Last Updated : 25 Mar, 2015 09:03 AM

Published : 25 Mar 2015 09:03 AM
Last Updated : 25 Mar 2015 09:03 AM

நானோ வணக்கம் சொல்லலாமா?

நானோ தொழில்நுட்பம் பற்றிய தகவல்கள் ஆச்சரியமளிக்கக்கூடியவை!

ஆயுதம் செய்வதிலிருந்து காகிதம் செய்வது வரை பயன்படக் கூடிய தொழில்நுட்பம் நானோ தொழில்நுட்பம். 1960-களில் ஜப்பானில் பரபரப்பாக அறிமுகமான நானோ, 1981-ல் ‘அணுவையும் காட்டும்’ துளையீட்டு உருப் பெருக்குக் கருவி (tunneling microscope) உருவானதும் வேகமெடுத்தது.

உலகமே பொருட்களால் நிரம்பியுள்ளது. கணினி, கதைப் புத்தகம், கார், கத்தரிக்காய், தங்கம், வைரம், கறி, கரி என்று பொருட்களின் பட்டியல் நீளும். இவை நாம் உருவாக்கும் பொருளாக இருக்கும். அல்லது மண்ணில் விளைவதாகவோ இயற்கையாக ஏற்பட்டதாகவோ இருக்கும். இந்தப் பொருட்களை வடிவம் குறுக்கி ஒரு நானோ மீட்டர் கனமே உள்ளதாக ஆக்கினால், வியப்பளிக்கும் விளைவுகள் ஏற்படும். இதுவே நானோ தொழில்நுட்பத்தின் அடிப்படை.

நானோ மீட்டர் என்றால்?

ஒரே ஒரு இழை தலைமுடியை எடுத்து, பஜ்ஜி போட வாழைக்காய் அரிவதுபோல அதை நீளவாட்டில் 50,000 துண்டாகப் பிளப்பதாக வைத்துக்கொள்வோம். அந்த நுண்ணிய துண்டு ஒவ்வொன்றும் கிட்டத்தட்ட ஒரு நானோ மீட்டர் இருக்கும்.

தங்க நகை தங்க மூலக்கூறுகளின் (molecule) தொகுதி. தாமிரத் தட்டு தாமிர மூலக்கூறுகளின் தொகுதி. இப்படி, ஒவ்வொரு பொருளும் அதனதன் மூலக்கூறுகளின் தொகுதியாக இருக்கும். சின்னஞ்சிறிய மூலக்கூறு அளவே நானோ வடிவம்.

இப்படிக் குறுக்கும்போது பொருளின் அடிப்படைத் தன்மையே மாறலாம். இரும்பு திரவமாகப் பொங்கி வழியலாம். கரடுமுரடான கற்பாறை, முகம் பார்க்கும் கண்ணாடிபோல் ஒளியைப் பிரதிபலிக்கலாம். என்ன பயன் என்கிறீர்களா?

நானோ தொழில்நுட்பம் மூலம் தன்மை மாறிய கரியையும், வைரத்தையும் தங்கத்தையும், கணினியில் தகவல் சேர்த்து வைக்கப் பயன்படுத்தலாம். பல ஆயிரக் கணக்கான புத்தகங்கள் உள்ள ஒரு நூலகத்தை முழுவதுமாக மின்வடிவில் இந்தச் சின்னஞ்சிறு நானோ பொருளில் சேமித்து, வீட்டுக் கணினியில் பயன்படுத்தலாம். தகவல் தேடித் தரும் வேகமும் அதிகமாக இருக்கும்.

நானோ வேதியியல் துகள்கள் கலந்த காகிதம் நாம் இதுவரை பார்த்தேயிருக்காத அளவு கண்ணைப் பறிக்கும் வெண்மையாக ஒளிவீசும்.

சுத்தமான உடுப்போடு வெளியே போனால், தூசி, அழுக்கு, வியர்வை என்று எதுவும் உடை மேல் படிய விடாமல், துணியில் பூசிய நானோ ரசாயனப் பொருள் அதைத் தட்டி உதிர்த்து விடும். சலவை சோப்பு உற்பத்தியாளர்கள் வியாபாரம் கெட சட்டை துவைக்காமலேயே எப்போதும் சுத்தமாக இருக்கும்.

மரபணு பாதிப்பு

உடல் நலத்துக்குக் கேடு விளைவிக்கும் ஈ-கொலி நுண்ணுயிர் (bacteria) உணவில் கலந்திருந்தால், அதைப் பளிச்சென்று ஒளிவீசி மூலம் தெரியப்படுத்தவும், அந்தக் கிருமியோடு பிணைந்து அதை முழுவதுமாக அழிக்கவும், நானோ மாவுச்சத்துத் துகள்கள் உணவில் கலக்கப்படலாம்.

பேக்கரியில் விற்கப்படும் இனிப்பு வடை போன்ற டோநட்டில் பூசிய சர்க்கரைத் துகள்கள் பனிபோல் வெண்மையாகத் தெரிய ஐரோப்பாவில் டைட்டானியம் டை ஆக்ஸைட் என்ற வேதியியல் பொருளின் நானோ துணுக்குகளைச் சர்க்கரையில் கலக்கத் தொடங்கினார்கள். அண்மையில் இந்த நானோ துணுக்குகளால் மரபணு பாதிப்பு ஏற்படலாம் என்று கண்டறிந்திருக்கிறார்கள். அபாயம் இல்லை என்று திட்டவட்டமாக நிரூபிக்கப் பட்டாலேயொழிய, நானோ உணவு பரவலான புழக்கத்துக்கு வருவது சிரமம்தான்.

மருத்துவத்திலும் நானோ தொழில்நுட்பம் பயன் படலாம். புற்றுநோயால் பாதிக்கப்பட்ட நோயாளியின் உடலுக்குள் மிகச் சிறிய நானோ தங்கத் துகள்கள் மருந்து ஊசி மூலம் செலுத்தப்படும். அவற்றை வெளியே இருந்து கம்ப்யூட்டர் மூலம் மருத்துவர் இயக்குவார். புற்றுநோய்த் திசு உடலில் உள்ள இடத்தில் இந்த நானோ துணுக்கு அதன் மேல் படர்ந்து அதைத் தனியாக இனம் காட்டிவிடும். நோய்த் திசுவை அகற்றினால் உடல் நலம் பெறும்.

சாதாரண மாத்திரைகள் ஜீரணமாகி அவற்றில் உள்ளதில் சிறிதளவு மருந்து மட்டும் ரத்தத்தில் கலந்து ஓரளவு நோய் தீர்க்கலாம். நானோ துகள்கள் மருந்துக் கடத்தியாகச் (carrier) செயல்படும்படிக் கலந்து உருவாக்கிய மாத்திரைகள் வேகமாக உடலுக்குள் பயணப்பட்டு, மருந்துப் பொருள் வீணாகாதபடி கொண்டுசேர்க்கும். உடல் நலம் பெறுவது இதனால் விரைவாகும்.

நானோ ரோபாட்களும் அறிமுகமாகின்றன. இந்த ரோபாட் ஒவ்வொன்றும் அரிசி முனையில் செதுக்கியது போல் சிற்றுடல், மூளை, சர்க்யூட் கொண்டது. மருத்துவர் ஊசி கொண்டு நோயாளியின் உடலில் இவற்றைச் செலுத்தி, கணினி வழியே கட்டளை இட, இவை உடலுக்குள் வெற்றிகரமாக அறுவைச் சிகிச்சை நடத்தும். முடித்து, உடலில் ஏற்படுத்திய துளை ஊடாக வெளியேறிவிடும். நானோ ரோபாடிக்ஸ் வேகமாக வளரும் துறை.

மூலக்கூறுகளைச் செதுக்கினால் நானோ வரும். மூலக்கூறுகளைச் சற்றே மாற்றி அமைக்க, சூப்பர் மாலிக்யூல்கள் என்ற மூலக்கூறுகள் உருவாகும். இந்த சூப்பர் மூலக்கூறுகளைக் கொண்டு நாசம் விளைவிக்கும் நானோ ரோபாட்களையும் நானோ ஆயுதங்களையும் உருவாக்க முடியும். டாங்குகளும் ஜீப்புகளும் போர் விமானங்களுமாகப் படையெடுத்துப் போகாமல், எறும்புகள் சாரிசாரியாக இருட்டில் ஊர்வதுபோல் இந்த நானோ ரோபாட்டுகள் யார் கவனத்தையும் கவராமல் பகை நாட்டில் புகுந்து மிகப் பெரும் நாச வேலை செய்யக் கூடும். செயல் திறன் மிகுந்த இவை தங்களையே பிரதி எடுத்துப் புது ரோபாட்டுகளை உருவாக்கவும் முடியும்.

கொடிய நோய்க் கிருமிகளைப் பகை நாட்டில் பரப்பி, அணு ஆயுதப் போரை விட அதிக நாசம் விளைவிப்பது நுண்ணுயிரியல் போர்முறை (Biological warfare). காற்றிலும் நீரிலும் உணவிலும் இப்படியான கிருமி பரவியுள்ளதா என்று கண்காணிக்க நானோ ஆய்வகங்களை நிறுவலாம். நாலு மாடிக் கட்டிடமாக ஆய்வகம் எழுப்ப இடம் தேட வேண்டாம். கைக்கடக்கமாக, சட்டைப்பையில் வைத்து எடுத்துப் போகக் கூடியவையாக இவை இருக்கும்.

அழிக்க மட்டுமில்லை, இந்த சூப்பர் மூலக்கூறுகளை அண்டை மாநிலம் ஆற்று நீர் தர மாட்டேனென்று முரண்டு பிடித்தாலும், இருக்கும் குறைவான நீர்வளம், நில வளத்தைக் கொண்டு அதிக மகசூல் தரும் தானிய வித்துக்களை உருவாக்கவும் இந்தத் தொழில்நுட்பத்தால் இயலும்.

சூப்பர் மூலக்கூறுகளைக் கொண்டு நானோ தொழில் நுட்பம் மூலமாக மனித உடலிலும் மாற்றங்களைக் கொண்டுவரலாம். ஆந்தை போல் இருட்டில் தெளிவாகத் தெரியும் கண்கள், வானொலி போல மின்னலைகளை ஒலியலையாக மாற்றும் காதுகள் இவற்றை எல்லாம் கேட்டு வாங்கிப் பொருத்திக்கொள்ளலாம். ஆயர்பாடிக் கண்ணன் வாய்க்குள் மூவுலகம் தெரிந்ததுபோல், நானோ மூலம் வெறும் கண்ணுக்குள் தொலைக்காட்சி சீரியல் தெரியுமா என்ற கேள்வி கொஞ்சம் ஓவர் ரகமே.

- இரா. முருகன், தொடர்புக்கு: eramurukan@gmail.com

Sign up to receive our newsletter in your inbox every day!

 
x