Last Updated : 02 Apr, 2015 08:54 AM

 

Published : 02 Apr 2015 08:54 AM
Last Updated : 02 Apr 2015 08:54 AM

மோடியின் பயணம் சீன இந்திய நல்லுறவை வலுப்படுத்தும்!- சீனத் தூதர் லீ யுசெங் சிறப்புப் பேட்டி

இந்தியா- சீனா தூதரக உறவுக்கு நேற்றோடு 65 வயது நிறைகிறது. விரைவில், பிரதமர் மோடி, சீனா செல்லவுள்ள நிலையில், இருதரப்பு உறவுகளைப் பலப்படுத்தும் விதமாக, நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் சந்திப்புகளை மேற்கொண்டுவரும் இந்தியாவுக்கான சீனத் தூதர் லீ யுசெங் சில நாட்களுக்கு முன் சென்னை வந்திருந்தார். ‘தி இந்து’ தலைமை அலுவலகத் துக்கும் வந்த அவர், ‘தி இந்து’ குழும ஆசிரியர்கள், மூத்த செய்தியாளர்களுடன் உரையாடினார். அப்போது நம்முடைய ஆசிரியர் இலாகாவின் பல்வேறு கேள்விகளுக்கும் பதில் அளித்தார்.

அடுத்த மாதம் எங்கள் பிரதமர் மோடி சீனா வருகிறார். சீனாவின் எதிர்பார்ப்புகள் என்ன?

எங்கள் அதிபர் கடந்த ஆண்டு இந்தியா வந்தபோது, இரு நாட்டுத் தலைவர்களும் ராட்டை சுற்றுவதுபோல் வெளியான புகைப்படம் சீன மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது. தங்களுக்கு அளிக்கப்பட்ட மரியாதையை, திருப்பி அளிப்பதில் சீனர்கள் மிகுந்த ஆர்வம் உடையவர்கள். பிரதமர் மோடிக்கும் அதே விதமான விருந்தோம்பல் அளிக்கப்படும். அவருடைய வருகைக்கு சீனா மிகுந்த முக்கியத்துவம் தருகிறது. மோடியின் சீன வருகையின்போது இருதரப்பு உறவுகள், அர்த்தமுள்ள ஒத்துழைப்பு, கலாச்சாரப் பரிமாற்றம், மற்றும் சர்வதேசப் பிரச்சினை உள்ளிட்டவை தொடர்பாக விரிவான பேச்சுவார்த்தை நடத்தப்படும். மேலும், வர்த்தகர்கள், இளம் மாணவர்கள் மற்றும் பொதுமக்களையும் மோடி சந்திப்பார். இருநாட்டுத் தனியார் நிறுவனங்களும் தொழில் ஒப்பந்தங்களை மேற்கொள்ள ஆயத்தமாகிவருகின்றன. மொத்தத்தில் ரூ. 63 ஆயிரம் கோடி அளவுக்கு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். இருதரப்பு உறவில் புதிய உச்சத்தை அடைவோம் என்று நாங்கள் நம்புகிறோம்.

கடந்த செப்டம்பரில் சீன அதிபர் ஜி ஜின்பிங், இந்தியா வந்தபோது மேற்கொள்ளப்பட்ட இருதரப்பு ஒப்பந்தங்களின் தற்போதைய நிலை என்ன?

நான் சென்னை வருவதற்கு முன்பாக, மும்பை, கொல்கத்தா, பெங்களூரு, அமிர்தசரஸ் போன்ற நகரங் களுக்குச் சென்று அம்மாநிலங்களின் அமைச்சர்கள் மற்றும் முக்கியப் பிரமுகர்களைச் சந்தித்தேன். இச்சந்திப்புகள் வாயிலாக, இருதரப்பு ஒத்துழைப்பு மேம்பட்டுவருவதாகவே உணர்கிறேன். தொழிற்பூங்காக்கள் அமைப்பது, ரயில்வே, கடன் மற்றும் குத்தகை போன்றவை உள்ளிட்ட பல்வேறு பொருளாதார ஒத்துழைப்பு தொடர்பான ரூ.85,800 கோடி மதிப்பிலான 12 ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டன. இந்த ஒப்பந்தங்களில் ரயில்வே துறைக்கு முக்கிய இடம் உள்ளது. சென்னை-பெங்களூரு-மைசூர் விரைவுப்பாதை தொடர்பான சாத்தியக்கூறு ஆய்வுகள் நிறைவடையும் நிலையை எட்டியுள்ளது. தவிர, டெல்லி-சென்னை இடையிலான 1,754 கி.மீ. நீள விரைவுப் பாதைக்கான சாத்தியக்கூறு ஆய்வறிக்கையை, சீன ரயில்வே நில அளவை மற்றும் வடிவமைப்புக் குழு துரிதகதியில் தயாரித்துவருகிறது. புணேவில் ரூ.32 ஆயிரம் கோடியில் வாகன உற்பத்தி தொழிற்பூங்காவுக்கான பணிகள் விரைவில் தொடங்கும். 2030-க்குள் இத்திட்டம் நிறைவடையும்போது, ஒரு லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு உருவாகும். ஹூவே நிறுவனம், 2 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் ஆய்வு மற்றும் மேம்பாட்டு மையத்தை பெங்களூரில் சமீபத்தில் தொடங்கியுள்ளது. கனரகத் தளவாடங்களைக் கையாளுதல் தொடர்பான பயிற்சியைப் பெறுவதற்கு இந்தியக் குழுவினர் சீனா சென்றுள்ளனர். தவிர, 2015-ம் ஆண்டை ‘இந்தியா செல்வோம் ஆண்டு’ என சீனா அறிவித்துள்ளது. கடந்த 2 மாதங்களில், சென்ற ஆண்டு இதே காலகட்டத்துடன் ஒப்பிடும்போது, சீன சுற்றுலாப் பயணிகளின் வருகை 10% அதிகரித்துள்ளது. விசா நடைமுறைகளை இந்தியா எளிமைப்படுத்தினால், இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும்.

சீனப் பொருளாதாரம் இப்போது எப்படி இருக்கிறது?

கடந்த ஆண்டில் வளர்ச்சி வீதம் வழக்கத்தைவிடச் சற்று மந்தமாக (7.4%) இருந்தது. ஆனால், மோசமாக இல்லை. புதிய வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன. ஆற்றல் பயன்பாட்டைப் பெரிதும் குறைத்திருக்கிறோம். சேவைத் துறைக்கு அதிக முக்கியத்துவம் தரப்படுகிறது. அதாவது, முதலீட்டுச் சித்தாந்தத்திலிருந்து விலகி, புதுமைச் சித்தாந்தத்துக்கு மாறிவருகிறோம். எண்ணிக்கைக்கு முக்கியத்துவம் தருவதை விடுத்து, தரத்துக்கு முக்கியத்துவம் தரத் தொடங்கியிருக்கிறோம். 2020-க்குள் உள்நாட்டு உற்பத்தியை இரு மடங்காக உயர்த்த நிர்ணயித்துள்ள இலக்கை உறுதியாக எட்டுவோம்.

இந்தியா - சீனா இடையே 2014-ல் ரூ. 4.37 லட்சம் கோடி அளவுக்கு வர்த்தகம் நடைபெற்றுள்ளது. அதில், இந்தியத் தரப்பில், வர்த்தகப் பற்றாக்குறை ரூ. 2.40 லட்சம் கோடியாக இருந்துள்ளது. இந்த ஏற்றத்தாழ்வை எப்படிச் சரிசெய்யப் போகிறீர்கள்?

சீனா மிகை வர்த்தகத்தை விரும்ப வில்லை. இந்தியத் தரப்பில் சீனத்துக்கு ஏற்றுமதி குறைவதை சீனா அவ்வளவு எளிதாக எடுத்துக்கொள்ளவில்லை. இந்தியத் தரப்பு ஏற்றுமதி குறைவுக்கு, இந்திய மற்றும் சீனத் தொழில்துறை அமைப்புகளுக்கிடையே உள்ள வேற்றுமைகளே முக்கியக் காரணம். அதனால், சீனாவுக்கு இந்திய ஏற்றுமதி அதிகரிப்பதற் கான வாய்ப்பை ஏற்படுத்தித்தரத் தயாராக இருக்கிறோம்.

சீனாவில் நடைபெறும் புகழ்பெற்ற கேன்டன் தொழில் வர்த்தகக் கண்காட்சி, ஷாங்காய் உள்ளிட்ட நகரங்களில் உள்ள ஏற்றுமதி மேம்பாட்டு மையங்கள் ஆகியவற்றில் இந்தியத் தரப்பினர் பங்கேற்று, வர்த்தகத்தை விரிவு படுத்துவதை சீனா விரும்புகிறது.

அதே நேரத்தில் இரும்புத் தாது போன்ற பொருட்களை சீனாவுக்கு ஏற்றுமதி செய்வதில் உள்ள கட்டுப்பாடுகளை இந்தியா தளர்த்த வேண்டும். வேளாண் பொருட்களை இந்திய நிறுவனங்கள் அதிக அளவில் ஏற்றுமதி செய்வதை ஊக்குவிக்க வேண்டும். சீனர்களுக்கான வர்த்தக விசா நடைமுறைகளை எளிதாக்கினால், எங்களவர்கள் அதிக அளவில் வருவார்கள். முதலீடு செய்வார்கள். வர்த்தக ஏற்றத்தாழ்வு சரியாக இவை வழிவகுக்கும்.

சீனா ‘பட்டுப்பாதை’ மற்றும் ‘கடல்சார் பட்டுப்பாதை’ போன்ற திட்டங்களை அறிவித்துள்ளது. இந்திய-சீன உறவில் இத்திட்டங்கள் எந்த அளவுக்குப் பங்களிக்கும்?

பண்டை காலத்தில் வர்த்தகம் மேற்கொள்ளப்பட்ட ‘பட்டுப்பாதை’யை மனதில் கொண்டு, பழமையையும் புதுமையையும் இணைக்கும் விதமாக, இத்திட்டங்களைக் கொண்டுவந்தோம். ஆசியா, ஐரோப்பா மற்றும் ஆப்பிரிக் காவில் உள்ள 400 கோடி மக்களை இத்திட்டங்கள் ஒருங் கிணைக்கும். இதுவரை 50 நாடுகள் இத்திட்டங்களில் பங்கேற்க விருப்பம் தெரிவித்துள்ளன. அந்நாடுகளில் கட்டமைப்பு ஏற்படுத்துதல், தொழிற்சாலைகளை அமைத்தல், மக்களிடையே தொடர்புகளை ஏற்படுத்துதல் போன்ற பணிகள் தொடங்கிவிட்டன. ‘பட்டுப்பாதை’யில் இந்தியா முக்கியமான இடத்தில் அமைந்துள்ளது. உலக வங்கி, ஆசிய வளர்ச்சி வங்கி வரிசையில், ஆசியக் கட்டமைப்பு வளர்ச்சி வங்கியை இந்தியா உட்படப் பல்வேறு நாடுகளுடன் இணைந்து சீனா சமீபத்தில் தொடங்கியது. இதில் சேர்வதற்கு, பிரான்ஸ், ஜெர்மனி, கனடா, பிரிட்டன் போன்ற நாடுகளும் விருப்பம் தெரிவித்துள்ளன. இது தொடர்பான முக்கிய ஆலோசனைக் கூட்டம் இந்தியாவில் நடந்தது. இத்திட்டத்துக்கு இந்தியா பெரிதும் ஆதரவு அளித்துவருகிறது. இந்தியாவின் ‘வாசனைத் திரவியப் பாதை’ மற்றும் பிரதமர் மோடியின் ‘மவுசம்’ திட்டங்களை இத்திட்டத்துடன் இணைப்பதன் மூலம் இப்பிராந்தியத்தில் வசிக்கும் மக்களுக்குப் பெரும் பயன்கள் ஏற்படும்.

எல்லைப் பிரச்சினை தொடர்பாக இரு நாடுகளுக்கிடையே சமீபத்தில் பேச்சுவார்த்தை நடைபெற்றது. அதன் தொடர்ச்சியாக, முக்கிய முடிவுகளை எதிர்பார்க்கலாமா?

இந்தியாவில் ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பிறகு, சீன மக்கள் பிரதிநிதித்துவ சபை உறுப்பினர் யாங் ஜீச்சி மற்றும் இந்தியப் பிரதமரின் பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் ஆகியோருக்கிடையே புதுடெல்லியில் கடந்த மார்ச் 23-ல் நடைபெற்ற முதல் பேச்சு வார்த்தையில், எல்லைப் பிரச்சினை, இருதரப்பு உறவுகள், பிராந்திய மற்றும் உலகளாவிய விவகாரங்களில் இரு நாடுகளும் சந்திக்கக் கூடிய பொதுவான பிரச்சினைகள் போன்றவை பற்றி விவாதிக்கப்பட்டது.

இரு நாடுகளுக்கு இடையிலான எல்லைப் பிரச்சினை, ஒரு சிகரத்தைத் தொடுவதற்கு ஒப்பானது. அதில் மெதுவாக, ஆனால் சீராக மேலே சென்றுகொண்டிருக்கிறோம்.

இந்தியாவைக் கண்காணிப்பு வளையத்துக்குள் வைக்கவே, தெற்காசிய நாடுகளுடன் ஒத்துழைப்பை சீனா அதிகரித்திருப்பதாக இந்தியாவில் கருத்து நிலவுகிறதே?

சீனா எப்போதும் அமைதியான வளர்ச்சியையே நோக்காகக் கொண்டுள்ளது. தெற்காசிய நாடுகள் சீனாவுடன் இணைந்து வர்த்தகத்தில் வேகமாகப் பயணிக்க விரும்புகின்றன என்பதே உண்மை. பொதுவான வளர்ச்சி என்பதை மட்டும் மனதில் வைத்து, இந்தியாவுடன் இணைந்து முத்தரப்பு மற்றும் பல்வேறுதரப்பு ஒத்துழைப்பை இப்பிராந்தியத்திலும் உலகிலும் ஏற்படுத்தவே சீனா விரும்புகிறது.

பொதுவாகவே, தெற்காசியப் பகுதியில் சீன நீர்மூழ்கிக் கப்பல்கள் நடமாட்டம் தொடர்பாக சில கருத்துகள் நிலவிவருகின்றன. இந்தியாவும் சீனாவும் அருகருகே அமைந்துள்ள வல்லரசுகள். பலம் மிக்க நாடாக இருந்தாலும், மற்றவரின் ஒத்துழைப்பின்றி ஒரு நாடு இயங்குவது இக்காலத்தில் சிரமம். எனவே, இரு நாடுகளும் ஒத்துழைப்பு நல்க வேண்டியது அவசியம். நாங்கள் இந்தியப் பெருங்கடலிலும் மற்றும் அதன் நீட்சியான ஏடன் வளைகுடா பகுதிகளில் பல்வேறு நாடுகளின் கப்பல்களுக்குப் பாதுகாப்பை அளிக்கிறோம். அதற்கான கமிஷன் தொகையை எங்களுக்கு அந்நாடுகள் அளிக்கின்றன. அதனால், இந்தியப் பெருங்கடலில் எங்களது இருப்பு தவிர்க்க முடியாததாகிவிட்டது. எங்களுக்கு நாட்டை விரிவுபடுத்தும் எண்ணம் கிடையாது. பசிபிக் சமுத்திரக் கடல் பகுதிக்கு இந்தியா வருவதையும் வரவேற்கிறோம்.

இலங்கையில் எங்களது பல நிறுவனங்கள் பல்வேறு பணிகளில் ஈடுபட்டுள்ளன. இந்திய நிறுவனங்கள் விரும்பினால், நாம் இலங்கையில் இணைந்து பணியாற்றலாம். சீனத் தொழில்நுட்பமும் இந்தியத் தொழிலாளர்களின் திறனும் அங்கு இணைந்தால், இருதரப்பும் சிறப்பாகப் பொருளீட்ட முடியும். இதுபோல் உள்நாட்டுக் குழப்பத்தில் இருக்கும் ஆப்கானிஸ்தான் விவகாரத்திலும், இந்தியா-சீனா-பாகிஸ்தான் மற்றும் ரஷ்யா ஆகிய நாடுகளின் கூட்டு ஒத்துழைப்பு நல்ல பலன்களைக் கொடுக்கும்.

இந்திய - அமெரிக்க உறவின் வளர்ச்சியை சீனா எப்படிப் பார்க்கிறது?

இந்தியாவும் சீனாவும் வேகமாக வளர்ந்துவரும் பெரிய நாடுகள். அமெரிக்காவோ வளர்ந்த நாடுகளில் மிகப் பெரியது. இம்மூன்று நாடுகளின் உள்நாட்டு மொத்த உற்பத்தி உலகின் மொத்த அளவில் 40%.

இம்மூன்று நாடுகளும் ஒளிவுமறைவின்றி திறந்த மனதுடன் ஒருங்கிணைந்து செயல்பட்டால் பசிபிக் மற்றும் இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தில் இந்நூற்றாண்டில் சுமுகமான சூழலை ஏற்படுத்த முடியும்.

சீனா, அமெரிக்கா, இந்தியா ஆகியவற்றின் சமூக அமைப்பு, வரலாறு மற்றும் கலாச்சார பின்னணி வெவ் வேறானவை. எனினும், மூன்று நாடுகளின் நல்லுறவானது ஒன்றுடன் ஒன்று தொடர்புடையவை. எனவே, மற்றவரின் நலன்களில் குறுக்கிடாமல், ஒருவருக்கொருவர் பரஸ்பர மரியாதையுடன் நடந்துகொள்வது அவசியம். தனிப்பட்ட கருத்து வேறுபாடுகளைவிடப் பொதுநலன் முக்கியம் என்பதை உணர்ந்து, பரஸ்பர நம்பிக்கை மற்றும் பேச்சு வார்த்தை மூலமாக வேறுபாடுகளைக் களைந்தால் இதுவரை இல்லாத அளவுக்குச் சுமுகமான சூழலை இம்மூன்று நாடுகளுக்கிடையே உருவாக்க முடியும்!

இரு நாடுகளுக்கிடையே வரலாறு, கலாச்சாரரீதியில் பல ஒற்றுமைகள் உள்ளன. மொழி இந்த உறவை மேலும் நெருக்கமானதாக்கக் கூடும். உறவைப் பலப்படுத்தும் முயற்சிகளில் மொழி கற்பித்தல் இடம்பெற்றிருக்கிறதா?

நிச்சயமாக. சீனாவில் அதிகம் பேசப்படும் மாண்டரின் மொழியை இந்தியாவில் கற்பிக்க முதல் கட்டமாக 40 ஆசிரியர்களை நியமித்துள்ளோம். சீன மொழி கற்க விரும்பும் இளம்வயதினர் எங்களை அணுகினால் கல்வி உதவித்தொகையுடன் கூடிய பயிற்சிக்கு ஏற்பாடு செய்வோம். இதேபோல, சீனாவில் இந்தி மொழியைக் கற்பிக்கவும் இந்திய அரசைக் கேட்க இருக்கிறோம்!

- எஸ். சசிதரன், தொடர்புக்கு: sasidharan.s@thehindutamil.co.in

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x