தலைநகரத் தலைவலி!

தலைநகரத் தலைவலி!
Updated on
3 min read

நெருக்கடியிலிருந்து ஆந்திர அரசு மீள வேண்டும் என்றால், மத்திய அரசு நிதியுதவியை அதிகப்படுத்த வேண்டும்.

தெலங்கானா என்ற தனி மாநிலம் ஏற்பட்ட பிறகு, எஞ்சிய ஆந்திரப் பிரதேசத்துக்கு முதலமைச்சராகப் பதவி வகிக்கும் தெலுங்கு தேசம் கட்சித் தலைவர் என். சந்திரபாபு நாயுடு மிகப் பெரிய நிதி நெருக்கடியைத் தீர்க்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார். இந்த நெருக்கடியைத் தீர்ப்பதுடன் தங்களுக்குக் கொடுத்த தேர்தல் கால வாக்குறுதிகளை அவர் எப்படி நிறைவேற்றப்போகிறார் என்று அறிய மக்கள் ஆவலாகக் காத்திருக்கின்றனர்.

புதிய மாநிலம் உருவான பிறகு, ஆந்திர அரசின் நிதிப் பற்றாக்குறை (Fiscal deficit) ரூ.20,320 கோடியாகவும் வருவாய் பற்றாக்குறை (Revenue deficit) ரூ.14,252 கோடியாகவும் இருக்கிறது. இந்த ஆண்டு நிதிநிலை அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்ட இந்தப் பற்றாக்குறையை நாயுடு எப்படி இட்டு நிரப்புவார் என்று தெரியவில்லை. நிதியமைச்சர் யனமாலா ராமகிருஷ்ணுடு தன்னால் இயன்றவரை முயன்று, நிதி பற்றாக்குறையை ரூ.17,584 கோடிக்கும் வருவாய் பற்றாக்குறையை ரூ.7,300 கோடிக்கும் குறைத்திருக்கிறார். நிதிநிலை அறிக்கை பல்வேறு துறைகளுக்கான ஒதுக்கீட்டை அறிவித்திருக்கிறது. பற்றாக்குறை பெரிதாக இருக்கும்போது, அறிக்கையில் குறிப்பிட்டபடி நிதியை ஒதுக்க முடியுமா என்ற கேள்வி எழுகிறது.

மத்திய அரசின் உதவி அவசியம்

‘மாநிலப் பிரிவினைக்குப் பிறகு ஏற்படும் நிதிப் பற்றாக்குறையை மத்திய அரசு அளித்து ஈடுகட்டும்’ என்று மன்மோகன் சிங் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசால் நாடாளுமன்றத்தில் அளிக்கப்பட்ட உறுதிமொழி இதுவரை நிறைவேற்றப்படவில்லை. இதற்காக எந்தவொரு முயற்சியிலும் பாஜக தலைமை யிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு இறங்காததால், மாநில அரசுக்கு நெருக்கடி ஏற்பட்டிருக்கிறது.

“நாங்கள் ஆட்சிக்கு வந்தால் விவசாயக் கடன்களையும், மகளிர் சுயஉதவிக் குழுவினரின் கடன்களையும் ரத்து செய்வோம்” என்று அளித்த வாக்குறுதியையும் நிறைவேற்ற முடியாமல் மாநில அரசு தத்தளித்துக்கொண்டிருக்கிறது. விவசாயிகளுக்கான கடனை ரத்து செய்வதற்கு, தொகையில் ஒரு பகுதியை மட்டும் செலுத்தியிருக்கிறது ஆந்திர அரசு. மகளிர் சுயஉதவிக் குழுவின் ஒவ்வொரு உறுப்பினருடைய கடனையும் அடைப்போம் என்ற வாக்குறுதிப்படி முதல் தவணைத் தொகையாக ரூ.10,000-த்தை வங்கிகளில் செலுத்தியிருக்கிறது. கடனை ரத்து செய்ய கால தாமதம் ஆவதும், அதற்காகக் கடைப்பிடிக்கப்படும் அலைக்கழிப்பான நடைமுறையும் மகளிரைக் கடும் அதிருப்திக்கு உள்ளாக்கியிருக்கிறது. அத்துடன், ஏராளமான பயனாளிகள் பட்டியலில் விடுபட்டிருப்பது மாநிலத்தின் எல்லாப் பகுதிகளிலிருந்தும் கடுமையாகக் கண்டிக்கப்பட்டிருக்கிறது. இந்த நெருக்கடியிலிருந்து ஆந்திர அரசு மீள வேண்டும் என்றால், மத்திய அரசுதான் நிதியுதவியை அதிகப்படுத்த வேண்டும்.

தலைநகருக்கே பெரும் செலவு

புதிய அரசுக்குப் பெருத்த செலவை ஏற்படுத்துவது ‘அமராவதி’ என்ற பெயரில் உருவாகவுள்ள புதிய தலைநகரம்தான். அமராவதி உருவான பிறகு, அதில் குடியிருப்போரிடம் பல்வேறு விதமான பயன்பாட்டுக் கட்டணங்களை அரசு வசூலிக்கும் என்ற அச்சம் ஏற்பட்டிருக்கிறது. மத்திய அரசின் நிதி ஆதரவைப் பெருமளவு எதிர்பார்த்திருக்கும் ஒரு மாநிலத்துக்குப் பெரும் செலவில் புதிய தலைநகரம் அமைவதால் பிரச்சினைகள்தான் ஏற்படும் என்று பலரும் கருதுகின்றனர். மாநிலத்தின் திட்டமிடலையே இது கணிசமாகப் பாதித்துவருகிறது. மாநிலப் பிரிவினைக்குப் பிறகு ஆந்திரம் புதிய தலைநகரை ஏற்படுத்த வேண்டியிருப்பதால் முதலீட்டாளர்கள் புதிய மாநிலத்தில் முதலீடு செய்யத் தயங்குகிறார்கள். இன்னும் சிறிது காலம் பொறுத்திருப்போம் என்று பலர் முடிவு செய்துள்ளனர்.

புதிய மாநிலத்தின் ‘தொழில் (ஆதரவு) கொள்கை’யை இன்னமும் அறிவிக்காமல் இருப்பதும், சிறப்புப் பிரிவைச் சேர்ந்த மாநிலம் என்ற அறிவிப்புக்காகக் காலவரம்பின்றிக் காத்திருப்பதும் முதலீடுகளை ஈர்க்கவில்லை. சிறப்புப் பிரிவு மாநிலம் என்று அறிவிக்கப்பட்டால்தான் புதிய தொழிலதிபர்களுக்கும் முதலீட்டாளர்களுக்கும் பல்வேறு சலுகைகள் கிடைக்கும், தொழில் தொடங்குவதற்கான சுமுகமான சூழலை ஏற்படுத்தும் என்று மூத்த அதிகாரி ஒருவர் சுட்டிக்காட்டினார்.

விசாகப்பட்டினத்துக்கு என்று ஓரிரு திட்டங்கள் அறிவிக்கப்பட்டதோடு சரி, வேறு பெரிய திட்டங்கள் ஏதும் அறிவிக்கப்படவில்லை. விசாகப்பட்டினம் ஏற்கெனவே பெரிய துறைமுக நகரமாக வளர்ந்திருக்கிறது. அதன் அடித்தளக் கட்டமைப்பு வசதிகள் ஏற்கெனவே உருவானவை. அங்கு சிறு, குறு, நடுத்தர, பெரிய தொழில் நிறுவனங்கள் ஏற்படுவதற்குச் சாதகமான அம்சங்கள் நிலவுகின்றன.

அதே வேளையில், ஹைதராபாத் நகரை நோக்கி முதலீடுகள் குவிகின்றன. கூகுள் நிறுவனம் அதில் ஒன்று. ஹைதராபாதில் முதலீடு செய்கிறவர்களுக்கு ஏராளமான சலுகைகளை தெலங்கானா அரசு அறிவித்திருக்கிறது. புதிய தலைநகரத்தை அமைக்க வேண்டிய பெரும் பொறுப்பும் செலவும் அதற்கு இல்லை.

தெலங்கானா அரசுக்கு நிதி கையிருப்பு அதிகமாக இருக்கிறது. எனவே, தன்னுடைய மாநில அரசு ஊழியர்களுக்கு 43% ஊதிய உயர்வையும் 27% இடைக்கால நிவாரணத்தையும் அறிவித்திருக்கிறது. நிதி நெருக்கடி இருந்தபோதிலும் ஆந்திர அரசும் அதே அளவுக்கு ஊதிய உயர்வையும் இடைக்கால நிவாரணத்தையும் அறிவித்துவிட்டது. இந்த அறிவிப்பால் ஆந்திர அரசுக்கு ரூ.9,284.5 கோடி செலவு கூடியிருக்கிறது.

ஹைதராபாதை விட்டு விலக வேண்டும்

தெலங்கானா பிரிக்கப்பட்ட பிறகு, எஞ்சிய ஆந்திர மாநிலத்தில் போதிய அடித்தளக் கட்டமைப்புகள் இல்லை. 10 ஆண்டுகளுக்கு மட்டுமே பொதுத் தலைநகரமாக இருக்கப்போகும் ஹைதராபாதையே ஆந்திர அரசு பெரிதும் சார்ந்திருக்க வேண்டியிருக்கிறது. ஹைதரா பாதை ஆந்திர அரசு தொடர்ந்து பயன்படுத்துவதால் தெலங்கானாவுடன் அடிக்கடி மோதல்கள் நிகழ்கின்றன. முக்கியத் துறைகளுக்கான அலுவலகங்களைப் பகிர்ந்து கொள்வதில்கூடப் பூசல்கள் தொடர்கின்றன. தெலுங்கு தேசத்தை வேற்று மாநிலத்து அரசியல் கட்சியாகச் சித்திரிப்பதில் தெலங்கானா ராஷ்டிர சமிதி தீவிரமாகச் செயல்பட்டுவருகிறது.

கடந்த சில மாதங்களில் தெலுங்கு தேசத்தைச் சேர்ந்த சில தலைவர்களை தெலங்கானா ராஷ்டிர சமிதி தன் பக்கம் ஈர்த்திருக்கிறது. இதனால் முதல்வர் சந்திரபாபு நாயுடு இப்போது தெலங்கானா பகுதி மீது அதிக கவனம் செலுத்திவருகிறார். கடந்த சில வாரங்களாக தெலங்கானா பிராந்தியத்தைச் சேர்ந்த தெலுங்கு தேச நிர்வாகிகளுக்கு அதிக நேரம் ஒதுக்கி அவர்களுடன் விவாதிக்கிறார். சில ஆண்டுகளுக்கு முன்னால் மணிக்கணக்கில் அவர்களைக் காக்க வைப்பார். தெலங்கானா மீது இப்படி அளவுக்கு அதிகமாக அக்கறை காட்டுவதும் பிரச்சினைகளை ஏற்படுத்தியிருக்கிறது. சட்ட மேலவைத் தேர்தலில் தெலுங்கு தேசத்துக்கு ஆதரவாக வாக்களிக்க, நியமன சட்டப் பேரவை உறுப்பினருக்கு லஞ்சம் கொடுக்க முயன்றதாக ரேவந்த் ரெட்டி என்ற தெலுங்கு தேச சட்டப் பேரவை உறுப்பினர் கைது செய்யப்பட்டிருக்கிறார்.புதிய தலைநகரமான அமராவதிக்கு ஆந்திர அரசின் அலுவலகங்கள் இன்னமும் மாற்றப்படாததால் மக்கள் அமைதியிழந்து காணப்படுகிறார்கள். மக்களின் இந்த உணர்வுகளைப் புரிந்துகொண்டிருப்பதால் முதல்வர் நாயுடு, வாரத்தின் பெரும் பகுதி விஜயவாடாவிலேயே தங்கிவிடுகிறார்.

© ‘தி இந்து’ (ஆங்கிலம்) சுருக்கமாகத் தமிழில்: சாரி

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in