Published : 05 Mar 2015 08:42 AM
Last Updated : 05 Mar 2015 08:42 AM

கேஜ்ரிவால்: தலைவரா, சர்வாதிகாரியா?

லட்சியத்துக்கும் அதை அடைவதற்கான வழிமுறை களுக்கும் இடையிலான உறவைப் பற்றிய விவாதம் எப்போதும் இருந்துவருகிறது. ஆனால், ‘சாத்தியம் பற்றிய கலை’ என்று வர்ணிக்கப்படும் அரசியலில் வழிமுறைகள் ஒரு பொருட்டாகவே கருதப்படுவதில்லை. சாத்தியமற்ற லட்சியங்களைத் துரத்துவது அல்ல; மாறாக, எது சாத்தியமோ அதற்காக முயல்வதே அரசியல். ஆக, அறநெறிகளின் அடிப்படையிலான சமூகத்தை நிறுவுவதற்கான அறம் சார்ந்த அரசியல் என்பது மாயமான் வேட்டை என்பதே ஒரு நடைமுறைவாதியின் கருத்தாக இருக்கிறது.

ஆனால், பெர்னாட் ஷா சொன்னதைக் கொஞ்சம் மாற்றிச் சொல்வதானால் ‘‘நடைமுறைவாதி தன்னை உலகுக்கேற்பத் தகவமைத்துக்கொள்கிறார்; லட்சியவாதி, உலகைத் தனக்கேற்பத் தகவமைத்துக்கொள்ளத் தொடர்ந்து முயற்சிக்கிறார். ஆக, எல்லா முன்னேற்றங்களுக்கும் லட்சிய வாதியே காரணமாகிறார்.’’ ஊழல் ஒழிப்பு, நேர்மை, முழுமையான வெளிப்படைத் தன்மை, சுய ஆட்சி (அதாவது கொள்கை முடிவுகளில் மக்களுக்கும் நேரடியான பங்கிருப்பது) ஆகியவற்றைத் தனது அடிப்படைக் கொள்கை களாக, லட்சியங்களாக ஆம் ஆத்மி கட்சி (ஆஆக) அறிவித்துக்கொண்டிருக்கிறது. இந்த லட்சியங்களுக்காகப் போராடுவதாகச் சொல்லிக்கொள்ளும் ஒரு கட்சி, அரசியலில் சமரசங்கள் தவிர்க்க முடியாதவை என்று சொல்லத் தொடங்குமெனில் என்ன நடக்கும்? அதுவே இப்போது ஆஆகவில் நடந்துகொண்டிருக்கிறது.

அரசியல் சாக்கடையைச் சுத்தப்படுத்த விரும்புபவர்கள் அதில் இறங்கியாக வேண்டும். ஆனால், தாங்கள் சாக்கடையாக மாறிவிடக் கூடாது. அண்ணா ஹசாரேவும் கிரண் பேடியும் அரசியலைப் பற்றி எதிர்மறையான எண்ணம் கொண்டவர்களாக இருந்தபோது அது தவறான அணுகுமுறை, அரசியலில் நேரடியாக ஈடுபடுவதன் மூலம் மட்டுமே அதைத் தூய்மைப்படுத்துவது சாத்தியம் என்று கூறி, அர்விந்த் கேஜ்ரிவால் ஆஆகவைத் தொடங்குவதற்குப் பக்கபலமாக இருந்த பலரில் புகழ்பெற்ற உச்ச நீதிமன்ற வழக்கறிஞர் பிரஷாந்த் பூஷணும், அரசியல் செயற்பாட்டாளர் மற்றும் தேர்தல் கணிப்பு நிபுணரான யோகேந்திர யாதவும் முக்கியமானவர்கள். இருவரின் நேர்மையும் சந்தேகத்துக்கு அப்பாற்பட்டது. ஹசாரே, கேஜ்ரிவால் ஆகியோரையும், அவர்களது இயக்கத்தையும் அதன் நோக்கங்களையும் மிகக் கடுமையாக விமர்சித்த எழுத்தாளர் அருந்ததி ராய்கூட, பூஷண் பற்றிக் குறிப்பிடும்போது பூஷணின் நேர்மை சந்தேகத்துக்கு அப்பாற்பட்டது என்றார். இன்று ஆஆக சந்தித்திருக்கும் நெருக்கடி என்ன என்பதை பூஷண் மிகத் தெளிவாக ஒரே வரியில் குறிப்பிட்டிருக்கிறார்: ‘‘அரசியலில் சமரசங்கள் தவிர்க்க முடியாதது என்கிறார் கேஜ்ரிவால்; அற நெறிகளில் ஒருபோதும் சமரசம் கூடாது என்கிறேன் நான்.’’

யாரெல்லாம் அதிக சமம்?

தான் எழுதிய ‘ஸ்வராஜ்’ (சுய ஆட்சி) என்ற புத்தகத்தில் ஓர் ஆட்சி எப்படி இருக்க வேண்டும் என்பதைப் பற்றிய தன்னுடைய பார்வையை கேஜ்ரிவால் கூறியுள்ளார். ஆட்சியின் அரசியல்-பொருளாதார-நிர்வாக கொள்கை முடிவுகள் தலைநகரங்களில் உள்ள ஒருசில ஆட்சியாளர்களால், அதிகாரிகளால் முடிவு செய்யப்படுவதாக இருக்கக் கூடாது. இந்த விஷயங்கள் கிராமப் பஞ்சாயத்துகள் வரை சென்று மக்களின் நேரடிப் பங்கேற்பின் மூலம் நிர்ணயிக்கப்படுவதாக இருக்க வேண்டும்.

ஆஆக தொடங்கப்பட்ட காலத்திலிருந்தே கேஜ்ரிவால் மீது சொல்லப்பட்டுவரும் முக்கியமான குற்றச் சாட்டு, கட்சி முடிவுகளில் தனது கருத்தே இறுதியானதாக இருக்க வேண்டும் என்று நினைக்கிறார் என்பதுதான். ஆஆகவின் அடிப்படைக் கொள்கைக்கே எதிரானது இது.

சுமார் ஆறு மாதங்களுக்கு முன்னர் கட்சிக்கு யாதவ் எழுதிய, ஊடகங்களில் கசியவிடப்பட்ட கடிதத்தில் கேஜ்ரிவால் தலைமை தாங்குபவராக (லீடராக) அல்ல, எல்லாவற்றையும் தானே முடிவு செய்பவராக (சுப்ரீமோவாக) இருக்கிறார் என்ற குற்றச்சாட்டை வைத்திருந்தார். முதிர்ச்சிக்கும் நிதானத்துக்கும் பேர்போன யாதவிடமிருந்து இந்தக் குற்றச்சாட்டு வருவது அதன் தீவிரத் தன்மையைக் காட்டுகிறது. ஜார்ஜ் ஆர்வெல்லின் ‘விலங்குப் பண்ணை’ நாவலில் நடப்பதைப் போல, புரட்சிக்கு முன்னர் ‘எல்லா விலங்குகளும் சமம்’ என்றிருந்த கோஷம் புரட்சிக்குப் பின்னர் ‘எல்லா விலங்குகளும் சமம், ஆனால் சில விலங்குகள் பிறவற்றை விட அதிக சமம்’ என்று திருத்தப்பட்ட கதைதான் ஆஆகவிலும் இப்போது.

சமரசமேவ ஜெயதே!?

டெல்லி சட்டசபைத் தேர்தலில் பெரும்பான்மை இடங்களைப் பெற்று ஆட்சியமைக்க முடியாமல் போனால் கட்சி அடுத்த ஐந்தாண்டுகளில் காணாமல் போய்விடும் என்ற அச்சத்தின் காரணமாக, சமரசங்களை மேற்கொண்டாவது தேர்தலில் வெற்றி பெற்றாக வேண்டும் என்ற முடிவுக்கு கேஜ்ரிவால் வந்ததன் காரணமாகவே, நேர்மை, மக்கள் பணி, அர்ப்பணிப்பு ஆகியவை என்ன விலை என்று கேட்கக் கூடிய பத்து, பதினைந்து பேருக்கு வெற்றி வாய்ப்பு இருக்கிறது, கட்சிக்கு நிதி கிடைக்கும் என்கிற காரணங்களுக்காகப் போட்டியிட வாய்ப்பளிக்கப்பட்டது. அவர்கள் அனைவரும் இப்போது எம்.எல்.ஏ.க்கள். சுவர் இருந்தால்தான் சித்திரம் வரைய முடியும் என்பது உண்மை. ஆனால், வரையப்படும் சித்திரத்தைக் கண்கொண்டு பார்க்க முடியாது என்றால் எதற்காக அந்தச் சுவர், அந்தச் சித்திரம்? தேர்தல் தோல்வி என்பது கட்சிக்கு வாழ்வா, சாவா பிரச்சினை என்று கருதுகிற கட்சியும் அதன் தலைவர்களும் எப்படி மாற்று அரசியலைக் கொண்டுவர முடியும்? இதன் காரணமாகவே, தேர்தல் பிரச்சாரத்தில் தீவிரமாகப் பங்கேற்காமல் பூஷண் ஒதுங்கியிருந்தார்.

தலைவர்கள் x தொண்டர்கள்

கேஜ்ரிவாலை தேசிய அமைப்பாளர் பதவியிலிருந்து நீக்கிவிட்டுக் கட்சியைக் கைப்பற்ற பூஷணும் யாதவும் சதிசெய்கிறார்கள் என்ற ஆதாரமற்ற குற்றச்சாட்டை கேஜ்ரிவாலுக்கு நெருக்கமானவர்கள் முன்வைத்துள்ளார்கள். கட்சிக்கு எதிரான நடவடிக்கைகளில் ஈடுபட்டதற்காக இவர்கள் இருவரும் கட்சியிலிருந்து நீக்கப்பட வேண்டும் அல்லது குறைந்தபட்சம் அரசியல் விவகாரக் குழுவிலிருந்து நீக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது. இவ்வளவு தீவிரமான பிரச்சினையைப் பற்றி விவாதித்து முடிவு செய்யும் கூட்டத்தில் கலந்துகொள்வதைத் தவிர்ப் பதுடன், தலைவர் பதவியிலிருந்து விலகுகிறேன் என்று கேஜ்ரிவால் கடிதம் தருவது அவரது செயல்பாட்டை, நோக்கத்தை சந்தேகத்துக்குட்படுத்துகிறது.

ஆஆக தொண்டர்களுக்கும் அதன் தலைவர்களுக்கும் இடையில் காணப்படும் பெருத்த வேறுபாட்டையும் இந்த நெருக்கடி படம்பிடித்துக் காட்டுகிறது. கூட்டம் நடக்குமிடத்தில் கூடியிருக்கும் தொண்டர்கள் பலரும் ஒரே குரலில் ஆஆக தலைவர்கள் ஒற்றுமையாக இருக்க வேண்டும், பூஷணும் யாதவும் அரசியல் விவகாரக் குழுவில் நீடிக்க வேண்டும் என்று கூறிவருகிறார்கள். ஆனால், தேசிய செயற்குழு உறுப்பினர்களில் ஓரிருவரைத் தவிர்த்து அனைவரும் பூஷணுக்கும் யாதவுக்கும் எதிராக உள்ளார்கள். இதன் தொடர்ச்சியாக அரசியல் விவகாரக் குழுவிலிருந்து யோகேந்திர யாதவ் நீக்கப்பட்டிருக்கிறார்.

இப்போது அரங்கேறிக்கொண்டிருக்கும் நாடகத்தின் உச்சமாக பூஷண், யாதவ் ஆகிய இருவரின் முக்கியத்துவமும் பெரிதும் குறைக்கப்பட்டுக் கட்சி முழுமையாக கேஜ்ரிவாலின் கட்டுப்பாட்டில் கொண்டுவரப்படக் கூடும். அப்படி நடக்குமெனில் ஒரு விஷயம் நிரூபணம் ஆகிறது. இந்தியாவுக்கு மாற்று அரசியலை அளிக்கும் கடமையை கேஜ்ரிவால்மீது சுமத்துவது என்பது குருவித் தலையில் பனங்காயை வைப்பது போன்றதுகூட அல்ல; குருவி தலையில் பனை மரத்தையே வைப்பது போன்றது.

- க. திருநாவுக்கரசு, சமூக-இலக்கிய விமர்சகர், தொடர்புக்கு: kthiru1968@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x