எல் நீன்யோ – என்ன செய்யப்போகிறோம்?

எல் நீன்யோ – என்ன செய்யப்போகிறோம்?
Updated on
1 min read

‘எல் நீன்யோ' (El Nino) என்பது பசிபிக் கடல் பரப்பின் மேல் ஏற்படும் ஒருவித வெப்பநிலை மாற்றம். இது குறிப்பிட்ட ஆண்டுகளுக்கு ஒருமுறை ஏற்படும். இதன் காரணமாகப் பருவமழைக் குறைவு ஏற்படக்கூடிய ஆசிய நாடுகளில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடங்கிவிட்டன. இதற்கு முன்பொருமுறை ‘எல் நீன்யோ’ வந்தபோது அரிசி உள்ளிட்ட உணவு தானியங்களின் விளைச்சல் கடுமையாகக் குறைந்து, விலை ஏகமாக உயர்ந்ததை அந்த அரசுகள் மறக்கவில்லை. இதனால், மக்களிடையே கொந்தளிப்பு அதிகரித்து சமூக அமைதியும் குலைந்தது.

இந்தோனேசிய அரசு நெல் பயிர் சாகுபடியைத் தேதிவாரியாக எப்படிச் செய்ய வேண்டும் என்று விவசாயிகளுக்கு அட்டவணையே வகுத்துக்கொடுத்துவிட்டது.

மலேசியாவும் பிலிப்பைன்ஸும் மழை நீரைச் சேமிக்கவும், வீணாக்காமல் பயன்படுத்தவும் நடவடிக்கைகளைத் தொடங்கிவிட்டன. இந்தியா முடைக்காலக் கையிருப்பை அதிகப்படுத்திவருகிறது.

கடந்தகால வறட்சிகள்

2007-ல் ஏற்பட்ட எல் நீன்யோவின்போது, உணவுதானிய விளைச்சல் வெகுவாகக் குறைந்து, விலைவாசி உயர்ந்தது. 2008-ல் ஒரு டன் அரிசியின் விலை 1,000 டாலருக்கும் மேல் விற்றது. எகிப்து, கேமரூன், ஹைதி போன்ற நாடுகளில் உணவு தானியக் கலவரம் தலைதூக்கியது.

2009-ல் ஏற்பட்ட எல் நீன்யோ இந்தியாவைக் கடுமையாகப் பாதித்தது. அதற்கு முந்தைய 40 ஆண்டுகளில் இருந்திராத அளவுக்கு வறட்சி நிலவியது. அரிசி விளைச்சலில் மட்டும் சுமார் 10 லட்சம் டன்கள் அளவுக்கு இழப்பு ஏற்பட்டது. உலக அளவில் சர்க்கரை விலை, 30 ஆண்டுகளில் இருந்திராத அளவுக்கு, வரலாறு காணாத வகையில் உயர்ந்தது.

இந்த ஆண்டின் நடுப்பகுதியில் எல் நீன்யோ பாதிப்பு ஏற்படும் என்று ஐக்கிய நாடுகள் சபையின் பருவநிலை எச்சரிக்கை அறிக்கை தெரிவிக்கிறது. வழக்கமாக இந்தோனேசியாவும் பிலிப்பைன்ஸும்தான் இதனால் அதிகம் பாதிக்கப்படும் என்று பாங்காக் நகரில் உள்ள உலக உணவு, வேளாண்மை அமைப்பின் பிரதிநிதியும் மூத்த பொருளியல் அறிஞருமான டேவிட் டாவேஸ் தெரிவிக்கிறார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in