Last Updated : 25 Apr, 2015 08:03 AM

Published : 25 Apr 2015 08:03 AM
Last Updated : 25 Apr 2015 08:03 AM

இலங்கை - சீனா - இந்தியா

இலங்கையால் சீனாவைப் புறக்கணிக்க முடியாது; இந்தியாவுக்கும் இலங்கையுடனான அணுக்கம் அவசியம்.

மார்ச் மாத இறுதியில் இலங்கையின் புதிய அதிபர் மைத்ரிபால சிறிசேனா சீனாவுக்கு வருகை தந்தார். அவருக்கு பெய்ஜிங் மக்கள் மாமன்றத்தில் சிறப்பான வரவேற்பு அளித்தார் சீன அதிபர் ஜி ஜின்பிங். கடந்த செப்டம்பர் மாதம் மகிந்த ராஜபக்சவின் ஆட்சியில் ‘கொழும்பு துறைமுக நகரம்’ எனும் திட்டத்தைத் தன் சொந்தக் கரங்களால் தொடங்கி வைத்திருந்தார் சீன அதிபர். அப்போது இன்னும் நான்கு மாதங்களில் இலங்கையில் ஆட்சி மாறும் என்றும் புதிய அதிபர் இந்தத் திட்டத்தை நிறுத்தி வைப்பார் என்றும் அவர் எதிர்பார்த்திருக்க மாட்டார். ஆனாலும், தலைவர்களின் சந்திப்பு சுமுகமாகவே நடந்தது.

சீனாவின் திட்டங்கள்

2009 இறுதிப் போரில் நடந்த போர்க்குற்றங்கள் விசாரிக்கப்பட வேண்டும் என்று அமெரிக்காவும் ஐரோப்பிய நாடுகளும் கோரிவந்தன. அதைச் செய்ய மறுத்த இலங்கையை நோக்கித் தங்கள் பணப் பெட்டிகளைத் திறக்க மறுத்தன. அப்போது சீனா இலங்கைக்கு உதவ முன்வந்தது . சீனா திட்டமிட்டுவரும் புதிய கடல் வழிப்பாதை மத்தியக் கிழக்கிலிருந்து இலங்கை, மியான்மர் வழியாக சீனா சென்றடையும். கடந்த ஐந்து ஆண்டுகளில் இலங்கைக்குக் கடனாகவும் முதலீடாகவும் கொடையாகவும் சீனா ரூ.31,000கோடி வழங்கியிருக்கிறது. இலங்கையின் புதிய உள்கட்டமைப்புப் பணிகளில் மூன்றில் இரண்டை சீனா நிறைவேற்றிவருகிறது.

அம்பாந்தோட்டை ராஜபக்சவின் சொந்த மாவட்டம். கொழும்பிலிருந்து 240 கி.மீ. தொலைவில் இருக்கிறது. இங்கே ரூ. 2,300 கோடி செலவில் சீன நிறுவனங்களால் நிர்மாணிக்கப்படும் துறைமுகத்தின் முதல் கட்டப் பணிகள் முடிந்துவிட்டன. சிங்கப்பூருக்குப் போட்டியாக இருக்கும் என்று சொல்லப்பட்ட இந்தத் துறைமுகத்தில் இப்போது கப்பல்களே இல்லை. இலங்கைத் துறைமுகக் கழகத்தின் தலைவர் லக்தாஸ் பணகொடா, “திரிகோணமலை, காலி போன்றவை இயற்கைத் துறைமுகங்கள், அவற்றை மேம்படுத்தியிருக்க வேண்டும். இந்தத் துறைமுகம் தேவையில்லை” என்கிறார்.

மாகம்புர மகிந்த ராஜபக்ச துறைமுகத்துக்கு - அம்பாந் தோட்டை துறைமுகத்துக்கு அதுதான் பெயர் - வெகு அருகில் இருக்கிறது மத்தல ராஜபக்ச பன்னாட்டு விமான நிலையம். ரூ.1,300 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்ட நிலையம் வெறிச்சோடிக் கிடக்கிறது. தேர்தல் முடிவுகள் வெளியான கையோடு, இந்த நிலையத்துக்கு நஷ்டத்தில் அனுப்பி வந்த விமானங்களை நிறுத்திவிட்டது இலங்கை விமான சேவை. இதற்கு அருகே கட்டப்பட்டிருக்கும் மகிந்த ராஜபக்ச சர்வதேச கிரிக்கெட் ஸ்டேடியமும் ஆளரவம் இல்லாமல்தான் இருக்கிறது.

கொழும்பில் கட்டப்பட்டுவரும் ‘தாமரைக் கோபுரம்’ஓர் அடுக்குமாடிக் கட்டிடம். கட்டி முடிக்கப்படும்போது 1,150 அடி உயரத்தில் தெற்காசியாவின் அதி உயரமான கட்டிடமாக இருக்கும். தற்போது சர்ச்சைக்கு உள்ளாகியிருக்கும் ‘கொழும்பு துறைமுக நகர’த் திட்டம் மற்ற திட்டங்களிலிருந்து மாறுபட்டது. ரூ.8,700 கோடி மதிப்பிலான இத்திட்டத்தை சீன அரசின் நிறுவனம் ஒன்று தனது முதலீட்டிலியே நிர்மாணிக்கும். இதற்காக 580 ஏக்கர் நிலப்பரப்பு கடலைத் தூர்த்து உருவாக்கப்படும். இதில் பாதிக்கு மேற்பட்ட நிலம் 99 வருடக் குத்தகையில் நிறுவனத்துக்கே வழங்கப்படும். இங்கே வணிக வளாகங்கள், கோல்ப் தளங்கள், சொகுசு மாளிகைகள் போன்றவை கட்டப்படும். சீன நிறுவனத்துக்கு கொழும்புத் துறைமுகத்துக்கு அருகே நிலம் வழங்குவது குறித்து இந்தியா கவலை தெரிவித்தது. இப்போது இந்தத் திட்டம், சுற்றுச்சூழலுக்கும் இலங்கையின் இறையாண்மைக்கும் கேடுவிளைவிக்கும் என்று உள்நாட்டிலேயே விமர்சிக்கப்படுகிறது.

குற்றச்சாட்டுகள்

மற்ற திட்டங்கள் மீதும் இப்போது குற்றம்சாட்டப் படுகின்றன. முதலீடு அதிகம், பயன்பாடு இல்லை, வட்டி அதிகம், முறையான ஒப்புதல்கள் இல்லை, ஒப்பந்தங்கள் சமனற்றவை, ஊழல் மிகுந்தவை...

ஆனால், தனது ஆட்சிக் காலத்தில் இப்படியான திட்டங்களை அடுத்தடுத்து நிறைவேற்றுவதில் ராஜபக்சவுக்குச் சிரமம் இருக்கவில்லை. ஒரு சகோதரர் நிதி அமைச்சர், ஒரு சகோதரர் ராணுவ அமைச்சர், ஒரு சகோதரர் சபாநாயகர், புதல்வர்களும் உறவினர்களும் முக்கியப் பதவிகளில் இருந்தனர். தேசத்தின் அதிகார மையமாக அவர் விளங்கினார். ஒருவர் இரண்டு முறைக்கு மேல் அதிபராக இருக்கக் கூடாது எனும் அரசியல் சட்டப்பிரிவைத் திருத்தி, மூன்றாவது முறை போட்டியிட்டார். அப்போது தனது சகாவான சிறிசேனாவே எதிர்க் கட்சிகளுடன் கூட்டணி அமைத்துத் தனக்கு எதிராகப் போட்டியிடுவார் என்று அவர் எதிர் பார்க்கவில்லை.

தேர்தலின்போது ராஜபக்சவின் குடும்ப அரசியல், யதேச்சதிகாரம், ஊழல் முதலியவற்றை எடுத்துக்காட்ட சீனாவின் திட்டங்கள் பயன்படுத்தப்பட்டன. ‘கொழும்பு துறைமுக நகர’த் திட்டம் நிறுத்தப்படும் என்றும் பிரச்சாரம் செய்யப்பட்டது. கூட்டணி வெற்றி பெற்றது, சிறிசேனா அதிபரானார். ஆனால், மேற்படித் திட்டத்தை புதிய அரசு முற்றிலுமாக நிறுத்திவிடவில்லை. மாறாக, இடை நிறுத்தியிருக்கிறது. இன்னும் சில திட்டங்களும் பரிசீலனை செய்யப்படும் என்றும் அறிவித்திருக்கிறது.

ராஜபக்சவின் மறுபிரவேசம்

ராஜபக்ச மார்ச் மத்தியில் ஹாங்காங் நாளிதழ் ‘சவுத் சைனா மார்னிங் போஸ்ட்’டுக்கு அளித்த பிரத்யேக நேர் காணலில், சீனாவின் திட்டங்களை நிறுத்திவைப்பது இலங்கையின் நலனுக்கு உகந்ததில்லை என்றார். தனக்கு எதிராக இந்தியாவின் உளவு நிறுவனமான ‘ரா’ செயல்பட்டது என்று அவர் பகிரங்கமாகக் குற்றம் சாட்டியதும் அந்த நேர்காணலில்தான்.

ராஜபக்சவைக் காண மக்கள் வரிசையில் காத்திருந்ததாக எழுதுகிறார் ஹாங்காங் செய்தியாளர். ராஜபக்சவுக்கு வேறு திட்டங்கள் இருக்கின்றன. சிறிசேனா நாடாளுமன்றத்தைக் கலைக்கப்போகிறார். ஜூலை மாதம் தேர்தல் நடக்கலாம். இலங்கையின் அரசியல் சட்டம் வித்தியாசமானது. அதிபர் தேர்தல் தனிநபர்களுக்கு இடையிலானது. ராஜபக்சவும் சிறிசேனாவும் ஒரே கட்சியை-இலங்கை சுதந்திரக் கட்சி-சேர்ந்தவர்கள். என்றாலும், ஒருவரை ஒருவர் எதிர்த்துப் போட்டியிட முடிந்தது. நாடாளுமன்றத் தேர்தலோ கட்சி அடிப்படையிலானது. இப்போதைய பிரதமரும் கூட்டாளியுமான ரணில் விக்ரமசிங்கேவின் ஐக்கிய தேசியக் கட்சியை அதிபர் சிறிசேனாவின் இலங்கை சுதந்திரக் கட்சி எதிர்கொள்ள வேண்டும். ராஜபக்சவுக்கு சிங்களர்கள் மத்தியிலும் சொந்தக் கட்சியிலும் ஆதரவு இருக்கிறது. அவர் பிரதமராகப் போட்டியிட வாய்ப்புகள் உள்ளன. அதற்குள் கட்சிகள் உடையலாம், கூட்டணிகள் மாறலாம், ஊழல் குற்றச்சாட்டுகள் வழக்குகளாகலாம். ஆனால், ராஜபக்ச இலங்கை அரசியலின் முக்கியக் கண்ணியாக இருப்பார்.

இலங்கை சீனா - இந்தியா

இந்தச் சூழலில்தான் சிறிசேனாவை அழைத்து உரை யாடினார் சீன அதிபர். சந்திப்பைத் தொடர்ந்து வெளியான கூட்டறிக்கைகள் அதிகாரிகளால் தயாரிக்கப்பட்டவை; பஞ்சசீலம், ஒத்துழைப்பு, கட்டற்ற வணிகம், கலாச்சாரப் பரிவர்த்தனை போன்ற வழமையான வார்த்தைகளால் நிரம்பியவை. நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் சீனத் திட்டங்கள்குறித்துத் தலைவர்கள் என்ன பேசினார்கள்?

சிறிசேனாவுடன் சந்திப்பில் பங்கேற்ற நிதியமைச்சர் ரவி கருணநாயக்க, இரண்டு நாட்கள் கழித்து ஒரு கருத்தரங்கில் கலந்துகொள்ள ஹாங்காங் வந்தார். சந்திப்புகுறித்துக் கேட்ட நிருபர்களிடம் அமைச்சர் இவ்வாறு சொன்னார்: “சீன அதிபர் எங்களை வியப் படைய வைத்துவிட்டார். நமது பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதில் நாம் இந்தியாவையும் சேர்த்துக்கொள்ள வேண்டும் என்று கருத்துத் தெரிவித்தார். இரண்டு தலை வர்களும் அதற்கு ஒப்புக்கொண்டனர்”. இந்தியாவின் பாதுகாப்புக் கவலைகளைக் களைந்தால் தமது திட்டங்களை முன்னெடுத்துச் செல்வது எளிதாக இருக்கும் என்று சீனா கருதியிருக்கலாம்.

சிறிசேனாவை இந்தியாவின் நண்பராகவும் சீனாவின் எதிர்ப்பாளராகவும் சில ஊடகங்கள் சித்தரிக்கின்றன. எனில், செய்திகள் சொல்வது என்ன? இலங்கையால் சீனாவைப் புறக்கணிக்க முடியாது; அது அவர்கள் நோக்கமுமில்லை. சீனாவுக்கும் இலங்கை வழியிலான கடல் வணிகம் முக்கியமானது. இந்தியாவுக்கும் இலங்கையுடனான அணுக்கம் அவசியம். சிறிசேனா என்ன சொல்கிறார்? “இந்தியா எங்களுக்கு ஒரு நல்ல அண்டை நாடு. சீனா எங்களுக்கு ஒரு நல்ல நண்பன்!”

- மு. இராமனாதன், ஹாங்காங்கின் பதிவுபெற்ற பொறியாளர்.

தொடர்புக்கு: mu.ramanathan@gmail.com


Sign up to receive our newsletter in your inbox every day!

 
x