Published : 19 Mar 2015 09:50 AM
Last Updated : 19 Mar 2015 09:50 AM

மாபெரும் உப்பு வேலியும் மகத்தான பயணியும்

ஆங்கிலேயர் ஆட்சியில் இந்தியாவின் குறுக்கே ஒரு பெரிய வேலி அமைக்கப்பட்டிருந்தது என்றும் அதுவே உலகிலேயே மிகப் பெரிய புதர்வேலி என்றும் அது திடீரென மறைந்துவிட்டது என்றும் யாராவது சொன்னால் நம்மால் நம்ப முடியுமா? ஜெயமோகன் எழுதிய ‘உலகின் மிகப் பெரிய வேலி’ எனும் கட்டுரையைப் படித்தபோது என்னால் நம்ப முடியவில்லை. அந்தக் கட்டுரை ராய் மாக்சம் எனும் ஆங்கிலேயர் எழுதிய ‘தி கிரேட் ஹெட்ஜ் ஆஃப் இண்டியா’எனும் புத்தகத்தை அறிமுகப்படுத்தியது.

உப்புவேலி

ராய் மாக்சம் ஒரு அசாதாரணமான மனிதர். லண்டனில் பழைய புத்தகங்கள் விற்கும் கடை ஒன்றில் அவர் புரட்டிய புத்தகத்தில் இருந்த ஒரு அடிக்குறிப்பு, ஒரு பெரும் தேடலின் துவக்கமாக அமைந்தது. அதில் ஒரு ஆங்கிலேய அதிகாரி இந்தியாவில் இருந்த அந்த 2,500 கி.மீ. தூரமுள்ள மாபெரும் வேலிகுறித்து ஓரிரு வரிகள் எழுதியிருந்தார். அந்த வேலி குறித்து அதுவரை கேள்விப்பட்டிராத ராய், தான் வேலை பார்த்துக்கொண்டிருந்த நூலகத்திலும் இங்கிலாந்தின் ஆவணக் காப்பகங்களிலும் பல நாட்களைச் செலவிட்டு அந்த வேலிகுறித்த தகவல்களையும் வரைபடங்களையும் தேடினார். நேர்க்கோட்டில் வைத்தால் பல மைல்தூரம் நீளும் ஆவணங்களுக்கு மத்தியில், புதர்வேலிகுறித்த தகவல்களைக் கண்டெடுத்தார். இந்தியாவின் மையப் பகுதிகளில் வசதிகளற்ற குக்கிராமங்களில் தங்கியும் பயணித்தும் மாதக் கணக்கில் தேடி, மூன்று ஆண்டுகளுக்குப் பின் அந்த வேலியின் மிச்சத்தைக் கண்டுபிடித்தார் ராய்.

ஆங்கிலேய ஆட்சியில் ஒட்டுமொத்த இந்திய நிலப்பரப்பும் மூன்று பெரும் மாகாணங்களாகப் பிரித்தாளப்பட்டது. மதராஸ், பாம்பே மற்றும் வங்காளம். வங்காள மாகாணத்துக்குள் வட இந்தியாவின் பெரும் பகுதி உள்ளடங்கியிருந்தது. வங்காள விரிகுடாவில் கங்கை, யமுனை உள்ளிட்ட பல நதிகள் கலப்பதால் வங்காள மாகாணத்தின் கடல் பரப்பில் உப்பு தயாரிப்பது கடினமாக இருந்தது. ஒட்டுமொத்த வடகிழக்கும் உப்புக்காக குஜராத் அல்லது பஞ்சாப் பகுதிகளை நம்பியிருந்தது. வங்காளத்தின் ஒட்டுமொத்த உப்புத் தயாரிப்பையும் கையகப்படுத்திய ஆங்கிலேயர்கள் உப்பின் மீது கடுமையான வரி விதித்தார்கள். பிற மாகாணங்களில் நில வரியை அதிகப்படுத்தி, நில உரிமையாளர்களிடமிருந்து பெறப்பட்ட வரி வங்காளத்தில் உப்பின் மீது விதிக்கப்பட்டு ஏழைகளும் பணக்காரர்களும் ஒரே விகிதத்தில் வரியைச் செலுத்தும்படிக்கு அமைந்தது. இதன் விளைவாக ஒரு குடியானவர் தனது குடும்பத்தின் ஒரு வருட உப்புத் தேவைக்காக இரண்டு மாதச் சம்பளத்தைத் தர வேண்டியிருந்தது. சில நேரங்களில் இது ஆறு மாதச் சம்பளமாகவும் இருந்தது.

2,500 கி.மீ. நீளம், 12,000 காவலர்கள்

வங்கத்தில் உப்பின் விலை அதிகமாய் இருந்ததால், பிற மாகாணங்களிலிருந்து உப்பு கடத்தப்படுவது சகஜமாக இருந்தது. அதைத் தடுக்க ஆங்கிலேயர் மிகப் பெரிய எல்லையொன்றை உருவாக்கினார்கள். முதலில் காய்ந்த புதர்களைக் கொண்டு ஒரு வேலியை உருவாக்கினார்கள். பின்னர் முட்செடிகளை நட்டுக் கடத்தல்காரர்கள் நுழைய முடியாத உயிர்வேலியை உருவாக்கினார்கள். மொத்தம் 2,500 கி.மீ. நீளமிருந்த எல்லையில் 12,000 பேர் காவல் நின்றார்கள்.

இந்த வேலி உருவான கதையையும் அதை நிர்வகிக்க ஆன செலவுகள், கட்டமைப்புகள் குறித்த பல தகவல்களையும், வேலியைச் சுற்றி நிகழ்ந்த கடத்தல்கள், கலகங்கள்குறித்த பல தகவல்களையும் உள்ளடக்கியதுதான் ‘தி கிரேட் ஹெட்ஜ் ஆஃப் இண்டியா’ புத்தகம் (தமிழில்: ‘உப்பு வேலி’என்று வெளியாகியிருக்கிறது). கூடவே, உலகமே மறந்துபோன இந்த வேலிகுறித்த தகவல்களையும் ராய் மாக்சம் தேடி அறிந்துகொண்ட தகவல்களையும் உள்ளடக்கியது இந்த நூல்.

உப்பின் விலை மலைபோல உயர்ந்ததால் மக்கள் உப்பில்லாமல் நோயாளிகளாய் ஆனார்கள் என்று குறிப்பிடுகிறார் ராய். அந்தக் காலகட்டங்களில் நிகழ்ந்த வங்காளப் பெரும் பஞ்சங்களில் உப்புச் சத்துக் குறைபாட்டால் இறந்தவர்களின் எண்ணிக்கை கணிசமானதாகவே இருந்திருக்கும் என்கிறார் ராய்.

ராய், உப்பு வேலியைத் தேடி மத்தியப் பிரதேசத்தின் கிராமங்களுக்குச் சென்றார். பின்னர், கொள்ளையர்கள் சூழ்ந்த சம்பல் பள்ளத்தாக்குப் பகுதியில் யமுனை நதிக்கரை ஓரமாக நடந்து தேடினார். யமுனையில் முதலையைக் கண்டு ஹிந்தியில் கதறியது, கைகளும் காலும் பிணைக்கப்பட்ட கைதியுடன் ரயிலில் பயணித்தது, மொழி தெரியாத மக்களுடன் பேசிப் பழகியது, உட்கார இடமில்லாத நெருங்கிப் பிதுங்கும் வண்டிகளில் பயணித்தது, இந்திய அரசியல்வாதிகள், அதிகாரிகள்குறித்த மிக நுட்பமான அவதானிப்புகள் போன்றவற்றுடன் ராய் மாக்சமின் அனுபவக் குறிப்புகள் ஒரு துப்புத் துலக்கும் நாவலின் சுவாரசியத்துடன் அமைந்துள்ளன. உதாரணமாக, அவரைச் சந்திக்க ஒரு சந்நியாசி வருகிறார். அவர் ராய் தேடும் வேலியைக் காண்பிப்பதாகச் சொல்கிறார். ராய் அவரிடம் சந்நியாசியான உமக்கு எப்படி இதெல்லாம் தெரியும் என்கிறார். சந்நியாசி அலட்டலில்லாமல் “நான் எப்போதுமே சந்நியாசியாக இல்லையே. முன்பு நான் ஒரு கொள்ளைக்காரனாக இருந்தேன். அப்போது இந்த நிலங்களையெல்லாம் சுற்றி வந்தேன்.’ என்கிறார். இதுபோல ராய் சந்திக்கும் விசித்திரமான பின்னணிகளைக் கொண்ட மனிதர்கள் ஏராளம்.

பூலான் தேவியும் ராய் மாக்சமும்

‘சம்பல் கொள்ளைக்காரி’ என அறியப்பட்ட பூலான்தேவி, சிறையிலிருந்து தேர்தலில் போட்டியிடப்போகிறேன் என அறிவித்தது இங்கிலாந்தில் பரபரப்பான செய்தியாக வெளியிடப்பட்டது. அதைக் கண்ட ராய், பூலான்தேவிக்கு ஒரு கடிதம் எழுதினார். எழுதப் படிக்கத் தெரியாத பூலான்தேவியிடமிருந்து அவர் பதில் கடிதத்தை எதிர்பார்க்கவுமில்லை. பதில் கடிதம் வந்தது. அதிலிருந்து தொடங்கிய நட்பு பூலான்தேவி இறக்கும் வரைக்கும் தொடர்ந்தது. பூலான்தேவியின் முக்கிய ஆலோசகராக ராய் செயல்பட்டிருக்கிறார். பூலான்தேவியுடனான நட்பையும் பூலானின் வாழ்கையையும் விவரிக்கும் ‘அவுட்லா- இண்டியா’ஸ் பேண்டிட் குயின் அன்ட் மீ’எனும் புத்தகத்தையும் எழுதியுள்ளார். இரண்டு நாவல்கள் உட்பட மொத்தம் 5 நூல்களை ராய் மாக்ஸம் எழுதியிருக்கிறார்.

இந்தியக் காலனிய வரலாற்றில் ஆர்வம் கொண்ட ராய் அடுத்ததாக எழுதிவரும் புத்தகத்துக்கு ‘இந்தியாவைத் திருடிய கதை’ (தி தெஃப்ட் ஆஃப் இண்டியா) எனப் பெயரிட்டுள்ளார். வாஸ்கோடகாமா தொடங்கி ராபர்ட் கிளைவ் வரைக்கும் நீளும் ஒரு பட்டியல் வழியாக இந்தியா ஐரோப்பியர்களால் எப்படிச் சுரண்டப்பட்டது என்பதை விவரிக்கும் புத்தகம் அது.

உலகிலேயே உப்பு வேலியைத் தேடிச் சென்ற ஒரே மனிதர் ராய், இந்திய வரலாற்றின் தொலைந்துபோன அத்தியாயம் ஒன்றை நம் முன்னே எடுத்துக்காட்டி, வரலாறு எப்படி மிக எளிதில் மறக்கப்படுகிறது என்பதை உலகத்துக்கே உணர்த்தியவர். நாம் செல்லாத பயணங்களைச் செல்ல, நாம் அறிந்திராத கதைகளையும் வரலாற்றையும் சொல்ல, நாம் கண்டிராத காட்சிகளைக் கண்டுகூற, நாம் உணர்ந்திராத உணர்வுகளைத் தட்டி எழுப்ப, நம் ஆழ்மனதில் விதைகளை விதைத்துப் பசுமையாக்க நமக்கு எப்போதும் எழுத்தாளர்கள் தேவைப்படுகிறார்கள். அப்படிப்பட்ட முக்கியமானவர்களில் ஒருவர் ராய் மாக்சம்.

- சிறில் அலெக்ஸ்,

எழுத்தாளர், ராய் மாக்சமின் நூல் ‘உப்பு வேலி’ என்ற தலைப்பில் இவரது மொழிபெயர்ப்பில், எழுத்து பிரசுரத்தின் வெளியீடாகச் சமீபத்தில் வெளியிடப்பட்டிருக்கிறது. தொடர்புக்கு: cyril.alex@gmail.com

Sign up to receive our newsletter in your inbox every day!

 
x