Published : 29 Apr 2015 08:38 am

Updated : 29 Apr 2015 08:38 am

 

Published : 29 Apr 2015 08:38 AM
Last Updated : 29 Apr 2015 08:38 AM

நம் கல்வி... நம் உரிமை!- அந்த நாள் வந்திடாதோ?

பெங்களூரில் இன்னும் இருள் பிரியாத நேரம். காலை ஏழு மணிக்கு எங்கள் அடுக்குமாடிக் கட்டிட வளாகத்தின் கேட்டுக்கு வெளியே நிற்கிறது ஒரு பள்ளிப் பேருந்து. ஓட்டுநர் பொறுமையிழந்து இரண்டு முறை ஹாரன் அடிக்கும்போது, இரு சிறுவர் சிறுமியர் அவர்களது தாய்மார்கள் பின்தொடர ஓடுகிறார்கள். தாய்களின் கையில் பாதி பிரெட் துண்டு அல்லது ஒரு அரைக் கோப்பைப் பால். அவர்களது கெஞ்சல் ஓய்வதற்குள் சிறுவர்கள் வண்டியில் ஏறிவிட்டார்கள்.

கனத்த பைகள் முதுகை முன்னுக்கு வளைத்து முகம் அதில் மறைந்து... பள்ளிக்குச் செல்லும் இன்றைய சிறுமிகளையும் சிறார்களையும் கண்டால் எனக்குக் காரணம் புரியாமல் வயிற்றைக் கலக்குகிறது. இந்தப் பொதி சுமையும் அரை வயிற்று ஓட்டமும் மாலை களைத்துவந்ததும் வீட்டுப்பாடமும், களைப்பைப் போக்க கம்ப்யூட்டர் கேம்ஸும்... பறவைகளின் கீதத்தைக் கேட்கப்போதில்லை. பெங்களூரு மரங்களில் பூத்துக்குலுங்கும் மலர்களை அண்ணாந்து பார்க்க முதுகு நிமிராது.


ரம்மியமான நாட்கள்

ஐம்பது அறுபது ஆண்டுக்கு முந்தைய பெங்களூரில் எனது பள்ளி நாட்களை நினைக்கும்போதே மனசு பொங்குகிறது உவகையில். எத்தனை ரம்மியமான, சந்தோஷமான வருடங்கள் அவை! எங்கள் பைகள் கனத்ததில்லை. முதுகு கூனியதில்லை. காலை உணவு முடித்த பிறகு, சவுகரியமாக பள்ளிப் பேருந்து வரும், எட்டரை மணிக்கு. வழி அனுப்பக் கவலை தோய்ந்த முகத்துடன் எவரும் நிற்க மாட்டார்கள். வீட்டில் வானொலிப் பெட்டிகூட இல்லாத காலம். தொலைபேசியா? கேள்விபட்டதுகூட இல்லை. வீடு நிறையப் புத்தகங்கள்.

நான் படித்தது கான்வென்ட் பள்ளி இல்லை. சென்னை மாகாணத்தைச் சேர்ந்த இந்து பள்ளி. திருவேங்கடசாமி முதலியார் என்ற பெருந்தகை, தனது மனைவி பேரில் கட்டியிருந்த மாபெரும் பள்ளி. ஆரம்பப் பள்ளியிலிருந்து உயர் நிலைப்பள்ளி முடிய. பெங்களூரின் தண்ணென்ற சூழலில் மரங்களும் பூச்செடிகள் நிறைந்த பூங்காவுடனான இரண்டு பிரம்மாண்ட கல் கட்டிடங்கள் எதிரும் புதிருமாக. இரண்டுக்கும் இடையே, மிக விசாலமான ஏற்றமும் இறக்கமுமாக பூங்கா. ஒரு சினிமா செட்டைப் போல இருக்கும். பலதரப்பட்ட, பல மொழி பேசும் மாணவியர். அதனால், படிப்பும் பேச்சும் இயல்பாக ஆங்கில வழியிலேயே அமைந்தது. ஆனால், அங்கு தமிழை இரண்டாம் மொழியாக எடுக்கும் வசதியும் இருந்தது. அதனாலேயே மதுரையைச் சேர்ந்த என் தந்தையின் யோசனையின் பேரில் அந்தப் பள்ளியில் நான் சேர்க்கப்பட்டேன்.

மண்ணும் மணமும்

படிப்பு என்பதை ஒரு சுமையாகக் கலக்கத்துடன் நாங்கள் அணுகிய பேச்சே இல்லை. மிஸ் டேவிட், மிஸ் எட்வர்ட்ஸ், மிஸ் லீலா, மிஸ் லக்ஷ்மி என்று உற்சாகமாகப் பாடம் நடத்தும் ஆசிரியைகள். மிஸ் டேவிட் எங்களுக்கு மண்ணை நேசிக்கக் கற்றுக்கொடுத்தார். தோட்டம் போட என்று நேரம் உண்டு. எங்கள் வகுப்புக்கு என்று ஒரு சதுரமான இடம் இருந்தது. மண்ணைக் கிளறவும் பாத்தி கட்டவும் அளவாக நீர் ஊற்றவும் கற்றுக்கொண்டோம். மண்ணிலிருந்து சுருண்டு நெளிந்து வரும் மண் புழுக்கள் நமது சினேகிதர்கள் என்று புரிந்துகொண்டோம். மிஸ் டேவிட் சொல்வதெல்லாம் எங்களுக்கு வேதவாக்கு. விதையிலிருந்து செடி முளைத்து, இலை துளிர்விடும்போது எங்களுக்கு ஏற்படும் பரவசம் மிஸ் டேவிட்டுக்கும் ஏற்படும். ஆங்கிலத்தில் ரசனை ஏற்படுத்தியது மிஸ் டேவிட். வோர்ட்ஸ்வெர்த்தின் ‘தி டஃபடில்ஸ்’ கவிதையை மிஸ் டேவிட் படிக்கும்போது, நாங்கள் அவருடன் இங்கிலாந்துக்குப் பயணப்பட்டிருப்போம். மற்றவரைப் புண்படுத்தாமல் பேசச் சொல்லிக்கொடுத்தது மிஸ் டேவிட். எதைச் செய்தாலும் நேர்த்தியாகச் செய்யச் சொல்லிக்கொடுத்தது மிஸ் டேவிட்.

தமிழ்க் கதாநாயகி

தமிழ்ப் பற்று என்னைச் சிக்கென்று பிடித்துக்கொள்ளவும் எங்களுக்கு வாய்த்த ஆசிரியைகளே காரணம். தமிழ் வகுப்பு எப்போது வரும் என்று நாங்கள் காத்திருப்போம். தமிழ்ப் பற்று என்பதால் அல்ல - அது பின்னால் வந்தது. தமிழ் டீச்சர் பிரேமா எங்களுடைய கதாநாயகி. கோயில் சிலைபோல உடம்பில் மிக ஸ்டைலாக சேலை அணிந்திருப்பார். நம்ப முடியாத நீளத்துக்கு ஜடை. அவரை எங்களுக்குப் பிடிக்க வேறு காரணம் இருந்தது. பெயர்ச்சொல், வினைச்சொல், இடைச்சொல் என்று கழுத்தை அறுக்காமல் எங்களுக்கு இணையாக ஆடவும் பாடவும் தயாராக இருப்பார். அவர் பாடம் நடத்துவதுபோலவே இராது.

மழையும் குளிரும் இல்லாத நாட்களில் மரத்தடியில் வெட்டவெளியில்தான் வகுப்பு. தமிழ்ப் பாடத்தோடு அது நிற்காது. பறவைகள், மலர்கள், மரங்கள், விலங்குகள், நட்சத்திரங்கள் என்று பிரபஞ்ச ரகசியமே அங்கு விரியும். ஒவ்வொன்றுக்கும் ஒரு கதை இருக்கும். கதை மூலமே எனது உலகம் இதழ் இதழாகப் பூ விரிவதுபோல மலர்ந்தது, வண்ணங்கள் மிகுந்த சினேகிதமான உலகமாக. அதுவே சத்தியம் என்று தோன்றிற்று. அது ஒரு கற்பித உலகமாக நிச்சயம் இருக்கவில்லை. உயர் நிலைப்பள்ளியில் மிஸ் கோமளம் கம்பனையும் வள்ளுவனையும் இளங்கோவையும் நேசிக்கக் கற்றுக்கொடுத்தார். பாண்டியனின் சபையில் கண்ணகி வந்து நின்று நீதி கேட்ட அதிர்ச்சியைத் தாங்க முடியாமல் ‘யானோ அரசன், யானே கள்வன்’ என்று பாண்டியன் இறந்ததும் ‘தன்னுயிர் கொண்டு அவனுயிர் தேடினள் போல் பெருங்கோப்பெண்டும் ஒறுங்குடன் மாய்ந்தனள்’ என்ற வரியைச் சொல்லிச் சொல்லி ரசிப்பார். ஆண்டாளின் ‘பால்சோறு மூட நெய்பெய்து முழங்கை வழிவார’ என்ற வரிகளை அவர் விளக்கும்போது எங்கள் நாவில் நீர் ஊறும். இப்பவும் சர்க்கரைப் பொங்கல் சாப்பிடும் போதெல்லாம் மிஸ் கோமளத்தின் நினைவு வருகிறது.

ஜனகம்மாவும் பாரதியும்

தீவிர காந்தி பக்தையும் பாரதியின் உபாசகியுமான எங்கள் பாட்டு டீச்சர் ஜனகம்மா பாடும் ‘விடுதலை, விடுதலை, விடுதலை!’ என்ற ஓங்கிய குரல் மனசைச் சிலிர்த்து பாரதியிடம் நேசம் கொள்ளவைத்தது. பாரதியின் பல பாடல்கள் பாடம் ஆனது பத்து வயதில்.

ஆசிரியைகளின் ஈடுபாடே என்னைத் தீவிர வாசிப்புக்கு அழைத்துச் சென்றது. நான் எட்டாம் வகுப்பை முடிப்பதற்குள் ஜேன் ஆஸ்டின் , ப்ராண்டே சகோதரிகள், அலெக்சாண்டர் ட்யூமா, சார்ல்ஸ் டிக்கன்ஸ் என்று கைக்குக் கிடைத்த புத்தகங்களை எல்லாம் வாசித்திருந்தேன். விகடன், கல்கி, கலைமகள் ஆகிய பத்திரிகைகளில் வந்த கதைகளையெல்லாம் வரி விடாமல் படிப்பேன். அத்துடன் அது நிற்காது. பள்ளிக்குச் செல்லும் வழியில் தமிழ் தெரியாத என் சினேகிதிகளுக்கு லக்ஷ்மி, கல்கி, ஜெயகாந்தன் ஆகியோரின் கதைகளை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துச் சொல்வேன். அதைக் கேட்க ஆசிரியைகள்கூடக் காத்திருப்பார்கள்!

ஓடி ஓடி விளையாடு

இப்போது நினைத்துப் பார்த்தால் வியப்பாக இருக்கிறது - பள்ளிப் படிப்பு மிகச் சரளமாக நகர்ந்ததும், பத்தாம் வகுப்பில் மிக அதிக மதிப்பெண் வாங்கித் தேர்ந்ததும், எந்தவித டென்ஷனும் இல்லாமல் முடிந்தது எப்படி என்று. அந்தக் காலத்தில் தரம் குறைவாக இருந்ததா? குறைவுதான் என்று இன்றைய பாடத்திட்டங்களைப் பார்க்கும்போது மலைப்பு ஏற்படுகிறது. இன்றைய குழந்தைகள் அவர்களுக்குக் கிடைக்கும் அனுபவங்களால் அதிக புத்திசாலிகளாக இருக்கிறார்கள். சந்தேகமே இல்லை. ஆனால், அன்று பல திசைகளில் மனசு சிதறாமல் குறிப்பிட்ட விஷயங்களில் மட்டும் கவனம் குவிந்திருந்தது. விளையாட்டுக்கு என்று ஒரு வகுப்பு தினமும் உண்டு. விளையாடியே ஆக வேண்டும். நான் சற்று சோம்பேறி. ஒரு புத்தகத்துடன் ஒதுங்குவதைப் பார்த்தால் டீச்சர் உடனடியாகத் துரத்த வருவார். ‘‘வெறும் புத்தகப் புழுவாக இருந்தால் வெளி உலகத்தில் நீ சுழிப்பாய்’’ என்பார்.

கொண்டாட்டமோ கொண்டாட்டம்

எது எப்படியோ அன்று பெற்றோர்கள் அதிக நிம்மதியுடன் இருந்தார்கள். பள்ளியில் சுலபமாகச் சேர்க்க முடிந்தது. கட்டணம் மிகக் குறைவாக இருந்தது. பள்ளிச் சிறுவர்களுக்கோ வாழ்வே கொண்டாட்டமாக இருந்தது. படிப்பில் ஆசை இருந்தவர்கள் சுயமாகப் படித்தார்கள். நல்லாசிரியர்கள் அவர்களிடம் அக்கறைகொண்டு உற்சாகப்படுத்தினார்கள். எந்தத் திணிப்பும் இல்லை. நிர்ப்பந்தமும் இல்லை. இன்றைய வாய்ப்புகள் அன்று இல்லை. அதனாலேயே இன்றைய போட்டியும் அழுத்தமும் அன்று இல்லை.

ரொம்பப் படிக்காதே

எனது பள்ளிப் பருவத்துத் தாக்கமே எனது இரு குழந்தைகள் வளர்ப்பில் என்னை வழிநடத்திற்று. நல்ல வேளையாக அவர்கள் வளரும் சமயத்தில் அதிகபட்ச தொலைக் காட்சி அலைவரிசைகள், கம்ப்யூட்டர் கேம்ஸ், கைபேசிகள் என்கிற கவன ஈர்ப்புகள் இல்லை. நான் அவர்களுக்கு விளையாட்டுச் சாமான்களே வாங்கிக்கொடுத்ததில்லை. பரிசாக வந்தவையே வீட்டில் இருக்கும். நான் அவர்கள் முதல் வார்த்தை பேசுவதற்கு முன்பே புத்தகங்கள் வாங்க ஆரம்பிப்பேன். அவர்களது கவனமெல்லாம் புத்தகத்தில் செல்லும்படி கதைகள் சொல்வதும் சொற்களைப் பழக்குவதும் எங்களுக்குள் நடந்த விளையாட்டு. இருவரும் இன்றும் தீவிர வாசிப்பாளர்களாக இருப்பதற்கு அதுவே காரணம் என்று தோன்றுகிறது. அவர்கள் எனது ஆசான்களாக உணர்கிறேன். அவர்கள் பள்ளியில் படிக்கும்போது அவர்களை நான் ‘படி படி’ என்று வற்புறுத்தியதில்லை. ‘ரொம்பப் படிக்காதே’ என்று சொன்ன முட்டாள் தாய் நான்.

இன்றைய பள்ளிப் படிப்பு? நினைத்தாலே தலை சுற்றுகிறது. வாழ்க்கை இப்போது அதிக சிக்கலானது - பெற்றோர் களுக்கு. அது ஒரு பத்ம வியூகம். அதில் சிக்கிக் கொண்ட அபிமன்யுகள் நாம்.

- வாஸந்தி, மூத்த பத்திரிகையாளர், எழுத்தாளர்.

தொடர்புக்கு: vaasanthi.sundaram@gmail.com


பள்ளிப் படிப்புபெற்றோர் சூழ்நிலைஇன்றைய பள்ளிப் படிப்பு

Sign up to receive our newsletter in your inbox every day!

More From This Category

More From this Author

காயமே இது பொய்யடா!

கருத்துப் பேழை
x