வரலாற்றின் மாபெரும் பிரச்சாரம்!

வரலாற்றின் மாபெரும் பிரச்சாரம்!
Updated on
2 min read

மோடியின் வெற்றியை ஆயிரம் பேர் ஆயிரம் விதமாக அழைக்கலாம்; ஆயிரமாயிரம் காரணங்களையும் கூறலாம். நான் இதை மக்கள்தொடர்புக் கலைக்குக் கிடைத்த வெற்றி என்று அழைக்க விரும்புகிறேன். நவீன அரசியல் வரலாற்றில், 2008 அமெரிக்கப் பொதுத் தேர்தலில் பாரம்பரியமான எல்லாப் பிரச்சார வழிமுறைகளுடனும் நவீனத் தொழில்நுட்பத்தின் அத்தனைக் கூறுகளையும் உள்ளடக்கி 'மாற்றம்' என்ற கோஷத்துடன் பராக் ஒபாமா கையாண்ட பிரச்சாரத்தைப் பலரும் மக்கள்தொடர்புக் கலைக்குக் கிடைத்த வெற்றியாகக் குறிப்பிடுவது உண்டு.

2014 இந்தியப் பொதுத் தேர்தலில் மோடி கையாண்ட பிரச்சாரத்துக்கு ஒபாமாவின் பிரச்சாரம்தான் முன்னோடி என்றாலும், மோடியின் பிரச்சாரம் அதைக் காட்டிலும் பிரம்மாண்டமானது. ஒருவகையில், வரலாற்றின் மிகப் பெரிய பிரச்சாரம் இது.

3 லட்சம் கி.மீ. பயணம்

இந்தியாவின் முதல் பொதுத் தேர்தலில், நேரு மேற்கொண்ட பிரச்சாரத்தை “அவர் சுற்றுப்பயணத்தில் தூங்கிய நேரத்தைவிடப் பயணம் செய்த நேரம் அதிகம்; பயணம் செய்த நேரத்தைவிடப் பேசிய நேரம் அதிகம்” என்பார்கள். அப்போது 40 ஆயிரம் கி.மீ. பயணம் செய்து, 300 பொதுக்கூட்டங்களில் பேசினார் நேரு. இதில் 29 ஆயிரம் கி.மீ. பயணம் வான்வழிப் பயணம்.

பிரதமர் பதவிக்கான வேட்பாளராகத் தன்னை முன்னிறுத்திக்கொள்ளும் மோடியின் செயல்பாடுகள் சில ஆண்டுகளுக்கு முன்பே தொடங்கிவிட்டன என்றாலும், பா.ஜ.க. பிரதமர் வேட்பாளராக அவர் அறிவிக்கப்பட்டதற்குப் பிந்தைய பிரச்சாரமே பிரம்மாண்டமானதுதான். 2013 செப்டம்பர் 15 அன்று ஹரியானாவின் ரெவாரியில் முன்னாள் ராணுவ வீரர்கள் பேரணியில் தொடங்கிய மோடியின் பிரச்சாரப் பயணம், 2014 மே 10 அன்று உத்தரப் பிரதேசத்தின் பலியாவில் முடிந்தது. மோடியின் பெரும்பாலான பயணங்கள் வான்வழிப் பயணங்கள் என்றாலும், இந்த 8 மாதக் காலத்தில் அவர் 3 லட்சம் கி.மீ. பயணித்திருக்கிறார்.

437 பொதுக்கூட்டங்களில் நேரடியாக அவர் பேசியிருக்கிறார். தவிர, 3டி தொழில்நுட்ப உதவியுடன் நடைபெற்ற 1,350 பேரணிகளிலும் விடியோ கான்ஃபிரன்சிங் தொழில்நுட்ப உதவியுடன் சுமார் 4,000 டீக்கடை விவாதங்களிலும் அவர் பங்கேற்றிருக்கிறார். இன்னும் தொலைக்காட்சிப் பேட்டிகள், ஊடகங்கள் நடத்திய விவாதங்களையும் சேர்த்தால் மொத்தம் 5,385 தேர்தல் நிகழ்ச்சிகளில் அவர் பங்கேற்றிருக்கிறார். இந்த நிகழ்ச்சிகளின் வாயிலாக இந்தக் குறிப்பிட்ட காலகட்டத்தில் 5 கோடி முதல் 10 கோடி வரையிலான மக்களை அவர் சென்றடைந்திருப்பதாகச் சொல்கிறது அவர் சார்ந்திருக்கும் பா.ஜ.க. இந்த மதிப்பீட்டை அதீதமானது என்று சொல்ல முடியாது.

பிரச்சாரகர்களான வலைஞர்கள்

இந்தத் தேர்தலில் மோடியின் பிரச்சாரங்களை அமித் ஷாக்கள் மேடைக்கு முன்னின்றும், கைலாஷ்நாதன்கள் மேடைக்குப் பின்னின்றும் செய்தார்கள் என்றால், பிரஷாந்த் கிஷோர்கள் கணினிக்கு முன்னின்று செய்தார்கள். சமூக வலைதளங்களைக் கையாள்வதில் மோடி துல்லியமாகச் செயல்பட்டார். ஃபேஸ்புக்கில் 1.47 கோடி பேரும் ட்விட்டரில் 40.13 லட்சம் பேரையும் அவரைப் பின்தொடர்கிறார்கள்.

வலைஞர்களின் பலத்தை எண்ணிக்கையைக் கொண்டு எடைபோடக் கூடாது. அவர்கள் ஒருவகையில், கருத்துகளை உருவாக்குபவர்கள். சரியாகச் சொன்னால், இந்தத் தேர்தலின் விவாதப்பொருள் உருவாக்கப்பட்ட இடம் சமூக வலைதளங்கள்தான். ஊடகங்கள் சமூகவலை தளங்களின் போக்கையும், மக்கள் ஊடகங்களின் போக்கையும் பின்பற்றுபவர்கள் ஆனார்கள்.

ரூ.5,000 கோடி விளம்பரம்

இந்தத் தேர்தலில் பா.ஜ.க-வின் உத்தேசச் செலவு ரூ. 5,000 கோடி என்கிறார்கள். சிலர், விளம்பரத்துக்காக மட்டுமே அக்கட்சி செலவிட்ட தொகை ரூ.5,000 கோடி என்கிறார்கள். சுதந்திர இந்தியாவின் முதல் பொதுத் தேர்தலுக்கான மொத்த செலவுடன் ஒப்பிட்டால், இது 476 மடங்கு அதிகம். இந்திய ஜனநாயகம் பணநாயகமாக்கப்படுவது நாம் எதிர்கொள்ளும் மிகப் பெரிய சவால். எனினும், தேர்தல் முடிவுகளைப் பணம் மட்டுமே தீர்மானிப்பதில்லை.

தவிர, நாட்டின் பிரதானக் கட்சியினர் எல்லோருமே இந்த விஷயத்தில் ‘சம பலம்' கொண்டவர்கள் ஆகிவிட்ட நிலையில், கடும் உழைப்பும் உத்திகளுமே தேர்தல் முடிவுகளைப் பொறுத்த அளவில் முக்கியப் பங்காற்றுகின்றன. அந்த வகையில், மோடியின் வரலாற்றுப் பிரச்சாரத்துடன் ராகுல் காந்தியையோ, ஏனையோரையோ ஒப்பிட்டால், அவர்கள் மோடிக்குப் பக்கத்தில் அல்ல, தூரத்தில்கூட நிற்கவில்லை என்பதே உண்மை!

- சமஸ்,
தொடர்புக்கு: samas@kslmedia.in

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in