

நேரு காலத்துக்குப் பின் ஒரு பெரிய எதிர்பார்ப்பை உருவாக்கிய பயணம் இது என்று மோடியின் பயணத்தைச் சொல்லலாமா? சொல்லலாம் என்றே தோன்றுகிறது. ஏனென்றால், முன்னெப்போதையும்விட சீனாவுக்கு இந்தியா தேவைப்படுகிறது; இந்தியாவுக்கு சீனா தேவைப்படுகிறது. எல்லாம் வளர்ச்சி நோக்கங்கள்தான்.
சீனப் பயணத்தையொட்டி ‘வெய்போ’ என்ற சீன ட்விட்டரில் மோடி சேர்ந்தபோதே ஒரே சலசலப்பு உருவாகிவிட்டது. இதற்கு முன்பு பிரிட்டிஷ் பிரதமர் டேவிட் கேமரூன், ஆஸ்திரேலியாவின் முன்னாள் பிரதமர் கெவின் ரட் ஆகியோர் ‘வெய்போ’வில் சேர்ந்திருக்கின்றனர் என்றாலும், சமீப காலமாகவே சீனத்தின் முக்கியமான போட்டியாளராகச் சித்தரிக்கப்படும் இந்தியாவின் பிரதமர் அல்லவா மோடி? சீனர்கள் ‘வெய்போ’வில் மோடிக்கு உற்சாக வரவேற்பளித்தனர்.
நம்முடைய நோக்கங்கள் காலங்காலமாகத் தொடர்பவை. புதிதாக ஏதேனும் சேர்த்துக் கொள்ள வேண்டும் என்றால், சீனாவுடன் பொருளாதார உறவை மேலும் நெருக்கமாக்கிக்கொள்ள இந்தியா விரும்புகிறது. சீனத்தின் நோக்கங்களோ பெரிதானவை. அமெரிக்காவுக்கு மாற்றாக சீனா உருவெடுக்க விரும்பும் நாட்கள் இவை. சீனாவிடம் இருக்கும் வழக்கமான ஆயுதங்களும் அணு ஆயுதங்களும் அமெரிக்காவின் 60% படையைச் சமாளிக்கப் போதுமானவை என்றாலும் புவிப் பொருளாதார நிலையில் இதற்குச் சரியான மாற்றுத் திட்டமொன்றை சீனா வகுத்திருக்கிறது. ‘பட்டுப்பாதை பொருளாதாரப் பிரதேசம்’. இதன் மூலம் ஐரோப்பிய, ஆசிய நாடுகள் மற்றும் ரஷ்யாவின் பொருளாதாரங்களை இணைத்து விடலாம் என்று அது நம்பிக்கை கொண்டுள்ளது.
இதற்கு இணையாகப் புராதன காலத்துப் பட்டுப்பாதையை மீண்டும் புதுப்பித்து 21-வது நூற்றாண்டுக்கான கடல்வழி பட்டுப் பாதையாக்கும் நடவடிக்கைகளையும் அது தொடங்கியிருக்கிறது. இந்தத் திட்டங்களில் இந்தியாவும் கைகோக்க வேண்டும் என்பது சீனாவின் ஆசை. சீனாவுக்கு இந்தத் திட்டம் மிகவும் அவசியமானது. ஏனென்றால், அமெரிக்க ஆதிக்கத்தில் இருக்கும் மலாக்கா நீரிணை வழியாக சீனாவால் ஆதிக்கம் செலுத்த முடியாது. இந்தப் பாதை அதற்கு இணையானது. பி.சி.ஐ.எம். இணைப்பு பெற்றால் இந்தியாவின் வட கிழக்கு மாநிலங்களுக்கு மியான்மர், வங்கதேசம், சீனா ஆகிய நாடுகளுடன் எளிதில் தொடர்பு ஏற்பட்டுவிடும்.
எல்லாவற்றையும் தாண்டி இந்தத் திட்டத்தால் எல்லோரையும்விட சீனாவுக்கே அதிக லாபம் கிடைக்கும் என்பதைச் சொல்ல வேண்டியதில்லை. ஒரு முரண்பாடு என்ன வென்றால், சீனர்களின் நோக்கங்களில் முதன்மை யானவை எவையோ, அவையெல்லாம் நம்முடைய நோக்கங்களில் பின்வரிசையில் வருபவை. ஆக, இந்த ஒரே சந்திப்பில் இரு நாடுகளின் அத்தனை நோக்கங்களும் ஒருசேர நிறைவேறிவிடப்போவதில்லை என்பது ராஜதந்திரிகளுக்குத் தெரிந்த கதைதான். ஆனால், இது ஒரு தொடக்கப் புள்ளியாக அமைந்தால் அதுவே நல்ல முன்னேற்றம்தான் என்பதே அவர்களின் கணக்கு.
பயணத்தின் ஆரம்பத்திலிருந்து எல்லா வற்றிலுமே ஒரு தனிப்பட்ட உறவாடலையும் வித்தியாசமான அணுகுமுறையையும் காட்டியது இந்தியத் தரப்பு. மோடியின் சொந்த ஊரான அகமதாபாத்தில் ஜி ஜின்பிங்கின் இந்தியப் பயணம் தொடங்கியதைப் போலவே, மோடியின் சீனப் பயணம், ஜி ஜின்பிங்கின் சொந்த ஊரான ஜியான் நகரில் தொடங்கியது.
“ஜியானுக்கு வராதவர், சீனாவுக்கு வந்ததாக அர்த்தமாகாது” என்று சீனாவில் பொதுவாகக் கூறப்படுவது உண்டு. மோடியோ அங்கிருந்தே தன் சீனப் பயணத்தைத் தொடங்கினார். டாஜிங்ஷன் கோயிலுக்குச் சென்றபோது மோடியைக் காண வந்த கூட்டம் அவருக்கே புது உற்சாகத்தை அளித்திருக்க வேண்டும். பாதுகாப்பு வளையங்களை எல்லாம் மீறி அங்கு கூடியிருந்த மக்களின் வரவேற்பை ஏற்றுக்கொண்டார்.
மோடி எப்படி மரபுகளுக்கெல்லாம் விடை கொடுத்துக் கடந்த ஆண்டு ஜின்பிங்குக்கு வரவேற்பு அளித்தாரோ அதேபோல, ஜிங்பிங்கும் ஷான்ஸி விருந்தினர் மாளிகையில் வரவேற்பளித்தார். 90 நிமிஷங்கள் நடந்த முதல் கட்டப் பேச்சுவார்த்தை இதமான சூழலில் இருந்தது என்று வெளியுறவு அமைச்சக வட்டாரங்கள் தெரிவித்தாலும், எதையெல்லாம் பேச வேண்டுமோ, அதில் பெரும்பாலானவற்றை இருவரும் தொட்டார்கள். சூடான, நீண்ட காலப் பிரச்சினைகளையும்தான்.
மூன்று நாட்களுமே அப்படித்தான் போனது என்று சொல்லலாம். இறுதி நாள் மாலை இரு தரப்பிலிருந்தும் வெளியான அறிக்கைகளைப் பார்க்கும்போது ராஜதந்திரிகள் எதிர்பார்த்த இலக்கை மோடி - ஜிங்பிங் கூட்டணி தொட்டுவிட்டது என்றே சொல்லத் தோன்றுகிறது.
ஆமாம், மோடியின் சீனப் பயணம் இரு நாடுகளின் எல்லா நோக்கங்களையும் நிறைவேற்றிவிடவில்லை. ஆனால், ஒரு நல்ல தொடக்கப்புள்ளியை வைத்திருக்கிறது. முக்கியமாக சீனர்களின் மனதில் நாம் நட்புப் பூக்களைத் தூவியிருக்கிறோம்!