

நாடகக் கலையில் உலக, இந்திய, தமிழக அரங்குகள் குறித்த பார்வை
‘நீ நாடகமாடுறியா?’, ‘என்ன நடிக்கிறியா?’, ‘என்னப்பா கூத்தடிக்கிறாங்க!’
கூத்துக்கலை, நாடகக்கலை குறித்து நம் மக்கள் கொண்டுள்ள எண்ணங்கள் சமூக மதிப்பு குறைந்தவையாக உள்ளன. அதே நேரத்தில், கூத்தப்பாக்கம், கூத்தானூர், கூத்தாநல்லூர், கூத்தக்குடி என்னும் ஊர்ப் பெயர்கள் போல கூத்து என்னும் முன்னொட்டு கொண்ட ஊர்கள் நம் தமிழகத்தில் பல ஊர்கள் மாவட்டந்தோறும் இருக்கின்றன. கூத்துகளும் கூத்தை நிகழ்த்திய கூத்துக் கலைஞர்களும் மக்களின் செல்வாக்கைப் பெற்றிருந்தனர் என நாம் அறிகிறோம். ஊர்த் திருவிழாக்களில் கூத்தர்களுக்குச் சமூக மதிப்பு மக்களால் வழங்கப்பட்டிருந்தது.
கூத்துக்களில் இத்தனை வகைகளா?
‘கலம்பெறு விறலி ஆடும் இவ்வூரே’ (நற்றிணை), ‘மன்றுதொறும் நின்ற குரவை’ (மதுரைகாஞ்சி), ஆய்ச்சியர் ஆடிய குரவை, பரதவ மகளிர் ஆடிய குரவை வேட்டுவ மக்கள் ஆடும் வேட்டுவ வரிக்கூத்து (மதுரைக்காஞ்சி), வள்ளிக் கூத்து, ஆடவர் ஆடிய துணங்கை, மகளிர் ஆடிய துணங்கை என்றெல்லாம் பழந்தமிழ் இலக்கியங்கள் சுட்டுகின்றன. ஆட்டம் என்பது நிகழ்ச்சியை சித்தரிக்கும் நடனம், கூத்து என்பது கதையைத் தழுவி பாத்திரங்கள் பங்கேற்று அடவுகள் கொண்டு நிகழ்த்தும் பாடல் நிகழ்ச்சி. மன்று என்பது மேடை. மேடைகளில் நிகழ்த்தப்பட்ட கூத்துக்கள் மற்றும் மக்கள் கூடும் திறந்த வெளிகளில் நிகழ்த்தப்பட்ட கூத்துக்கள் மற்றும் ஆட்டங்கள் நமது பழந்தமிழர் மரபுச் செல்வங்களாகும். விறலியர், பாடினி, பாணர், கூத்தர், கோடியர், துடியன், கடம்பர், பறையர் என்போர் யாவரும் சங்க காலக் கூத்துக் கலைஞர்களாக நாம் அறிகிறோம். பதிற்றுப்பத்தில் உள்ள ஒவ்வொரு பாடலும் ஆட்ட நிகழ்வுக்கான ஆட்டப் பிரதிகளே. ‘பாடல் ஓர்ந்தும் நாடகம் நயந்தும்’ என்று பட்டினப்பாலை சுட்டுவதிலிருந்து நாடகம் என்னும் சொல் நமக்கு அறிமுகமாகிறது. கூத்து என்பதும் நாடகம் என்பதும் கதை தழுவிய நாட்டிய நிகழ்ச்சி என அறிஞர் பேராசிரியர் கா. சிவத்தம்பி கூறுவார்.
நம் தமிழ் மரபில் இருவகை கூத்து மரபு இருந்துள்ளது. தமிழகக் கூத்து, ஆரியக் கூத்து என்பவை அவை. சங்க காலத்திலேயே இவ்விரண்டும் தமிழகத்தில் நிகழ்த்தப்பட்டுள்ளன.
தொலைந்துபோன பிரதிகள்
ஆரியக் கூத்து மரபுக்கான இலக்கணமாக பரத முனியின் ‘நாட்டிய சாஸ்திரம்’ நூலைக் காண்கிறோம். தமிழ்க் கூத்து மரபுக்கான இலக்கணத்தை ‘செயிற்றியம்’, ‘குணநூல்’, ‘சயந்தம்’, ‘அகத்தியம்’ போன்ற நூல்கள் எடுத்துரைத்துள்ளன. பவுத்த இசைவாணர் ராகுல் என்பவர் 7, 8-ம் நூற்றாண்டுகளில் ‘சூத்திராஸ்’ என்னும் நாட்டிய நூலை எழுதியுள்ளார். சமணரான பாசுவநாதன் 13-ம் நூற்றாண்டில் ‘சங்கீத சமய சாரா’ என்னும் நாட்டிய நூலை எழுதியுள்ளார். 14-ம் நூற்றாண்டில் அரிபாலன் என்பவர் மகளிர்க்கான இசை நூல் ஒன்றை எழுதியுள்ளார். நம் போதாத காலம் தமிழ் நாடக இலக்கண நூல்கள் தொலைந்துவிட்டன. தொல்காப்பியர், பொருளதிகாரத்தில் குறிப்பிடும் செய்யுளியல், உவமையியல், அகத்திணையியல், புறத்திணையியல், மரபியல், மெய்ப்பாட்டியல் யாவும் நாடக இலக்கணங்கள் குறித்தவையே என்று நாம் ஆறுதல் கொள்ளலாம்.
மக்கள் அரங்கு
உலகின் பல நாடுகளில் பல நாடக வல்லுநர்கள் நாடக அரங்கை மக்கள் அரங்காக மாற்றிடப் புதுப்புது முயற்சிகளைத் தொடர்ந்து முன்வைத்துப் பலரும் செயல்பட்டுவந்தனர்/ வருகின்றனர். ஜெர்சி குரோட்டோவ்ஸ்கி (1933-1999) என்பவர் ‘ஏழ்மை அரங்கு’ என்ற ஒரு அரங்கை முன்வைத்துச் செயல்பட்டார். மனம், குரல், உடல் இம்மூன்றும் மட்டும் போதும். ஒரு நடிகர் இம்மூன்றும் கொண்டு செயல்பட்டால் நாடகம் நடத்திவிடலாம். ஒலிக் கலை, காட்சி ஜோடனை, உடை, ஒப்பனை, அரங்கியல் தொடர்பான தொழில்நுட்பங்கள் போன்றவை வேண்டாம் என நிராகரித்து நாடகங்களை மக்கள் முன் நிகழ்த்தியவர் இவர். இவரின் வழியில் இந்தியாவில் மேற்கு வங்கத்தைச் சேர்ந்த பாதல் சர்க்கார் ‘மூன்றாம் அரங்’கை முன்வைத்து இந்திய நாடக அரங்கில் புரட்சி செய்தார். வீதி நாடக மரபில் மக்கள் பிரச்சினைகளை முன்வைத்துச் செயல்பட்ட இடதுசாரி நாடகக் கலைஞர் ஸப்தர் ஹஸ்மியின் அரங்கியல் செயல்பாடு குறிப்பிடத் தகுந்தது. இந்தியத் தலைநகரில் அவரது நாடகம் நடந்துகொண்டிருந்தபோது துரோகிகளால் அவர் சுட்டுக்கொல்லப்பட்டார்.
மேலைநாடுகளில் புதுப்புதுக் கோட்பாடுகளை முன்வைத்து நாடகக்கலை வளர்ச்சி பெற்றுவருகிறது. எனினும் இந்தியாவில் கோட்பாட்டுரீதியில் நாடகக் கலை பெரிய வளர்ச்சியைப் பெற்றிருக்கவில்லை ஒடுக்கப்பட்டோர் அரங்கியல் இங்கு நாடகக்காரர்களால் பேசப்படவில்லை. பெண்ணிய அரங்கு, தலித் பெண்ணிய அரங்கு, மாற்றுப் பாலினத்தோர் அரங்கு போன்றவற்றில் வெற்றிடமே நிலவுகிறது.
பாய்ஸ் குழுவில் தொடங்கி…
மேலைநாட்டுப் பிரதிகளை மொழிபெயர்த்து நாடகம் நடத்திய பம்மல் சம்பந்த முதலியார், கிராமங்களை நோக்கி நாடக அரங்கைக் கொண்டுசென்ற சங்கரதாஸ் சுவாமிகள் இந்திய விடுதலையைப் பேசிய மதுரகவி பாஸ்கரதாஸ் போன்றோரின் பங்களிப்பு தமிழ் நாடக வளர்ச்சியில் குறிப்பிடத் தகுந்தவை. இந்தியப் புராண இதிகாசக் கதைகளிலிருந்து நாடகப் பிரதிகள் செய்த சுவாமிகளின் பாய்ஸ் நாடகக் கம்பெனி வழியே டி.கே.எஸ். சகோதரர்கள், சிவாஜி கணேசன், எம்.ஜி. ராமச்சந்திரன், எஸ்.எஸ்.ஆர், மனோரமா போன்றோர் பின்னர் திரைப்படக் கலைக்குப் பங்களிப்பு செய்தார்கள். சமூகப் பிரச்சினைகளைப் பேச வந்த திராவிட இயக்கத்தினர் விதவை மறுமணம், தீண்டாமை, பண்பாடு, தமிழ் மொழி/ இலக்கியம் ஜமீன் ஒழிப்பு, கடவுள் மறுப்பு குறித்துப் பேசினார்கள்.
சென்னை வாழ் மக்களில் குறிப்பிட்ட பிரிவினரின் ரசனைக்குத் தீனி போடும் வகையில் சபாக்களில் நாடகங்கள் நடந்துவருகின்றன. மேஜிக் லாண்டர்ன், கூத்துப்பட்டறை, மூன்றாம் அரங்கு, பரீக்ஷா, மௌனக்குறம், சென்னைக் கலைக்குழு, பல்கலை அரங்கம், சபா நாடகக் குழுக்கள் (எஸ்.வி. சேகர், கிரேசி மோகன்), பிரசன்னா ராமசாமியின் பெண்ணிய நாடகக் குழு, தியேட்டர் கிளப், மெட்ராஸ் பிளேயர்ஸ், நிஜ நாடகக் குழு, முருக பூபதியின் கலைக்குழு, ராஜூவின் அரங்கம் கலைக்குழு, தன்னானே கலைக்குழு, ஜீவாவின் ஆப்டிஸ்ட், ஆழி கலைக்குழு, பிரளயனின் சென்னைக் கலைக்குழு, தலைக்கோல் போன்றவை தமிழகத்தில் பரவலாக நவீன நாடகக் குழுக்களாக இயங்கிவருகின்றன.
நாடக தின செய்தி
ஒவ்வொரு ஆண்டும் உலக நாடக தினமான மார்ச் 27-ல் உலக நாடக விற்பன்னர் ஒருவரை நியமித்து அவரது செய்தியை உலக நாடகவியலாளருக்கு வழங்குதல் மரபு. அதன்படி இந்த ஆண்டு போலந்து நாட்டு நாடக விற்பன்னர் கிறிஸ்டோ வர்லிகோவ்ஸ்கி செய்தி வழங்கியிருக்கிறார். “அரங்க மேடையும், நடிகர்களின் நடிப்பும் பத்தாம்பசலித்தனமாகவே இருப்பதை அனுதிக்க முடியாது. உலகைப் பார்த்து உள்ளம் கொந்தளிக்காமல் இருக்க முடியவில்லை. கொந்தளிப்பின் வெளிப்பாடுகள் என மேடைகளில் நகல்களாக மாற்றாமல் படைப்பாக்கங்களாகச் செய்திட வேண்டும். காப்ஃகா போன்ற படைப்பாளர்களை எண்ணிப் பார்க்க வேண்டியுள்ளது. கிரேக்கக் கலையான பிராமிதியஸ் கதையைக் குறிப்பிடும்போது வாழ்க்கை உண்மை என்பது முடிவு; இது விளக்கங்களுக்கு அப்பாற்பட்டது என்பார் காஃப்கா. அதுபோல நாடக அரங்கமும் விளக்க முடியாத உண்மைகளை விளக்க வேண்டும். சமூகம் மேம்பட நாடக அரங்கும் தன் பங்களிப்பை செம்மையாகச் செயற்படத் தவறக் கூடாது.” இதுதான் அவரது செய்தி.
- கரு.அழ. குணசேகரன், துறைத்தலைவர், நிகழ்கலைத் துறை,
புதுவைப் பல்கலைக்கழகம்.
இன்று உலக நாடக நாள்