

நிலவியல் அமைப்பைப் பொறுத்தவரை யேமனிலிருந்து தொலைவில் இருக்கும் நாடு என்றாலும், பிற அரபு நாடுகளைவிட யேமனுடன் நெருங்கிய உறவைக்கொண்டிருக்கும் நாடு துருக்கி. இரு நாடுகளுக்கும் இடையில் காலங் காலமாக நட்புறவு உண்டு. மதரீதியான சகோதரத்துவம்தான் இரண்டு நாடுகளுக்கு இடையிலான அன்பின் மையமாக இருக்கிறது. தற்போதைய சூழலில் ஆதரவு வேண்டி நிற்கும் யேமனுக்குத் துணைபுரிய, துருக்கிக்கு ஒரு சந்தர்ப்பம் வாய்த்திருக்கிறது.
சவுதி அரேபியாவுக்கும் ஈரானுக்கும் துருக்கி அதிபர் தாயிப் எர்டோகன் மேற்கொண்ட பயணம் யேமனில் அமைதி திரும்புவதற்கான நம்பிக்கையை விதைத்திருக்கிறது. சவுதி அரேபிய மன்னர் சல்மான் பின் அப்துல்அசிஸ் அல்- சவுதின் விருந்தினராக பிப்ரவரி 28 முதல் மார்ச் 2 வரை அந்நாட்டில் தங்கியிருந்தார். அதே சமயத்தில் எகிப்து அதிபர் அல்-சிஸியும் சவுதி அரேபியாவில் தங்கியிருந்தது குறிப்பிடத்தக்கது.
அவரது பயணத்துக்குப் பின்னர், எகிப்து தலைமையிலான கூட்டுப் படைகள் யேமனில் மார்ச் 26-ல் வான்வழித் தாக்குதல்களை நடத்தின. இந்த ராணுவ நடவடிக்கைக்கு ஆதரவாகத் துருக்கி வெளியுறவுத் துறை அமைச்சகம் அறிக்கை வெளியிட்டது. இதையடுத்து, துருக்கி அரசு மீது விமர்சனங்கள் எழுந்தன. பிரிவினைவாத அரசியலைப் பின்பற்றுவதாக எர்டோகன் மீது குற்றம்சாட்டப்பட்டது.
இதற்குப் பதிலளித்த அவர், “மதத்தின் எந்தப் பிரிவும் எங்களுக்கு முக்கியம் அல்ல. இஸ்லாம்குறித்த உண்மையும் புரிதலும் நம்பிக்கையும்தான் முக்கியம். எனது நாட்டில் பெரும்பான்மையானோர் சன்னி பிரிவைச் சேர்ந்தவர்கள். ஷியா பிரிவைச் சேர்ந்தவர்களும் உண்டு. எனினும், மார்க்கத்துடனான தொடர்பைப் பொறுத்தவரை நமது எதிர்காலத்தை வழிநடத்துவது சன்னி பிரிவோ ஷியா பிரிவோ அல்ல. முக்கியம் எதுவென்றால் இஸ்லாம்தான்” என்று குறிப்பிட்டார்.
ஈரானில் இருந்தபோதும் இதேபோன்ற அறிக்கையை வெளியிட்டார் எர்டோகன். வான்வழித் தாக்குதல்கள் தொடங்குவதற்குப் பல காலம் முன்பே அவரது பயணம் திட்டமிடப்பட்டது என்பது குறிப்பிடத் தக்கது. “மனிதன் மிகவும் மரியாதைக்குரிய பிறவி. நாம் அமர்ந்து பேசி, இந்தப் படுகொலைகளுக்கு முடிவுகட்டும் வழியைக் கண்டுபிடிக்க வேண்டும். சண்டையிட்டுக்கொண்டிருப்பவர்களை ஒன்றிணைப்போம்” என்றார் அவர். ஈரானுடனும், சவுதி அரேபியாவுடனும் தனக்கு இருக்கும் நெருங்கிய உறவைப் பயன்படுத்தி, யேமனில் அமைதியை நிலைநாட்ட துருக்கி முயற்சிசெய்கிறது.
சரி, யேமனில் அமைதியைக் கொண்டுவர துருக்கியால் முடியுமா? மத்தியக் கிழக்கு நாடுகளில் முக்கியமான விஷயங்களில் துருக்கி தலையிட்டிருக்கிறது. 8 ஆண்டுகளுக்கு முன்னர் இஸ்ரேல் மற்றும் சிரியாவுக்கு இடையிலான அமைதிப் பேச்சுவார்த்தைக்கு துருக்கி முயற்சி செய்தது. எனினும், லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலால் கடைசி நிமிடத்தில் அந்தப் பேச்சுவார்த்தை தடைபட்டது.
சிரியா அதிபர் ஆசாதுக்கு எதிராக அந்நாட்டில் கிளர்ச்சி ஏற்பட்டபோது, அவசரப்பட்டு பஷீர் அல் - ஆசாதுக்கு எதிரான நிலைப்பாட்டை துருக்கி எடுக்க வில்லை. மாறாக, அமைதியை நிலைநாட்டு மாறு வேண்டிக்கொண்டது. சிரியாவில் ஜனநாயகத்தைக் காத்து, ஸ்திரத்தன்மை யைக் கொண்டுவருமாறு ஆசாதைக் கேட்டுக் கொண்டது துருக்கி. எல்லாவற்றுக்கும் மேலாக, 16 லட்சம் அகதிகளுக்கு அடைக் கலம் அளித்திருக்கும் அந்நாடு, மதம், இனம் சார்ந்து அகதிகளைக் கையாளவில்லை. மத்தியக் கிழக்கு விவகாரங்களைப் பொறுத்த வரை, துருக்கியின் வெளியுறவுக் கொள்கை மதம் மற்றும் இனத்தை அடிப்படையாகக் கொண்டதல்ல என்பது முக்கியமானது.
உலகமெங்கும் முஸ்லிம்களிடையே வன்முறைச் சம்பவங்கள் நடப்பதற்குக் காரணமாக இருக்காமல், அன்பையும் புரிந்துணர்வையும் பேச்சுவார்த்தையையும் பரப்புவதைத்தான் துருக்கி செய்துவருகிறது. யேமனில் மட்டுமல்ல; ஒட்டுமொத்த மத்தியக் கிழக்கு நாடுகளிலும் சகோதரத்துவத்தைக் கொண்டுவருவதுதான் தற்போது மிகவும் முக்கியம்.
- தமிழில்: வெ. சந்திரமோகன்
யேமன் நாளிதழில் வெளியான தலையங்கம்