

பாலைவனமாவதை தடுத்த தெலுங்கு கங்கை
- எஸ். சசிதரன்
ஆந்திரத்தின் தென்கோடியில் உள்ள கடப்பா, நெல்லூர் மற்றும் சித்தூர் மாவட்டங்களின் பல லட்சம் ஏக்கர் பரப்பிலான விளைநிலங்கள் பாலைவனமாவதை தடுத்து நிறுத்தியிருக்கிறது தெலுங்கு கங்கைத் திட்டம். இதை பெருமையோடு நினைவு கூர்கின்றனர் அம்மாநில விவசாயிகள்.
கடந்த 1996-ல் ஸ்ரீ சைலத்திலிருந்து, தெலுங்கு கங்கை கால்வாயில் சென்னைக்கு கிருஷ்ணா நீர் வர தொடங் கியது முதல் கர்நூல், கடப்பா, நெல் லூர், சித்தூர் போன்ற நான்கு பெரிய வறட்சி மாவட்டங்களின் பல்வேறு பகுதிகள், வளம்பெறத் தொடங் கின. கண்டலேறு, சோமசீலா அணைகளி லிருந்து, பல்வேறு பாசனத் திட்டங் கள், குடிநீர்த்திட்டங்கள் செயல்படுத்தப் பட்டுவருவதால் அப்பகுதிகளில் உள்ள லட்சக்கணக்கான விவசாயிகள், தொழிலாளர்களின் வாழ்க்கையில் மறுமலர்ச்சி ஏற்பட்டுள்ளது. இதனை அங்குள்ள விவசாயிகளும், விவசாய அமைப்பு நிர்வாகிகளும் பெருமை யுடன் தெரிவிக்கின்றனர்.
கிருஷ்ணாவை நம்பி..
நெல்லூர் மாவட்டத்தில் வெங்கட கிரியைச் சேர்ந்த பட்டதாரி சீனு கூறும் போது, ‘எங்களது அருந்ததி காலனியில் உள்ள 50 வீடுகளும் கிருஷ்ணா நீரை நம்பியே விவசாயம் செய்கிறோம். இத்திட்டம் வருவதற்கு முன்பு எங்களது கிராமத்தினர், சென்னை உள்ளிட்ட இடங்களுக்கு கூலி வேலைக்குச் சென்றனர். ஆனால், கால்வாய் அமைக் கப்பட்டபிறகு, கவுரமாக விவசாயத்தில் ஈடுபட்டு வருகிறோம். தற்போது, கால்வாயில் நீர்வரத்து இல்லாததால் இரண்டாம் போகம் விவசாயம் செய்ய முடியவில்லை. கூலி வேலைக்குப் போகத் தொடங்கியிருக்கிறோம்’ என்றார்.
இந்திய விவசாயிகள் கூட்டமைப்பின் (சிஃபா) நெல்லூர் மாவட்ட செயலாளர் கோட்டி ரெட்டி கூறும்போது, ‘சென் னைக்குக் கிருஷ்ணா நீர்வரத்து தொடங்கியது முதல் நெல்லூர், சித்தூர் மாவட்ட விவசாயிகள் வாழ்க்கையில் திருப்புமுனை ஏற்பட்டது. தெலுங்கு கங்கைத் திட்டத்துக்கு முன்பாக, இப்பகுதிகளிலெல்லாம் சிறுதானி யங்கள், பயறு வகைகள், எலுமிச்சை போன்றவை மட்டுமே பயிரிடப்பட்டு வந்தன. ஆனால், சோமசீலா, கண்ட லேறு அணைகள் கட்டப்பட்ட பிறகு, பாசனத்துக்குத் தண்ணீர் தர கால் வாய்கள் அமைக்கப்பட்டன. அதனால் நெல், கரும்பு போன்ற பயிர்களை விளைவிக்க முடிகிறது.
சோமசீலாவிலிருந்து உத்தர, தக்ஷின, கனுபு, காவலி என நான்கு பாசனக் கால்வாய்கள் 4.2 லட்சம் ஏக்கர் விவசாய நிலங்களுக்கு நீர் தருகின்றன. கண்டலேறு அணை நீரால் 2.5 லட்சம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகிறது. இதன் காரண மாக பயிர் செய்யும் பரப்பு, போகங்களின் எண்ணிக்கை, மற்றும் மகசூலும் அதிகரித்தது.
குறிப்பாக, கடந்த ஏழெட்டு ஆண்டு களாக, இரு போகங்கள் பிரச்சி னையின்றி பயிர் செய்யப்படுகிறது. ஆனால், இந்த ஆண்டு சோமசீலாவில் நீர்மட்டம் குறைந்ததால், கண்டலேறு வுக்கு கிருஷ்ணா நீரை தற்போது திறக்க முடியவில்லை. இதனால் இவ்வாண்டு 10 லட்சம் ஏக்கர் பாசன பரப்பு 6 லட்சமாக குறைந்தது. இவ்வாண்டில் பாதிப்பு சற்று அதிகமாக உள்ளது. மொத்தத்தில், விவசாயிகள் வாழ்வில் கிருஷ்ணா நீர் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
கிருஷ்ணா நீரில் மேலும் 10 டிஎம்சி தண்ணீரை சித்தூர் மாவட்டத்தில் மதனபள்ளி, பீலேரு பகுதிகளில் குடி நீருக்காக எடுத்துச்செல்ல அரசு உத்தர விட்டுள்ளது. ஸ்ரீசைலம் அருகே யுள்ள போத்திரெட்டிபாடு நீர் போக்கி வழியாக சோமசீலாவுக்கு அதிக நீரைக்கொண்டு வந்து நெல்லூர் மாவட்டத்துக்கு அதிக நீரை ஒதுக் கிய பிறகே அவ்வாறு செய்ய வேண்டு மென நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந் துள்ளோம்’ என்று கூறி முடித்தார்.
சித்தூர் மாவட்டத் தலைவர் மங்கதி கோபால் ரெட்டி நம்மிடம் பேசும்போது, ‘கிருஷ்ணா கால்வாய் வருவதற்கு முந்தைய காலங்களில் மழைப்பொழிவு நன்றாக இருந்தது. ஆனால், மழை யளவு குறையத்தொடங்கிய நிலையில், கிருஷ்ணா கால்வாய் நீர் இல்லாது போயிருந்தால் இப்பகுதிகள் பாலைவ னமாக மாறியிருக்கும்.
தெலுங்கு கங்கைக் கால்வாயின் இருபுறங்களிலும் பல கி.மீ. தூரத்துக்கு நிலத்தடி நீர் மட்டமும் ஏரி, கிணறுகளின் நீர்மட்டமும் தொடர்ந்து உயர்ந்து வருகிறது. அதிக நீர்வரத்து இருக்கும் காலங்களில் அருகில் உள்ள ஏரிகளில் நீர் சேமிக்கப்பட்டு பின்னர் விவசாயத்துக்கு பயன்படுத்தப்படுகிறது. காளஹஸ்தி, சத்தியவேடு, திருப்பதி, திருமலை பகுதிகள் குடிநீருக்காக, கிருஷ்ணா நீரையே நம்பி உள்ளன’ என்றார்.
‘நாம் தண்ணீர் தரலாம்’
திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள ஏரிகளை தூர்வாரினால் ஆந்திரத்துக்கு நாம் தண்ணீர் தரலாம் என்கிறார் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் திருவள்ளூர் மாவட்டத் தலைவர் பி.துளசிநாராயணன்.
அவர் மேலும் கூறுகையில், ‘கும்மிடிப்பூண்டி ராக்கம்பாளையம் ஏரி மற்றும் புதுகும்மிடிப்பூண்டியில் இருந்து கும்மிடிப்பூண்டி முதல் கவரப்பேட்டை வரை 6 கி.மீ. தூரத்துக்கு நீளும் ஏரி ஆகிய இரண்டினை தூர் வாரினாலே திருவள்ளூர் மாவட்டத்தின் பத்துக்கும் மேற்பட்ட பஞ்சாயத்துகளில் பாசனம் மற்றும் குடிநீர் பிரச்சினை இருக்காது. பூண்டி ஏரியை மேலும் இரண்டு அடிக்கு ஆழப்படுத்தினால் அம்பத்தூர், ஆவடி வரை தண்ணீர் பிரச்சினை தீர்ந்துவிடும். அரசு இலவசங்களைத் தராமல் காஞ்சி, திருவள்ளூர் மாவட்டங்களில் உள்ள ஏரிகளை தூர்வாரினாலேயே வீராணம், கிருஷ்ணா நீர் சென்னைக்குத் தேவைப்படாது. திருப்பதிக்கு நாம் தண்ணீர் தரமுடியும். கால்வாய் பராமரிப்புக்கு கோடி, கோடியாக செலவழிக்கும் தமிழக அரசு, இங்குள்ள ஏரிகளுக்கு அதை செலவிட்டால் பல மடங்கு பலளளிக்கும்’ என்றார்.
வாசகர் கருத்து
மின் ஆளுகை (eGovernance) மூலம் எல்லா அரசு அலுவலகங்களையும் இணைத்துவிட்டால் தலைநகருக்கு அரசாங்க வேலையாக அலையும் 2 லட்சம் பேரின் நீர்தேவையைக் குறைக்கலாம். அனாவசிய அரசு அலுவலகங்களை வெளியூருக்கு மாற்றி மாசுபடுத்தும் தொழிற்சாலைகளை வெளியே மாற்றினால் இன்னும் 10 ஆண்டுகள் குடிநீர் பஞ்சமே இருக்காது
- இணையதளத்தில் கண்ணன்.
பொறிக்கப்பட்ட பொறியாளர் பெயர்கள்
- கி. கணேஷ்
ஸ்ரீ சைலத்தில் இருந்து வரும் கிருஷ்ணா நீர், கண்டலேறுவுக்கு அனுப்பப்படுவதற்கு முன்பாக, சோமசீலா அணையில் தேக்கப்படுகிறது. இங்குதான் பெண்ணாறும் வந்தடைகிறது. இங்கு நீரைத் தேக்கினால் மட்டுமே சென்னைக்கான குடிநீர் மட்டுமின்றி, ஆந்திர பாசனத்துக்காகவும் நீரைப் பயன்படுத்த முடியும் என்று உணர்ந்த ஆந்திரம், 1976-ல் சோமசீலா நீர்த்தேக்கத்தை கட்டத் தொடங்கி 1989-ல் நிறைவு செய்தது. அங்குள்ள கல்வெட்டில், நீர்த்தேக்கத்துக்குத் திட்டமிட்டது முதல், திட்டம் முடிக்கப்பட்டது வரை பணியாற்றிய தலைமைப் பொறியாளர்கள், செயற்பொறியாளர்கள், உதவி பொறியாளர்கள் என அனைவரின் பெயர்களும் பொறிக்கப்பட்ட கல்வெட்டு பதிக்கப்பட்டுள்ளது.
நீர் வேண்டாமென சொன்ன தமிழகம்
- டி. செல்வகுமார்
ஆந்திரத்தில் போதிய மழை இல்லாததால் ஸ்ரீசைலம், சோமசீலா, கண்டலேறு அணைகளில் நீர்இருப்பு மிகக்குறைவாக உள்ளது. கண்டலேறு அணையில் 9 டிஎம்சி தண்ணீர் இருந்தால்தான், கிருஷ்ணா கால்வாயில் தண்ணீர் திறந்துவிட முடியும். அதற்கு குறைவாக இருந்தால், அணையில் இருந்து தண்ணீரைப் பம்ப் செய்துதான் கிருஷ்ணா கால்வாயில்விட முடியும். கடந்த 2004-ம் ஆண்டு தண்ணீரை பம்ப் செய்து கிருஷ்ணா கால்வாயில்விட்டு, சென்னைக்கு கிருஷ்ணா நீர் அனுப்பப்பட்டது. இப்போது சென்னைக்கு நீர் அனுப்பவேண்டுமெனில் பம்ப் செய்துதான் அனுப்ப முடியும்.
தென்மேற்கு பருவமழை இயல்புக்கு அதிகமாக பொழிந்த காலங்களில், சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகள் நிரம்பிவிட்டதால், கிருஷ்ணா நீர் வேண்டாம் என்று தமிழகம் சொன்ன காலமும் உண்டு. 2005 மற்றும் 2008-ம் ஆண்டுகளில் ஏரிகள் நிரம்பி வழிந்ததால், “கிருஷ்ணா நீரைத் திறந்துவிட வேண்டாம்” என்று ஆந்திர அரசை தமிழக பொதுப்பணித் துறை அதிகாரிகள் கேட்டுக் கொண்டனர்.
பன்முக நீர் மேலாண்மை சென்னைக்கு தேவை - ஜி.ராமகிருஷ்ணன் விருப்பம்
சென்னைக்கு பன்முக நீர்மேலாண்மை தேவை என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் கூறினார்.
‘தி இந்து’வில் வெளியாகும் ‘கிருஷ்ணாவின் பயணம்’ தொடர்பான சிறப்பு செய்தி குறித்து அவர் கருத்து தெரிவித்த போது, ‘மக்கள் தொகை அதிகரிப்பு மற்றும் நகரமயமாதல் காரணங்களினால், ஏற்கெனவே இருந்த ஏரிகள், குளங்கள் போன்ற நீர் சேமிப்பு வசதிகள் காணமல் போனதே, சென்னையின் நீர் பற்றாக்குறைக்கு முக்கிய காரணமாகும். உங்கள் கட்டுரையில் குறிப்பிட்டிருப்பது போல, சென்னையின் நீர் பற்றாக்குறையை தீர்ப்பதற்கு முக்கிய அம்சம் கூடுதல் நீர் சேமிப்பு கட்டமைப்புகளை உருவாக்குவது.
ஆந்திராவில் பருவ மழை பற்றாக்குறை காலத்திலும் பல லட்சம் ஏக்கர் நிலங்களில் பாசனம் செய்யப்படுகிறது. அதேபோல் தமிழ்நாட்டில் உள்ள பாசன வசதிகளையும் மேம்படுத்த வேண்டும். தொழிற்சாலைகள், வணிக வளாகங்கள், குடியிருப்புகளைக் கொண்ட சென்னைக்கு பன்முக நீர் மேலாண்மை அணுகுமுறை தேவை. தெலுங்கு கங்கை கால்வாய் குறித்த கட்டுரை அறிவியல், வரலாறு, புவியியல் அம்சங்களை உள்ளடக்கியதாக அரசியல் சார்பற்று இருக்கிறது’ என்றார்
பயணிப்போம்..