

நாடு இருக்கும் இன்றைய சூழலில் தான் நிலம் கையகப்படுத்தும் சட்டம் தேவை. வளர்ச்சி வேண்டும் என்றால், நிச்சயம் இந்தச் சட்டம் நமக்கு வேண்டும்.
நாட்டின் வளர்ச்சிக்கு நிலம் தேவை. அனைவருக்கும் வீடு, அனைவருக்கும் கல்வி, அனைவருக்கும் வேலை, அனைவருக்கும் கழிப்பறை – இவையெல்லாம் நிறைவேற்றபட வேண்டும் என்றால், நிலம் தேவை. சிறு, பெரு நகரங்களில், கிராமங்களில் உள் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த நிலம் தேவை. நீர்பாசனத் திட்டங்கள், நெடுஞ்சாலைகள், இருப்புப் பாதைகள், தொழிற்சாலைகள் அமைக்க நிலம் தேவை. கிராமங்களின் வளர்ச்சியின் மூலம் மக்களின் இடம்பெயர்தலைத் தடுக்க நிலம் தேவை.
ஓர் உதாரணம், டெல்லி - மும்பை நெடுஞ்சாலையில் தொழில் வழித்தடத்தால் சுமார் 1,000 கிராமங்கள் பலன் பெறுகின்றன. சுமார் லட்சம் பேர் வேலைவாய்ப்பு பெருகின்றனர். நிலவங்கி தொடங்கப்பட்ட பின்புதானே சென்னையின் ஒரகடம், ஸ்ரீபெரும்புதூர், மறைமலைநகர் ஆகிய பகுதிகள் வளர்ச்சி பெற்றன? சென்னை - பெங்களூரு தொழில் வழித்தடம் அமைந்தால் இடையே இருக்கும் சிறு நகரங்கள், கிராமங்கள் அனைத்திலும் தொழில் வளர்ச்சி அதிகரிக்கும். இப்படி நாடு முழுவதும் உள்ள நெடுஞ்சாலைகளில் தொழில் வளாகங்கள் அமைப்பதைன் மூலம் சுமார் 30% வேலைவாய்ப்புகள் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஹூண்டாய் நிறுவனத்துக்கு நிலம் எடுத்தபோது குற்றம்சாட்டினார்கள். ஆனால், அந்த நிறுவனம் ஆண்டுக்கு ஆறு லட்சம் கார்களை உற்பத்தி செய்கிறது. இரண்டு லட்சம் கார்கள் ஏற்றுமதியாகின்றன. 9,500 ஊழியர்கள் சராசரியாக மாதம் ரூ. 40 ஆயிரம் சம்பளத்தில் பணிபுரிகின்றனர். ஆனால், நிலம் கொடுக்காமல் தொழில் நிறுவனங்களைப் புறக்கணித்தபோது என்ன நடந்தது? ஜார்க்கண்டில் ஐந்து ஆண்டுகளாகப் போராடி பார்த்து, நிலம் கையகப்படுத்த முடியாததால் ரிலையன்ஸ் பவர் நிறுவனம் தனது ரூ. 36,000 கோடி மதிப்பிலான மின் உற்பத்தி திட்டத்தை ரத்துசெய்திருக்கிறது சில நாட்களுக்கு முன்பு. இதனால், 3,960 மெகா வாட் மின்உற்பத்தி, நூற்றுக் கணக்கானோருக்கு வேலைவாய்ப்பு எல்லாம் போய்விட்டது.
தூத்துகுடியில் டாடா நிறுவனம் ரூ.3,000 கோடி மதிப்பில் டைட்டானியம் ஆலை அமைக்க முயன்றது. நிலம் கையகப்படுத்த முடியாததால் திட்டமே கைவிடப்பட்டது. இப்போது கூட தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவ மனைக்காக மொத்தமாக 200 ஏக்கர் நிலம் தேவை. இதுவரை கிடைக்கவில்லை. 112 ஏக்கர், 74 ஏக்கர் என்று துண்டுதுண்டாக மட்டுமே கிடைக்கிறது. மருத்துவ வசதிகளை எப்படி மேம்படுத்துவது?
காங்கிரஸ் ஆட்சியில் நிலத் தேவையினால் முடங்கியிருந்த திட்டங்களின் மதிப்பு ரூ.7 லட்சம் கோடி. இப்போது அது ரூ.8 லட்சம் கோடியாக அதிகரித்துவிட்டது.
விவசாய நிலங்களைப் பறித்துப் பன்னாட்டு நிறுவனங்களுக்கு கொடுக்கப்போகிறோம் என்கிறார்கள். ‘தரிசு நிலங்கள் மட்டுமே கையகப்படுத்தப்படும். மிக, மிக அவசியம், வேறு வழியே இல்லை என்றால் மட்டும் 1 முதல் 2% வரை விவசாய நிலங்கள் கையகப்படுத்தப்படும்’ என்றுதான் நாம் சொல்கிறோம். அப்படியே ஓரிரு சதவீதம் விவசாய நிலம் எடுக்கப்பட்டாலும் - கிடைக்கும் நான்கு மடங்கு கூடுதல் விலையை வைத்து விவசாயிகள் வேறு இடத்தில் கூடுதலாக நிலத்தை வாங்கிக்கொள்ளலாமே? உபரி பணத்தில் நிலத்தையும் மேம்படுத்தலாமே? இதனால், விவசாயிகளின் வாழ்க்கைத் தரம் உயரும் என்பதுதான் உண்மை.
நிலம் அளிப்பவர் நீதிமன்றத்துக்குச் செல்ல முடியாது என்கிறது புதிய சட்டம். ஆமாம். அதில் என்ன தவறு? இந்த விவகாரத்தில் கடந்த 50 ஆண்டுகளாக ஏராளமான வழக்குகள் நிலுவையில் இருக்கின்றன. ஏராளமான திட்டங்கள் கிடப்பில் உள்ளன. ஏராளமான திட்டங்கள் கைவிடப்பட்டன. நிலத்தின் மதிப்பை விட வழக்குக்காக அதிகம் செலவு செய்தவர்கள் அதிகம் பேர். பல இடங்களில் அரசியல் தூண்டுதலால் வழக்குகள் போடப்படுகின்றன. அதனால்தான் நீதிமன்றம் செல்லத் தேவையில்லை என்று முடிவெடுத்தோம்.
காமராஜர் ஒருமுறை இப்படிச் சொன்னதாகப் படித்தேன். “இடதுசாரிகள் வளர்ச்சியும் வேண்டும் என்பார்கள். வரியும் கூடாது என்பார்கள். நான் நிலத்தைப் பதப்படுத்தி நெல்லை விதைக்கிறேன். இடது சாரிகளோ ‘மக்கள் சோற்றுக்கே வழியில்லாமல் தவிக்கும்போது காமராஜர் நெல்லை சேற்றில் இறைக்கிறார்’ என்கிறார்கள்” என்று. இப்போதும் இடதுசாரிகளின் எதிர்ப்பு அப்படித்தான் இருக்கிறது.
இடதுசாரி நாடான சீன அமைச்சர் ஒருவர் சமீபத்தில் அளித்த பேட்டியில், “அதிகப்படியான சுதந்திரம், அதிகப்படியான ஜனநாயகம் இவையே இந்தியாவில் நிலம் கையகப்படும் மசோதாவைத் தடுக்கிறது. ஆனால், நாங்கள் அந்த மசோதாவால்தான் சீனாவை உலகுக்கே வழிகாட்டும் நாடாக மாற்றினோம்” என்று கூறியிருக்கிறார். நாம் முழுமையாக சீனாவைப் பின்பற்றத் தேவை யில்லை என்றாலும், ஜனநாயகம், சுதந்திரம் எவ்வளவு முக்கியமோ அவ்வளவு முக்கியம் நாட்டின் வளர்ச்சி.
அனைத்துத் தரப்பினரிடமும் பாஜக சார்பில் கேட்டுக்கொள்கிறேன். இதை அரசியல் ஆக்க வேண்டாம். நாட்டின் முன்னேற்றம் முக்கியம். இதைப் பெரும் போராட்டமாக்கி நாட்டைப் படுகுழியில் தள்ளிவிடாதீர்கள்!
- தமிழிசை சவுந்தரராஜன்,
மாநிலத் தலைவர், பாஜக