

வரலாற்றில் கம்யூனிஸ்ட் இயக்கம் பல அடக்குமுறைகளைச் சந்தித்துள்ளது. அதன் பகுதியாகவே, சுதந்திர இந்தியாவிலும் 1948 -1952, 1964 காலகட்டங்களில் கம்யூனிஸ்ட் இயக்கம் தடைசெய்யப்பட்டது. பொதுவாக, இந்த மாதிரியான காலகட்டங்களில் கம்யூனிஸ்ட் என்று ஒருவர் தன்னை வெளிப்படுத்திக்கொள்வதுகூட உயிருக்கு ஆபத்தானது. ஆனால், இந்திரா காந்தி பிரதமராக இருந்த காலத்தில் அறிவிக்கப்பட்ட நெருக்கடி நிலை என்பது வித்தியாசமானது. கம்யூனிஸ்ட் கட்சி தடை செய்யப்படவில்லை என்ற வெளித்தோற்றம் இருந்தது. ஆனால், அதன் நடவடிக்கைகள் முடக்கப்பட்டிருந்தன. குறிப்பாக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்களும் காங்கிரஸ் கட்சியும் பலமான அமைப்புகளாக இருந்த மேற்கு வங்கம், கேரளம் போன்ற மாநிலங்களில் கட்சியினர் மீது கொடூரமான அடக்குமுறைகள் இருந்தன. உயிர்ப் பலிகளும் இருந்தன.
வியூகங்கள் வகுப்பது அரசுக்கு மட்டும் பழக்கமானது இல்லையே? நாங்களும் தயாராகவே இருந்தோம். வெளிப்படையாகப் பணியாற்றுபவர்கள், தலைமறைவாகப் பணியாற்றுபவர்கள் என்று இரு பிரிவுகளாக வேலைகளைப் பிரித்துக்கொண்டு பணியாற்றினோம். எந்தச் சூழலிலும் பணிகள் தடைபடாமல் செயல்படுத்தினோம். இப்படிப்பட்ட நேரங்களில், இயக்கத்தினரிடத்திலும் மக்களிடத்திலும் தகவல்களைக் கொண்டுசெல்வதுதான் முக்கியமான பணி. செய்திகளே தணிக்கைக்கு உள்ளாக்கப்படும் சூழலில், பிரச்சாரம் என்ற வார்த்தைக்கு என்ன அர்த்தம்?
பொதுக்கூட்டங்களையெல்லாம் நடத்த முடியாது. அரங்கக் கூட்டங்கள்தான். அவற்றுக்கும் உளவுத் துறை அதிகாரிகள் வந்துவிடுவார்கள். நமது வாயிலிருந்து வரும் ஒவ்வொரு வார்த்தையையும் பதிவுசெய்து நம்மைச் சிறையில் அடைக்கத் தேவையான ஆதாரங்களைத் தயாரிப்பார்கள். ஆகையால், ஒவ்வொரு நிகழ்ச்சியையும் நமக்கான வேலைக்களமாக மாற்றிவிடுவோம். தோழர்களின் வீட்டில் நடைபெறும் கல்யாணங்கள் உள்ளிட்ட வீட்டு விசேஷங்களைக்கூட எங்களுக்கான அரசியல் கூட்டங்களாக மாற்றிவிடுவோம். எதைச் செய்தாலும் உளவாளிகள் நம்மைப் பின்தொடர்வார்கள். நடைப்பயணமாகவே செல்வது, மாறுவேடத்தில் பயணிப்பது, உயிரோட்டமான தகவல் தொடர்பைப் பராமரிப்பது இவையெல்லாம் வேலைத்திட்டத்தில் முக்கியமான ஒழுங்குகள். ஒரு தகவலைக் கட்சியின் ஊழியர்களுக்கு இடையே கொண்டுசெல்பவருக்குக்கூட தான் யாரைச் சந்திக்கப் போகிறோம் என்பதோ எதைக் கொண்டுபோகிறோம் என்பதோ தெரியாது. அந்த அளவுக்குக் காவல் துறையிடம் சிக்கிவிடாமலிருக்க ஒழுங்கமைக்கப்பட்ட முறையில் பணியாற்றுவோம்.
நெருக்கடி காலகட்டத்தில் கட்சி எனக்கு இட்டிருந்த பணி, மாநிலம் முழுவதும் சென்று தோழர்களை உற்சாகமூட்டி அரசியல் பணிகளை முடுக்கிவிடுவது. மாநிலம் முழுவதும் பல நூற்றுக் கணக்கான அரங்கக் கூட்டங்களை நடத்தியிருக்கிறேன். திருவாரூரில் 1,200 பேர் கலந்துகொண்ட கூட்டம் உட்பட. நெருக்கடி காலகட்டத்தில்தான் எனது மூத்த மகன் சந்திரசேகரனுக்கும் எனது சக தோழனின் மகள் உஷாவுக்கும் கல்யாணம். கல்யாணத்தில் நானும் கட்சியின் அப்போதைய மாநிலச் செயலாளர் ஏ. பாலசுப்ரமணியமும் கடைசி நேரத்தில் கலந்துகொண்டு சில நிமிடங்களில் அந்த இடத்தைவிட்டு அகன்றோம். எனது குடும்பத்தில் எனக்கு ஏற்பட்ட இத்தகைய அனுபவம்தான் பல கட்சித் தோழர்களின் குடும்பங்களுக்கும் ஏற்பட்டது.
நெருக்கடி நிலைக்கு எங்கள் இயக்கமும் பெரிய விலையைக் கொடுத்தது. தமிழகத்தில் மட்டும் நூற்றுக் கணக்கான தோழர்கள் கைதுசெய்யப்பட்டார்கள். ரயில்வே தொழிலாளர்களின் தலைவராக இருந்த அனந்த நம்பியார், பாலவிநாயகம், தீக்கதிர் நாளிதழின் தற்போதைய ஆசிரியர் வி. பரமேஸ்வரன், குமரி மாவட்டத்தில் நூர்முகம்மது (முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்) உள்ளிட்டோர் கைதுசெய்யப்பட்டு, கடுமையாக தாக்கப்பட்டனர். சென்னையில் என்.வெங்கடாசலம், தாம்பரம் சிவாஜி, தொழிற்சங்கத் தலைவர் ஹரிபட், நெய்வேலி திருவேங்கடம் உள்ளிட்ட பல தோழர்கள் கைதுசெய்யப்பட்டனர். சிறையில் அடைக்கப்பட்டபோதும் தோழர்களின் போராட்டக் குணத்தை அடக்க முடியவில்லை. ஓர் உதாரணம், சென்னை சிறையில் ஸ்டாலின் மீது தாக்குதல் நடந்தபோது அதைத் தடுத்தவர்கள் ஹரிபட் உள்ளிட்ட கம்யூனிஸ்ட் தோழர்கள். அரசியல் கைதிகளை மரியாதையுடன் நடத்துங்கள் எனப் போராடி அவர்களை மீட்டனர்.
எப்போதெல்லாம் ஜனநாயகம் தாக்குதலுக்கு உள்ளாகிறதோ, அப்போதெல்லாம்தான் கம்யூனிஸ இயக்கங்கள் புது ரத்தம் பாய்ச்சிக்கொள்கின்றன. நெருக்கடிக் காலகட்டத்தில் பலர் புதிதாகக் கட்சியில் சேர்ந்தனர். இன்றைய மார்க்சிஸ்ட் கட்சியின் தலைவர்களில் பலர் அந்தக் காலகட்டத்தில் கட்சியில் சேர்ந்த இளைஞர்களே. நெருக்கடி நிலையை எதிர்கொண்ட இளந்தலைமுறைதான் இன்றைய கட்சியின் தலைமையாக வளர்ந்துள்ளது. பல தோழர்கள் புதிய சூழலில் புடம் போடப்பட்டு மேலும் உறுதிமிக்க போராளிகளாகத் தயாரானார்கள். ஜனநாயகத்தைக் காக்கும் போராட்டத்தில் எப்போதுமே அந்த உறுதியோடு இயக்கம் முன்னிற்கிறது!
என்.சங்கரய்யா,மார்க்சிஸ்ட் கட்சியின் நிறுவனர்களில் ஒருவர். நெருக்கடி நிலைக்கு எதிராகக் களத்தில் பணியாற்றியவர்.
எழுத்தாக்கம்: நீதிராஜன்