Published : 13 Apr 2015 08:25 AM
Last Updated : 13 Apr 2015 08:25 AM

நாகூர் ஹனீபா: எல்லோரும் கொண்டாடுவோம்!

எந்தச் சமூகத்துக்காக, எந்தக் கட்சிக்காக ஓய்வில்லாமல் உழைத்தாரோ அவையே புறக்கணித்தன.

இந்தப் பாடல் ஒருமுறை ஒலித்தால் போதும்!

‘‘அழைக்கின்றார் அழைக்கின்றார் அண்ணா

அருமைமிகும் திராவிடத்தின் துயர்துடைக்க என்றே...’’

ஒரு யுகப் புரட்சியை நடத்தி முடிக்கக் கோரும் அறைகூவலாக ஒருவரின் உள்ளத்தில் எழுச்சிப் பேரலையை எழுப்பக் கூடும்; சங்கநாதமாக அது எட்டுத் திக்கும் பரவுவதுபோலவும் இருக்கும். கண்முன்னே ஒரு மாபெரும் போர்க்களம் விரிந்து கிடக்கிற காட்சியை மனம் உருவாக்கிக்கொள்ளச் செய்தது இந்தப் பாடல்.

1967-ல் இப்படித்தான் ஒரு போர் முரசாக ஒலித்தது அந்தப் பாடல். பாடலின் ஒவ்வொரு வரியும், அதனைப் பின்னிருந்து வலிமை கூட்டும் இசையமைப்பும் ஓய்ந்து கிடந்த ஒவ்வொருவரையும் உடல் நிமிர்த்தி நிற்கச் செய்தது. ஆனால், அந்தக் கடமை போர்க்களத்துக்குச் செல்ல வேண்டியதாக இருக்கவில்லை வாக்குச்சாவடிக்குத்தான் நாம் சென்றாக வேண்டும்! உதயசூரியனுக்கு வாக்களித்தாக வேண்டும். இதுதான் அந்தப் பாடலைப் பாடியவரின் நோக்கம்; ஆசை!

வரலாற்றுப் பங்களிப்பு!

ஜனநாயக யுகத்தின் வாக்குச்சாவடிகளைக் கண்முன்னே வைத்துக்கொண்டு போர்க்களத் தினவை ஒரு பாடல் ஊட்டுமென்றால் அது பாடிய குரலின் பெருமிதம் அன்றோ? தி.மு.க-வின் வெற்றிக்கும் அதன் எழுச்சிக்கும் ஒரு காவியத்தன்மையை இந்தக் குரல் வழங்கியது. அவரின் பாடல்கள் கழகத்தைக் காலம்தோறும் ஏந்தி நிற்கும் தூண்களாகவும் இருந்தன. அதுவரை காங்கிரஸின் ஆதரவாளர்களாக இருந்த முஸ்லிம் சமூகத்தைக் கழகம் நோக்கி நகரவைத்ததில் இந்தக் குரலுக்கு இருந்த வரலாற்றுப் பங்களிப்பை மறுக்க முடியாது.

எல்லாக் கலைஞர்களும் நம் நெஞ்சங்களில் வந்து அமர்வதற்குப் பல்வேறு காரணங்கள் இருக்கின்றன. ஆனால், நாகூர் ஹனீபாவின் நாதக் குரலில் ஒரு வசந்தம் நிகழ்ந்தது. தமிழகத்தின் மூலைமுடுக்குகளிலெல்லாம் அவர் குரல் ஒலித்தபோது - அது தர்ஹாவை முன்னிறுத்தி நடக்கும் சந்தனக்கூடு வைபவமாக இருக்கலாம்; தி.மு.க-வின் பிரச்சார மேடையாக இருக்கலாம் - முஸ்லிமல்லாத ரசிகரும், கழகம் சாராத ஒரு அரசியல் ஆர்வலரும் அந்தக் கலை நிகழ்ச்சியில் இருந்தார்கள். அந்தக் கலப்பில் பேதங்கள் கலைந்துபோயின; ஒரு மந்திரக் குரலின் ஓசைக்குக் கட்டுப்பட்டு பெரும் ஜனத்திரள் ஒருமித்து நின்ற வரலாற்றைத் தமிழகத்துக்குத் தந்தது அந்த நாதம்! தமிழ்ச் சமூகத்தில் அப்போது மேலெழுந்து வந்து புகழ்பெற்று நின்றோரெல்லாம் திரையுலகம் சார்ந்தோராக இருந்தார்கள்; அல்லது வசீகரிக்கும் பேச்சாற்றல் கொண்ட வல்லுநர்களாக இருந்தார்கள். பேச்சாளராகவும் இல்லாமல், திரையுலகம் சார்ந்தும் இல்லாமல் எல்லோரையும் வசீகரிக்கும் ஒரு பாடகராக அவர் இருந்தார். ஒரு சிறுபான்மைச் சமூகத்தின் ஆன்மிகக் குரலுக்கு ஒரு மதிப்பும் மரியாதையும் கிடைத்தது; அது நம் பண்பாட்டின் தொன்றுதொட்ட மேன்மைக்கான சான்றாகவும் விளங்கிற்று. அந்தப் புகழ் நிலைத்தது.

அவர் எல்லா நிகழ்ச்சிகளிலும் கழகப் பாடலைப் பாடிய அதே வேகத்தில் இஸ்லாமியப் பாடல்களையும் பாடியிருக்கிறார். இஸ்லாமிய விழாக்களிலும் தன் கட்சி விசுவாசத்தை வெளிக்காட்டாமல் போனதில்லை. கழகம் இஸ்லாம் என்ற இரண்டு முனைகளையும் இந்த அளவுக்கு இயல்பான தன்மையில் அவர் பொருந்திக்கொண்டது வியக்கவைக்கிறது.

இந்தி எதிர்ப்புக் களத்தில்…

அரசியல் களத்தில் ஒரு போராட்ட வீரராகவும் அவர் திகழ்ந்தார். ‘குடிஅரசு’ இதழை வாசித்த உணர்வில் அவர் சுயமரியாதைக் கருத்துகளோடும் திராவிடச் சிந்தனைகளோடும் தனது அரசியலுக்கு வலு சேர்த்துக் கொண்டார். 1937-ம் ஆண்டு ராஜாஜி முதலமைச்சராக இருந்தபோது இந்தியைத் திணிக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டிருந்தன. இந்த நிலையில் நாகூருக்கு வந்த ராஜாஜிக்குக் கருப்புக் கொடியைக் காட்டினார் நாகூர் ஹனீபா. அவரும் மேலும் ஒருசிலரும் கைது செய்யப்பட்டனர். ஆனால், அப்போது அவரின் வயது 13 என்பதால் அவரைச் சிறையில் அடைக்காமல் வீட்டுக்கு அனுப்பிவைத்தனர். அதன் பின்னரும் கழகம் முன்நின்று நடத்திய பல்வேறு போராட்டங்களிலும் கலந்துகொண்டு 11 முறை சிறை சென்றுள்ளார். தன் அரசியல் உணர்வையும் கலை உணர்வையும் இரு கண்களாகப் பாவித்துக்கொள்ளும் மன உறுதி மற்ற கலைஞர்களுக்கு அமையவில்லை.

இஸ்லாத்துக்கு இசை ஏற்பில்லாததா?

இஸ்லாம் பற்றிப் பல மாமேதைகளின் பிரசங்கங்கள் நிகழ்ந்தபடி இருக்கின்றன, இருக்கவும் செய்தன! அவரவர் அறிவுக்கு ஏற்பவும் அவரவர் வசதிவாய்ப்புகளுக்கு ஏற்பவும் இஸ்லாத்தை அடையாளம் கண்டு திரித்து அதுவே இஸ்லாம் என்றும் வாதம் புரிந்துவருகிறார்கள். தம் இஸ்லாமிய இருப்பு குறித்துச் சந்தேகப்பட்டு அல்லலுறும் போக்கு பாமர முஸ்லிம்களுக்கு உருவாகியிருக்கிறது. நாகூர் ஹனீபாவும் செல்லும் இடமெல்லாம் இஸ்லாமியப் பிரச்சாரம்தான் செய்தார். அதனால் தமிழகத்தில் ஒரு மனமாவது நிலைபிறழ்ந்து திரிந்ததுண்டா? பிரிவுகள் மேலும் பல பிரிவுகளாக ஆனதுமில்லை. அவரைவிடவும் தமிழர்களின் மத்தியில் இஸ்லாத்தை அதன் அழகோடும் வசீகரிக்கும் பண்போடும் சமூகநீதித் தத்துவத்தோடும் மனக் கசப்பில்லாமல் எடுத்தியம்பியது யார்? இஸ்லாத்துக்கு இசை ஏற்பில்லாதது என்று புதிய கண்டுபிடிப்பை நிகழ்த்தி மார்க்கத்தின் ஒளியில் மாசு படரச் செய்கிறவர்கள் நாகூர் ஹனீபாவின் வாழ்க்கையிலிருந்தும் அவரது கலைச் சேவையிலிருந்தும் மார்க்க ஞானம் பெற்றாக வேண்டும்.

ஹனீபாவின் பாடல்களால் கவரப்பட்ட அப்போதைய பாவலர் சகோதரர்கள் அவரின் பாடலுக்குத் தாங்களும் இசையமைக்க வேண்டும் என்று ஆர்வப்பட்டனர். நாகூர் ஹனீபாவைச் சந்தித்துத் தம் விருப்பத்தைச் சொன்னவர் இன்றைய இளையராஜா. அந்த இருவரின் ஆர்வமும் கலை ஈடுபாடும் இணைந்ததில் தமிழகத்துக்குக் கிடைத்த அருமையான பாடல், “தென்றல் காற்றே கொஞ்சம் நில்லு, கொஞ்சம் நில்லு/ எங்கள் திருநபியிடம்போய்ச் சொல்லு ஸலாம் சொல்லு.” இறைப் பற்று இல்லாத எந்தவொரு மனிதரையும்கூட அப்படியே அசைவுறாமல் நிறுத்திவைத்துக் கண்ணீர் மல்கச் செய்வதுதான் இந்தப் பாடலின் வெற்றி. அதனால்தான் அவரால் கிருபானந்த வாரியாரையும் குன்றக்குடி அடிகளாரையும் மதுரை ஆதீனத்தையும் ஈர்க்க முடிந்தது; கடவுள் நம்பிக்கை இல்லாத பெரியாரையும் அவரோடு இருக்கச் செய்தது.

சாந்தியின் வழி

ஐக்கியம் நிலவும் சமூகத்தில் ஒரு விஷயம் எவருடைய அணுகுமுறையில், எந்த வியூகத்தில் மனக்கோளாறு இல்லாமல் ஏற்கப்படுகிறதோ அல்லது போற்றப்படுகிறதோ அந்த அணுகுமுறையே அந்த வியூகமே இனிமையும் அமைதியும் தருவது; சாந்தியும் சமாதானமும் ஊட்டுவது. இஸ்லாம் அதன் வாதத் திறமையால் அல்லாமல் உளம் சிலிர்க்கும் மாண்பினால், தேர்ந்த பாடல்களினால் மக்கள் மனங்களில் குடி புகுந்தது; நாகூர் ஹனீபாவின் வெற்றிக்கும் சமூகச் சேவைக்கும் வேறு எதை முன்வைப்பது? முறையாகச் சங்கீதம் கற்காமலேயே சங்கீதக் கலையின் முகடுகளில் அவரால் தன் சிறகு விரித்துப் பறந்து அமரவும் முடிந்தது. கலைஞர்கள் எப்போதும் தங்களின் சாதனைகளைத் தங்களின் வாயால் நேரடியாகச் சொல்லுவதில்லை. அதனால்தான் நாகூர் ஹனீபாவின் பல சாதனைகளையும் தமிழகம் அறியாமல் இருக்கிறது. என்றபோதும் அவை மங்கிவிடவோ மறைந்துவிடவோ செய்யாது.

அவரது இசைச் சேவையைத் தமிழகம் தன்மனதுக்குள் ஏந்திக்கொண்டாலும் அவருக்கு ஏற்பான மரியாதைகளோ கவுரவங்களோ அளிக்கப்படவில்லை. எந்தச் சமூகத்துக்காக, எந்தக் கட்சிக்காக அவரது அர்ப்பணிப்பும் ஓய்வறியா உழைப்பும் இருந்ததோ அவையே புறக்கணித்தன. அவர் அதுகுறித்துக் கவலைப்படாமல் இருந்தாலும் சமூக அமைதியில் நாட்டம் கொண்டவர்களுக்கு இது ஏமாற்றம் தரும் செய்தியாகும். ஒரு கலைஞன் அவமதிக்கப்படலாம்; ஆனால், வரலாற்றின் ஒரு பேரியக்கமாக அவன் இருப்பதைத் தடுத்துவிட முடியாது.

- களந்தை பீர்முகம்மது,

‘பிறைக் கூத்து’ முதலிய நூல்களின் ஆசிரியர், தொடர்புக்கு: kalanthaipeermohamed@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x