Last Updated : 06 Mar, 2015 09:05 AM

 

Published : 06 Mar 2015 09:05 AM
Last Updated : 06 Mar 2015 09:05 AM

நேருவின் வழியில் ஜேட்லியின் நிதிநிலை அறிக்கை!

ஒரு நாட்டின் வளர்ச்சிக்கு மூலதன முதலீடு முக்கியம் என்ற கருத்து இரண்டாவது உலகப் போர் முடிவுற்ற காலத்தில் நாடுகளிடையே இருந்தது. வளர்ச்சிப் பொருளாதாரம் என்றாலே அணைகள் கட்டுவது, சாலைகள் போடுவது, ரயில்வே பாதைகள் அமைப்பது போன்றவை என்றுதான் கருதப்பட்டது. இந்தத் திட்டங்களில் முதலீடு செய்யும் அளவுக்குத் தனியாரிடம் ஆற்றல் இல்லாததால் அரசுதான் இவற்றில் முதலீடு செய்து முன்னோடியாகத் திகழ வேண்டும் என்ற கருத்து நிலவியது.

இந்தியாவின் முதலாவது ஐந்தாண்டு திட்டம் அடித்தளக் கட்டமைப்புகளில் முதலீடு செய்வதாகவே அமைந்தது. மனிதவள ஆற்றலில் முதலீடு செய்ய வேண்டும் என்ற எண்ணம் இல்லாமல் புறக்கணிக்கப்பட்டது. இதற்கு நேரு எந்த விதத்திலும் காரணம் இல்லை, அப்போதைய சிந்தனை அப்படித்தான் இருந்தது. நேருவின் சோஷலிசப் பொருளாதாரத்தை வெகு காட்டமாக இப்போது விமர்சிக்கும் பொருளாதார மேதைகளும் அப்போது அதைத்தான் ஆதரித்தார்கள். அடித்தளக் கட்டமைப்புகளில் பெரும் தொகைகளை முதலீடு செய்தும் நீண்ட காலத்துக்குப் பொருளாதாரம் தேக்க நிலையிலேயே இருந்தது. 1950-களிலும் 1960-களிலும் சராசரியாக 3.5% அளவுக்கே பொருளாதாரம் வளர்ச்சி அடைந்தது, அதை ‘இந்து வளர்ச்சி வீதம்’ என்றே சர்வதேச அரங்கில் அழைத்தனர். அதில் ஏதோ ஒரு குறை இருந்தது.

மூலதனம், வளர்ச்சி முன்னேற்றம்

இந்திய அரசின் முடிவை ஆரம்ப காலத்தில் எதிர்த்தவர்களில் நோபல் பரிசு பெற்ற பொருளாதார அறிஞர் மில்டன் ஃப்ரீட்மேன் முக்கியமானவர். 1955-ல் இந்தியா வந்த அவர் தனது ஆலோசனைகளை ஒரு அறிக்கையாகத் தயாரித்து அளித்தார். மனிதவள ஆற்றலில் முதலீடு செய்யாமல் அடித்தளக் கட்டமைப்புகளில் நேரடியாக அரசு முதலீடு செய்வது குறித்து அரசை எச்சரித்தார். இந்தியப் பொருளாதார அறிஞரான பி.வி. கிருஷ்ணமூர்த்தியும் அதிருப்தி குறிப்பை எழுதினார். மளிகைக் கடைக்காரரைப் போல போட்ட முதலீட்டுக்கு லாபத்தை எதிர்பார்க்கும் வகையில் அரசு நடந்துகொள்ளக் கூடாது, கல்விக்குத் தரும் முக்கியத்துவமும் ஒதுக்கீடும் போதாது என்றார். ஒடுக்கப்பட்டவர்கள் தளைகளிலிருந்து விடுபட பெரும் கல்வித் திட்டம் அவசியம் என்பதை டாக்டர் அம்பேத்கரும் வலியுறுத்தினார். இந்த விமர்சனங்கள் ஒதுக்கித் தள்ளப்பட்டன. இதற்கான விலையை இந்திய அரசு இன்னமும் கொடுத்துக்கொண்டிருக்கிறது.

வளர்ச்சியை மையமாகக் கொண்ட பொருளாதாரக் கொள்கைகள் பிரபலமானபோது இந்த மூவரின் எச்சரிக்கைகளும் சரியானவையே என்பது நிரூபணமானது. தொழில், விவசாயத் துறையிலும் அடித்தளக் கட்டமைப்புத் துறைகளிலும் முதலீடு செய்வதும் முக்கியமானதுதான். அதே நேரத்தில் மனிதவளம், பொருளாதார அமைப்புகள் ஆகியவற்றிலும் முதலீடு செய்ய வேண்டும். வளர்ச்சி, முன்னேற்றம் என்ற இரண்டும் ஒரே வார்த்தையல்ல. வாழ்க்கைத்தரம், பல்வேறு விதமான மனித சுதந்திரம் ஆகியவற்றில் மேம்பட்ட நிலைதான் முன்னேற்றம். தரமான வாழ்வுக்கு ஊட்டச்சத்துகள் தேவை. ஊட்டச்சத்து பற்றிய விழிப்புணர்வு, பாதுகாப்பான குடிநீர், சுகாதார நலம் போன்ற அனைத்தும் சேர்ந்துதான் முன்னேற்றத்தைத் தர முடியும்.

அடித்தளக் கட்டமைப்புக்கு முக்கியத்துவம்

தேசிய ஜனநாயகக் கூட்டணியின் நிதிநிலை அறிக்கை, முன்னேற்றம் தொடர்பான இந்த கருதுகோள்களை எல்லாம் புறக்கணித்துவிட்டு நேரு காலத்திய முதலீட்டுக்குத் திரும்பியிருக்கிறது. பொருளாதாரக் கொள்கையின் முக்கிய நோக்கமே வளர்ச்சிதான், மற்றவை தானாகவே பின்தொடரும் என்ற எண்ணம் அரசுக்கு இருக்கிறது. வளர்ச்சிக்கு அடித்தளக் கட்டமைப்பு தேவை, பெருந்தொழில் நிறுவனங்கள் விரும்பும் அடித்தளக் கட்டமைப்புகள்தான் அவை என்று அடையாளம் காணப்பட்டிருக்கிறது. எனவே, சாலைகள், ரயில் பாதைகள் போன்றவற்றுக்கு நேரு காலத்தைப் போலவே அதிக முதலீடு ஒதுக்கப்பட்டிருக்கிறது. பாதுகாப்புத் துறை (ராணுவம்) நீங்கலாக மற்றவற்றுக்கு நிதி குறைத்து வழங்கப்பட்டிருக்கிறது. கல்வி, சுகாதாரம் இதுவரை இருந்திராத வகையில் அதிர்ச்சி வைத்தியத்துக்கு உள்ளாக்கப்பட்டிருக்கின்றன.

அடித்தளக் கட்டமைப்பின் மீதான இந்த முக்கியத்துவம் மீண்டும் ஏற்பட தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு காரணம் அல்ல, ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசின் பொருளாதாரக் கொள்கையைத் தாங்கிப் பிடித்த ஒரே தூணான மான்டேக் சிங் அலுவாலியாவே காரணம். 12-வது ஐந்தாண்டு திட்டக் காலத்தில் ஒரு டிரில்லியன் டாலர்களை இதில் முதலீடு செய்யும் திட்டத்தை அவர் தீட்டினார். இதில் புதிது என்னவென்றால் அடித்தளக் கட்டமைப்பில் அரசே முதலீடு செய்வதுதான். நேருவைப் போல அல்லாமல், அடித்தளக் கட்டமைப்புகளுக்கான முதலீடு அரசு தனியார் துறை கூட்டு ஒத்துழைப்புடன் வர வேண்டும் என்று மான்டேக் விரும்பினார். ஆனால், இப்போதோ எல்லாமே அரசின் முதலீடுதான். அரசுத் துறை என்றாலே தொழில்துறை சார்பு ஊடகங்கள் கடுமையாக விமர்சிக்கின்றன. அப்படியிருக்க அரசு ஏன் முதலீடு செய்ய வேண்டும்?

பெருநிறுவன நலன்கள்

அரசின் முதன்மைப் பொருளாதார ஆலோசகர் அர்விந்த் சுப்ரமணியன் தயாரித்து நிதியமைச்சகம் வெளியிட்ட ‘2014-15 நிதியாண்டின் இடைநிலைப் பொருளாதார ஆய்வறிக்கை’ தெளிவாகவும் வெளிப்படையாகவும் இதை விளக்குகிறது. “உண்மையான பொருளாதாரத் துறைகளுக்குக் கடனுதவி செய்ய வங்கித் துறை இயலாமலும் விருப்பமில்லாமலும் இருக்கிறது; இந்தச் சூழ்நிலையில் வளர்ச்சிக்கான மூலவிசையான பொது முதலீட்டை ஊக்குவிக்க வேண்டியிருக்கிறது” என்று அறிக்கை கூறுகிறது. அரசு தனியார்துறை பங்கேற்புடன் தொடங்கப்பட்ட திட்டங்கள் உட்பட பல்வேறு திட்டங்களுக்கு வங்கிகள் கொடுத்த 18 லட்சம் கோடி ரூபாய் எந்தவித லாபத்தையும் திருப்பித்தர முடியாமல், திட்டங்களும் முடிவடையாமல் முடங்கிவிட்டது.

நிதியமைச்சர் அருண் ஜேட்லி இந்தப் பெருநிறுவனங்கள் மீது அதிக அனுதாபம் காட்டுகிறார். பொதுப் பணத்தில் உலகத் தரமான அடித்தளக் கட்டமைப்புகள் வேண்டும் என்ற பெருநிறுவன முதலாளிகளின் கோரிக்கைகளை அப்படியே வழிமொழிவதுடன், அரசு தனியார் துறை கூட்டுப் பங்களிப்புத் திட்டங்களில் இடர் ஏற்படுமென்றால் அந்தச் சுமையை அரசுத் துறைதான் அதிகம் சுமக்க வேண்டும் என்கிறார்.

சமூகத் துறைகளுக்கு வெட்டு

மத்திய அரசின் நிதிநிலை அறிக்கையை அனைத்துப் பெருநிறுவனங்களும் கடந்த சில தினங்களாகப் போட்டி போட்டுக்கொண்டு ஆதரித்துக்கொண்டே இருப்பதற்குக் காரணம் எதிர்பார்த்ததுதான். சமூக வளர்ச்சித் துறைகளுக்கான நிதி ஒதுக்கீட்டில் பெரும் வெட்டு மேற்கொள்ளப்பட்டிருப்பது நாசத்தையே ஏற்படுத்தும். முதல் முறையாக, பள்ளிக்கூடங்களில் மதிய உணவு வழங்குவதற்கான திட்டத்துக்கும் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி சேவைக்கான திட்டத்துக்கும் நிதி ஒதுக்கீட்டில் பெரும் வெட்டு ஏற்பட்டிருக்கிறது.

இந்த நிதிநிலை அறிக்கையின் வெட்டுக்களில் மிகவும் பாதிக்கப்பட்டிருப்பது சுகாதாரத் துறைதான். உலகின் எல்லா நாடுகளையும்விட, தனது மொத்த உற்பத்தி மதிப்பில் மிகக் குறைவான அளவுக்கு நிதியை சுகாதாரத் துறைக்கு ஒதுக்கும் நாடு இந்தியாதான். விகிதாச்சாரப்படி அல்ல, உண்மையான மதிப்பின்படியல்ல, பண அளவிலும் இந்த முறை நிதி ஒதுக்கீடு குறைக்கப்பட்டுவிட்டது. கடந்த முறை நிதிநிலை அறிக்கையைத் தாக்கல் செய்த அருண் ஜேட்லி அனைவருக்கும் சுகாதார வசதி உத்தரவாதம் செய்யப்படும் திட்டத்தை அறிவித்தார். ஆனால், முழுமையான இந்த முதல் நிதிநிலை அறிக்கையில் அதைப் பற்றி ஒரு வார்த்தைகூட இல்லை. இப்போது அனைவருக்கும் சமூகப் பாதுகாப்பு அளிக்கும் திட்டம் குறித்து ஜேட்லி குறிப்பிட்டிருக்கிறார். இதிலும் எதுவும் திட்டவட்டமாகக் குறிப்பிடப்படவில்லை. எத்தனை ஆண்டுகளுக்குள் முடிக்கப்படும் என்பதும் இல்லை. நிதிநிலை அறிக்கையிலும் அதற்கான ஒதுக்கீடுகள் இல்லை.

இதில் மிகவும் வருந்தத் தக்க அம்சம் என்னவென்றால் பெரிய செய்தி ஊடகங்கள் இதையெல்லாம் மகிழ்ச்சியுடன் வரவேற்றிருப்பதுதான். இலவசங்களாக அறிவிக்காமல் பயனுள்ள முதலீடாக அறிவித்துவிட்டார் என்று ஜேட்லிக்குப் புகழாரங்கள் வேறு! ஏழைகள், விவசாயிகளுக்கான மானியங்களை நேரடியாக வங்கிகள் மூலம் வழங்கும் அறிவிப்புகள் இருந்தாலும் பெரும் பணக்காரர்களுக்கான கோடிக் கணக்கான மானியங்கள் அப்படியேதான் தொடர்கின்றன. மக்களுடைய நல்வாழ்வுக்கு நேரடியாக உதவிசெய்து, அவர்களுடைய வாழ்க்கைத் தரத்தையும் உற்பத்தித் திறனையும் உயர்த்தக்கூடிய ஒதுக்கீடு நிதிநிலை இந்த அறிக்கையில் கடுமையாக வெட்டப்பட்டிருக்கிறது. ஆக, மூன்றாம் உலக நாடுகள் வரிசையிலேயே இந்தியா தொடர நல்வாழ்த்துகள்!

© ‘தி இந்து’ (ஆங்கிலம்). | தமிழில் சுருக்கமாக: சாரி |

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x