

- எஸ்.சசிதரன்
தமிழக எல்லைப் பகுதியான ஜீரோபாயின்டிலிருந்து கடந்த 27-ம் தேதி பயணத்தைத் தொடங்கினோம். காலை 7.30 மணி அளவில் அங்கு அடைந்தபோது, தமிழகத்துக்கு தெலுங்கு கங்கை கால்வாயில் தண்ணீர் கொஞ்சமாக வந்துகொண்டிருந்தது. அங்கிருந்து, கால்வாயைத் தொடர்ந்தபடி காளஹஸ்தி அருகே சென்றபோது, சில இடங்களில் தண்ணீர் ஆந்திரப் பகுதியை நோக்கி சென்றுகொண்டிருந்தது.
இதுகுறித்து தெலுங்கு கங்கை திட்ட அதிகாரிகளிடம் கேட்டபோது, ‘அணையில் தண்ணீர் திறப்பது நிறுத்தப்படும்போது நீரோட்டம் குறைவதால், சிறிதளவு நீர் தாழ்வான பகுதிகளில் பின்னோக்கி ஓடுவது இயல்பே’ என்று விளக்கமளித்தனர், பின்னர், பயணத்தைத் தொடர்வதற்கான வழியைப் பற்றி தெளிவாக விளக்கினர்.
அடுத்து, சிற்றூர்கள் வழியாக நெல்லூர் மாவட்டம், வெங்கடகிரியை அடைந்தோம். அங்கு விவசாயிகளைச் சந்தித்துப் பேசினோம். தொடர்ந்து, ராப்பூர் வழியாக, சென்னையில் இருந்து 152 கிமீ தொலைவில் உள்ள சென்னைக்கு தண்ணீர் திறக்கப்படும் கண்டலேறு பிரதான நீர்போக்கிக்கு சென்றோம். கண்டலேறு அணையில் பழைய மதகுகளை மாற்றிவிட்டு, மின்விசை மதகுகளை அமைக்கும் பணி நடந்துவந்தது.
கண்டலேறுவில் இருந்து திறக்கப் படும் நீர், சில கிமீ தொலைவில் உள்ள இயற்கையாக அமைந்த சிறிய நீர்த்தேக்கத்தை அடைகிறது. அங்கிருந்து தான், சாய்கங்கா கால்வாய் தொடங்கு கிறது. கண்டலேறு நீர்த்தேக்கத்தில் குறைந்தபட்ச தண்ணீர் திறந்துவிடும் அளவைக் காட்டிலும் இருப்பு குறைவாக இருந்ததால், சென்னைக்கு நீர் திறப்பு நிறுத்தப்பட்டிருந்தது. அதன் கரையையொட்டி அமைந்த சிறிய சாலையில் ஆதிருபள்ளி கிராமத்தைக் கடந்தோம். அங்குதான், கண்டலேறு நீர்த்தேக்கப் பணிகளுக்காக இடமாற்றம் செய்யப்பட்ட மக்களுக்கு அரசு வீடுகளைக் கட்டித் தந்துள்ளது.
இரவில் நெல்லூரில் தங்கினோம். காலையில், மலைப்பாங்கான பகுதி களைக் கடந்து கண்டலேறுவிலிருந்து சுமார் 45 கி.மீ. தொலைவில் உள்ள கலுவாய் என்ற நகருக்கு அருகில் பிரம்மாண்டமாக, இரு மலைகளுக்கு நடுவில் அழகாக அமைந்துள்ள சோமசீலா அணையை அடைந்தோம். ஸ்ரீசைலத்திலிருந்து வரும் கிருஷ்ணா நீர், மசீலாவை அடைந்து, அதன்பிறகு கண்டலேறுவுக்குச் செல்கிறது.
சிறிய ஊர்கள் வழியாக, கடப்பா மாவட்டத்துக்குள் நுழைந்தோம். கடப்பாவுக்கு சற்று தொலைவில் உள்ள பத்வேலில் தேநீர் அருந்திவிட்டு, அங்கிருந்து புறப்பட்டு சற்று பெரிய ஊரான தெலுங்கு கங்கை கால்வாய் அருகில் அமைந்துள்ள புரொதொட்டூரில் தங்கினோம்.
மறுநாள் காலையில் அஹோபிலம் நோக்கிப் பயணம். அடர்ந்த வனப்பகுதியில் அஹோபிலம் வழியாகக் கடக்கும் கால்வாய்ப் பகுதியைப் பார்ப்பதற்கு சற்று மிரட்சியாக இருந்தது. அங்கிருந்து நந்தியால் வழியாக வெளுகோடு நீர்போக்கியைப் பார்த்துவிட்டு, ஸ்ரீசைலம் வனப் பகுதியினூடே பயணம் தொடங்கியது. மிக ரம்மியமான காட்சிகள். இருந்தாலும் ஆங்காங்கே புலி படங்களைப் பார்த்தபோது லேசாக கிலி ஏற்பட்டது. வழியில், ஒய்.சேர்லபள்ளி என்ற மலைகிராமத்தில், தேநீர் அருந்த நிறுத்தியபோது, அரசு பள்ளிக்கூடத்தை பார்க்கமுடிந்தது. தேநீர்க்கடைக்காரர் கூறுகையில், பள்ளிகள் இருந்தாலும் அங்கு வசிக்கும் மக்கள் தேன் எடுப்பது போன்ற வேலைகளிலே ஆர்வம் காட்டுவதாக வருத்தப்பட்டார். புலியால் இதுவரை பிரச்சினை எதுவும் இல்லை என்றார்.
பின்னர், அங்கிருந்து, கீழ் ஸ்ரீசைலம் எனப்படும் தோர்னாலா நகருக்கு வந்தோம். அங்கிருந்து ஐதராபாத், ஒங்கோல் நகரங்களுக்குச் சாலை பிரிகிறது. இங்குதான் மலைவாழ் மக்கள் தங்களுக்குத் தேவையான பொருட்களை வாங்கிச் செல்கிறார்கள். அங்கிருந்து, ஸ்ரீசைலம் சென்று சேர இரவாகிவிட்டது.
மறுநாள் காலை, ஸ்ரீசைலம் அணையின் பின்பகுதிக்குச் சென்றோம். பல நூறு படிகளைக் கடந்து கீழே சென்றால் கிருஷ்ணா கரையை அடையலாம். சுற்றுலாத் துறை படகில் அணைக்கு அருகில் சென்று வர ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அணையின் ஒரு பகுதி தெலங்கானாவுக்குச் சொந்தம். அங்கிருந்து அணையின் முகப்பைப் பார்வையிட 15 கிமீ சுற்றிச் செல்ல வேண்டியிருந்தது. அணையின் முகப்பைப் பார்த்துவிட்டு, பயண நினைவுகளை அசைபோட்டபடியே ஒங்கோல் நோக்கிப் புறப்பட்டோம். அங்கிருந்து, காலையில் நெல்லூருக்குப் புறப்பட்டு மாலையில் புழல் நீர்த்தேக்கத்தை அடைந்தபோது, அந்த ஏரி ஏற்கெனவே வரப்பெற்றிருந் கிருஷ்ணா நீரால் நிரம்பி கண்கொள்ளா காட்சியாக இருந்தது. 5 நாட்களில் நாங்கள் மேற்கொண்ட 1400 கிமீ பயணம் இனிதாய் அமைந்தது.
- டி.செல்வகுமார்
சென்னையில் இருந்து ஸ்ரீசைலம் அணை வரை பயணம் செய்தபோது அடர்ந்த காடுகள், குக்கிராமங்கள், கிராமங்கள், சிறிய நகரங்கள், நகர்ப்புறம் வழியாக கிருஷ்ணா கால்வாயை மட்டுமல்லாமல், அதை யொட்டி வாழும் விவசாயிகள் மற்றும் பொது மக்களின் வாழ்க்கை முறைகளையும் காணும் வாய்ப்பு கிடைத்தது. அப்போது கண்ணுற்ற பல விஷயங்கள் ஆச்சரியப்பட வைத்தன.
ஊத்துக்கோட்டை ஜீரோ பாயின்டை சென்றடைந்தபோது, தமிழக எல்லைப் பகுதியில் கண்டலேறு பூண்டி கால்வாய் (கிருஷ்ணா கால்வாய்) சில இடங்கள் சிதைந்தும், குப்பை மண்டியும் கிடந்தன.
ஆனால், அங்கிருந்து ஆந்திர மாநிலத்துக்குள் நுழைந்ததும் சற்று வித்தியாசமான அனுபவம் கிடைத்தது. ஆந்திர மாநிலத்தில் உள்ள கிருஷ்ணா கால்வாயில் ஒரு இடத்தில்கூட பிளாஸ்டிக் குப்பை இல்லை. மக்கள் துணிகள், பாய்களை துவைக்கவும் இல்லை.
நெல்லூர் மாவட்டம் ராப்பூர் அருகில் வீட்டுக்கு அருகே கிருஷ்ணா கால்வாயில் ஓடினாலும், அங்கு துணிகளைத் துவைக்காமல், சற்றுத் தொலைவில் உள்ள கை பம்பில் நீர் பிடித்து பெண்கள் துணி துவைத்ததனர்.
கிருஷ்ணா கால்வாயில் தண்ணீர் ஓடிக் கொண்டிருக்கும் பகுதியிலும், வறண்டு கிடக்கும் இடங்களிலும் கால்வாய் கட்டமைப்பு உடைந்தோ, சிதைந்தோ இல்லை. தண்ணீர் ஓடும் இடத்தில் தெளிந்த நீரோடைபோல பளிச்சென காட்சியளிக்கிறது கால்வாய். ஆந்திர அரசும், அம்மாநில மக்களும் கண் இமைபோல கிருஷ்ணா கால்வாயைப் பேணிப் பாதுகாப்பது வியப்பாக இருந்தது.
ராப்பூர் அருகே கிருஷ்ணா கால்வாயின் குறுக்கே கட்டப்பட்டிருந்த நீர்த்தேக்கமும் மிகவும் நேர்த்தியாக பராமரிக்கப்படுகிறது. அந்தளவுக்கு திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள பூண்டி ஏரி பராமரிக்கப்படவில்லை. பொதுப்பணித் துறையின் முறையான கண்காணிப்பும் இல்லை.
ஆந்திரத்தில் கிருஷ்ணா கால்வாயின் பக்கவாட்டில் மட்டுமல்லாமல், அடிப்பகுதியிலும் கான்கிரீட் போட்டிருப்பதால் தண்ணீர் துளியும் உறிஞ்சப்படாமல் வேகமாக ஓடி வருகிறது. ஆனால், தமிழ்நாட்டில் கால்வாயின் பக்கவாட்டில் மட்டும் கான்கிரீட் போட்டிருக்கிறார்கள்.
கால்வாயை சுத்தமாகப் பராமரிப்பது குறித்து கிராம மக்கள் சிலரிடம் கேட்டபோது, “கர்னூல், கடப்பா மாவட்டங்கள் மிகவும் வறண்ட பகுதிகள். தெலுங்கு கங்கை திட்டம் நிறைவேற்றப்பட்டு கிருஷ்ணா நதி நீர் வந்த பிறகே எங்கள் பகுதியில் விவசாயம் நடக்கிறது. தண்ணீரை ஒருபோதும் வீணாக்கவோ, அசுத்தம் செய்யவோ மாட்டோம்” என்றனர்.
மழைநீரை உயிர் நீராகக் கருதி, அதைச் சுமந்து வரும் கிருஷ்ணா கால்வாயை பேணிப் பாதுகாத்து வரும் ஆந்திர மக்களை மெச்சலாம்.
- சி.கணேஷ்
கிருஷ்ணா நதி நீர் தமிழகத்துக்கு வரும் பாதை வழியாக பயணம் புறப்பட்ட எங்களுக்கு இருந்த ஒரே பயம், ஆந்திர உணவுதான், மிளகாய் காரம். நினைத்துப் பார்க்கும்போதே உடலே எரிந்தது. எனினும், மனதை தேற்றிக் கொண்டு புறப்பட்டோம்.
காலையில் ஆந்திர எல்லை ஊத்துக்கோட்டைக்கு சென்று ஜீரோ பாயின்ட் பகுதியை பார்த்துவிட்டு பெரியபாளையத்தில் காலை உணவை முடித்தோம்.
மதிய உணவுக்காக நெல்லூர் மாவட்டம் ராப்பூர் சென்று, பலரிடம் விசாரித்துத் தேடி அங்கு பிரபலமாக பேசப்படும் ‘பிரண்ட்ஸ் மெஸ்’சை அடைந்தோம். அங்கிருந்து, பாதுகாப்பான தங்குமிடம் மற்றும் உணவகம் தேடுவதற்காக நாங்கள் பயன்படுத்திய வாசகம்தான் ‘பெத்த ஓட்டல்..மஞ்ச்சி ஓட்டல்..’
கண்டலேறு அருகில் பாதுகாப்பான தங்குமிடம் இல்லாததால், சற்று தொலைவில் உள்ள நெல்லூ ருக்குச் சென்று ‘மஞ்ச்சி’ ஓட்டலில் தங்கி, முரளி கிருஷ்ணா ஓட்டலில் இரவு உணவை முடித்தோம்.
மறுநாள், சோமசீலா நீர்த்தேக்கத்தை பார்த்துவிட்டு புறப்படும்போது பழங்கள்தான் மதிய உணவாகின. அதன்பிறகு, கடப்பா மாநிலம் புரதொட்டூர் சென்றோம். திலகா உணவகத்தில் இரவு உணவை முடித்தோம். மறுநாள் முழுவதும் ஸ்ரீசைலத்தில் சென்றது. சென்ற இடங்களில் எல்லாம் ‘பெத்த ஓட்டல்..மஞ்ச்சி..’ ஓட்டல் வாசகத்தை சொல்ல நாங்கள் மறக்கவில்லை.
பாசத்தையும் பக்தி உணர்வையும்..
ஸ்ரீசைலத்தில் இருந்து ஆந்திர மக்களின் சகோதர பாசத்தை சென்னைக்கு சுமந்து வரும் கிருஷ்ணா நதி நீர், பல ஆன்மிகத் தலங்களைக் கடந்து பூண்டியை அடைகிறது.
ஸ்ரீசைலம்:
இங்கிருந்துதான் தமிழத்துக்கான கிருஷ்ணா நீர், கால்வாயில் திறந்துவிடப்படுகிறது. இது ஆன்மிகத் தலம் மட்டுமின்றி, சுற்றுலாத்தலமும்கூட. இங்கு ஸ்ரீமல்லிகார்ஜூனர் கோயில் அமைந்துள்ளது. இங்கு கிருஷ்ணா நதி நீர் சேரும் ஸ்ரீசைலம் நீர்த்தேக்கப் பகுதியில் கங்கை மாதா வந்து சென்றதாக ஐதீகம் இருப்பதால், இப்பகுதி பாதாள கங்கை என அழைக்கப்படுகிறது.தவிர, அக்கம்மா தேவி குகையும் ஆன்மிகம் மற்றும் சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கின்றன.
நந்தியால்:
ஆந்திர மாநிலம் கர்நூல் மாவட்டம், நந்தியால் பகுதியில் அடர்ந்த காட்டுப் பகுதியில் நந்தியால் மகாநந்தீசுவரர் கோயில் உள்ளது. நாட்டில் உள்ள முக்கியமான 9 நந்தி கோயில்களில் பிரதானமான மகாநந்தி இங்கு உள்ளது.
அஹோபிலம்:
நந்தியாலுக்கு முன்பாக 70 கிமீ தொலைவில் அமைந்துள்ளது அஹோபிலம். நரசிம்மர் வீற்றிருக்கும் இக்கோயில், கீழ் அஹோபிலத்தில் உள்ளது. இதுபோன்ற பல குடைவரை கோயில்கள் மேல் அஹோபிலம் மலைப் பகுதியில் அமைந்துள்ளன.
காளஹஸ்தி:
கிருஷ்ணா கால்வாய், சித்தூர் மாவட்டத்தில் காளஹஸ்தி அருகில் கடந்து செல் கிறது. இறுதியாக கல்வாய் வந்து முடியும் இடம் பூண்டி நீர்த்தேக்கம். பூண்டி நீர்த்தேக்கம் 1943-ம் ஆண்டு கட்டப்படுவதற்கு முன் இப்பகுதியில் திருவலம்புதூர் என்ற பகுதி இருந்தது. இங்கு ஊன்றீசுவரர் என்ற சிவன் கோயில் இருந்தது. நீர்த்தேக்கம் கட்டுவதற்காக கோயில் அப்புறப்படுத் தப்பட்டு தற்போது பூண்டி நகர்ப் பகுதியில் அமைந் துள்ளது. நாயன்மார்களில் முக்கியமானவரான சுந்தரரால் பாடப்பெற்ற தலம் இது.
வனச் சரணாலயங்கள்..
கிருஷ்ணா கால்வாய், வரும் வழிநெடுகில் பல இடங்களில் அடர்ந்த காடுகளைக் கடக்கிறது. கிருஷ் ணாநீர் கடந்து வரும் ஸ்ரீசைலத்தில் நாகார்ஜூன சாகர் ஸ்ரீசைலம் புலிகள் காப்பகம் அமைந்துள்ளது. கிருஷ்ணா நதி நீர், தென் கிழக்கு தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள நல்லமலை வனப் பகுதியில் 130 கிமீ ஊடுருவி வருவது குறிப்பிடத்தக்கது. தவிர, ஸ்ரீசைலம் வன விலங்கு சரணாலயமும் இப்பகுதியில் அமைந்துள்ளது. மேலும், நந்தியால் அருகே வெளுகோடு காப்புக்காடு பகுதியும் அமைந்துள்ளது. இதில் மறைந்த முன்னாள் ஆந்திர முதல்வர் ராஜசேகர ரெட்டி நினைவாக, ஒய்எஸ்ஆர் ரெட்டி ஸ்மிருதி வனம் என்ற பல்லுயிர் பூங்கா அமைந்துள்ளது. இங்கு வன விலங்குகள் மற்றும் சுற்றுச்சூழல குறித்த ஆய்வுகள் நடந்து வருகின்றன. ஆத்மகூர்- வெளுகோடு சாலையில் இந்த வனப்பகுதி அமைந்துள்ளது.
- வி.சாரதா
ஆந்திரத்தில் கிருஷ்ணா கால்வாய் வழியாக பயணம் செய்தபோது, சாலைகளின் தரத்தைப் பார்த்து வியப்பு மேலிட்டது.
குக்கிராமங்களைக் கடந்து சென்ற சாலைகள் அனைத்தும் தரமானவையாக இருந்தன. சில சிற்றூர்களில் 12 அடி அகலமே சாலைகள் அமைக்கப்பட்டிருந்தாலும், குண்டு குழிகளற்று, மேடு பள்ளங்கள் இல்லாமல் பராமரிக்கப்பட்டிருந்தன. பல இடங்களில் சாலைப் பராமரிப்புப் பணிகள் தீவிரமாக நடந்துவருவதையும் பார்த்தோம்.
வறட்சி, நீர்த் தட்டுப்பாடு காரணமாக குடிநீர் வசதி இல்லாத இல்லாத கிராமங்களையும் தார்சாலை கொண்டு நகரப் பகுதிகளுடன் இணைத்திருந்தனர். பேருந்துகள் அனைத்தும் தரமானவையாக, குறிப்பாக இருபுறங்களிலும் கதவுகளுடன் இருந்ததைக் காண முடிந்தது.
எல்லா கிராமங்களிலும் டிராக்டர் போக்குவரத்து அதிகமாக இருந்தது. விவசாய உற்பத்திப் பொருட்களை நகரங்களுக்கு எடுத்துச் செல்ல அணுகு சாலைகளும், டிராக்டர்களும் விவசாயிகளுக்குப் பேருதவியாக உள்ளன. தெலுங்கு கங்கை கால்வாய்களை ஒட்டி சில இடங்களில் சாலைகள் அமைக்கப்பட்டிருந்தன. அவற்றில் கால்வாய் நீரோட்டத்தை பார்வையிட்டபடி பயணித்தோம்.
ஆந்திர மக்களின் அன்பு..
தெலுங்கு கங்கை திட்டத்தின் கரையில் அமைந்த விவசாய கிராமங்களின் ஊடாக பயணம் மேற்கொள்ளவேண்டுமெனில், தமிழகத்திலிருந்து சுற்றுலாப் பயணிகள் வழக்கமாகத் தேர்ந்தெடுக்கும் பொதுவான வழித்தடங்களில் செல்ல முடியாது. நாங்கள் சென்ற வாகனம் பல இடங்களில் வனப் பகுதிகளைக் கடந்து செல்ல வேண்டியிருந்தது. ஒரு காலத்தில் நக்ஸலைட்டுகள் ஆதிக்கம் மிகுந்த நல்லமலா காடுகள் அவற்றில் குறிப்பிடத்தக்கது.
அங்கு புலிகள் நிறைந்த காப்புக்காடுகளையும் கடக்க வேண்டியிருந்தது. குக்கிராமங்களினூடேயும், நகரங்களினூடேயும் வழித்தடத்தை விசாரித்தபடியே பயணத்தைத் தொடர்ந்தோம். தமிழகத்திலிருந்து வந்திருக்கும் பத்திரிகையாளர்கள் என்பதை அறிந்தபோது, மக்கள் மிகுந்த கனிவுடனும் இன்முகத்துடனும் எங்களை வரவேற்றனர். அறியாத வழித்தடங்களை விசாரித்தபோது மகிழ்ச்சியுடன், தயக்கமின்றி உதவினர். தமிழகத்தின் பல கிராமங்களில் நிலவும் நட்புணர்வு, ஆந்திர கிராமங்களிலும் நி லவியது.
தெலுங்கு கங்கை கால்வாய் என்று கேட்டால் “மதராஸ் கால்வாய்தானே?” என்று மகிழ்ச்சியுடன் எதிர்க் கேள்வி கேட்டார்கள். சென்னை மாநகரத்துக்குத் தண்ணீர் எடுத்துச் செல்லும் கால்வாய் அதுதான் என்பது ஒவ்வொருவருக்கும் தெரிந்திருந்தது. பெரிய நகருக்கு தண்ணீர் தருகிறோம் என்ற பெருமிதமும் அவர்கள் கண்களில் தெரிந்தது. யாரிடமும் வெறுப்பு இல்லை.
தமிழில் பேசி உதவுவதற்கும் பலர் முயன்றார்கள். பருவமழை பொய்த்துப் போயிருந்ததால் கிராமங்கள் வறண்டிருந்தன. ஆயினும், அவர்களது அன்பில் வறட்சி யில்லை.