

ஜனநாயக வாக்குறுதி என்பது ஜனநாயகச் சாபமாக மாறிவிடக் கூடாது
ஊழலுக்கு எதிரான அண்ணா ஹசாரேவின் போராட்டத்திலிருந்து முளைத்ததுதான் ஆம் ஆத்மி கட்சி. 70-களில் ஜெயப்பிரகாஷ் நாராயணனின் இயக்கத்திலிருந்து தோன்றிய ஜனதா கட்சியுடன் ஆ.ஆ.க-வின் தோற்றத்தை ஒப்பிட முடியும். இரண்டு இயக்கங்களுமே பிரச்சினைகளின் அடிப்படையில் உருவானவை. அதாவது, ஊழல், மோசமான நிர்வாகம், அரசியல்ரீதியிலான துரோகம் முதலிய பிரச்சினைகளால் உருவானவைதான் இந்த இரண்டு இயக்கங்களும்.
அரசியல்வாதிகளின் குரல்களைவிட, அதிகாரத்தில் உள்ளவர்களின் குரலைவிடத் தங்களின் குரல் அதிகமாகக் கேட்கப்பட வேண்டும் என்று மக்கள் முனைந்ததன் விளைவுதான் இரண்டு போராட்டங்களும். அதிகாரத்திலும் செல்வத்திலும் மிதப்பவர்கள் ‘நமது தரப்பையும்’ கேட்க ஆரம்பித்தார்கள் என்று மக்கள் உணர்ந்ததால் இந்தப் போராட்டங்களோடு மக்கள் தங்களை ஐக்கியப்படுத்திக்கொண்டார்கள்.
ஊழலை வேரோடு அழிப்பதற்காக அண்ணா ஹசாரே, ஜந்தர் மந்தரில் உண்ணாவிரதம் இருந்தபோது அவருக்கு ஆதரவு கொடுப்பதற்காக சாதாரண மக்களோடு அதிகாரம், செல்வாக்கும் மிக்கவர்களும் போட்டிபோட்டார்கள்.
‘மற்ற தரப்புக்கும் காதுகொடுங்கள்’ என்பது திடீரென்று நடைமுறை யதார்த்தமானது. மக்களின் குரல் (அதாவது மற்ற தரப்பு) பிறரின் காதுகளில் விழ ஆரம்பித்தது. ஆனால், அண்ணா ஹசாரே இயக்கத்தைப் பொறுத்தவரை ‘மற்ற’ என்பதோடு வேறொன்றும் இருந்தது, ‘நான்’ தன்மை கொண்டது அது. மக்களின் அதிருப்திக்கு இந்த இயக்கம் ஒரு உருவம் கொடுத்தது. அதை மிகவும் திறம்படச் செய்தது அந்த இயக்கம். ஆனால், தங்களுக்குள்ளே பல தரப்புகளையும், அதிருப்திகளையும் அந்த இயக்கம் அனுமதித்ததா என்று பார்க்க வேண்டும். அந்த இயக்கத்துக்கென்று ஒரு அணி இருந்தது. அவர்களில் அர்விந்த் கேஜ்ரிவால், பிரசாந்த் பூஷண், கிரண் பேடி ஆகியோருக்கே அதிக முக்கியத்துவம் கிடைத்தது. இயக்கத்தின் பங்காளர்கள் என்பதைவிட இவர்களெல்லாம் துணைக் கோள்கள் போலவே தோன்றினார்கள். மாற்றுக் கருத்தாளர்களில் அண்ணாவின் இயக்கத்தின் வெளியே இருந்தவர்கள் மேடையில் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்துகொண்டு தங்கள் ஆதரவைத் தெரிவிக்க மட்டுமே அனுமதிக்கப்பட்டார்கள். ஆக, தனிநபர் இயக்கமாக மாறிக்கொண்டிருந்தது அது.
குருவும் சீடனும்
ஜெயப்பிரகாஷ் நாராயணுடன் அல்ல, வினோபா பாவேயுடனே ஒப்பிடப்பட்டார் அண்ணா. வினோபா பாவேக்கு ஜெயப்பிரகாஷ் நாராயணன் எப்படியோ அப்படியே அண்ணா ஹசாரேக்கு அர்விந்த் கேஜ்ரிவால் பார்க்கப்பட்டார். அதாவது குருவின் பாதை குறித்துப் பொறுமையிழந்த சீடன். பார்த்துக்கொண்டே இருங்கள், தனது குருவின் நிழலிலேயே இருக்கப்போகிறவர் அல்ல அர்விந்த் கேஜ்ரிவால். ஆகவேதான், அண்ணா தனது தளபதியாக அர்விந்த் கேஜ்ரிவாலை அறிவிக்காதது குறித்து யாருக்கும் வியப்பு ஏற்படவில்லை.
அர்விந்த் கேஜ்ரிவாலை எளிதில் அடக்கிவிட முடியாது, எப்போதும் கற்றுக்கொள்ளத் தயாராக இருப்பவர் அவர், கற்றுக்கொண்டதை உடனேயே செயலாக்கத் துடிப்பவர் அவர் என்பதெல்லாம் ஆரம்ப நாட்களிலிருந்தே அவரை அறிந்திருப்பவர்களுக்குத் தெரியும். ஆனால், ஒரு அணியோடு சேர்ந்து அவர் செயல்படுபவரா? அவரைப் போன்ற சிந்தனையுடையவர்கள் ஆனால், அவருக்கு அடங்கியிருக்காமல் சுயமாகச் சிந்திக்கக் கூடியவர்கள், துணிச்சலானவர்கள் போன்றோருடன் தனக்குக் கிடைத்த புது மேடையை அவர் பகிர்ந்துகொள்வாரா?
மதிப்புக்குரிய மாற்றுக் கருத்தாளரும், சுதந்திரச் சிந்தனையாளருமான பிரசாந்த் பூஷணுக்கு இந்த புதிய கட்சியில் இடம் கிடைத்தபோதும், யோகேந்திர யாதவ் கட்சியில் சேர்ந்துகொண்டபோதும் அணியோடு சேர்ந்து செயல்படக் கூடிய ஒருவர் போலவே தோன்றினார் அர்விந்த் கேஜ்ரிவால். கடற்படைத் தலைமை தளபதி (ஓய்வு) எல். ராமதாஸ் இந்தக் கட்சியின் மனசாட்சிக் காவலராக ஆனது நம்பிக்கை தரும் மற்றொரு அறிகுறி.
மற்ற தரப்புக்கு இடம்கொடுத்தல்
‘மற்ற தரப்பின் குரலுக்குக் காதுகொடுத்தல்’ என்பது மத்திய அரசில் புதிதாக ஆட்சியைப் பிடித்த கட்சிக்கும் சரி இன்றைய காங்கிரஸிலும் சரி காணக் கிடைக்காத ஒன்று. பாஜகதான் நரேந்திர மோடி, நரேந்திர மோடிதான் பாஜக. அவர்தான் ஜனநாயக எதேச்சாதிகாரி. காங்கிரஸில் கிட்டத்தட்ட 40 ஆண்டு காலமாக நிலவும் ‘தொண்டரடி’ மனப்பான்மை காரணமாக அந்தக் கட்சியின் தலைவியும் அவரது மகனும் வைத்ததே சட்டம். இடதுசாரிக் கட்சிகளோ அவற்றுக்கே உரிய முரணில் சிக்கிக்கொண்டிருக்கிறது. ‘மற்ற குரலை’ அல்ல ‘பொலிட்பீரோ’ குரலை மட்டுமே கேட்டு இன்று உறைந்துபோயிருக்கிறார்கள். சிபிஐ, சிபிஐ-எம் ஆகிய இரண்டுக்குமே தகவல் அறியும் உரிமைச் சட்டம் என்பது விருப்பமான ஒரு சட்டமல்ல என்பதை நினைவில் கொள்ள வேண்டும். பிராந்தியக் கட்சிகளும் உள்ளூர் குறுநில மன்னர்களின் தலைமையின் கீழ்.
இந்நிலையில் ‘மாற்றுக் குரல்’ என்று சொல்வதற்குத் தேவையான அனைத்தையும் ஆ.ஆ.க. கொண்டிருக் கிறது. குறிப்பாக, இரண்டாம் முறையாக நடந்த டெல்லி தேர்தலில் வெற்றி பெற்ற பிறகு இதை உணர முடிந்தது. ஆனால், இதுவும் வழக்கமான குரல்தான் என்ற நிலையை, அதாவது அதன் தலைவரின் குரல்தான் என்ற நிலையை நோக்கி ஆ.ஆ.க. சென்றுகொண்டிருக்கிறது. அர்விந்த் கேஜ்ரிவால் ஒரு சர்வாதிகாரியல்ல; உறுதியான சித்தம் கொண்டவர் என்றே நாம் நம்ப விரும்புகிறேன். ‘உறுதியான’ தலைவர்களை வெறுக்கும் இந்திய மக்கள் ‘எதேச்சாதிகாரி’களை வெறுப் பார்கள் என்பதைத் தெரிந்துகொள்ளும் அளவுக்கு புத்திசாலிதானே அர்விந்த் கேஜ்ரிவால்?
ஜனநாயக வாய்ப்பும் சாபமும்
ஆனால், ஜனநாயக வாக்குறுதி என்பது ஜனநாயகச் சாபமாக மாறிவிடக் கூடாது. டெல்லி மக்கள் அர்விந்த் கேஜ்ரிவாலுக்கு வாக்களித்து வெற்றிபெறச் செய்திருக் கிறார்கள், இதை நாம் ஒப்புக்கொள்ள வேண்டும். அவரது கட்சிக்கல்ல; அவருக்குத்தான் இரண்டாவது வாய்ப்பை மக்கள் அளித்திருக்கிறார்கள். மிகமிகப் பிரபலமான தலைவர் ஒருவருக்கு ஆதரவாளர் குழு ஒன்று கட்சிக்குள் இருப்பதுபோல, இடித்துரைக்கக் கூடிய, அறிவுரை சொல்லக் கூடிய மூத்தோர் குழு ஒன்றும் அவருக்கு இருப்பது அவசியம். அர்விந்த் கேஜ்ரிவாலுக்கு வாயிற்காவலர்கள் இருக்கிறார்கள். மனசாட்சிக் காவலர்களும் அவருக்குத் தேவை.
கைத்தட்டல் என்பது காதுக்கினிய இசையாக இருக்கலாம், ஆனால், ஆலோசனை என்பதுதான் ஆரோக்கியத்துக்கான கசப்பு மருந்து. பிரசாந்த் பூஷண், யோகேந்திர யாதவ், கடற்படைத் தலைமை தளபதி (ஓய்வு) ராமதாஸ் ஆகியோரை ஆ.ஆ.க-வின் பதவிகளிலிருந்து நீக்கியதால் கட்சியில் தனக்கு இருக்கும் ‘பிடி’யை மட்டும் அர்விந்த் கேஜ்ரிவால் பலவீனப்படுத்திக்கொள்ளவில்லை, தேச மக்களின் அரசியல்ரீதியிலான கனவுகளின் மீது அவருக்கிருந்த ‘பிடி’யையும் பலவீனப்படுத்திக்கொண்டுவிட்டார்.
சரி, யோகேந்திர யாதவும் பிரசாந்த் பூஷணும் ராம தாஸும் இப்போது என்ன செய்ய வேண்டும்? கட்சிக்குள் இருக்கும் சகிப்பின்மையைப் பற்றி அவர்கள் தெளிவாக எடுத்துரைக்க வேண்டும். அதே நேரத்தில் அந்தக் கட்சியைத் தாண்டி வெளியே இருப்பவர்களோடு, அதாவது ஆ.ஆ.க-வைவிட மோசமான சகிப்பின்மை கொண்டிருப்பவர்களோடு கைகோத்துவிடக் கூடாது.
ஆ.ஆ.க-வில் காணப்படுவதைவிட மிக மோசமான சகிப்பின்மை இந்தியாவில் தற்போது நிலவுகிறது. அரசியல் மாச்சர்யம், மதமாச்சர்யம் போன்றவற்றோடு புதுவிதமான பாசிசம் ஒன்றும் உருவாகியிருக்கிறது. தொழில்நுட்ப-பொருளாதார ஏகபோகங்களைச் சேர்த்துக்கொண்டு போலி ‘தேசியவாத’ சர்வாதிகாரத்தை உருவாக்கும் பாசிசம் அது. இவைதான் ஆ.ஆ.க. கட்சிக்குள் காணப்படும் சகிப்பின்மையை விட மிகவும் மோசமானவை. ஆம் ஆத்மி கட்சியின் அதிருப்தியாளர்களின் முகச்சுளிப்பு, பெரும் எதேச்சாதிகாரத்தின் ஆர்ப்பாட்டமான சிரிப்பில் போய்க் கலந்துவிடக் கூடாது.
- கோபாலகிருஷ்ண காந்தி, (மகாத்மா காந்தியின் பேரன்), அஷோகா பல்கலைக்கழகத்தின் மதிப்புமிகு பேராசிரியர்.
சுருக்கமாகத் தமிழில்: ஆசை