

இங்கு எண்ணிக்கையும் பெரும்பான்மையும் தான் எந்தவொரு விஷயத்தையும் தீர்மானிக்கின்றன. கும்பகோணம் பள்ளி தீ விபத்தில் மூன்று குழந்தைகள் மட்டும் இறந்திருந்தால்? திருப்பதி துப்பாக்கிச் சூட்டில் 2 பேர் மட்டும் கொல்லப்பட்டிருந்தால்? சாவகாசமாக அதைக் கடந்து போயிருப்போம்.
ஒரு 10 சதவீத மாநில மனசாட்சியை உலுக்குவதற்கே, இத்தனை பேர் சாகவேண்டிய, கொல்லப்பட வேண்டிய தேவை இருக்கிறது. தேசத்தின் மனசாட்சியை உலுக்க வேண்டுமானால், குறைந்தது 100 பேராவது சாக வேண்டும் அல்லது கொல்லப்பட வேண்டும் என்கிற நிலை இருப்பதைப் பற்றி யோசிக்கவே அச்சமாக இருக்கிறது.
மாநிலத்தின் மனசாட்சிக்கு தேவையெல்லாம் ஒரு ஒற்றைப்படையான கோஷமோ முழக்கமோ மட்டும்தான். அப்படித்தான் நாம் சிந்திக்கப் பழக்கப்பட்டிருக்கிறோம். ‘அப்பாவிகள்- அவர்களைப் பயன்படுத்திக்கொண்ட செம்மரக் கடத்தல்காரர்கள்-பின்னால் உள்ள அரசியல்வாதிகள்’ என எளிதாகச் சுருக்கப்பட்ட வடிவம், எந்த வகைப்பட்ட வினையாற்றுதலுக்கும் ஏதுவானதாக இருக்கிறது.
இன்னும் சுருக்க வேண்டுமெனில், ‘கொல்லப்பட்ட தமிழர்கள்’. இன்னும் அதற்கு மேலும் சுருக்க வேண்டுமானால், கொல்லப்பட்ட 20 பேரில் இவரிவர் இன்னின்ன சாதிகளைச் சேர்ந்தவர்கள். இந்த வகையான புரிதல்களை வைத்துக்கொண்டு என்ன செய்யப் போகிறோம்? ஆணி வேரைக் கண்டடையாவிட்டால் இதுபோல் கொலைகள் மீண்டும் தொடர்ந்து நடக்கத்தான் செய்யும்.
தமிழகம் முழுக்கப் பல ஊர்களில் வறுமை தாண்டவமாடிக்கொண்டுதானிருக்கிறது. ஏன் குறிப்பிட்ட திருவண்ணாமலை, வேலூர் மாவட்டங்களைச் சேர்ந்த தொழிலாளர்கள் மட்டும் செம்மரம் வெட்ட திருப்பதி சேஷாசலம் வனப் பகுதிகளுக்குச் செல்கிறார்கள்? இயல்பிலேயே, மிகச் சிறந்த தொழில்முறை மரம் வெட்டிகள் அவர்கள் என விவரமறிந்தவர்கள் சொல்கிறார்கள். செம்மரம் வெட்டத்தான் செல்கிறோம் எனத் தெரிந்தேதான் 90% தொழிலாளர்கள் ஆந்திரக் காடுகளுக்குள் நுழைகிறார்கள்.
ஆந்திரத் தொழிலாளர்கள் இரண்டு மணி நேரத்தில் வெட்டுகிற மரத்தை இவர்கள் ஒரு மணி நேரத்திலேயே, வெட்டுவதில் வல்லவர்கள் என்பதால்தான் தரகர்கள் இம்மாவட்டங்களில் குவிகிறார்கள். தரகர்கள் என்றால் ஏதோ வானத்தில் இருந்து குதித்தவர்கள் அல்ல. இங்குள்ள அரசியல் கட்சிகளின் ஒன்றியங்களும் மண்டலங்களும்தான்.
இன்று நேற்றல்ல; கடந்த 20 வருடங்களாகவே இந்தத் தொழில் தங்குதடையில்லாமல் நடக்கத்தான் செய்கிறது. சங்கர்ராமன் கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட அப்பு தொடங்கி போலீஸ் என்கவுன்ட்டரில் சுட்டுக் கொல்லப்பட்ட சென்னையைச் சேர்ந்த தாதாக்கள் பலருக்கும் இதில் தொடர்பு உண்டு.
இந்தச் செம்மரக் கடத்தலில் இவர்கள் ஈடுபடுவதற்கு முன்பு என்ன செய்தார்கள் தெரியுமா? திருவண்ணாமலையிலிருந்து தும்பல் வழியாக வாழப்பாடி செல்லும் சாலையில் இப்போது சென்று பாருங்கள். இரண்டு பக்கமும் செடி கொடிகள் மட்டுமே உண்டு. ஆனால், ஒரு காலத்தில் இந்த வழியில் இரண்டு பக்கமும் ‘அரிய வகை சந்தன மரங்கள்’ இருந்ததற்கான சுவடே இருக்காது. இவையனைத்தையும் வெட்டிக் கூறுபோட்டவர்கள் இதே ‘அப்பாவிகள்’ - அவர்களைப் பயன்படுத்திக் கொண்ட செம்மரக் கடத்தல்காரர்கள் - பின்னால் உள்ள அரசியல்வாதிகள்தான்.
தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்களுக்கு மட்டுமல்ல; ஆந்திராவின் முக்கிய அரசியல்வாதிகள் பலரின் மொத்த வருவாய் ஆதாரமும் நேரடி செம்மரக் கடத்தலாலும் அக் கடத்தலுக்கு மறைமுகமாக உடந்தையாக இருப்பதன் மூலமே வருகிறது. 2003-ல் முதல்வர் சந்திரபாபு நாயுடு கண்ணி வெடித் தாக்குதலுக்குள்ளானபோதே அதில் ‘கடத்தல் முதலை’ கொல்லம் கெங்கி ரெட்டிக்கும் பங்கு இருந்ததாகச் சொல்லப்பட்டது. அப்போதே நாயுடு ரெட்டிக்குக் குறிவைத்துவிட்டார் என்றும் பேசப்பட்டது.
ஏற்கெனவே மொரீஷியஸில் கைது செய்யப்பட்டிருக்கிற கெங்கி ரெட்டி, இப்போது கைது செய்யப்பட்டிருக்கிற மஸ்தான், இன்னும் கைது செய்யப்படாமல் உலவுகிற பெருந்தலைகள் எல்லோரும் ஒரு வகையில் ஆந்திராவின் முக்கியக் கட்சிகள் அனைத்துக்கும் புரவலர்கள்.
ஆக, இப்போதைய ‘நடவடிக்கை’ நாயுடுவுக்கு ஒரே கல்லில் இரண்டு மாங்காய். கெங்கி ரெட்டியின் சாம்ராஜ்ஜியத்தையும் சாய்த்த மாதிரி ஆயிற்று, செம்மரக் கடத்தலையும் தடுப்பவர் எனப் பெயர் வாங்கிய மாதிரியும் ஆயிற்று! இப்படி நிறையக் கதைகள் இருக்கின்றன. ஒரு சார்புத் தன்மையோடு செயல்படுவது, சிந்திப்பது மனசாட்சிக்கு உகந்ததல்ல.
சரவணன், பத்திரிகையாளர்,
இயக்குநர், ‘சொல்வதெல்லாம் உண்மை’,
தொடர்புக்கு: saravanamcc@yahoo.com