Last Updated : 05 May, 2015 10:57 AM

 

Published : 05 May 2015 10:57 AM
Last Updated : 05 May 2015 10:57 AM

மகாபலேஷ்வர் டூ ஊத்துக்கோட்டை: சென்னையின் தாகம் தணிக்கும் கிருஷ்ணாவின் பயணம்

நதிமூலம் தேடி...

தமிழக எல்லையை கிருஷ்ணா நீர் வந்தடையும் இடத்தில் தொடங்கி, கண்டலேறு அணை, சோமசீலா அணை, கிருஷ்ணா நீர் வந்து சேரும் பிரம்மாண்ட ஸ்ரீசைலம் நீர்த்தேக்கம் வரை சுமார் 450 கி.மீ. தூரத்துக்கு, சவாலான பயணத்தை நிருபர்கள் எஸ்.சசிதரன், டி.செல்வகுமார், கி.கணேஷ், வி.சாரதா, புகைப்பட செய்தியாளர் க.ஸ்ரீபரத் ஆகியோரைக் கொண்ட ‘தி இந்து’ குழுவினர் மேற்கொண்டனர். அடர்ந்த காடுகள், குக்கிராமச் சாலைகள் என கிருஷ்ணா கால்வாய் வழியாக பயணித்து ஏராளமான விவரங்களையும் சுவையான தகவல்களையும் இக்குழு சுமந்து வந்திருக்கிறது. கிருஷ்ணாவுடன் பயணித்த உணர்வை வாசகர்களுக்கு அளிக்கும் முயற்சி இது.

நீரின்றி அமையாது உலகு! ஒரு லிட்டர் தண்ணீரை விலைக்கு வாங்கிக் குடிக்கும் நிலை உருவாகும் என்பதை முன்கூட்டியே உணர்ந்தோ என்னவோ, பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே, திருவள்ளுவர் இப்படி எழுதியிருக்கிறார். மூன்றாவது உலகப்போர் என ஒன்று நிகழுமானால், அதற்கு தண்ணீர் தொடர்பான சச்சரவுகளே முக்கிய காரணமாக இருக்கும் என்ற சூழல் இப்போது உலகில் நிலவுகிறது.

நதிநீர்ப்பங்கீட்டு பிரச்சினை, மாநில அளவில் மட்டுமின்றி, சர்வதேச அளவிலும் பூதாகரமாக உருவெடுத்து வருகிறது. ஜீவநதிகளே (தாமிரவருணி ஆற்றை தவிர்த்து) இல்லாத தமிழகம், இதற்கு விதிவிலக்கா என்ன? குடிநீர் மற்றும் பாசனத்துக்காக வெளிமாநி லங்களையே பெரிதும் நம்பியிருக்கிறது.

குறிப்பாக, தலைநகர் சென்னையின் குடிநீர்த்தேவை மூன்று மாநிலங்களின் தயவால்தான் பூர்த்தியாகிறது. கூவம், அடையாறு ஆறுகள், கழிவு களைச் சுமந்து செல்லும் சாக்கடை யாக உருமாறிவிட்டதால், குடிநீர்த் தேவைகளுக்காக, வடகிழக்குப் பருவ மழையையே சென்னை சார்ந்திருக் கிறது. ஆனால், அது ஓர் ஆண்டு முழு மைக்கும் போதுமானதாக இல்லை. அடைமழைக்காலங்களில் தண்ணீரைத் தேக்கிவைப்பதற்கானகட்டமைப்பு களும் இல்லை.

முதல் திட்டம்

கி.பி. 1870 வரை சென்னை மாநகருக் கென முறையான குடிநீர் விநியோக அமைப்பு இல்லை. பிரேசர் என்ற ஆங்கிலேய கட்டுமானப் பொறியாளர், வேலூர் அருகே உற்பத்தியாகும் கொசஸ் தலையாற்றில் இருந்து தண்ணீரை சோழவரம் மற்றும் செங்குன்றம் ஏரிகளுக்குத் திருப்பி, கீழ்ப்பாக்கம் நீரேற்று நிலையத்துக்குக் கொண்டு வருவதற்கான திட்டம் வகுத்தார். அதுதான் சென்னையில் முறையான கொண்டு வரப்பட்ட முதல் குடிநீர் விநியோகத் திட்டம்.

1960-களில் மக்கள் தொகை பெருகிய நிலையில், வீராணம் திட்டமும் தோல் வியடைந்தது. இதனால் சென்னையின் குடிநீர்த்தேவைக்காக ஒரு மாற்று ஏற்பாட்டை செய்தே தீர வேண்டிய கட் டாயத்துக்கு தமிழக அரசு வந்தது. அதன் விளைவாகவே, கிருஷ்ணா நதியில் இருந்து ‘மதராஸ்’ நகரத்துக்கு தண்ணீர் கொண்டு வரும் கருத்துருவினை, செயல்படுத்துவதற்கான முயற்சிகள் முடுக்கிவிடப்பட்டன. 1968-ல் மகாராஷ்டிரம், கர்நாடகம் மற்றும் ஆந்திர மாநிலங்கள் ஆண்டுதோறும் தலா 5 டி.எம்.சி. நீரை, அதாவது 15 டி.எம்.சி.யை, தமிழகத்துக்குத் தருவது என்ற ஒப்பந்தம் கையெழுத்தானது. பின்னர், பல ஆண்டுகளாக அத்திட்டம் கிடப்பில் போடப்பட்டிருந்தது.

முட்டுக்கட்டை போடும் தெலங்கானா

இத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த தெலுங்கு கங்கை திட்டத்துக்கு, ஆந்திரத்தில் இருந்து பிரிந்து உருவாகியுள்ள தெலங்கானா மாநிலத்தால், முட்டுக்கட்டை ஏற்படும் நிலை தற்போது உருவாகியுள்ளது. நீர் பங்கீடு தொடர்பாக புதிய பிரச்சினைகளை தெலங்கானா கிளப்பி வருகிறது. கிருஷ்ணா நதிநீர் தீர்ப்பாயம் வரை இவ்விவகாரம் சென்றுள்ளது. ஸ்ரீசைலம் அணையின் இடதுபகுதி தெலங்கானாவிலும், வலப்பகுதி ஆந்திராவிலும் அமைந்துள்ளது. இருபுறங்களிலும் தலா ஒரு மின்னுற்பத்தி நிலையங்கள் உள்ளன. இதில் தெலங்கானா விதிமுறைகளை மீறி, மின்னுற்பத்திக்கு அதிக தண்ணீரை எடுத்து பயன்படுத்தத் தொடங்கியுள்ளது. இது பற்றி கிருஷ்ணா நதிநீர் தீர்ப்பாயத்திடம் புகார் செய்துள்ளபோதிலும், தெலங்கானா செவிமடுத்தபாடாக இல்லை என்று ஆந்திரம் புகார் கூறுகிறது. மேலும், அதிக ஒதுக்கீட்டையும் கேட்டுவருகிறது. இப்பிரச்சினையால், ஆந்திரம் கவலை அடைந்துள்ளது.

இதனால், சென்னைக்கு பல ஆண்டுகளாகக் கிடைத்து வரும் கிருஷ்ணா நீர்வரத்து தடைபடும் சூழல் ஏற்பட்டுள்ளது. ஆந்திரத்தில் நெல்லூர், சித்தூர் மாவட்ட விவசாயிகளுக்கிடையேயும் கிருஷ்ணா கால்வாயில் இருந்து பாசனத்துக்கு பம்ப் மூலம் தண்ணீரை உறிஞ்சி எடுப்பது போன்ற பல தடைகளையும் தாண்டி சென்னை மக்களின் தாகம் தணிக்க வந்து கொண்டிருக்கிறது கிருஷ்ணா நீர்.

என்டிஆர்- எம்ஜிஆர்

சுமார் 12 ஆண்டுகளுக்குப் பிறகு, ஆந்திரத்தின் வறட்சியான தென்பகுதிகளுக்குப் பாசனத்துக்கு தண்ணீர் தேவைப்படுவதைக் கருத்தில் கொண்டும், சென்னையின் குடிநீர்ப் பற்றாக்குறையை மனதில் கொண்டும் இத்திட்டத்தை நிறைவேற்ற இருமாநில முதல்வர்களும், திரையுலக நண்பர்களு மான என்.டி.ராமராவும், எம்.ஜி.ஆரும் மிகுந்த முனைப்புகாட்டினர். 1983-ல் இந்திரா காந்தி அடிக்கல் நாட்டினார்.

இத்திட்டத்துக்காக ஆந்திரம் ரூ.2 ஆயிரம் கோடி, தமிழகம் ரூ.500 கோடி செலவிட்டன. கர்நூல் மாவட்டத்தின் எல்லையில் ஸ்ரீசைலத்தில் இருந்து கிருஷ்ணா நீரை நெல்லூர் மாவட்டத்தில் உள்ள சோமசீலா அணைக்கும் பின்னர், சென்னைக்கு 152 கி.மீ. தொலைவில் உள்ள கண்டலேறு அணைக்கும் கொண்டு வந்து அங்கிருந்து திருவள்ளூர் மாவட்டம் பூண்டி நீர்த்தேக்கத்துக்கும் கொண்டு வருவதற்கான கால்வாய் வெட்டும் பணி நிறைவடைந்த நிலையில் 29.9.1996-ல் முதல் முதலாக சென்னைக்கு நீர் திறந்துவிடப்பட்டது. அதுமுதல், முழு அளவைத் தராவிட்டாலும் (ஆவியாதல் இழப்பு 3 டி.எம்.சி. போக, 12 டி.எம்.சி), சென்னைக்கு ஆந்திரம் தொடர்ந்து தண்ணீரைத் தந்து தாகத்தைப் போக்க துணைபுரிந்து வருகிறது.

மகாராஷ்டிர மாநிலத்தில் மஹா பலேஷ்வரில் கிருஷ்ணா உற்பத்தியாகி, கர்நாடகத்தைக் கடந்து, ஸ்ரீசைலத்தைக் அடைந்து அந்நதியின் பெயராலேயே அழைக்கப் படும் கிருஷ்ணா மாவட் டத்தில் ஹம்சலா தேவி என்ற இடத்தில் வங்கக்கடலில் கலக்கிறது.

ஆனால், ஸ்ரீசைலத்தில் இருந்து, கிருஷ்ணாவின் ஒரு பகுதியை தெற்கு நோக்கி கால்வாய்கள் மூலம் ஆந்திர அரசு செயற்கையாக திசை திருப்பி, நெல்லூர் மாவட்டத்தில் உள்ள சோமசீலா அணை- கண்டலேறு அணைக்கு தண்ணீரைக் கொண்டு வருகிறது. இவ்வாறாக ஸ்ரீசைலத்தில் இருந்து 408 கி.மீ. பயணம்செய்து தமிழ கத்தில் ஊத்துக்கோட்டை அருகே கிருஷ்ணா நீர் நுழைகிறது.

கண்டலேறு அணையில் இருந்து திறந்துவிடப்படும் நீர், 4 நாட்களுக்குப் பிறகு தமிழகத்தில் நுழையும். முன் பெல்லாம் இது 9 நாட்களுக்கும் மேல் ஆனது. தவிரவும், கண்டலேறுவில் திறந்துவிடப்படும் நீரின் அளவைக் கணக்கில்கொண்டால், தமிழக எல் லையை அடையும் தண்ணீரின் அளவு பெரிதும் குறையத் தொடங்கியது.

இதனால் கால்வாயை பராமரிக்க ஸ்ரீசத்யசாய் பாபா டிரஸ்ட், ரூ.300 கோடி நிதி அளித்தது. அதைத் தொடர்ந்து, கண்டலேறு-பூண்டி கால்வாய் கரைகள் பலப்படுத்தப்பட்டன. அதனால் தண் ணீர் விரைவாக தமிழகத்துக்கு வந்தது. அதன்பிறகு, ‘தெலுங்கு கங்கை’ என்றிருந்த பெயரை ‘சாய்-கங்கா கால்வாய்’ என்று ஆந்திர அரசு புதிய பெயரைச் சூட்டியது.

ஒத்துழைப்பு

சுமார் 1,800 கி.மீ. தொலைவில் உள்ள சென்னைக்கு ஒவ்வோராண்டும் தவறாமல் நீரை ஒதுக்கும் மகாராஷ் டிரம், காவிரிப் பிரச்சினையில் நீதிமன் றத்தில் மல்லுக்கட்டினாலும் கிருஷ்ணா நீரைத் தவறாமல் தரும் கர்நாடகம், வறட்சியிலும் சென்னைக்குக் குடிநீர் திறந்துவிடும் ஆந்திர அரசின் நிலைப் பாடு போன்ற மிகப்பெரிய ஒத்துழைப்பு நடவடிக்கையால்தான் சென்னையில் குடிநீர்த் தட்டுப்பாடு ஏற்படாமல் இருக்க உதவுகிறது.

கிருஷ்ணா நீர் கடந்து வரும் கர்நூல், நெல்லூர், கடப்பா மற்றும் சித்தூர் மாவட்டங்களில் கடும் வறட்சி நிலவுகிறது. எனினும், அதைப் பொருட்படுத்தாமல், தமிழகத் துக்கு கடந்த மாதம் இறுதிவரை கிருஷ்ணா நீரை ஆந்திரம் தந்துள்ளது. அதனால் மேலும் இரு மாதங் களுக்குக் சென்னைக்கு குடிநீர்ப் பிரச்சினை இருக்காது என்று தமிழக அரசு அதிகாரிகள் நம்பிக்கையுடன் கூறுகின்றனர்.

வரலாற்றில் எம்.ஜி.ஆரும்., என்.டி.ஆரும்

கடந்த 19 ஆண்டுகளாக சென்னை மக்களின் தாகம் தீர்க்க எம்.ஜி.ஆரும் என்.டி.ஆரும் நிறைவேற்றிய மகத்தான திட்டம்தான் தெலுங்கு கங்கை திட்டம்.

1970,80-களில் எம்.ஜி.ஆரும் என்.டி.ராமாராவும் தமிழ், தெலுங்கு சினிமாவில் கொடிகட்டிப் பறந்தார்கள். என்.டி.ராமராவை ஆந்திர மக்கள் கடவுளாகவே பார்த்தனர். அதுபோல எம்.ஜி.ஆரை தமிழக மக்கள் எந்தளவுக்கு நேசித்தார்கள் என்பதைச் சொல்லவே வேண்டாம். இந்த இரண்டு பிரபலங்களுக்கும், பொதுமக்களுக்கும் இடையே இருந்த உணர்வுப்பூர்வமான உறவே சென்னைக்கு கிருஷ்ணா நதிநீர் கிடைக்க முக்கிய காரணமாக இருந்தது.

சென்னைக்கு கிருஷ்ணா நீர் வழங்குவதற்கு ஆந்திர மக்கள் ஒருபோதும் தடையாக இருந்ததில்லை. காவிரி, முல்லைப் பெரியாறு போல இடியாப்பச் சிக்கலும் கிருஷ்ணா நீர் விநியோகத்தில் இருந்ததில்லை என்பதே இத்திட்டத்தின் சிறப்பம்சம்.

பொறியாளர்களின் நூற்றாண்டுகால கனவு

ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில், ஆந்திராவும் தமிழ் நாடும் இணைந்து மதராஸ் மாகாணமாக இருந்தபோது கிருஷ்ணா நதிநீரில் பெருக்கெடுக்கும் வெள்ளத்தை, வறட்சிப் பகுதிகளை வளப்படுத்த பயன்படுத்தலாம் என்ற அடிப்படையில் கர்னல் எல்லிஸ் ஆய்வு செய்தார். ஆய்வின் முடிவில், கிருஷ்ணா நதியையும், பெண்ணாறு நதியையும் இணைக்கும் திட்டத்தை 1881-ல் முன்மொழிந்தார்.

வேளாண் உற்பத்தித் திறன் வீழ்ந்து கொண்டிருந்த ராயலசீமா பகுதிகளின் விவசாயத்தை மேம்படுத்துவதுடன், சென்னையின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்வதுமே அத்திட்டத்தின் நோக்கமாக இருந்தது.

ஆனால், முதல் உலகப் போர் மற்றும் இரண்டாம் உலகப் போரில் தனது கவனத்தைக் குவித்திருந்த பிரிட் டிஷ் அரசு, பொறியாளரின் முன் மொழிவை கிடப்பில் போட்டது. பிற்காலத் தில், கிருஷ்ணா நதியையும் பெண்ணார் நதியையும் இணைப்பது குறித்து சர் ஆர்தர் காட்டன் ஆய்வு நடத்தியுள்ளார்.

சுதந்திரத்துக்குப்பின் 1951-ம் ஆண்டில், கிருஷ்ணா நதியையும், பெண்ணாறு நதியையும் இணைப்பதற் கான ஒப்புதலை மதராஸ் மாகாண அரசு அளித்து, விரிவான ஆய்வினை நடத்தியதன் விளைவாக கே.பி.பி. என்று அழைக்கப்படும் கிருஷ்ணா பெண் ணாறு திட்டம் பிறந்தது. இத்திட்டத்தை அமலாக்க அனைத்தும் தயாராக இருந்த வேளையில், 1953-ல் மதராஸ் மாகாணத்திலிருந்து ஆந்திர மாநிலம் பிரிக்கப்பட்டது. அதன் பிறகு, இத்திட்டம் கைவிடப்பட்டது. இருப்பினும், கிருஷ்ணா கோதாவரி ஆறுகளின் நீர் பங்கீட்டு விவகாரங்களை கையாள மத்திய அரசால் அமைக்கப்பட்ட குல் ஹாத்தி ஆணையத்திடம், 1962-ம் ஆண்டு ஜனவரி மாதம் கிருஷ்ணா நீருக்காக மதராஸ் அரசு கோரிக்கை மனு அளித்தது.

அதே ஆண்டு ஏப்ரல் மாதத்தில் குல்ஹாத்தி ஆணைய உறுப்பினர் களுடன் நடைபெற்ற கூட்டத்தில் கிருஷ்ணா மற்றும் கோதாவரி நதிகளின் உபரி நீரை சென்னைக்கு தர வேண்டும் என்றும் மதராஸ் அரசு கோரிக்கை மனு அளித்தது. அதன் பிறகு, 1963-ம் ஆண்டு மக்களவையில் மத்திய வேளாண் அமைச்சர் ஹபீஸ் மஹமத் இப்ராஹீம் சென்னையின் குடிநீர் தேவைக்காக மூன்று மாநிலங்களும் நீர் தருவது கண்டிப்பாக பரிசீலிக்கப்படும் என்று மக்களவையில் அறிவித்தார். அதன்பின், நடந்தவை வரலாறு.

கே.பி.பி. என்று அழைக்கப்படும் கிருஷ்ணா பெண்ணாறு திட்டத்தை அமலாக்க அனைத்தும் தயாராக இருந்த வேளையில், 1953-ல் மதராஸ் மாகாணத்திலிருந்து ஆந்திர மாநிலம் பிரிக்கப்பட்டது. அதன் பிறகு, இத்திட்டம் கைவிடப்பட்டது.

தேசிய ஒருமைப்பாட்டுக்கு உதாரணமாய் ஓர் ஒப்பந்தம்

வடகிழக்குப் பருவமழை மற்றும் நிலத்தடி நீரை மட்டுமே நம்பியிருந்த சென்னை மாநகர மக்களின் குடிநீர் தேவையை கிருஷ்ணா நீரால் மட்டுமே தீர்க்க முடியும் என்று மத்திய அரசின் கருத்துருவில் கூறப்பட்டி ருந்தது. அதிலிருந்த நியாயத்தை மகாராஷ்டிரா, ஆந்திரா, கர்நாடகா மாநிலங்கள் உணர்ந்தன. அதனால் கிருஷ்ணா நீரை அளிக்க அவை முடிவெடுத்தன.

அதன்பின் 1973-ல் கிருஷ்ணா நதிநீர் தீர்ப்பாயம், கிருஷ்ணா நீரை தருவதற்கான முதல் அனுமதியை அளித்தது. பின்னர், 1976-ம் ஆண்டு பிப்ரவரி 15-ம் தேதி, அப்போதைய பிரதமர் இந்திராகாந்தி தாமே முன்வந்து ஆந்திர கர்நாடக மற்றும் மகாராஷ்டிர முதல்வர்களின் அனுமதியையும் பெற்று சென்னை நகருக்கு மூன்று மாநிலங்களும் தலா 5 டிஎம்சி நீரை தருவதற்கு ஒப்புக்கொண்ட முக்கிய அறிவிப்பை சென்னையில் வெளியிட்டார்.

இந்த அறிவிப்பின்படி, 1976-ல் தமிழகம் உள்ளிட்ட 4 மாநிலங்களுக் கிடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது. சைலம் அணையில் இருந்து ஜூலை முதல் அக்டோபர் வரையிலான கால கட்டத்தில் திறந்த வெளிக் கால்வாய் மூலம் சென்னைக்கு கிருஷ்ணா நீரைக் கொண்டுவர முடிவெடுக்கப்பட்டது.

இதையடுத்து 1978 ஜூன் 15-ல், ஆந்திர முதல்வர் என்.டி.ராமாராவ் மற்றும் தமிழக முதல்வர் எம்.ஜி.ஆர். ஆகியோர் ஐதராபாத்தில் சந்தித்து ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்டிருந்த அனைத்து அம்சங்களையும் விவாதித்து, இத்திட்டம் குறித்து விரிவான ஆய்வு நடத்த முடிவெடுத் தனர். முடிவில், இது பயனுள்ள திட்டமாகத் தோன்றியதால், 1983 ஏப்ரல் 18-ம் தேதி சென்னையில் தமிழக முதல்வர் எம்.ஜி.ஆர். மற்றும் ஆந்திர முதல்வர் என்.டி.ராமாராவ் இடையில் வரலாற்று சிறப்புமிக்க ஒப்பந்தம் கையெழுத்தானது.

கிருஷ்ணா நதிக்கு சம்பந்தமில்லாத ஒரு மாநிலத்துக்கு அந்த நதியின் நீரை கால்வாய் மூலம் கொண்டு வந்து சென்னை மாநகர மக்களின் தாகத்தை தீர்ப்பதற்கான அளப்பறிய திட்டம் இப்படித்தான் படிபடிப்பாக அமலானது. தேசிய ஒருமைப்பாட்டுக்கும் மாநிலங்களின் ஒற்றுமைக்கும் சான்றாக ஒரு திட்டம் விளங்குகிறது என்றால் அது இந்த கிருஷ்ணா நதிநீர் ஒப்பந்தம்தான்.

தொடரும்..

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x