

மோடியின் முதலாண்டு ஆட்சியில் விவாதங்கள் இல்லாமலே 50 சட்டங்கள் இயற்றப்பட்டுவிட்டன. தனது அறுதிப் பெரும்பான்மையைப் பயன்படுத்தி உலக அளவில் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஜனநாயக மற்றும் மனித உரிமைகள் பலவற்றை மறுக்கும் நடைமுறைக்கு எடுத்துக்காட்டாக இரண்டைச் சொல்லலாம். 18 வயதுக்குக் குறைந்தவர்களையும், அவர்கள் கடும் குற்றங்கள் செய்யும்பட்சத்தில் பெரியவர் களைப் போலவே விசாரித்துத் தண்டனை வழங்கவும், 14 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளையும் வேலைக்கு அமர்த்திக்கொள்ள உரிமை அளித்தும் சட்டங்கள் இயற்றப்பட்டுள்ளன. விவாதங்கள் இல்லாமலேயே திட்ட ஆணையம் ஒழிக்கப்பட்டுவிட்டது.
பிரதமர் மோடி முக்கிய விவாதங்கள் எதிலும் பங்கேற்பது இல்லை. குற்றச்சாட்டுகள், விமர்சனங்களுக்குப் பதில் அளிப்பதில்லை. இந்த ஓராண்டில் அவர் இந்திய நாடாளு மன்றத்தில் பேசியதைக் காட்டிலும் அந்நிய நாடுகளின் நாடாளுமன்றங்களில் உரையாற்றியதே அதிகம்.
ஜனநாயகத்தின் முக்கியமான அடையாளங்களில் ஒன்று சிறுபான்மையினரின் நிம்மதி.
தன்னுடைய அமைச்சரவையில் கேபினெட் பொறுப்பில் ஒரு முஸ்லிம் அமைச்சரைக்கூட வைத்திராத மோடி அரசு, கடந்த ஓராண்டில் இன்று வரை சிறிதும் பெரிதுமாக நடந்திருக்கும் 500-க்கும் மேற்பட்ட மதக் கலவரங்களுக்கு ஆற்றியிருக்கும் எதிர்வினை என்ன? மோடி ஆட்சிக்கு வந்த கையோடு மகாராஷ்டிராவில் புனே, டெல்லியில் திரிலோக்புரி முதலான இடங்களில் முஸ்லிம்கள் தாக்கப்பட்டபோதும், கிறிஸ்தவ ஆலயங்கள் நொறுக்கப்பட்டபோதும் மோடி வாயைத் திறக்கவே இல்லை. கிறிஸ்தவப் பாதிரிமார்கள் சென்று சந்தித்தபோது அவர், ‘எனக்கு இப்போது வளர்ச்சிதான் முக்கியம்’ என இரக்கமின்றிப் பதிலளித்தார். ஒபாமா கண்டித்த பின்புதான் மோடி வாயைத் திறந்தார். ரமலான் வாழ்த்துக்கள் தெரிவிப்பது, இஃப்தார் விருந்துகளில் கலந்துகொள்வது முதலான மிக அடிப்படையான நல்லெண்ண நடவடிக்கைகளைக் கூட மோடி புறக்கணித்தார். சிறுபான்மை ஆணையத் தலைவராக நியமிக்கப்பட்ட நஜ்மா ஹெப்துல்லாவோ, “முஸ்லிம்கள் இங்கு சிறுபான்மையினரே இல்லை” என்கிறார். சிறுபான்மையோர் நலத் துணை அமைச்சராக உள்ள முக்தார் நக்வி, “மாட்டுக் கறி சாப்பிடுபவர்களெல்லாம் பாகிஸ்தானுக்கு ஓடுங்கள்” எனச் சொன்னதை இன்னொரு துணை அமைச்சரான கிரேன் ரிஜ்ஜு கண்டித்துள்ளார். பாஜக ஆளும் மாநில அரசுகள் மாட்டுக் கறியைத் தடைசெய்கின்றன. முஸ்லிம்களுக்கு வழங்கப்பட்டு வந்த இடஒதுக்கீட்டைத் தொடர மறுக்கின்றன.
ஜனநாயகத்தை நோக்கிய வாயில்படியான கல்வித் துறை காவிமயமாக்கப்பட்டுவருகிறது. அரசியல் தலையீடு உள்ளது எனக் காரணம் காட்டி, திரைப்படத் தணிக்கைக் குழுத் தலைவர் லீலா சாம்சனும் 12 உறுப்பினர்களும் சென்ற ஜனவரியில் பதவி விலகினார்கள். புதிய தலைவராக நியமிக்கப்பட்ட பஹ்லாஜ் நிஹால்னி அரசின் விருப்பத்துக்கு ஆடுபவர். காஷ்மீர் தொடர்பான பங்கஜ் புடாலியாவின் ஆவணப்படத்துக்கு அவர் அனுமதி அளிக்க மறுத்ததை உச்ச நீதிமன்றம் கண்டித்துத் தடையை நீக்கியுள்ளது. இந்திய வரலாற்று ஆய்வுக் கழகத்துக்கு (ICHR) நீண்ட நாள் ஆர்எஸ்எஸ் அனுதாபி எனும் ஒரே தகுதியின் அடிப்படையில், சுதர்சன் ராவ் நியமிக்கப்பட்டிருக்கிறார். இந்தியச் சாதி முறையைப் பாராட்டி எழுதியவர் இவர். ஹைதராபாத்தில் உள்ள மௌலானா ஆசாத் உருதுப் பல்கலைக்கழகத் தின் வேந்தராக இருந்த சிறந்த கல்வியாளரான சைதா ஹமீத் நீக்கப்பட்டு அந்த இடத்தில் சொகுசுக் கார்களை விற்பனை செய்துவந்த சஃபார் சரேஷ்வாலா நியமிக்கப்பட்டிருக்கிறார்.
மக்களின் எண்ணங்களுக்கும் போராட்டங்களுக்கும் அரசு மதிப்பளிக்கப்போவதில்லை என்பதற்கு எல்லா எதிர்ப்புகளையும் தாண்டி நிலம் கையகப்படுத்தும் மசோதாவை நிறைவேற்றுவதில் இந்த அரசு காட்டும் தீவிரம் உதாரணம். இங்கே எங்கே ஜனநாயகம் இருக்கிறது?
- அ. மார்க்ஸ், எழுத்தாளர், மனித உரிமைச் செயல்பாட்டாளர்,
தொடர்புக்கு: professormarx@gmail.com