Published : 11 Mar 2015 08:53 am

Updated : 11 Mar 2015 18:16 pm

 

Published : 11 Mar 2015 08:53 AM
Last Updated : 11 Mar 2015 06:16 PM

கி.பி. அரவிந்தன்: உறைபனிக் கால கட்டியக்காரனின் மரணம்புலம்பெயர்ந்த ஈழத் தமிழ் எழுத்தாளர் கி.பி. அரவிந்தனுக்கு அஞ்சலி.கிறிஸ்தோபர் பிரான்சிஸ் என்னும் இயற்பெயரை கொண்ட எழுத்தாளரும் போராளியுமான கி.பி. அரவிந்தன் மார்ச் 8 அன்று பாரீஸில் காலமானார். இலங்கையின் வரலாற்றுப் புகழ் மிக்க நெடுந்தீவில் பிறந்த இவர், 62 ஆண்டுகள் மட்டுமே வாழ்ந்திருக்கிறார். ஆனால், நூறாண்டுகள் வாழ்ந்திருந்தால்கூட பெற முடியாத அனுபவத்தை 62 ஆண்டுகளிலேயே இவர் பெற்றுவிட்டார். அவர் வாழ்ந்த அன்றைய நாட்களில் ஈழத்துச் சூழல், ரத்தத்தை சிந்த வைத்து, ஆழ்ந்த அனுபவத்தைக் கற்றுத்தந்திருக்கிறது.

அரசியல் அனுபவத்தை இலக்கிய அனுபவமாக மாற்ற, சிலருக்கு மட்டுமே தெரிந்திருக்கிறது, லத்தீன் அமெரிக்கப் பெருவெளியில், இவ்வாறான தனித்துவங் களைக் காண முடியும். அரசியல் செயல்பாடு, இலக்கியச் செயல்பாடாக மாறி, அரசியல் விடுதலைக்கான விதைகள் அங்கு,உற்பத்தியாகின்றன. அரவிந்தனும் அர்ப்பணிப்புக்குப் பின்னர், அரசியல் கதவுகளைத் திறந்து, இலக்கியப் பெருவழியைச் சென்றடைந்து, விடுதலை முழங்கங்களைக் கடைசி நாள் வரை முழங்கி, தனித்துவத்தை வெளிப்படுத்திக்கொண்டிருந்தார்.


மரணத்தை அடிக்கடி முத்தமிட்டவர்

மார்க்சியத்தின் மீது தீராத ஈடுபாடு கொண்ட பல்கலைக்கழக மாணவப் பருவத்திலிருந்து, ஈழ விடுதலை நோக்கித் தனது பயணத்தை வேகப்படுத்திக்கொண்டார் அரவிந்தன். இதன் பின்னர் அமைந்த இவரது போராட்ட அரசியல் வாழ்க்கை, யாராலும் நினைத்துப் பார்க்க முடியாத அதிபயங்கரங்களைக் கொண்டிருந்தது. மரணத்துக்கு அருகில் அடிக்கடி சென்று திரும்பினார். சயனைட் அருந்தி முதலில் உயிர் தியாகம் செய்த, விடுதலைப் போராளி சிவகுமாரனுடன் தனது போராட்டப் பயணத்தைத் தொடங்கியவர்தான் அரவிந்தன்.

1972 - அரசியல்சட்டத் திருத்தம்

இலங்கை அரசியலில் 1972-ம் ஆண்டு ஓர் முக்கியமான காலகட்டம். அரசியல் சட்டம், தமிழ் மக்களுக்கு எதிரான வஞ்சகத்துடனேயே திருத்தப்பட்டது. அரசியல் சட்டம் தமிழ் மக்களுக்கு துரோகம் இழைத்துவிட்டது என்ற வாசகங்கள் அடங்கிய துண்டறிக்கைளை அரவிந்தனும் அவரது தோழர்களும் விநியோகம் செய்தார்கள். பயங்கரவாதத்தோடு தொடர்புப்படுத்தப்பட்டு அவர் கைதுசெய்யப்பட்டார். மீண்டும் 1978-ம் ஆண்டு, இலங்கை கப்பற்படையால் கைதுசெய்யப்பட்டு, சித்ரவதைக்குப் பின்னர் சிறையில் அடைக்கப்பட்டார்.

‘லு மெஸாஜெ லு இவ’ (ஓர் உறைபனிக் காலக் கட்டியக்காரன்) என்னும் இவரது கவிதை நூல் பிரஞ்சு மொழியில் ‘றிவநெவ்’ என்னும் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டு, அண்மையில் பெரும் வரவேற்பைப் பெற்றிருக்கிறது. அரசியலை மானுட முகம் கொண்டதாக மாற்றிக்கொள்வதற்குக் கவிதையை ஆயுதமாகத் தேர்வு செய்துகொண்டவர்தான் அரவிந்தன். ‘இனியொரு வைகறை’, ‘முகங்கொள்’, ‘கனவின் மீதி’ ஆகிய கவிதைத் தொகுப்புகள் இதில் மிகவும் புகழ் பெற்றவை. பல்வேறு காலப் பின்னணிகளைக் கொண்ட இவரது பேட்டிகள் ‘இருப்பும் விருப்பும்’ என்ற தலைப்பில் நூலாக வெளிவந்துள்ளது.

சமூக மாற்றத்துக்கான விடுதலையை நோக்கிய இவரது படைப்புகள், ஆழத்தையும் விரிவையும் உள்ளடக்கியவை. குறி தவறாமல் இலக்குகளை நோக்கிப் பாய்ந்து செல்லும் எழுத்தின் வீரியம் இவருக்கு வாய்த்திருக்கிறது. ஆனால், எழுத்துகள் ஈழத்தின் ஏக்கங்களையும் மண்ணின் மணத்தையும் இயல்பாகவே பெற்றுள்ளன. இன்றைய காலத்தில் மறைந்துபோன ஈழத்துப் பழமொழிகள் பல இயல்பாகவே இவரது எழுத்தில் வந்துகொண்டேயிருக்கும்.

நாயைப் பிடிங்கோ

‘பிச்சை வேண்டாம் நாயைப் பிடிங்கோ’ என்ற வரிகள் இவரது கட்டுரை ஒன்றில் இடம்பெற்றிருந்தது. இதன் அர்த்தத்தை என்னால் புரிந்துகொள்ள இயலவில்லை என்றாலும், இது ஒரு பழமொழி என்பதை மட்டும் புரிந்துகொண்டேன். அதன் உண்மை அர்த்தத்தை உணர்ந்துகொண்டபோது நான் பெரிதும் ஆடிப்போனேன். ஒருவன் பிச்சை கேட்டு வருகிறான். வீட்டுக்காரன் பிச்சை போடவில்லை. அதற்குப் பதிலாக, கட்டியிருந்த நாயை அவிழ்த்து, ஏவி விடுகிறான். “பசிக்கும் வயிற்றுக்குப் பிச்சைக் கேட்டுதான் வந்தேன். எனக்குப் பிச்சை வேண்டாம். நாய்க் கடியிலிருந்து தப்பித்தால் போதும், நாயைப் பிடியுங்கோ” என்கிறான் பிச்சைக்காரன். இந்திய அணுகுமுறையோடு ஒப்பிட்டு, இந்தப் பழமொழியைப் பயன்படுத்தியிருந்தார் அரவிந்தன்.

ஆற்றுப்படுத்தட்டும் அப்பால் தமிழ்!

‘அப்பால் தமிழ்’, இவர் உருவாக்கிய இணைய மின்னிதழ். இதன் குறிக்கோள் வாசகம் நம்மைப் பெரிதும் யோசிக்க வைக்கிறது.

“அப்பாலும் விரிகின்றது வேற்றுமை சூழல். அணையாமல் எரிகின்றது நெஞ்சினில் தணல். ஆற்றுப்படுத்தட்டும் அப்பால் தமிழ்.” இது உலகளாவிய தமிழ் மக்களுக்கு விடுக்கப்பட்ட அழைப்பாகவே தோன்றுகிறது. 2012-ல் பாரீஸ் நகரில் அவரது வீட்டில் நான் தங்கியிருந்தபோது, இதே உணர்வை அழுத்தமாக வெளிப்படுத்தினார் அரவிந்தன்.

குடும்பத்துடன் பல ஆண்டுகள் பிரான்சில் வசித்த போதும், குடியுரிமை பெறவில்லை. பனை மரக் காடுகளடர்ந்த, அந்த ஈழ மண்ணில் இறுதி மூச்சை விட வேண்டும் என்பதே அவரது கனவாக இருந்திருக்கலாம்.- சி. மகேந்திரன், ‘தாமரை’ இதழாசிரியர், தொடர்புக்கு: singaram.mahendran@gmail.com


புலம்பெயர்ந்த தமிழர்ஈழத் தமிழ் எழுத்தாளர்கி.பி. அரவிந்தன்எழுத்தாளருக்கு அஞ்சலிகிறிஸ்தோபர் பிரான்சிஸ்நெடுந்தீவுஈழ எழுத்தாளர்

Sign up to receive our newsletter in your inbox every day!

More From This Category

More From this Author

குட்பை காம்ரேட்!

கருத்துப் பேழை
x