

கேஜ்ரிவாலுக்கும் மற்ற கட்சித் தலைவர்களுக்கும் வேறுபாடுகள் அதிகமில்லை என்பது தெளிவாகிவருகிறது.
ஷாஜியா இல்மி - ஊழலுக்கு எதிரான அண்ணா ஹசாரேயின் இயக்கத்தின் முன்னணித் தலைவர்களுள் ஒருவராக இருந்தவர். ஆம் ஆத்மி கட்சியை (ஆஆக) தொடங்கியவர் களுள் ஒருவர். நாடாளுமன்றத் தேர்தல் தோல்விக்குப் பின்னர், தான் கட்சியில் ஒதுக்கப்படுவதாகவும் கட்சியின் தலைவர் அர்விந்த் கேஜ்ரிவாலைச் சுற்றியுள்ள ஒரு சிறு கூட்டம் எல்லாவற்றையும் கட்டுப்படுத்து கிறது, கேஜ்ரிவாலை அணுகுவதே கடினமாக இருக்கிறது என்றெல்லாம் கூறி கட்சியிலிருந்து விலகியதுடன், அடுத்த 5 மாதத்தில் பாஜகவில் ஐக்கியமானார்.
ஷாஜியாவின் நேர்மைக்கு உத்தரவாதம் இல்லை என்றாலும், அவர் கூறிய குற்றச்சாட்டுகளில் உண்மை இருக்கிறது என்பது அப்போதே பலருக்கும் தெரிந்திருந்தது. ஷாஜியாவைப் போன்ற ‘ஊழலுக்கு எதிரான’ தலைவர்கள் இன்னும் எத்தனை பேர் ஆஆகவில் இருக்கிறார்களோ என்ற அச்சமும் அப்போதே பலருக்கும் ஏற்பட்டது. கேஜ்ரிவாலும் அத்தகைய ஒருவர்தான் என்பது இப்போது தெளிவாகி வருகிறது.
கேஜ்ரிவாலும் அவருக்கு அணுக்கமானவர்களும் நடந்துகொள்ளும் விதம், எல்லா அரசியல் கட்சிகளிலும் நடக்கிற விஷயம்தான். ‘அரசியலில் இதெல்லாம் சகஜமப்பா’ என்பதை முழுமையாக ஏற்றுக்கொண்டவர்கள் அவர்கள். ஆனால், நேர்மை, முழுமையான வெளிப்படைத்தன்மை, பங்கேற்பு ஜனநாயகம் ஆகிய உயரிய நெறிகளுக்காகப் போராடுவதாகவும், இன்றைய இந்திய அரசியலுக்கே மாற்றை வழங்குவதே தங்கள் லட்சியம் என்றும் பிரகடனப்படுத்திக்கொண்டுள்ள ஒரு கட்சி, ‘மற்றெல்லாக் கட்சிகளும் ஊறிய அதே குட்டையில் ஊறிய மற்றொரு மட்டைதான்’ என்பது அம்பலமாகிறபோது அதன் (நேர்மையான) தொண்டர்கள் அதிர்ச்சியடைவது தவிர்க்க முடியாதது.
வெற்றியின் தோல்வி
பெரும் தோல்வியைச் சந்திக்கும்போதுதான் கட்சிகள் நெருக்கடியைச் சந்திக்கும். ஆனால், ஆஆக விஷயத்தில் இது வேறு மாதிரியாக இருப்பதற்குக் காரணம், இன்னமும் அங்கு அந்தக் கட்சியின் அடிப்படை நெறிகளுக்கு உண்மையாக இருக்கும் தலைவர்கள் பலர் இருப்பதே. கிடைத்த மகத்தான வெற்றியைப் பயன்படுத்திக்கொண்டு, இதுவரை கட்சியின் அடிப்படை நெறிகளில் ஏற்பட்டிருக்கும் விலகலைச் சரிசெய்துகொள்வதற்குப் பதிலாக இந்த விலகலைக் கேள்விக்கு உட்படுத்தியவர்களைக் கட்சியிலிருந்து விலக்குவதற்காக கேஜ்ரிவால் முயல்வதே இன்றைய நெருக்கடிக்குக் காரணம். அதிகாரத்தைப் போன்று போதை தருகிற விஷயம் எதுவுமில்லை. அதிகாரக் கட்டமைப்பையே கேள்விக்கு உட்படுத்தி, ‘எல்லா அதிகாரமும் மக்களுக்கே’ என்ற ஆஆகவின் முழக்கம் வெற்று அரசியல் கோஷம் என்பதையே கேஜ்ரிவாலின் நடவடிக்கைகள் காட்டுகின்றன.
கேஜ்ரிவாலின் அரசியல் தந்திரம்
2013 இறுதியில் டெல்லி சட்டசபைத் தேர்தலில் ஆஆக பெற்ற முக்கியத்துவம் வாய்ந்த வெற்றி மற்றும் அகில இந்திய அளவில் அது ஏற்படுத்திய அதிர்வலைகளைப் பயன்படுத்திக்கொண்டு, 2014 மக்களவைத் தேர்தலில் சுமார் 50 இடங்களில் வெற்றி பெற்றாலே, நாடாளுமன்றத்தில் யாருக்கும் பெரும்பான்மை கிடைக்காத பட்சத்தில் தான் பிரதமராக வாய்ப்புண்டு என்று கணக்கிட்டது கேஜ்ரிவாலின் அரசியல் மனம். ஜன் லோக்பால் சட்டத்தை நிறைவேற்ற முடியாததைக் காரணம் காட்டி, பதவி விலகி நரேந்திர மோடியை எதிர்த்துப் போட்டியிட்டார். மொத்த இந்தியாவில் ஓரிரு இடங்களைத் தவிர்த்து எந்தத் தொகுதியிலும் டெபாசிட்கூடப் பெற முடியவில்லை என்ற நிலையில், எப்படியாவது மீண்டும் காங்கிரஸ் ஆதரவுடன் அல்லது காங்கிரஸை உடைத்தாவது டெல்லி முதல்வராகிவிடுவது என்று கேஜ்ரிவால் முயற்சித்ததை பிரஷாந்த் பூஷண் மற்றும் யோகேந்திர யாதவ் எதிர்த்தனர். இங்குதான் கேஜ்ரிவாலின் முகமூடி அவிழ்ந்தது.
காங்கிரஸ் எம்.எல்.ஏ-க்கள் யாருக்கும் பணம், பதவி தருவதாக கேஜ்ரிவால் கூறவில்லை என்பது உண்மையே. ஆனால், ஊழலின் வடிவாக இருக்கும் காங்கிரஸில் பல பத்தாண்டுகளாகப் பணம், பதவியை அனுபவித்துவரும் எம்.எல்.ஏ-க்கள் எதன் பொருட்டு ஆஆகவை ஆதரிக்க வேண்டும்? இப்படிப்பட்டவர்களின் ஆதரவைப் பெற்று அமைக்கப்படும் ஆட்சி எப்படி நேர்மையாக இருக்க முடியும்? மிக எளிமையான இந்தக் கேள்விகளை எழுப்பினாலே கேஜ்ரிவாலின் முயற்சி எள்ளளவும் நேர்மையற்ற செயல் என்பது புரியும்.
மேலும், ஹரியாணா சட்டசபைத் தேர்தலில் போட்டியிட அந்த மாநில ஆஆகவினர் விரும்பியும், அதற்கு தேசிய செயற்குழுவின் ஆதரவு இருந்தும் அதை கேஜ்ரிவால் விரும்பாத காரணத்தால், ஆஆக போட்டியிடவில்லை. மக்களவைத் தேர்தல் தோல்விக்குப் பின்னர் ஹரியாணா சட்டசபைத் தேர்தலிலும் பெரும் தோல்வி ஏற்பட்டால் அது தனது டெல்லி முதல்வர் வாய்ப்புக்குக் குந்தகமாகிவிடும் என்று கேஜ்ரிவால் கணக்கிட்டதே இதற்குக் காரணம்.
அதிகாரக் குவியல்
பூஷண், யாதவ்மீது நடவடிக்கை எடுக்கப்பட்டதற்கு இரண்டு முக்கியமான காரணங்கள் சொல்லப்படுகின்றன: 1. கேஜ்ரிவாலைத் தலைமைப் பதவியிலிருந்து அகற்ற சதி செய்தது. 2. டெல்லி சட்டசபைத் தேர்தலில் கட்சி தோல்வியடைய சதி செய்தது.
அதிகாரக் குவியலை எதிர்க்கும் எந்தவொரு கட்சியும் பின்பற்ற வேண்டிய முக்கியமான விதி ‘ஒரு நபர் ஒரு பதவி’என்பது. ஆனாலும் இந்த விஷயத்தை, அதாவது டெல்லி முதல்வரான பிறகு கேஜ்ரிவால் ‘தேசிய ஒருங்கிணைப்பாளர்’ பதவியிலிருந்து விலக வேண்டும் என்பதைத் தாங்கள் வலியுறுத்தவே இல்லை என்பதை பூஷண், யாதவ் இருவருமே பல முறை தெளிவுபடுத்திவிட்டார்கள். ஆனால், நேர்மை, அர்ப்பணிப்பு உணர்வு ஆகியவற்றைப் பின்னுக்குத் தள்ளி, வெற்றி வாய்ப்பை மனதில் கொண்டு வேட்பாளர்களைத் தெரிவு செய்வதை பூஷண் கடுமையாக எதிர்த்ததுடன் தேர்தல் பிரச்சாரத்தி லிருந்தும் பெருமளவு ஒதுங்கிக்கொண்டார். தனக்கு நெருக்கமானவர்களிடமும் இத்தகைய நிலையில் கட்சி வெற்றி பெறுவது கட்சியின் எதிர் காலத்துக்கு நல்லதல்ல என்றும் கூறியிருக்கிறார். தனது இந்த நிலைப்பாட்டில் பூஷண் வெளிப்படையாகவே இருந்திருக்கிறார். நிதி பெறுவதிலும், வரவுசெலவுக் கணக்கை வெளியிடு வதிலும் கட்சி ஒளிவுமறைவில்லாமல் இருக்க வேண்டும் என்பதையும் பூஷண் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார்.
பூஷணும் யாதவும் சொல்லும் அனைத்தும் ஏற்கெனவே ஆஆக தனது அடிப்படை நெறிகளாக அறிவித்திருப்பவைதான். தேசிய செயற்குழுக் கூட்டத்தில் 11/8 என்ற குறுகிய இடை வெளியில்தான் கேஜ்ரிவாலின் அதிகாரம் உறுதி செய்யப்பட்டிருக்கிறது என்பது கேஜ்ரிவாலுக்கும் மனீஷ் சிஸோடியா, அசுதோஷ், அஷீஷ் கேதான், சஞ்சய் சிங், குமார் விஷ்வாஸ் ஆகிய சிஷ்ய கோடிகளுக்கும் பெரும் அதிர்ச்சி. அதுவே, ஆஆகவின் நேர்மையான தொண்டர் களுக்கு ஆறுதல் அளிக்கக் கூடிய விஷயம்.
‘‘ஆஆக ஓர் அரசியல் கட்சியல்ல; அது ஆயிரமாயிரம் தொண்டர்களின் கனவு’’ என்று அந்தக் கட்சியின் முக்கியத் தலைவர்களுள் ஒருவரான அஞ்சலி தமானியா மனம் நொந்து சொல்லியிருக்கிறார். அது வெறும் கனவாகவே முடிந்துவிடக் கூடாது என்றால், கட்சியின் அடிப்படை நெறிகளில் சமரசம் செய்வதன் மூலம்தான் அரசியல் அதிகாரத்தைப் பெற முடியுமெனில், அந்த அதிகாரமே தேவையில்லை என்ற செய்தியை ஆஆகவின் தொண்டர்களும் ஆதரவாளர்களும் கேஜ்ரிவாலுக்குத் தெளிவாக உணர்த்தியாக வேண்டும். அவர் உணர மறுத்தால் அவரை நிராகரிப்பதிலும் தவறில்லை.
- க. திருநாவுக்கரசு,
சமூக-அரசியல் விமர்சகர்,
தொடர்புக்கு: kthiru1968@gmail.com