

நாம் முதலில் இந்த விவகாரத்தைப் புரிந்துகொள் வோம். கடந்த இரண்டு தசாப்தங்களாகப் பொருளாதாரத்தைப் பொறுத்தவரை இந்தியா வளர்ந்து கொண்டிருந்தாலும், அந்த வளர்ச்சிக் கதையில் தாங்களும் பங்குதாரர்களாக இல்லையே என்பது கோடிக் கணக்கான இந்தியர்களின் முறையீடு. இந்த முறையீட்டுக்கு அரசு செவி சாய்த்ததன் அடையாளம்தான் மன்மோகன் சிங் அரசு கொண்டு வந்த ‘நிலம் கையகப்படுத்தல் சட்டம்-2013’. இதுவேகூடத் தாமதமான நடவடிக்கைதான்.
உண்மையிலேயே, தங்களைப் பலிகடாக்களாகக் கொண்டுதான் வளர்ச்சி என்பது எட்டப்பட்டிருக்கிறது என்றே ஏராளமான மக்கள் நினைக்கிறார்கள். சுதந்திரக் காலகட்டத்திலிருந்து இன்றுவரை வளர்ச்சித் திட்டங்களின் பெயரால் வாழிடங்களை இழந்த மக்களின் எண்ணிக்கை 6 கோடி. இவர்களில் மூன்றில் ஒரு பங்கினர் மட்டுமே மறுபடியும் குடியமர்த்தப்பட்டிருக்கின்றனர். இடப்பெயர்வுக்கு உள்ளானவர்களில் பெரும்பாலானோர் எந்த வித சொத்துகளும் இல்லாத கிராமப்புற ஏழைகள், சிறு விவசாயிகள், ஏழை மீனவர்கள், குவாரித் தொழிலாளர்கள்.
இவர்களில் கிட்டத்தட்ட 40% ஆதிவாசிகள், 20% தலித் மக்கள். ஆனால், வளர்ச்சித் திட்டங்களின் அனைத்துக் குறியீடுகளிலும் தலித் மக்களும், ஆதிவாசிகளும்தான் மிகமிகக் குறைவாக பலன் அடைந்தவர்களாக இருக்கிறார்கள் என்பதை அதிகாரபூர்வப் புள்ளிவிவரங்கள் உறுதிப்படுத்துகின்றன. இது ஒருபுறம் இருக்க, கடந்த 20 ஆண்டுகளில் மட்டும் 3 லட்சம் விவசாயிகள் தற்கொலை செய்துகொண்டிருக்கிறார்கள். ஆக, அவர்கள் நினைப்பது சரியா, தவறா?
வலுக்கட்டாயமாக நிலத்தைக் கையகப்படுத்துவதற்கு எதிரான கோபத்தை இந்தப் பின்னணியில்தான் நாம் புரிந்துகொள்ள வேண்டும். 90% நிலக்கரிப் படுகைகள், 50%-க்கும் மேல் கனிம வளங்கள், அணைகள் கட்டுவதற்கு உகந்த இடங்கள் போன்றவையெல்லாம் ஆதிவாசிகள் பிரதேசங் களில்தான் இருக்கின்றன. இந்தக் காரணங்களால்தான், நிலம் கையகப்படுத்தலைப் பொறுத்தவரை தொடர்ந்து பிரச்சினைகள் ஏற்படுகின்றன, இனியும் ஏற்படும்.
துடிப்பு மிகுந்த இன்றைய ஜனநாயகத்துக்குப் பொருந்தாத, 19-ம் நூற்றாண்டின் பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்துக்குத் தேவைப்பட்ட, காட்டுமிராண்டித்தனமான காலனியாதிக்கச் சட்டம் ஒன்றுக்கு முடிவுகட்டிக் கொண்டுவரப்பட்டதுதான் நிலம் கையகப்படுத்தல் சட்டம் - 2013. இந்தச் சட்டம் மேற்குறிப்பிட்ட மக்களைச் சென்றடைய முயன்றது.
யாருடைய நிலம் கையகப்படுத்தப்படுமோ அவர்களிடம் சம்மதம் பெறுவதும், நிலம் கையகப்படுத்தலால் வாழ்வாதாரங்களை இழப்பவர்களுக்காக அக்கறை கொள்வதும்தான் இந்தச் சட்டத்தின் மையம். இதையெல்லாம் கடாசியெறியும் மோடியின் முயற்சியானது 1894-ம் ஆண்டின் சட்டம் அரசுக்கு வழங்கிய ‘கேள்வி கேட்க முடியாத அதிகார’த்தை மறுபடியும் உயிர்ப்பிப்பது போன்றது.
வளர்ச்சித் திட்டங்களுக்கென்று நிலங்கள் தேவைப்படு வதையோ, அதனால் நிலம் வழங்குபவர்கள் பலனடையக் கூடிய வாய்ப்புகள் இருப்பதையோ நான் மறுக்கவில்லை. யாருடைய நிலம் கையகப்படுத்தப்படுகிறதோ அவர்களிடம், அவர்கள் அடையக்கூடிய பலன்களைச் சொல்லி சம்மதத்தைப் பெறுவதில் என்ன தீங்கு நேர்ந்துவிட முடியும்? விவசாயிகளுக்குத் தெளிவானதும் மிகுந்த பலன் அளிக்கக் கூடியதுமான மாற்று ஏற்பாடுகளை முன்வைத்தால் அவர்கள் வேண்டாம் என்று சொல்லப்போகிறார்களா என்ன? விவசாயிகளிடம் நிலங்களைப் பெற்று, அதில் செயல்படுத்தவிருக்கும் திட்டங்களால் அவர்களுக்கு அதிக நன்மை கிடைக்குமா என்பதையும் தங்களுக்கு நியாயமான இழப்பீடு வழங்கப்பட்டிருக்கிறதா என்பதையும் விவசாயிகள்தானே மதிப்பிட வேண்டும்?
இந்தியாவில் நிலம் கையகப்படுத்தப்பட்ட வரலாற்றைத் திரும்பிப் பார்த்தால் ஏராளமான நிலங்கள் கையகப்படுத்தப்பட்டும் அவற்றில் பயன்படுத்தப்படாமல் ஏராளமான நிலங்கள் இருப்பதே நிதர்சனம்.
உண்மையில், 2013-ம் ஆண்டு சட்டம் என்பது மற்ற நாடுகள் வெகு காலமாகச் செய்துகொண்டுவரும் விஷயத்தைப் பின்பற்றுவதற்கான தாமதமான முயற்சியே. உள்ளூர் மக்களையும் வளர்ச்சித் திட்டத்தின் பிரிக்க முடியாத பங்காளிகளாகக் கொள்வதன் மூலம் ‘மோதல் தவிர்ப்பு’ என்பதை மேற்கொள்வதற்கான சக்திவாய்ந்த வழிமுறை அது. நியாயமாக நிலம் கையகப்படுத்தல் அமைய வேண்டும் என்றால், முந்தைய சட்டத்தில் உள்ள ‘நில உரிமையாளரின் சம்மதம்’, ‘சமூகத் தாக்க மதிப்பீட்டு அறிக்கை’ ஆகிய இரண்டும் நிச்சயமாக நீக்கப்படக் கூடாது.
எல்லா அக்கறைகளும் தேசம்குறித்த உளப்பூர்வமான அக்கறைகளே. இந்த தேசத்துக்கு நிறுவனமயமாதலும் நகர்மயமாதலும் தேவையாக இருக்கின்றன. ஆனால், எந்த வகையில் என்பது விவாதத்துக்குரியது. மிகக் குறைந்த வேலை வாய்ப்புகளை உருவாக்குவதும், சுற்றுச்சூழலில் முக்கியமாக நீராதாரங்களில் பெரும் பாதிப்புகளை ஏற்படுத்துவதுமான பெருந்தொழில் அமைப்புகளை நாம் நிச்சயமாகத் தொடர்ந்து கொண்டிருக்க முடியாது.
இன்றைய நமது நகரங்கள் எத்தகைய கொடுங்கனவாக மாறியிருக்கின்றன என்பது குறித்து நாம் சந்தோஷப்பட முடியாது. தேச நலன் என்ற பெரிய விஷயத்தைச் சொல்லி, அதற்காக நிலங்களைத் தியாகம் செய்ய வேண்டும் என்று நம் தேச மக்களிடம் கேட்டுக்கொள்ளப்படுகிறது. அப்படியென்றால், அவர்களின் தியாகம் அர்த்தமுள்ள ‘பொதுக் காரியம்’ ஒன்றுக்குப் பயன்பட வேண்டுமே தவிர, கடந்த காலத்தைப் போல அநீதியையும் மோசடிகளையும் சந்திக்கும்படி ஆகிவிடக் கூடாது!
- மிஹிர் ஷா,
மத்திய இந்தியாவிலுள்ள ஆதிவாசிகளுடன் கடந்த 25 ஆண்டுகளாக வாழ்ந்துவரும் செயல்பாட்டாளர்.
- © ‘தி இந்து’ (ஆங்கிலம்),
சுருக்கமாகத் தமிழில்: ஆசை