

1975 ஜூன் 25 நெருக்கடி நிலையை மக்கள் அறிந்துகொண்டதே அரசின் அடக்குமுறைகள் வாயிலாகத்தான். நாடெங்கிலும் பிரபலமான எதிர்க் கட்சித் தலைவர்கள், அன்றைய இந்திரா அரசை விமர்சித்துவந்த பத்திரிகையாளர்கள், சமூக ஆர்வலர்கள் எனப் பல்லாயிரக் கணக்கானோர் மளமளவெனக் கைதுசெய்யப்பட்டு, பல்வேறு சிறைகளில் அடைக்கப்பட்டனர். எங்கு கொண்டுசெல்கிறார்கள், என்ன செய்யப்போகிறார்கள் என்று யாருக்கும் தெரியாது.
அப்போது தமிழ்நாட்டில் ஆட்சியில் இருந்தது கருணாநிதி தலைமையிலான திமுக அரசு. திமுகவின் தலைமைச் செயற்குழு அவசரமாகச் சென்னையில் கூடியது. அன்றைய தினம் திமுக நிறைவேற்றிய தீர்மானம் வரலாற்றுச் சிறப்பு மிக்கது: “அவசர நிலையினைத் திரும்பப் பெறுங்கள். அரசியல் கைதிகளை விடுதலை செய்யுங்கள். ஜனநாயகத்தை நிலைநிறுத்துங்கள்” என்று அறைகூவல் விடுத்தார் முதல்வர் கருணாநிதி. இந்த எதிர்பாரா முழக்கம், காங்கிரஸைத் திமுகவோடு பேச வைத்தது. “உங்களுக்கு இதனால் பாதகம் வராது. நீங்கள் எங்கள் எதிரி இல்லை, உங்கள் ஆட்சி பதவிக் காலத்துக்குப் பின்னும் தேர்தல் இன்றித் தொடர ஆவன செய்கிறோம்” என்றெல்லாம் உறுதிமொழிகள் அளிக்கப்பட்டன. எனினும், திமுக தன் நிலையை மாற்றிக்கொள்ளவில்லை.
ஜனநாயகம் கொல்லப்படாத இடம்
இந்தியாவிலேயே தமிழ்நாடு மட்டும்தான் கருத்துரிமை பறிக்கப்படாத, ஜனநாயகம் கொல்லப்படாத இடமாக அன்றைக்கு இருந்தது.பொதுக்கூட்டங்கள் தங்கு தடையின்றி தொடர்ந்து நடந்துகொண்டிருந்தன. பத்திரிகைகள் தணிக்கை எதுவுமின்றி வந்துகொண்டிருந்தன. உண்மையில், ஏனைய மாநிலங்களைப் போலத் தமிழக மக்களை நெருக்கடி நிலையின் கொடூரச் சூழல் எட்டாமல் பார்த்துக்கொண்டது திமுக அரசு. இந்நிலையில், 1975 டிசம்பர் இறுதியில், கோவையில் நடைபெற்ற திமுக ஐந்தாவது மாநில மாநாட்டில், “ஜனநாயகமே உயிர் மூச்சு” என்றும் “உறவுக்குக் கை கொடுப்போம்; உரிமைக்குக் குரல் கொடுப்போம்” என்றும் முழக்கமிட்டார் முதல்வர் கருணாநிதி. தமிழகம் ஜனநாயக நடைமுறைகளைப் பேணிக் காக்கும் களமாக இருந்ததுடன், நாட்டின் ஏனைய பகுதிகளில் மத்திய அரசால் வேட்டையாடப்பட்ட தலைவர்களின் பாதுகாப்பு முகாமாகவும் மாறியது.
தொடர்ந்து தமிழகத்தைக் குறி வைத்திருந்த மத்திய அரசு, 1976 ஜனவரி 31-ம் தேதி திமுக அரசைக் கலைத்துக் குடியரசுத் தலைவர் ஆட்சியைப் பிரகடனம் செய்தது. அன்றைய இரவே கழகத்தின் முன்னணியினர் ஏராளமானோர் கைதுசெய்யப்பட்டு மிசா சட்டத்தின் கீழ் விசாரணை எதுவுமின்றி சிறையில் அடைக்கப்பட்டனர். திமுக, ஸ்தாபன காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, திராவிடர் கழகம், சோஷலிஸ்ட், ஆர்எஸ்எஸ் எனப் பல்வேறு அமைப்புகளைச் சார்ந்த ஐந்நூறுக்கும் மேற்பட்டோர் தமிழ்நாட்டின் அனைத்து மத்தியச் சிறைகளிலும் அடைக்கப்பட்டார்கள். இந்தச் சிறைகளிலேயே சென்னை மத்தியச் சிறை சித்திரவதைக் கூடமாக மாறியது. மிருகத்தனமான குண்டாந் தடி அடியும், கைதிக் காவலர்களின் மிருகத்தனமான தாக்குதலும் முரசொலி மாறன், மு.க.ஸ்டாலின், கி.வீரமணி, எம்.ஆர். ராதா, ஆற்காடு வீராசாமி, டி.ஆர்.பாலு எனப் பலரையும் கொடூர வதைகளுக்கு உள்ளாக்கின. அன்றைய நாடாளுமன்ற உறுப்பினர் சிட்டிபாபு சிறையிலேயே மாண்டார்.
நான் அப்போது திருச்சி பெரியார் ஈ.வெ.ரா. கல்லூரியின் ஆங்கில இலக்கிய மாணவன். மாணவர் திமுக உறுப்பினர். கழகக் கூட்டங்களில் பேசிக்கொண்டிருந்தவன். கல்லூரி பேரவைத் தேர்தல்களில் பங்குகொண்டிருந்தவன். அவ்வளவே. என்னை ஏதோ ஒரு பெரிய தீவிரவாதியைப் போல விரட்டி விரட்டிப் பிடித்து, மிசா சட்டத்தில் திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர். இருபத்தோரு வயதில் 10 X 8 கொட்டடியில் ஓராண்டு காலம் என்றைக்கு விடுதலையாவோம் என்று தெரியாமலே கழிந்தது. இடையில், ஒரு நாள் எம்.ஏ. இறுதியாண்டுத் தேர்வு எழுத அரசாங்கத்தின் அனுமதி பெற்று பரோல் கிடைத்த போது, கைவிலங்கிட்டுத்தான் அழைத்துச் செல்ல முடியும் என்றார்கள் போலீஸார். “தேர்வு எழுதப் போகும் மாணவன் என்ன கிரிமினல் கைதியா?” எனப் பின்னர் சிலர் வாதாடி கை விலங்கினை அகற்றினாலும் துப்பாக்கி ஏந்திய ஆறு போலீஸார் சூழ, கல்லூரிக்கு அழைத்துச் செல்லப் பட்டேன். ஓடி விளையாடி கம்பீரமாக வலம் வந்த அதே கல்லூரி வளாகத்தில் துப்பாக்கி ஏந்திய போலீஸார் சுற்றிஅமர்ந்திருக்க, தனி அறை ஒன்றில் தேர்வு எழுதிவிட்டு, யாராலும் சீண்டப்படாதவனாக (எல்லோருக்கும் அச்சம்) சிறைக்குத் திரும்பினேன்.
கொள்கையில் உறுதி
ஒரு மாணவனுக்கே இதுதான் நிலை என்றால், நாட்டையே தன் கையில் வைத்திருந்தவரின் அடக்குமுறையை எதிர்த்து நின்ற எங்கள் தலைவரின் நிலை எப்படியிருந்திருக்கும்? முதல்வராக இருந்தவரைச் சுற்றி வந்த எவரும் அவர் அருகில் இல்லை. நெருங்கிய எவரும் சட்டத்தால் விட்டுவைக்கப்படவும் இல்லை. மறுநாளே கைதுசெய்யப்பட்டார்கள். தனித்தே முரசொலி அலுவலகம் செல்வார். உடன்பிறப்பு மடலின் மூலம் அனுமதியளிக்கப்பட்ட வரம்புக்குள் நின்று, நாட்டின் நிலையைத் தக்க உதாரணங்களை இலக்கியங்களில் தேர்ந்தெடுத்து கட்சித் தோழர்களுக்கும் நாட்டு மக்களுக்கும் உணர்த்தினார். கழகத் தோழர்களின் இல்லங்களில் நடைபெற்ற திருமணங்களிலும், மறைய நேர்ந்த கழகத் தோழர்களின் இரங்கல் கூட்டத்திலும் நாசூக்காகாக அரசியல் பேசி, எல்லோர் உணர்ச்சியையும் உறுதியையும் வீரத்தையும் குன்றாமல் அவர் பாதுகாத்திட்ட மகத்தான காலம் அது. முக்கியத் தலைவர்கள் பலர் விலகிச் சென்றபோது ‘வீரர்கள் தொடரட்டும், கோழைகள் விலகட்டும்' என உணர்ச்சி ததும்ப… கண்ணீரைத் துடைத்துக்கொள்ள, அவர் எழுதிய எல்லாம் அழியாத காவியங்கள்! ஆனால், ஒரு அடிமட்டத் தொண்டனைப் போலச் சாலையில் நின்றுகொண்டு துண்டுப் பிரசுரம் விநியோகிக்கும் சூழல் வந்தபோதும், துளியும் அச்சம் என்பது அவரைத் தொட அனுமதிக்கவில்லை. ஆட்சியை இழந்தோம். அடக்குமுறையைச் சந்தித்தோம். சிறைச்சாலை, சித்திரவதைகளை எதிர்கொண்டோம். ஆனால், கொள்கையில் உறுதியாக நின்றோம்.
ஓராண்டுக்குப் பின் நெருக்கடி நிலையைத் திரும்பப் பெற வேண்டிய நிர்ப்பந்தம் மக்களின் கிளர்ச்சியினால் ஆட்சியாளர்களுக்கு உண்டானது. ஜனநாயகம் உயிர் பெற்றது. அரசியல் சட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட சில திருத்தங்கள் (44-வது) பறிக்கப்பட்ட உரிமைகளை மீண்டும் மக்களுக்கு வழங்கின. இந்திய ஜனநாயகம் மீண்டும் தலைநிமிர்ந்து நடக்கத் தொடங்கியது. ஆனால், அதற்குப் பின் எண்ணற்றோரின் வெளித்தெரியாத எவ்வளவோ தியாகம் உறைந்திருக்கிறது!
திருச்சி சிவா, திமுகவைச் சேர்ந்த மாநிலங்களவை உறுப்பினர்