பில்லியனருக்கு அடுத்த அறையில் பி.பி.சி. நிருபர்!

பில்லியனருக்கு அடுத்த அறையில் பி.பி.சி. நிருபர்!
Updated on
1 min read

பி.பி.சி. செய்தியாளர்களுக்குப் பெரும் தொழிலதிபர்கள், விளையாட்டு வீரர்களைச் சந்திக்கப் பெரிய பிரயத்தனங்கள் தேவையாக இருக்காது. நட்சத்திர ஹோட்டல்களின் உணவகத்திலோ அல்லது வரவேற்பறையிலோ வி.ஐ.பி-க்களை விரட்டிப் பிடித்துவிட முடியும். காரணம், வி.ஐ.பி-க்கள் தங்கும் விலையுயர்ந்த ஹோட்டல்களில்தான் பி.பி.சி. செய்தியாளர்களும் தங்கவைக்கப் படுகின்றனர். இந்த ஆண்டு மட்டும் செய்தியாளர்களின் ஹோட்டல் அறைகளுக்காக பி.பி.சி. செலவிட்ட தொகை, அதிகமில்லை வெறும் ரூ.116 கோடிதான். இந்தத் தொகை சென்ற ஆண்டை விட ரூ.30 கோடி அதிகம் எனத் தெரியவந்துள்ளது.

செய்தியாளர்களுக்குச் செலவிடப்படும் தொகைகுறித்து தகவல் பெறும் சுதந்திரச் சட்டம் மூலம் யாரோ பொதுநல விரும்பி தாக்கல் செய்த மனுவுக்குக் கிடைத்த பதில்தான் மேற்கண்ட பத்தி.

இதையடுத்து, “செய்தியாளர்கள் தங்குவதற்கு இத்தனை பெரிய தொகை செலவிடப்படுவது சரியா?” என்ற விவாதம் எழுந்துள்ளது. ஆனால், “விளையாட்டுப் போட்டிகள் உள்ளிட்ட முக்கிய நிகழ்வுகள் நடப்பது உலகின் முக்கிய நகரங்களில்தான். செய்திகளை அதிவிரைவில் சேகரிக்க வேண்டும் என்றால், செய்தியாளர்களுக்காக முன்கூட்டியே அந்த நகரங்களில் உள்ள ஹோட்டல்களில் முன்பதிவு செய்ய வேண்டியுள்ளது” என்று பி.பி.சி. அதிகாரிகள் விளக்கம் அளித்துள்ளனர்.

“தவிர, தயாரிப்பு நிர்வாகி முதல் கேமராமேன் வரை அனைவரும் அமர்ந்து ஆலோசிக்க வசதியான தங்குமிடங்கள் தேவை. அந்த வசதிகள் கிடைப்பது நட்சத்திர ஹோட்டல்களில்தான். முக்கிய நிகழ்வுகளின்போது கட்டணங்களும் கடுமையாக உயர்த்தப்படுகின்றன” என்றும் தெரிவிக்கின்றனர்.

ஹோட்டல் அறைகளுக்கு, ஒரு இரவுக்கு மட்டும் பிரிட்டன் ரசிகர்கள் ரூ.4,500 முதல் ரூ.78,500 வரை செலவு செய்யத் தயாராக இருக்கின்றனர். நட்சத்திர ஹோட்டல்களில் ரூ.3 லட்சம் முதல் ரூ.14 லட்சம் வரை கட்டணம் வசூலிக்கப்படும் என்பதைக் கருத்தில் கொள்க!

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in