Last Updated : 23 Apr, 2015 08:48 AM

 

Published : 23 Apr 2015 08:48 AM
Last Updated : 23 Apr 2015 08:48 AM

கிராஸ், கலியானோ: போருக்கு எதிரான இரு குரல்கள்

நாவலாசிரியராக, கவிஞராக, இலக்கிய விமர்சகராக, வாய்ப்பு கிடைக்கும்போது சிற்பக் கலையிலும் சித்திரம் வரைவதிலும் ஈடுபட்டவராக, ஜாஸ் இசைப் பிரியராக, நவ-தாராளவாதப் பொருளாதாரக் கொள்கையை எதிர்த்துப் பிரச்சாரத்தில் ஈடுபட்டவராக, சுற்றுச்சூழல் கேடுகளுக்கு எதிராக உரக்கப் பேசுபவராக வாழ்ந்தவர் குந்தர் கிராஸ். உருகுவேவில் பிறந்து, ஒட்டுமொத்த லத்தீன் அமெரிக்காவின் வலுவான போர் எதிர்ப்புக் குரல்களில் ஒன்றாகத் திகழ்ந்தவர் எட்வர்டோ கலியோனா. இருவரின் மறைவாலும் உறுதியான போர் எதிர்ப்பாளர்கள் இருவரை இந்த உலகம் இழந்துவிட்டது.

நாஜிகள் இழைத்த பெருங்கேடுகளிலிருந்து ஜெர்மானிய சமுதாயம் இன்னும் விடுபடவில்லை என்று கருதியவர்களில் கிராஸும் ஒருவர். தமது தலைமுறையைச் சேர்ந்தவர்கள், நாஜிகளின் வளர்ச்சிக்கு எவ்வாறு உணர்வுபூர்வமாக உதவினார்கள் அல்லது கண்டும் காணாததுபோல் இருந்தார்கள் என்பதைத் தன் படைப்புகள் மூலம் வெளிக்கொணர்ந்தவர் கிராஸ். “எந்தவொரு உன்னத லட்சியத்துக்காக நடத்தப்படும் போரிலும்கூட, மனிதத்தன்மையை அழிக்கச் செய்யும் அம்சம் இருக்கவே செய்யும்” என்றார் கிராஸ். கருத்துச் சுதந்திரமும் மனித உரிமைகளும் ஒடுக்கப்பட்டபோதெல்லாம் உரக்கக் குரல்கொடுத்த அவர், அணு ஆயுதக் குவிப்புக்கும் ஆயுதப் போட்டிக்கும் எதிரான கருத்துகளைப் பிரச்சாரம் செய்தார்.

நாஜிப் படையில் கிராஸ்

தமது 79-ம் வயதில் முதலில் ஒரு ஜெர்மானியப் பத்திரி கைக்குக் கொடுத்த நேர்காணலிலும், பின்னர் அடுக்கடுக்கான தமது நினைவுகளை விரிவாக எடுத்துரைக்கும் ‘பீலிங் தி ஆனியன்’ (வெங்காயத்தை உரித்தல்) எனும் சுயசரிதையிலும் தமது 17-ம் வயதில் நாஜிகளின் ‘வாஃபென் எஸ்.எஸ்.’ என்னும் கொலைப் படைப் பிரிவில் சேர்ந்து 18 வயது நெருங்கும் வரை அதில் பணிபுரிந்திருந்ததைப் பதிவுசெய்தார்.

நாஜிகளின் அதீத தேசியவாதத்தை விமர்சனபூர்வமாகப் பகுத்தாயும் மனப்பக்குவமோ சிந்தனையாற்றலோ பதின்வயது கிராஸுக்கு இருந்திருக்க முடியாது. தவிர, 1945-லிருந்தே அமெரிக்க ராணுவ ஆவணங்களில் காணப்படும் இந்தத் தகவல் பிரெஞ்சு நாளேடான ‘ல ஃபிகரோ’வால் சில ஆண்டுகளுக்கு முன்பே வெளியிடப்பட்டதுதான். ஆனாலும், ஜெர்மனியிலும் பிற நாடுகளிலுமுள்ள வலதுசாரி சக்திகளுக்கு கிராஸையும் அவரது கொள்கைகளையும் அவதூறுசெய்ய இந்தத் தகவல் பெரிய துருப்புச் சீட்டாகப் பயன்பட்டது. “கிராஸ் 17-ம் வயதிலிருந்தே உணர்வுபூர்வமான நாஜியாக இருந்திருக்கிறார், தனது புத்தகங்களின் விற்பனைக்குப் பாதிப்பு ஏற்படாமல் செய்யவே இந்த விஷயத்தை அவர் மூடி மறைத்திருக்கிறார்” என்றெல்லாம் பிரச்சாரத்தை முடுக்கிவிட்டார்கள். இந்தப் பிரசாரத்தில் வலதுசாரி சக்திகளோடு அமெரிக்க, ஜெர்மானிய ராணுவ ஆக்கிரமிப்புகளை ஆதரிக்கும் பசுமைக் கட்சி, ஜெர் மன் இடது கட்சி ஆகியனவும் வெறித்தனமாகப் பங்கேற்றன.

இதற்குக் காரணம் இல்லாமல் இல்லை. இராக், ஆஃப்கன் ஆகியவற்றில் அமெரிக்காவின் ராணுவ ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளில் இன்றைய ஜெர்மன் அரசாங்கம் மேன்மேலும் பங்கேற்பது நாஜிகளின் அரசியல், ராணுவவாதத்துக்கு ஒப்பானது என்று கூறிவந்தவர் கிராஸ். மேலும், 1990-ல் மேற்கு ஜெர்மனியுடன் இணைக்கப்பட்ட கிழக்கு ஜெர்மனியைச் சேர்ந்த ஆயிரக் கணக்கான ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் முதலியோரைக் கம்யூனிஸ்ட் கட்சியுடன் தொடர்புடையவர்கள் என்று குற்றம் சாட்டி அவர்களது வேலை வாய்ப்புகளைப் பறித்தல், விசாரணைக்கு உட்படுத்துதல் போன்றவற்றை ஜெர்மன் அரசாங்கம் செய்தது நாஜிகளின் ஒடுக்குமுறையைப் போன்றது என்றும் அவர் விமர்சித்துவந்தார். யூதர்களுக்கு நாஜி ஜெர்மனி இழைத்த கொடுமைகளுக்குப் பரிகாரமாக இஸ்ரேலுக்கு உதவி செய்தல் என்னும் பெயரால் அந்த அரசாங்கம், அணு ஆயுத ஏவுகணைகளைக் கொண்ட நீர்மூழ்கிக் கப்பலொன்றை இஸ்ரேலுக்கு அனுப்ப முடிவுசெய்ததை விமர்சித்து ‘சொல்லித் தீர வேண்டியது என்ன?’ என்னும் கவிதையையும் கிராஸ் வெளியிட்டார். இஸ்ரேல், உலக அமைதிக்குப் பெரும் அச்சுறுத்தலாக இருப்பதாகக் கூறிய அவர், அந்த நாட்டு அரசையும் மக்களையும் வேறுபடுத்திப் பார்த்தார். எந்த அணு ஆயுதத்தையும் கொண்டிராத ஈரான் மீது பொய்ப் பழிகளைச் சுமத்துவதை விமர்சித்த அதேவேளை, “யூதர்கள் இனப் படுகொலை செய்யப்படவே இல்லை, அது ஜியோனிஸ்ட்டுகளின் கட்டுக்கதை” என்று கூறிவரும் ஈரானிய அரசியல்வாதிகளையும் கண்டனம் செய்தார்.

குற்றவுணர்வின் எச்சம்

அவர் மீது நல்லெண்ணம் கொண்ட சிலரோ, கிராஸ் ஏன் இத்தனை காலம் ‘வாஃபென் எஸ்.எஸ்.’ விவகாரத்தை மறைத்து வைத்திருந்தார் என்ற கேள்வியை எழுப்பினார்கள். எல்லோருக்கும் பதில் கூறும் விதமாக அவர் தனது சுயசரிதையில் எழுதியிருக்கிறார்: “அந்தக் குற்றத்தில் எனக்கு செயலூக்கமுள்ள பங்கேற்பு இருந்தது என்று யாரும் என் மீது குற்றம் சுமத்த முடியாது என்றாலும், கூட்டுப் பொறுப்பு என்று இன்று பொதுவாக எல்லோராலும் சொல்லப்படும் ஒன்றின் எச்சம் இன்று வரை என்னுள் இருந்துவருகிறது. எனது வாழ்க்கையில் இன்னும் எஞ்சிய நாள்களில் நான் அதனோடுதான் வாழ்ந்தாக வேண்டும்.”

அந்த ‘எச்சத்தோடு’ கடைசி நாள் வரை வாழ்ந்த அவர், இறப்புக்குச் சில நாள்களுக்கு முன் ‘எல் பயஸ்’ என்னும் ஸ்பானிய நாளேட்டில் வெளிவந்த நேர்காணலில், உக்ரைன், இஸ்ரேல், பாலஸ்தீனம் ஆகியவற்றில் உள்ள மோசமான நிலைமை, இராக்கில் அமெரிக்கர்கள் ஏற்படுத்தியுள்ள பேரழிவு, ஐஎஸ் பயங்கரவாத அமைப்பின் அட்டூழியங்கள், சிரியப் பிரச்சினை ஆகியவற்றைக் குறிப்பிட்டு இப்படி எச்சரித்தார்: “எல்லா இடங்களிலும் போர். முன்பு நாம் செய்த அதே தவறையே மீண்டும் இழைக்கும் அபாயத்தில் இருக்கிறோம். இதை உணர்ந்துகொள்ளாவிட்டால், தூக்கத்தில் நடப்பதுபோல மூன்றாவது உலகப் போரில் நுழைந்துவிடுவோம்!”

எட்வர்டோ கலியானோ

அமெரிக்க இந்தியர்களுக்கு ‘அறிவொளி’ ஊட்டுவதற்காக (கிறிஸ்தவ மதமாற்றம்தான்) ஸ்பானிய ஆட்சியாளர்களால் தென்னமெரிக்காவுக்கு அனுப்பப்பட்ட கத்தோலிக்கப் பாதிரியார் பார்த்தலோமி டெ லாஸ் காஸாஸ் மனிதநேயம் மிக்கவர். கொலம்பஸில் தொடங்கி, மெக்ஸிகோ, பெரு போன்றவற்றைக் கொடும் வன்முறையின் மூலம் ‘வெற்றிகொண்டவர்களான’ ஹெர்னன் கோர்டேஸ், பிஸ்ஸாரோ போன்ற ஸ்பானியர்கள் அடுத்தடுத்து நடத்திய கொலை, கொள்ளை நிகழ்வுகளில் பல்லாயிரக் கணக்கான அமெரிக்க இந்தியர்கள் கொல்லப்பட்டதை பார்த்தலோமி இப்படி எழுதினார்: “ஸ்பானியர்கள் தமது கைகளில் சிலுவைகளையும் இதயங்களில் தங்கத்தின் மீதிருந்த தணியாத ஆசையையும் வைத்துக்கொண்டு முன்னேறினார்கள்.”

கோகா, தங்கம், வெள்ளி, பருத்தி, வாழை போன்ற பழவகைகள், விலங்குகளின் தோல்கள், கம்பளி நூல், பெட்ரோலியம், இரும்பு, நிக்கல், மங்கனீஸ், தாமிர, அலுமினிய உலோகத் தாதுக்கள், உரமாகவும் வெடிபொருளுக்கான மூலப் பொருளாகவும் பயன்படும் நைட்ரேட்டுகள், தகரம் - இவையெல்லாம் லத்தீன் அமெரிக்கா என்னும் உடலின் நாளங்கள். அவற்றின் ஒரு பக்க முனைகளைப் பிளந்து நுழைந்த ஸ்பெயின் முதலிய மேற்கு ஐரோப்பிய நாடுகளும் அமெரிக்காவும் கருங்கடல் தீவு நாடுகள் வரை சென்று அத்தனை வளங்களையும் கொள்ளையடித்துக்கொண்டு அந்த வெட்டுண்ட முனைகள் வழியாகத் திரும்பி வரும் வரலாற்றைச் சொல்லும் காவியம்தான் இந்திய, தமிழக வாசகர்களுக்கு கலியானோவை முதன்முதலில் அறிமுகப்படுத்திய ‘லத்தீன் அமெரிக்காவின் பிளந்த நாளங்கள்.’

அந்த நூலின் முக்கியத்துவத்தை அவரே விளக்குகிறார்: “லத்தீன் அமெரிக்காவின் வதைபட்ட வரலாற்றினூடே கழுத்து நெரிக்கப்பட்ட, வஞ்சிக்கப்பட்ட புரட்சிகளின் ஆவிகள் அனைத்தும் புதிய அனுபவங்களாகத் திரும்பி வருகின்றன, நிகழ்காலம் ஏதோ கடந்த காலத்தின் முரண்பாடுகளால் ஆரூடம் சொல்லப்பட்டுத் தோற்றுவிக்கப்பட்டதுபோல. வரலாறு என்பது பின்னோக்கிப் பார்க்கும் தீர்க்கதரிசி: வரலாறு எதுவாக இருந்ததோ, எதற்கு எதிராகப் போராடியதோ, அதன் காரணமாக அது வரப்போவது என்ன என்பதை அறிவிக்கிறது.”

சர்வதேச நிதியம், உலக வங்கி, நவதாராளவாதப் பொருளாதாரம், நுகர்வுப் பொருள்களுக்கான விளம்பரங்கள், சூப்பர் மார்க்கெட்டுகள், கால்பந்து உலகக் கோப்பைப் போட்டிகள், கார்ப்பரேட் ஊடகங்கள், மத நிறுவனங்கள் முதலியனவும்கூட உலகிலுள்ள ஏழை, நடுத்தர மக்கள் மீது உலக முதலாளித்துவம் நடத்தும் போர்கள்தான் என்பதை வலுவாகச் சொன்னவை காலியானோவின் படைப்புகள்.

போதைப் பொருளுக்கு எதிரான போர்

கிறிஸ்தவ ஒழுக்க நெறிகளின் பெயரால், ‘உன்னதமான சமூக/குடும்ப விழுமியங்க’ளின் பெயரால் கோகா பயிரிடும் தென்னமெரிக்க நாடுகள் மீது அமெரிக்க அரசாங்கத்தால் பல பத்தாண்டுகளாகவே ‘போதைப் பொருளுக்கு எதிரான போர்’ நடத்தப்பட்டுவருகிறது.

ஒரு வண்டு வானத்தில் பறப்பதைக்கூடத் துல்லியமாகக் கண்டு பிடிக்கும் அதிநவீன கருவிகளைக் கொண்டுள்ள அமெரிக்கா வுக்கு, தென்னமெரிக்க நாடுகளிலிருந்து நாள்தோறும் பல சிறு விமானங்களில் கொகெய்ன் கொண்டுவரப்படுவது தெரியாதா என்ன? பல லட்சம் பில்லியன் டாலர் பெறுமதியுள்ள கொகெய்ன் வணிகத்தில் ஈடுபட்டுள்ள அமெரிக்க மாஃபியா கும்பல்களின் முக்கியப் புள்ளிகள் ஏன் இதுவரை கைதுசெய்யப்படவில்லை?

தென்னமெரிக்க அரசுகளைத் தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்கவும் அந்தக் கண்டம் முழுவதையுமே தனது கண்காணிப்பில் வைத்திருக்கவுமே அமெரிக்கா ‘போதைப் பொருளுக்கு எதிரான போரை’ நடத்துகிறது. பல நூற்றாண்டுச் சுரண்டலின் காரணமாக, கோகா பயிர் வளர்ப்பதைத் தவிர எந்த வாழ்வாதாரமும் இல்லாத சிறு, குறு விவசாயிகள்தாம் அமெரிக்காவின் விமானக் குண்டு வீச்சுக்குப் பலியாகிறார்கள். சுரண்டலுக்கும் ஒடுக்குமுறைக்கும் எதிராகப் போராடும் கிளர்ச்சியாளர்கள் இந்தப் ‘புனிதப் போரின்’ பெயரால்தான் ஈவிரக்கமின்றி ஒடுக்கப்படுகிறார்கள். அமெரிக்க ராணுவ இயந்திரம் இலகுவாக வேலை செய்ய ஊற்றப்படும் எண்ணெய் வகைகளிலொன்றுதான் இந்தப் போர். கூடவே, ‘உலக முதலாளித்துவ மாய்மாலச் சொல்லாடல்களின் முன்னோடி விக்டோரியாப் பேரரசியின் இறுக்கமான ஒழுக்க நெறி’ என்பதைச் சுட்டிக்காட்டுகிறார் கலியானோ.

விக்டோரியாதான் முன்னோடி

விக்டோரியாவின் ஆட்சியின் கீழ்தான் இந்தியாவிலுள்ள விளைநிலங்கள் கஞ்சா சாகுபடிக்கு மாற்றப்பட்டு, அபினி சீனாவுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டது. லட்சக் கணக்கான சீனர்கள் அபினிக்கு அடிமையானதைக் கண்ட சீன அரசு, அபினி வணிகத்தைத் தடை செய்தது. அந்த அரசை ஒடுக்க பிரிட்டிஷ் போர்க் கப்பல்கள் சென்று பல்லாயிரக் கணக்கான சீனர்களைக் கொன்று குவித்தன. அந்தப் போர்க் கப்பல்களுக்குப் பின்னால் டன் கணக்கில் அபினியை ஏற்றிச் சென்ற வணிகக் கப்பல்கள் சென்றன. ஆனால், விக்டோரியாவின் வாயிலிருந்து ‘போதைப் பொருள்’, ‘போர்’ என்னும் சொற்கள் ஒருபோதும் வெளிவந்ததில்லை.

உலக முதலாளித்துவமும் சுற்றுச்சூழல் மாசும் ஒரே நாணயத்தின் இரு பக்கங்கள் என்பதைத் தன்னுடைய ‘சில்ரன் ஆஃப் தி டேஸ்: எ காலண்டர் இன் ஹ்யூமன் ஹிஸ்டரி’யில் கலியானோ இப்படிச் சொல்கிறார்:

“ஒரு நாள் ஐன்ஸ்டின் தமது நண்பர்கள் சிலரிடம் கூறினார்: ‘இந்தப் புவிப் பரப்பிலிருந்து தேனீக்கள் காணாமல் போய்விடு மானால், மனிதனின் ஆயுள் காலம் நான்கு ஆண்டுக் காலத் துக்கு மேல் இருக்காது. தேனீக்களும் இருக்காது, மகரந்தச் சேர்க்கையும் இருக்காது... மனிதர்களும் இருக்க மாட்டார்கள்.’ நண்பர்கள் நகைத்தனர். ஐன்ஸ்டின் சிரிக்கவில்லை.”

உலகில் தேனீக்களின் எண்ணிக்கை இப்போது குறைந்துகொண்டே இருக்கிறது. இது கடவுளின் சித்தத்தினாலோ சாத்தானின் சாபத்தினாலோ அல்ல, மாறாக கீழ்க்கண்டவற்றால்தான் நிகழ்கிறது என்பதை ‘புவி நாள்’ அனுசரிக்கப்படும் தருணத்தில் நாம் ஒப்புக்கொள்வோமாக:

“இயற்கைக் காடுகள் கொலை செய்யப்படுவதும் பண்ணைக் காடுகளின் எண்ணிக்கை பெருகுவதும்; பயிர்களின் பன்மைத் தன்மையை வரம்புக்குட்படுத்தும் ஒற்றைப் பயிர், ஏற்றுமதிக்காக சாகுபடி செய்யப்படுவதும்; பூச்சிகளோடு சேர்த்து மற்றவற்றையும் நஞ்சு கொல்வதும்; பணத்தைக் கர்ப்பமாக்கி, மண்ணை மலடாக்கும் ரசாயன உரங்கள் இருப்பதும்; விளம்பரங்களைப் பார்த்து நாம் வாங்கும் இயந்திரங்கள் கதிர்வீச்சைக் கக்குவதும்!”

- எஸ்.வி. ராஜதுரை, மார்க்ஸிய-பெரியாரிய அறிஞர். இவரது மொழிபெயர்ப்பில் ‘கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை’ நூல் சமீபத்தில் வெளியாகியிருக்கிறது.

தொடர்புக்கு: sagumano@gmail.com

இன்று உலகப் புத்தக தினம்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x