Last Updated : 03 May, 2014 12:00 AM

 

Published : 03 May 2014 12:00 AM
Last Updated : 03 May 2014 12:00 AM

ஒளியின் திறப்புகள்

தன் பன்முக ஆற்றலால் மலையாளக் கலாசாரத்துக்குச் செழுமை சேர்த்தவர் எம். வி. தேவன். ஓவியர், சிற்பி, கட்டடக் கலைஞர், எழுத்தாளர், பேச்சாளர், கலை இலக்கிய விமர்சகர் ஆகிய நிலைகளில் கடந்த அறுபது ஆண்டுகளுக்கும் மேலாகக் கேரள சமூகத் தளத்தில் நிறைந்த ஒளி வீசிய ஆளுமை. தான் ஈடுபட்ட துறைகளிலெல்லாம் தன் தனித்துவத்தைக் காலத்தில் நிலைக்கச்செய்து முன்மாதிரியாக்க இருப்பவர். 1948–ம் ஆண்டு, ராய் சௌத்ரி, கே.சி.எஸ். பணிக்கர் ஆகியோரின் சீடனாக ‘மத்ராஸ் ஸ்கூல் ஆஃப் ஆர்ட்ஸ்’ இல் (இப்போதைய சென்னை ஓவியக் கல்லூரி) ஓவியம் பயின்றவர். கலையிலும் அரசியலிலும் சமூக வாழ்க்கையிலும் அநீதிகளை இரக்கமற்றுக் கேள்விக்குட்படுத்துவதில் தீவிரம் கொண்டிருந்தவர். கலையின் நவீனத்துவத்தில் இவர் கொண்டிருந்த தாகம், சமகாலத்தின் கலைப் பிரக்ஞையை வலுப்படுத்தியது; பார்வையை விரிவாக்கியது.

முதல் ஓவியம்

தேவன் தன் ஒன்பதாவது வயதில், நாலப்பாடன் மொழி பெயர்த்த ‘ஏழைகள்’ (Les Miscrables - புகழ்பெற்ற பிரெஞ்சு எழுத்தாளர் விக்டர் யூகோ எழுதியது) நூலின் மூன்று பகுதிகளையும் வாசித்து முடித்தார். புத்தகங்களைப் படித்துவிட்டு மூடி வைத்தபோது, அந்த நாவலின் நாயகனான ‘ழாங் வால் ழாங்’-ஐ வரைய வேண்டும் என்று தோன்றியது. அதுதான் அவர் வரைந்த முதலாவது ‘தொழில்முறை’ஓவியம்.

பல வருடங்களுக்குப் பிறகு வைக்கம் முகமது பஷீர் ‘மூன்று சீட்டுக்காரனின் மகள்’ எனும் தன் நூலின் கையெழுத்துப் பிரதியை தேவனிடம் கொடுத்துவிட்டுச் சொன்னார்: “டேய் தேவா, இந்தக் கதைக்கு நீ வரைய வேண்டும். நீ வரையும்போதுதான் கதாபாத்திரங்களுக்கு உயிர் கிடைக்கும்…”

கதாபாத்திரங்களுக்குச் சித்திரங்கள்

தங்கள் கதாபாத்திரங்களை தேவன் வரைய வேண்டும் என்று பல எழுத்தாளர்கள் விரும்பினார்கள். ஒவ்வொரு படைப்பிலும் ஆழ்ந்து அதன் ஆன்மாவை உணர்ந்து தேவன் வரைந்தார். அப்படி அவர் வரைந்த ஓவியங்கள், வாசகர்களின் இதயங்களில் என்றும் நீங்காதிருந்தன. தேவனின் கோடுகள், இலக்கியப் படைப்புகளுக்கு அதுவரை இல்லாதிருந்த வலிமையையும் ஒளியையும் பெற்றுத் தந்தன. பிற்பாடு வந்த கலைஞர்களுக்கு தேவனின் இயக்கம் பெரும் தூண்டுதலாக அமைந்தது.

நவீனக் கலையின் புத்தெழுச்சியுடன் மலையாள ஓவிய அரங்கில் நிறைந்திருந்தவர் தேவன். உலக ஓவியக் கலையில் நடைபெறும் மாற்றங்களைத் தன் நிலத்தின் கலைஞர்களுக்குக் காலத்தே அறிமுகப்படுத்தியதும் அவர்தான். கேரளத்தின் முதல் ஓவிய முகாம், பொண்ணானியில் தேவனின் தலைமையில் நடந்தது. சோழமண்டலம் ஓவியர் கிராம உருவாக்கத்திற்காக கே.சி.எஸ். பணிக்கருடன் இணைந்து செயல்பட்டார். பணிக்கர் அவரது குரு, வழிகாட்டி.

மலையாளப் பெருங்கவி சங்ஙம்புழா கேட்டுக்கொண்டபடி அவரது படைப்புக்குத்தான் முதலில் வரைந்தார் தேவன். இதில் அவருக்குக் கிடைத்த பத்து ரூபாய்தான் அவருக்கு முதன்முதலில் கிடைத்த ஊதியம். சங்ஙம்புழாவின் ‘ரமணன்’ என்ற நூலுக்கான சிறப்புப் பதிப்புக்கும் தேவன் முகப்பு அமைத்தார். வைக்கம் முகம்மது பஷீரின் ‘பூவன் பழம்’, ‘ஆனவாரியும் பொன்குரிசும்’, ‘ஸ்தலத்தே பிரதான திவ்யன்’ ஆகிய நூல்களுக்கும் வரைந்தார். ‘மூன்று சீட்டுக்காரனின் மகள்’ நூலுக்கு வரைய வேண்டும் என்று விரும்பினாலும், மலையாள கலா கிராமத்தின் உருவாக்க வேலைகளில் ஈடுபட்டிருந்ததால் அது சாத்தியப்படவில்லை. இந்த வருத்தம் நெடு நாட்கள் அவர் மனதிலிருந்தது.

கேரள கலா பீடம்

கலை நாடுவோர் கலந்துரையாடுவதற்கு ஒரு இடம் வேண்டும் என்பது, மலையாளத்தின் கலாசார நாயகர்களில் ஒருவரான எம். கோவிந்தனின் கனவு. இதையே தேவன் தன் நண்பர்களுடன் இணைந்து முயன்று மலையாள கலா கிராமமாக உருவாக்கினார். மய்யழி நதிக்கரையில் அமைந்திருக்கும் மலையாள கலா கிராமத்தின் ஒவ்வொரு அணுவிலும், தேவன் எனும் பெருங் கலைஞரின் அர்ப்பணிப்பு கலந்திருக்கிறது. கொச்சியில் ‘கேரள கலா பீடம்’ உருவானதிலும் தேவனுடைய பங்கு காத்திரமானது.

ஓவிய நவீனத்திற்கான வாயிலாக அமைந்த தேவன், முந்நூறுக்கும் அதிகமான நூல்களுக்கு முகப்புச் சித்திரங்களும் தீட்டினார். அவற்றில் எம்.டி. வாசுதேவன் நாயரின் ‘இருட்டின் ஆன்மா’, ஆனந்தின் ‘மரண சர்ட்டிபிகேட்’ ஆகியவற்றுக்கான முகப்போவியங்கள் குறிப்பிடத்தக்கவை. சங்ஙம்புழாவிலிருந்து எம். கோவிந்தன் வரையிலான பெரும் படைப்பாளிகள் பலருடனும் அவருக்கு என்றும் நீங்காத ஆன்ம உறவு இருந்தது. நேசமும் கருத்துப் பரிமாற்றமும் விமர்சன வாதங்களும் கலை இலக்கிய உயர்வை நோக்கிய யத்தனமும் கொண்ட உறவு.

இலக்கியம் குறித்த தேவனின் கட்டுரைகள் அதிர்வுகளை ஏற்படுத்தியவை. இவரது ‘தேவ ஸ்பந்தனம்’ என்னும் நூல் பல விருதுகளைப் பெற்றது. இவரது ‘தேவயானம்’, ‘சுதந்திரத்தைக் கொண்டு நாம் என்ன செய்தோம்?’ ஆகிய நூல்கள் கடும் சர்ச்சையை ஏற்படுத்தின. ஐயப்பப் பணிக்கரின் கவிதைத் தொகுப்புக்கு தேவன் எழுதிய முன்னுரை, நவீன கவிதை பற்றிய சிறந்த பதிவாக முக்கியத்துவம் பெற்றிருக்கிறது.

பன்முகத்தன்மை

“எம்.வி.தேவன் மேடையில் பேசும்போது எந்த முன் ஆயத்தங்களும் மேற்கொள்வதில்லை. அவர் பேசுவதை அப்படியே தட்டச்சு செய்து அச்சுக்கு அனுப்பினால் அது மிகச் சிறந்த கட்டுரையாக வெளிவரும். அவ்வளவு சுத்தமான மொழி அவருக்கு” என்று மலையாள எழுத்தாளர் டி. பத்மநாபன் குறிப்பிடுகிறார். “தேவன் பத்தாம் வகுப்புவரை படித்தவர். ஆயினும் அவர் மலையாளத்தில் பேசுவதைவிட ஆங்கிலத்தில் அருமையாகப் பேசுவதை நான் வியந்து கேட்டிருக்கிறேன்.

1996–ம் ஆண்டு மதராசியில் ஒரு கூட்டத்தில் தேவனும் சுகுமார் அழிக்கோடும் பேசினார்கள். (சுகுமார் அழிக்கோடு கேரளத்தின் பெரும் புகழ் பெற்ற இலக்கியப் பேச்சாளர், விமர்சகர், எழுத்தாளர்) தேவனின் அழகான ஆங்கிலப் பேச்சு முழுதும் மறு நாள் ‘தி இந்து’ பத்திரிகையில் வெளிவந்தது. அதனுடன் ஒரு வாக்கியம் இப்படி இருந்தது: ‘நிகழ்ச்சியில் சுகுமார்அழிக்கோடும் பேசினார்!’

இங்கிலாந்தில் உள்ள முக்கியமான பதிப்பகத்தார், உலகத்தின் சிறந்த கட்டடங்களைப் பற்றி ஒரு புத்தகம் வெளியிட்டார்கள். எம். வி. தேவன் வடிவமைத்த கட்டடங்களும் அதில் இடம் பெற்றிருந்தன. அவற்றிலொன்று, என் சகோதரியின் மகளுக்காக அவர் கட்டிக்கொடுத்த வீடு” என்றும் பத்மநாபன் குறிப்பிட்டிருக்கிறார்.

எனினும் தனக்குப் பெரும் வியப்பைத் தந்தது தேவனின் மன விசாலம்தான் என்றும் பத்மநாபன் கூறுகிறார். “தேவனின் விவாதத்திற்கிடமான ஒரு கருத்தை எதிர்த்து எம்.டி. வாசுதேவன் நாயர் வழக்குத் தொடுத்திருந்தார். இருவரும் வருடக்கணக்காக நீதிமன்றத்தில் ஏறி இறங்கினார்கள். ஆனால் நான் உறுதியாகச் சொல்கிறேன். தேவனுக்கு எம்.டி.யின் மீது எந்த வெறுப்பும் இல்லை. நுணுகி நுணுகி ஆராய்ந்து பார்த்தாலும் அந்த மனதில் ஒரு துளிக் களங்கத்தையும் கண்டுபிடிக்க முடியாது…”

ஆனால் தேவனுக்கும் சில மனத்தாங்கல்கள் இருந்தன. அது சூழலைப் பற்றியது. தேவன் தன் சீடர்களிடம் இப்படிச் சொன்னார்: “நான் இறந்த பிறகு என் கல்லறையில் இப்படிக் குறிப்பிட வேண்டும்: ‘லலித கலை’ (Fine Art), லலிதமும் அல்ல, கலையும் அல்ல.’” கலையின் மீது மரியாதை இல்லாத காரணத்தால் அவர் இப்படிச் சொல்லவில்லை. கலைக்கும் கலைஞர்களுக்கும் இந்தச் சமூகத்திடமிருந்து ஏற்ற ஆதரவோ கௌரவமோ கிடைக்காததுதான் அவரது கோபம்.

கட்டடக் கலைஞர்

“ஏன் இப்போதெல்லாம் நீங்கள் வரைவதில்லை?” என்ற கேள்விக்கு தேவன் சினந்து சொன்ன பதில் இது: “ஏன் வரையவில்லை என்று என்னிடம் கேட்பதற்கு இங்கே யாருக்கு என்ன தகுதி இருக்கிறது? வரைபவர்களுக்காக இங்கே யார் என்ன செய்தார்கள்? வரைந்ததைக் காட்சிப்படுத்துவதற்கு ஏதாவது வசதி இருக்கிறதா? பத்து ஓவியங்களைச் சேகரித்து அவற்றைப் பத்துப் பேரிடம் காட்டுவதற்கு ஏற்ற இடத்தை ஏற்பாடு செய்பவர்கள் கேட்கட்டும், நான் பதில் சொல்கிறேன்…”

துயரமும் எரிச்சலும் நிறைந்த அந்த வார்த்தைகள் முடியும் முன்பே அவரிடம் அடுத்த கேள்வி வந்து விழுந்தது: “அதனால்தான் நீங்கள் கட்டடக் கலைக்குத் திரும்பினீர்களா?” “ஆமாம், இங்கே மக்களுக்குக் கட்டடம்தான் வேண்டும். அந்தத் தேவையாவது நிறைவேறட்டும்.”

ஒரு முறை ‘மனோரமா’ பத்திரிகையில் வாரந்தோறும் தொடர் பகுதி எழுத வேண்டும் என்று தேவனிடம் கேட்டார்கள். அவர் ஏற்றுக்கொண்டார். அப்போது, “நீங்கள் இந்தத் தொடர் பகுதியை எழுதுவதற்கு இரண்டு நிபந்தனைகள் இருக்கின்றன” என்று அவரிடம் சொன்னார்கள். அதற்கு அவர் இப்படிப் பதில் சொன்னார்: “நான் எந்த நிபந்தனைக்கும் கட்டுப்பட்டவன் அல்ல என்று உங்களுக்குத் தெரியாதா?”

ஓவிய ஆலோசகராகவும் செயல்பட்டார் தேவன். கேரளத்தில் மிக அதிக வீடுகளையும் தேவாலயங்களையும் அரங்கங்களையும் லாரி பேக்கர் பாணியில் குறைந்த செலவில் இயற்கைப் பொருள்களைக் கொண்டு வடிவமைத்தார். அவரது கட்டடக் கலைக்குச் சான்றாகக் கேரளத்தில் 250 வீடுகள் இருக்கின்றன.

சென்னை லலித் கலா அகாடமியின் செயலராகவும் கேரள லலித் கலா அகாடமியின் தலைவராகவும் தேவன் செயல்பட்டார்.

தன் பரிமாணங்கள் பலவற்றிலிருந்தும் ஒளி நிகழ்த்திய ரத்தினம் மறைந்தது. அந்த ஒளியின் திறப்புகள் நிலைத்திருக்கின்றன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x