Published : 20 Mar 2015 09:17 AM
Last Updated : 20 Mar 2015 09:17 AM

நாடு திரும்பிய இலங்கைத் தமிழர்களின் வேதனை

போர் முடிந்து இத்தனை ஆண்டுகள் ஆகியும் மறுகுடியமர்வு என்பது பெரும் சிக்கலாகவே இருக்கிறது

“யாழ்ப்பாணத்தில் இருக்கவே பிடிக்க வில்லை; வாழ்க்கை மிகவும் கடினமாகிவிட்டது. வாய்ப்பு கிடைத்தால், பி.காம். பட்டப்படிப்பை முடிக்க மீண்டும் தமிழ்நாட்டுக்குத் திரும்பிவிடுவேன்” என்கிறார் பி. ஆல்பிரட் (23). ஆல்பிரட்டின் குடும்பம் இலங்கையை விட்டு 1998-ல் தமிழகத்துக்குச் சென்றது. ராமேசுவரத்துக்கு அருகில் உள்ள மண்டபம் முகாமில் தங்கியது. இலங்கையில் போர் முடிந்த 2 ஆண்டுகளுக்குப் பிறகு 2011-ல் நாடு திரும்பியது.

“நான் ராமநாதபுரத்தில் படித்தேன்; என்னுடைய நண்பர்கள் அனைவரும் அங்கிருக்கிறார்கள். யாழ்ப்பாணத்தில் எனக்கு யாரையும் தெரியாது. தமிழ்நாட்டில் நீண்ட காலம் இருந்துவிட்டுத் திரும்பிய நான், தமிழ் பேசுவதை இங்குள்ளவர்கள் கேலி செய்கிறார்கள். தமிழை இவ்வளவு கொச்சையாகப் பேசுகிறாயே என்று கேட்கிறார்கள்” என்றும் அவர் வருத்தப்படுகிறார். பட்டப் படிப்பை முடிக்க முடியவில்லை. பசையூர் என்ற இடத்தில், மீனவரான தந்தைக்கு அவருடைய தொழிலில் இப்போது உதவி செய்துவருகிறார் ஆல்பிரட்.

ஆல்பிரட்டின் தாய்க்கு, ‘என்றாவது ஒரு நாள் இலங்கைக்குத் திரும்புவோம்’ என்ற கனவு இருந்தது. ஆனால் தற்போது, “இலங்கைக்குத் திரும்பி வருவது என்ற முடிவின் மூலம் அவர்களுடைய எதிர்காலத்தைப் பாழாக்கிவிட்டேன் என்று பிள்ளைகள் என்னைக் குற்றம்சாட்டுகிறார்கள்” என்று வருத்தத்துடன் கூறுகிறார் ஆல்பிரட்டின் தாய். “இந்தியாவில் எமக்கு வேண்டிய வசதிகள் எல்லாம் கிடைக்கலாம். ஆனால், அது எம்முடைய வீடு அல்ல; இதுதான் (யாழ்ப்பாணம்) எம் வீடு” என்கிறார்.

இந்தியா செல்வதற்கு முன்பு தாங்கள் வசித்த வீடு பீரங்கித் தாக்குதலால் முழுக்கச் சேதம் அடைந்திருப்பது கண்டு மிகவும் கலங்கிவிட்டார். இனி வேறு வழியே இல்லை, தொடக்கத்திலிருந்து ஆரம்பிக்க வேண்டியதுதான் என்கிறார்.

“இதையெல்லாம் தவிர்த்திருக்கலாம். நானும் என்னுடைய படிப்பை முடித்துவிட்டு தமிழ்நாட்டிலேயே வேலைக்குச் சென்றிருப்பேன்” என்கிறார் அவருடைய மகள். அவர் வீடியோ எடிட்டிங் படிப்பைப் பாதியில் விட்டுவிட்டு வந்திருக்கிறார். இந்தக் குடும்பத்தில் உள்ளவர்களின் மனப் போராட்டங்கள்தான் இந்தியாவி லிருந்து இலங்கை திரும்பும் ஆயிரக் கணக்கான இலங்கைத் தமிழர்களின் நெஞ்சங்களிலும் நிகழ்ந்து கொண்டிருக்கிறது. சொந்த ஊர், சொந்த வீட்டுக்குப் போக வேண்டும் என்ற ஆசை ஒரு புறமும், எந்தவித உதவியும் அரசிடமிருந்தும் உள்ளூரிலிருந்தும் கிடைக்காமல், வேலையும் வருமானமும் இல்லாமல் இங்கு வந்து சிக்கிக்கொண்டோமே என்ற கவலையும் அவர்களை வாட்டுகிறது.

மறுகுடியமர்வே பெரும் போராட்டம்

இலங்கையில் இந்திய அமைதி காப்புப் படை தனது நடவடிக்கைகளைத் தொடங்கியதும் நம்பிக்கை ஏற்பட்டு, ஏராளமான இலங்கைத் தமிழர்கள், இனக் கலவரங்களை மறந்து மீண்டும் இலங்கைக்குத் திரும்பத் தொடங்கினார்கள். ஆனால், அதற்குப் பிறகும் மோதல்கள் தீவிரம் அடைந்ததால் மீண்டும் தமிழ்நாட்டுக்கு அகதிகளாகத் திரும்பினார்கள். போர் முடிந்த பிறகு 2009 - 2014 ஆண்டுகளுக்கு இடையில் 9 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் இலங்கைக்குத் திரும்பினார்கள். தமிழ்நாட்டில் இப்போது தங்கியுள்ள 1 லட்சத்துக்கும் மேற்பட்ட இலங்கைத் தமிழர் களைத் திருப்பி அனுப்புவது தொடர்பாக இந்திய அரசுக்கும் இலங்கைக்கும் இடையில் பேச்சுகள் தொடங்கியுள்ளன. இவர்களில் 65,000 பேர் தமிழகத்தில் அரசு சார்பில் நடைபெறும் 110 முகாம்களில் தங்கியுள்ளனர். எஞ்சியவர்கள் சொந்த ஏற்பாட்டில் தங்கியுள்ளனர்.

110 முகாம்கள்

1983-ல் இனக் கலவரம் முற்றத் தொடங்கியது முதல் இலங்கையைவிட்டு வெளியேறிய தமிழர்கள் அனைவரும் தமிழ்நாட்டின் 110 இடங்களில் அமைக்கப்பட்ட முகாம்களில் தங்கினார்கள். இந்தியாவில் தங்களுக்குக் கிடைத்த ஆதரவைப் பாராட்டும் தமிழர்கள், முகாம்களில் குடும்பங்களுக்கான இடங்கள் போதாமல் இருந்ததையும் நினைவுகூர்கின்றனர். இடம் போதாதது மட்டுமல்ல, செலவுகளையும் சமாளிக்க முடியாமல் இருந்தது என்கிறார் 2011-ல் இலங்கை திரும்பிய வாசுகி.

2012-ல் இலங்கை திரும்பிய பி. லக்சலா (27) கொஞ்சம் கடன் வாங்கி சிறிய மளிகைக் கடையை வைத்திருக்கிறார். இருநாட்டு அரசுகளும் தங்களுக்கு உதவுவது அவசியம் என்கிறார். “2006-ல் எங்கள் குடும்பத்தை விட்டு இந்தியாவுக்குச் சென்றது நான் மட்டுமே; விடுதலைப் புலிகள் இளவயதினரைக் கட்டாயமாகப் படையில் சேர்த்துக்கொண்டார்கள் என்பதால் நான் இங்கிருந்து அனுப்பப்பட்டேன். அவர்கள் என் தங்கையைக் கூட்டிச் சென்றார்கள். போரின்போது அவளுக்கு ஒரு கண்ணில் அடிபட்டு பார்வை போய்விட்டது” என்கிறார்.

உடனடி சவால்

இந்தியாவிலிருந்து இலங்கைக்குத் திரும்புவோருக்கு உடனடியாக வீடோ நிலமோ கிடைப்பதுதான் பெரிய சவாலாக இருக்கிறது. யாழ் தீபகற்பத்தில் ஒரு ஊரில் கூரை வீட்டில் வசிக்கிறார் கதிர்காமன் தயாபரன். இந்திய அரசின் உதவித் திட்டத்தின் கீழ் அவர் கட்டத் தொடங்கிய வீடு, பண வசதி போதாமல் கூரை இல்லாமல் வெறும் சுவர்களுடன் நிற்கிறது. இந்த வீட்டுக்காக தயாபரன் ஏற்கெனவே 3 லட்ச ரூபாய் கடன் வாங்கிவிட்டார். இந்திய அரசின் திட்டப்படி ஒரு வீடு கட்ட ரூ.5.5 லட்சம் தரப்படுகிறது. கட்டுமானச் செலவும் கட்டிடத் தொழிலாளர்களுக்கான ஊதியமும் அதிகரித்துவருவதால் வீடுகளை எங்களால் முடிக்க முடிவதில்லை என்கிறார் தயாபரன். (இலங்கை ரூபாயில் ரூ. 3 லட்சம் என்றால், அது இந்திய ரூபாய் மதிப்பில் ரூ.1,40,000-தான் என்பது கவனிக்கத் தக்கது.)

தயாபரனின் பக்கத்து வீட்டுக்காரர் சின்னதுரை செல்வரத்தினத்தால் தன்னுடைய நிலத்தை இன்னமும் திரும்பப் பெற முடியவில்லை. தனது உயர் பாதுகாப்புப் பகுதிக்காக அவருடைய நிலத்தை இலங்கை ராணுவம் ஆக்கிரமித்திருக்கிறது. போர் உச்சகட்டத்தை அடைந்தபோதுகூட இலங்கையைவிட்டு வெளியேறாத அவராலேயே நிலத்தை மீட்க முடியவில்லை என்றால், இந்தியா போய்விட்டுத் திரும்பி வருகிறவர்களால் எப்படிப் பெற முடியும் என்ற கேள்வியும் எழுகிறது.

பிறப்புச் சான்றிதழ்

தயாபரனின் மகள் தனுகியா (24) இந்தியாவில் இருக்கும்போது பிறந்தார். அவருடைய இந்திய பிறப்புச் சான்றிதழ்படி இலங்கையில் அவரைப் பதிந்துகொள்வதும் உரிய ஆவணங்களைப் பெறுவதும் பெரும் சிரமமாகிவிட்டது. ரூ.25,000 கொடுத்தால்தான் இலங்கைக் குடியுரிமை தருவோம் என்று அரசு கூறிவிட்டது. அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் படித்துக்கொண்டிருந்த பட்டயப் படிப்பைத் தொடர முடியவில்லையே என்ற கோபமும் அவருக்கு இருக்கிறது. என் வயதையொத்தவர்கள் இங்கு வேலை கிடைக்காமல் போராடிக்கொண்டிருக்கிறோம் என்கிறார் தனுகியா.

இந்தியாவில் பட்டயப் படிப்பு முடித்து வாங்கும் சான்றிதழுக்கு இலங்கையில் உரிய அங்கீகாரம் பெறவும் பெரும் பணத்தைக் கொடுக்க வேண்டியிருக்கிறது. ‘சிலோன் ஈழ அகதிகள் மறுவாழ்வு அமைப்’பின் தலைவர் எஸ். சூரியகுமாரி இதைத் தெரிவிக்கிறார். ஒரு பட்டயத்துக்கு அங்கீகாரம் பெற இலங்கை அரசுக்கு ரூ.37,000 கட்டணம் செலுத்த வேண்டும்! பல்வேறு சிரமங்களுக்கு இடையில் நீண்ட ஆண்டுகள் வெளிநாட்டில் தங்கிவிட்டு தாயகம் திரும்பும் இலங்கையர் விஷயத்தில் இலங்கை அரசு இன்னும் சற்று கனிவோடு நடந்துகொள்ளலாம், இதைப் போன்ற கட்டணங்களைக் குறைக்கலாம் என்று கூறுகிறார்.

“இந்திய அரசும் இலங்கை அரசும் இதுபோன்ற பிரச்சினைகளை இலங்கைத் தமிழ் மக்களுக்கு எளிதாக்குவதுகுறித்து விவாதித்து நல்ல முடிவுக்கு வர வேண்டும். குடும்பங்கள் மீண்டும் இணையவும் தாங்கள் வசித்த இடங்களுக்கே திரும்பி வாழ்க்கையைத் தொடரவும் உதவ வேண்டும். தேசிய அடையாள அட்டை, குடியுரிமைச் சான்றிதழ்கள் போன்றவை மனிதாபிமான அடிப்படையில் அதிக அலைக்கழிப்புகள் இல்லாமல் வழங்கப்பட வேண்டும். வாழ்க்கையைத் தொடர்வதற்கான வாய்ப்புகளை அரசு வழங்க வேண்டும்” என்கிறார் சூரியகுமாரி. இதில் கொழும்பு, புதுடெல்லி மட்டுமல்லாமல், வடக்கு மாகாண கவுன்சில் நிர்வாகமும் தீவிரமாகத் தங்களை ஈடுபடுத்திக்கொள்வதையே அனைவரும் விரும்புகின்றனர். இதுவரை இம் மாதிரிப் பிரச்சினைகளில் வடக்கு மாகாண அரசு அதிக ஈடுபாடு காட்டவில்லை என்றே அவர்கள் கூறுகின்றனர்.

“எல்லோருமே எங்களைக் கைவிட்டுவிட்டதைப் போலத் தோன்றுகிறது; நாங்கள் உதவிக்கு ஆளின்றி நிராதரவாக இருக்கிறோம். இலங்கைக்குத் திரும்ப நினைப்பவர்கள் ஒருமுறைக்கு இருமுறை யோசித்துவிட்டு வரவும்” என்கிறார் தனுகியா.

- © ‘தி இந்து’ (ஆங்கிலம்), | தமிழில்: சாரி. |

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x