கைத்தறியைக் காத்திடுவோம்

கைத்தறியைக் காத்திடுவோம்
Updated on
3 min read

2 கோடி பேருக்கு வேலைவாய்ப்பைத் தரும் கைத்தறியை அழிக்கும் முயற்சி நடைபெறுகிறது.

மக்கள் கவனத்தை ஈர்க்காத தொழிற் பேரிடர் ஒன்று உண்டு. அது லட்சக் கணக்கான கிராம, ஊரக மக்களின் அடிப்படை வாழ்வுரிமை தொடர்பானது. அதாவது 1985-ம் ஆண்டின் கைத்தறி உற்பத்தி வகைகள் பாதுகாப்புச் சட்டத்தை முழுமையாக ரத்துசெய்வதென்று முடிவெடுக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் உள்ள கைத்தறி நெசவாளர்கள் பாரம்பரியமாக நெய்து உருவாக்கிவரும் கலைத்திறன் மிக்க ஆடைகள், குறிப்பாக சேலைகள் ஆகியவற்றில் வண்ணம், வடிவம், ரகம் முதலியவற்றை (காப்புரிமை) மீறல் செய்து அதே வகையான ஆடைகளை இயந்திர நெசவுகளில் கைத்தறியின் நகலாக உற்பத்திசெய்து குவித்துவருகின்றனர். ஏற்கெனவே நூல் கொள்முதல், வடிவமைப்பு, போட்டிச்சந்தை இவற்றால் பெரும் பாதிப்புக்குள்ளாகிப் போராடிவரும் கைத்தறி நெசவாளர்களுக்கு இத்தகைய காப்புரிமை மீறல் கடுமையான தொழில் நசுக்குதலை எதிர்கொள்ள வைத்துள்ளது.

திடீரென சிலர், தாஜ்மஹாலை இடித்துவிட்டு வேறொரு வடிவுடைய கட்டிடத்தை எழுப்ப முயற்சிப்பதாகத் தெரிய வந்தால், அவ்வாறு நடக்காது எனத் தெரிந்தாலும், அதை கோபங்கொண்டு எதிர்க்க அனைவருமே முன்வருவார்கள். ஆனால், அதே மாதிரி கலைநுட்பமும் கைத்திறனும் மிக்க மற்றொரு பாரம்பரியப் படைப்பான இந்திய கைத்தறித் தொழிலுக்கு நிஜமான அச்சுறுத்தல் ஏற்பட்டிருப்பது நம்மில் பலருக்கும் தெரியவில்லை. இந்தியாவின் தொழில் வளர்ச்சி மற்றும் முதலீடுகளில் கைத்தறி நெசவாளர்களுக்கு குறிப்பிட்ட பங்குண்டு.

ஓரங்கட்டப்பட்ட கைத்தறிப் பிரதிநிதிகள்

கைத்தறித் தொழில் பாதுகாப்புச் சட்டத்தை செயலிழக்கச் செய்திட விசைத்தறி வணிகக்கூட்டம் வெற்றிகரமாகச் செயல்பட்டுவந்துள்ளது. ஆடைகள் உற்பத்தி, விற்பனை தொடர்பான அனைத்து கலந்தாலோசனைகளும் மிகப் பெருமளவில் நடந்தபோது அவற்றில் கைத்தறித் துறைப் பிரதிநிதிகளின் பங்களிப்பு இல்லாமல் பார்த்துக் கொண்டார்கள். கைத்தறித் துறை சார்ந்த வினாக்களும் ஐயப்பாடுகளும் பதில் கூறி விளக்கப்படாமலேயே அந்தக் கூட்டங்கள் நிறைவு பெற்றன. பாஜகவின் மக்களவை உறுப்பினர் கிரண் கெர் குறுக்கிட்டபோது மத்திய ஜவுளித் துறை அமைச்சர் கைத்தறி பாதுகாப்புச் சட்டம் தொடர்ந்து அமலில் இருக்கும் என்று உறுதி அளித்துள்ளார். இருப்பினும் அதனைத் தொடர்ந்து வேறு எவ்வித உத்தரவாதமும் அரசு தரப்பிலிருந்து முன்வைக்கப்படவில்லை.

இதற்கிடையே ‘கைத்தறியைக் காத்திடுவோம் - கைத் தறிப் பாதுகாப்புச் சட்டத்தை நீக்காமல் தடுத்திடுவோம்’ என்று சுமார் 17,000 கிராமப்புற இளைஞர்கள் கையெழுத் திட்டு நெசவுக் கலையைப் பாதுகாக்க சமூக ஊடகங்கள் வாயிலாக எடுத்துள்ள நடவடிக்கை கைத்தறிக்கு ஏற்பட்டுள்ள அச்சுறுத்தலை நமக்கு உணர்த்துகிறது.

“நாம் விறகு அடுப்பில் சமைத்த பழமையான முறையிலிருந்து நவீன எரிவாயு, மின் அடுப்புகளில் சமைக்கும் நிலைக்கு முன்னேறியுள்ளோம். விஞ்ஞான மாற்றங்களை ஏற்றுக்கொள்ளாமல் தொழில்நுட்ப வளர்ச்சியைப் பின்பற்றாமல் தாத்தா-பாட்டி காலத்தின் பழைய முறைகளை மட்டுமே ஏற்றுக்கொண்டிருந்தால் பின்னடைவைச் சந்தித்திருப்போம். நமது குழந்தைகளே நம்மை எள்ளி நகையாடுவார்கள்” என விசைத்தறி உற்பத்தியாளர்கள் வாதிடுகின்றனர்.

உண்மை என்ன?

மற்றொருவர் “நுகர்வோர், விசைத்தறி ஆடைகளையே விரும்பி கேட்கின்றனர்” என விளக்கமளிக்கிறார். ஆனால், அவரது வாதம் உண்மையல்ல. சந்தைகள், கிராமங்களிலிருந்து நகரங்களை நோக்கி விரிவடையலாம். இருந்தபோதிலும் கைத்தறியின் தேவை அதிகரித்துள்ளது. நெசவாளர்கள் நூல் கொள்முதல், கடன் வசதி, உற்பத்தி யைச் சந்தைப்படுத்துதல் என பல்வேறு நிலைகளில் இன்னல்களை எதிர்கொண்டபோதிலும் கைத்தறித் துறை குறிப்பிட்ட அளவு வளர்ச்சியைப் பெற்றுள்ளது.

கடந்த 5 ஆண்டுகளில் கைத்தறி ஆடைகளின் தேவை குறிப்பிடத் தக்க அளவு அதிகரித்துள்ளது. அண்மைக் கால கைத்தறி ஆடைக் கண்காட்சிகள் குறிப்பாக தஸ்த்கர், சனத்கடா, டெல்லி ஹாட் உள்ளிட்ட பல அமைப்புகளின் சார்பில் நடத்தப்பட்டுவரும் கைநெசவு ஆடைகள் விற்பனைக் கண்காட்சிகள் மீண்டும் கைத்தறி இம்மண்ணில் காலூன்ற வழிவகுத்துள்ளன என்பதற்கு அரசின் கைவினைக் குழுமப் பதிவுகளே சாட்சியாகும்.

பிஹார் மாநிலத்தில் மீட்டெடுக்கப்பட்ட கொத்தடிமைகள் இன்று கைத்தறித் தொழிலில் ஈடுபட்டு ஆண்டுதோறும் பல கோடி மதிப்பிலான ‘துசார்’ வகை சேலைகளை விற்பனை செய்துவருகின்றனர். இவ்வகை ‘துசார்’ புடவைகளை உற்பத்தி செய்வதில் சவாலாக இருப்பது முறையான பட்டுக் கூடுகள் தொடர்ந்து கிடைக்காததுதான்.

கைத்தறி ஆடை வடிவமைப்பில் புகழ் பெற்ற கலைஞர்களான ரிது குமார், ஆப்ரஹாம் தாக்கூர் மற்றும் சஞ்சைகார் இவர்களுடன் அனோகி, பந்தீஸ், பைலு போன்ற நிறுவனங்கள் மிகப் பெரிய விற்பனையகங்களை வெற்றிகரமாக நடத்திவருவதே கைத்தறி நெசவுத் தொழிலை வாழும் கலையாக மாற்றியுள்ளது.

2 கோடி வேலைவாய்ப்புகள்!

‘ஃபேப் இந்தியா’ என்ற முன்னணி நிறுவனம் 11.2 மில்லியன் மீட்டர் கைத்தறித் துணி வகைகளை மாதம் ஒன்றுக்கு வாங்குகிறது. இதன் மதிப்பு ரூ. 112 கோடி. இதனால் ஒரு லட்சம் மனித வேலை நாட்களுக்கான வேலை கிடைக்கப்பெற்று 86,000 வேலைவாய்ப்புகள் புதிதாக உருவாகியுள்ளன. விசைத்தறியில் 24 லட்சம் மீட்டர் துணி வகைகளைத் தயாரிக்க வெறும் 34 வேலை வாய்ப்புகளே உருவாகின்றன என்ற புள்ளிவிவரங்களை ஒப்பிட்டுப் பார்த்தால் கைத்தறியால் பெருகிவரும் வேலை வாய்ப்புகள் தெளிவாகத் தெரிய வரும். கைத்தறி ஆடைகள் உற்பத்தி தொடக்க நிலையிலிருந்து விற்பனை நிலை வரை அதாவது நெசவு நெய்வதற்கு முந்தைய நிலையிலிருந்து நெய்து முடித்து அடுத்த நிலை வரை சுமார் 2 கோடி உழைப்பாளர்கள் பங்கேற்றுப் பயன் பெற்றுவருகின்றனர். விஞ்ஞானப் புரட்சியாகக் கருதப்படும் தகவல் தொழில்நுட்பத் துறையில் மொத்தமே 30 லட்சம் தொழிற்பயனாளிகள் மட்டுமே உள்ளனர் என்ற உண்மையுடன் இக்கூற்றை ஒப்பிட்டுப் பார்த்தால் கைத்தறித் தொழிலின் இன்றியமையாமை விளங்கும்.

உலகளவில் இயற்கைக்கு ஊறு விளைவிக்காத, பல்வேறு வண்ண, வடிவங்களில் கலைநயம் மிளிரும் கைத்தறிப் படைப்புகளை இந்தியா வழங்கிவருவதால் உலக நுகர்வோர் இந்திய கைத்தறிச் சந்தையை எதிர்நோக்கியுள்ளனர். உண்மை நிலை இவ்வாறிருக்க கைத்தறி நெசவுத் துறையில் முதலீட்டைப் பெருக்கு வதற்குப் பதிலாக அந்த பெருமைமிகு துறையை அழிக்க நினைப்பது புத்திசாலித்தனம் அல்ல.

இத்தனைக்கும் மேலாக தற்போதுள்ள கைத்தறிப் பாதுகாப்புச்சட்டம் வலுவிழந்த சொத்தைப் பற்களைப் போல்தான் இருக்கிறது. மிக அரிதாக மட்டுமே பயன்படுத்தப்பட்டுள்ளது. இதனைச் செயலிழக்கச் செய்து ரத்துசெய்வதற்கு மாறாக வலிமைமிக்க கூரிய பற்களுடன் கூடிய சட்டமாக இது திருத்தம் செய்யப்பட வேண்டும்.

எனக்கு எப்படிக் குளிரும்?

‘தஸ்த்கர்’ ஆடை அங்காடிக்கு கைத்தறி ஆடை அணிந்து வந்த 80 வயது மணிப்பூர் மூதாட்டியிடம் “இந்த கைத்தறி ஆடைகளைக் குளிர்காலத்தில் அணியும்போது குளிராக இருக்காதா?” என்று கேட்டபோது “இதை என் கைகளா லேயே நான் நெய்தேன். என் தாயும் என் சகோதரிகளும் என்னுடன் சேர்ந்து நெய்தனர். என் தாய் அவரது தாயாரிடமிருந்தும், என் பாட்டி அவரது தாயாரிடமிருந்தும் வழிவழியாகக் கற்றுத்தேர்ந்ததுதான் இந்த நெசவுக் கலை. பல கைகளின் சூடு இதில் ஏறியிருக்கிறது. என் குடும்பத்தினரின் பல தலைமுறைகளைச் சேர்ந்த பெண்கள் இந்த ஆடையின் வடிவில் என்னைப் போர்த்தியிருக்கின்றனர். எனக்கு எப்படிக் குளிரும்?” என்று அவர் கேட்டார். கைத்தறிக் கலை, காலத்தை வென்று வாழ்ந்து வளர்ந்து வரும் முறையை இது விளக்குகிறது. இந்தியாவின் கைத்தறி நெசவுத் தொழில், வளமான உலகப் பொருளாதார வாய்ப்புக் களம் மட்டுமல்ல அது நமது பண்பாட்டின் அடையாளம்.

- லைலா தையாப்ஜி, இந்தியக் கைவினைத் தொழில்களை ஆதரிக்கும் ‘தஸ்த்கர்’ தொண்டுநிறுவனத்தை நிறுவியவர்.

© ‘தி இந்து’ (ஆங்கிலம்), தமிழில் : குடந்தை சத்யா, கே. வெங்கடேஷ் பாபு

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in