

இந்தோனேஷிய அரசால் மரண தண்டனை நிறைவேற்றப்பட்ட ஆண்ட்ரூ சான் மற்றும் மயுரன் சுகுமாரன் நினைவாக எதையாவது செய்ய வேண்டும், எதையாவது சொல்ல வேண்டும், தங்கள் மனதின் சோகத்தை எப்படியாவது வெளிப்படுத்த வேண்டும் என்று ஆஸ்திரேலியா முழுவதும் உள்ள மக்கள் நினைக்கிறார்கள்.
சான் மற்றும் சுகுமாரனின் வாழ்க்கை மற்றும் மரணம் குறித்து யோசித்துக்கொண்டே இருக்கும் அவர்களால், இது ஒரு சோக சம்பவம் என்ற நினைவுடன் இயல்பு வாழ்க்கைக்கு அத்தனை சுலபமாகத் திரும்ப முடியாது என்பது உறுதி. ஃபேஸ்புக் நிலைத்தகவலாகட்டும், வீடுகளில் மெழுகுவத்தி ஏற்றுவதாகட்டும், நாடு முழுவதும் இரவுகளில் நடக்கும் அஞ்சலிக் கூட்டங் களாகட்டும், ஆஸ்திரேலியர்கள் ஒன்றிணைந்து இந்தத் துக்கத்தில் பங்கெடுத்துக்கொள்கிறார்கள்.
இது வழக்கமாக நிகழ்வதல்ல. ‘நாடு சகஜ நிலைக்குத் திரும்பும்’ என்ற உறுதி கொண்ட ஆஸ்திரேலியாவில் - அதுவும் எதற்கும் கலங்காத குணம் கொண்ட பிரிட்டன் மக்களின் வழித்தோன்றல்கள் வாழும் ஆஸ்திரேலியாவில் - தேசிய அளவிலான துக்க தருணங்கள் இத்தனை பெரிய தாக்கத்தை இதுவரை செலுத்தியதில்லை. வெற்றியைக் கொண்டாடும் தருணங்களில் ஒன்றிணைந்துகொள்வதில் நாம் சிறந்தவர்கள். அதிகாரத்தில் இருப்பவர்களைப் பற்றி கேலியாக விமர்சனம் செய்வதில்கூட நாம் ஒன்றிணைந்து தான் செயல்படுவோம்.
ஆனால், தேசிய துக்க நிகழ்வுகளில் பங்கெடுப்பது நம் பழக்கம் அல்ல. சமீபத்தில் காலமான முன்னாள் பிரதமர்கள் மால்கம் ஃபிரேஸர் மற்றும் காஃப் விட்லம் ஆகியோருக்குப் பலரும் அஞ்சலி செலுத்தினார்கள். அவர்களது வாழ்க்கை மற்றும் சாதனைகள்குறித்து நம்மில் பலரும் நினைவுகூர்ந்தனர். ஆனால், மால்கம் ஃபிரேஸர் மற்றும் காஃப் விட்லம் ஆகியோரின் மரணங்கள் முற்றிலும் வேறானவை. நீண்ட நல் வாழ்வுக்குப் பின்னர், அமைதியான முறையில் அவர் களின் வாழ்வு முடிவுக்கு வந்தது. ஆனால், சான் மற்றும் சுகுமாரனின் மரணம்தான் எத்தனை பயங்கரமானது; கொடூரமானது!
தவறான முடிவுகளை அவர்கள் எடுத்தது நாம் அறிந்ததுதான். அதே சமயம் அந்த முடிவுகளை மாற்றிக் கொள்ள அவர்கள் எல்லா முயற்சிகளையும் எடுத்தார்கள். அவர்களுக்குத் தங்களைத் திருத்திக்கொள்ளும் வாய்ப்பு இருந்ததையும் நாம் பார்த்தோம்.
சட்ட அமைப்பு அவர்கள் இருவரையும் காக்கும் என்று நாம் நம்பினோம். நமது வேண்டுதல்கள், இந்தோனேஷிய அதிபர் ஜோக்கோ விடோடோவின் சிந்தனையிலும் மனதிலும் மாற்றத்தை ஏற்படுத்தும் என்று நம்பினோம். பிலிப்பைன்ஸைச் சேர்ந்த பணிப்பெண் மேரி ஜேன் வெலோஸோ விஷயத்தில் நடந்ததுபோல், கடைசி நிமிடத்தில் ஏதாவது நடந்து அவர்களின் உயிர்கள் காக்கப்படும் என்று நம்பினோம். ஆனால், அப்படி ஏதும் நடக்கவில்லை. அந்தப் பயங்கரமான செய்தியுடன்தான் நாம் கண் விழித்தோம். அவர்கள் இருவருக்கும் கருணை காட்டப்படவில்லை என்றும் மூர்க்கமான முடிவு எடுக்கப்பட்டதும் நீதி தோல்வி அடைந்ததும்தான் நம் காதுகளை எட்டிய விஷயங்கள்.
துக்கத்துக்கு ஏழு நிலைகள் உண்டு என்று சொல்வார்கள் - அதிர்ச்சி, மறுத்தல், கோபம், கெஞ்சுதல், குற்ற உணர்வு மற்றும் மன அழுத்தம். இதன் கடைசி நிலை, நம்பிக்கைதான்.
இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து இயல்பு வாழ்க்கைக்கு அத்தனை சுலபமாகத் திரும்ப முடியாது என்பது உறுதி. அதே சமயம், உலகம் முழுவதும் உள்ள மக்களில் சிலர், இந்நிகழ்வுக்குப் பிறகு மரண தண்டனைகுறித்த தங்கள் பார்வையை மாற்றிக் கொள்வார்கள் என்று நம்பலாம்.
இந்த மோசமான நிகழ்வின் எதிர்விளைவாக ஏற்படும் சிறு நன்மை இதுதான்!
- தமிழில்: வெ. சந்திரமோகன்
ஆஸ்திரேலிய நாளிதழ்