கு சம்பந்தப்பட்ட உரிமையாளர், வடிவமைப்பாளர், வடிவமைப்பு பொறியாளர் உள்ளிட்ட அனைவரும் கட்டிடத்தின் தரம் திருப்திகரமாக இருக்கிறது என்று கையெழுத்திட்டு பணி நிறைவு சான்றிதழ் வழங்கப்பட வேண்டும். இவை ஏற்கெனவே உள்ள விதிகள்தான் என்றாலும், கட்டிட விபத்துக்கு பிறகே இவை கண்டிப்பாக வலியுறுத்தப்பட்டன.