

ஜனநாயகம் என்பது மக்களின் கருத்தறிந்து ஆட்சி செய்வதற்காகத்தான். தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுகள் தங்கள் வசம் பெரும்பான்மை வலு இருக்கிறது என்பதற்காக நினைத்தபடியெல்லாம் சட்டங்களை இயற்றிவிட முடியாது. தங்களுடைய முடிவுகளுக்கான நியாயமான காரணங்களை விளக்க வேண்டும். தனிப்பட்ட முறையில் அல்லாமல் பலரும் அறியும் வண்ணம் பகிரங்கமாகச் செய்ய வேண்டும். பெரும்பான்மை வலு காரணமாக அரசின் தீர்மானம்தான் வெற்றிபெறும் என்று தெரிந்திருந்தாலும் நாடாளுமன்றத்தில் விவாதிப்பது என்ற சடங்கை விடாமல் மேற்கொள்கிறோம்.
‘நிலம் கையகப்படுத்தல் சட்டம் - 2013’ தொடர்பாகக் கொண்டுவரப்பட்டுள்ள அவசரச் சட்டம் அரசின் அதிகாரத்தை மட்டுமே பறைசாற்றுகிறது. கோடிக் கணக்கான இந்தியர்களின் அன்றாட வாழ்வாதாரம் தொடர்பான இந்தப் பிரச்சினையில், நாடாளுமன்றத்தில் கருத்தொற்றுமை மூலம் நிறைவேற்றப்பட்ட சட்டத்தை, ஓராண்டுக்குள் திருத்த வேண்டிய அவசியம் - அதுவும் அவசரச் சட்டம் மூலம் - என்ன என்று தெரியவில்லை. நிதியமைச்சர் அருண் ஜேட்லி இது தொடர்பாக வலைதளத்தில் தெரிவித்த சிறு குறிப்பைத் தவிர, அரசுத் தரப்பிலிருந்து விளக்கம் ஏதும் தரப்படவில்லை.
சிறு திருத்தங்கள் மூலம் விலக்களிக்கும் நடவடிக்கை யால் விவசாயிகளுக்கான நஷ்டஈடு, நிவாரணம், மறுவாழ்வு ஆகியவை பாதிக்கப்படவில்லை. சிக்கலான நடைமுறை
களிலிருந்து விடுபட்டு, வளர்ச்சிக்குத் தேவையான நிலங்களைத் தாமதமின்றிப் பெறவே சட்டம் திருத்தப் பட்டுள்ளது என்று அரசுத் தரப்பில் விளக்கப்பட்டுள்ளது. இது உண்மைதானா என்று மேலும் ஆராய்வோம்.
முடுக்கமா, முடக்கமா?
அரசு கூறுவதைப் போல இந்த அவசரச் சட்டம் பழைய சட்டத்தை முடுக்கிவிடும் பணியை மட்டும் செய்கிறதா என்று பார்ப்போம். பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில் 1894-ல் கொண்டுவரப்பட்ட நிலம் கையகப்படுத்தல் சட்டத்தில், ‘அரசின் பயன்பாட்டுக்குத் தேவைப்படும் நிலங்களை எந்தவிதத் தடையுமின்றிக் கையகப்படுத்தலாம்’ என்று கூறப்பட்டது. அப்படிக் கையகப்படுத்தும் நிலங்களுக்கு நஷ்டஈடுகூடத் தராமல் கையகப்படுத்தவும் முடிந்தது. அந்தச் சட்டத்தைத் திருத்தி 2013-ல் புதிய ‘நிலம் கையகப்படுத்தல், மறுவாழ்வு, மறு குடியமர்வுச் சட்டம் (எல்.ஏ.ஆர்.ஆர்.)’ கொண்டுவரப்பட்டது. இதில் நஷ்டஈடு வழங்குவது கட்டாயமாக்கப்பட்டது. அந்தத் தொகையும் எவ்வளவு என்று நிர்ணயிக்கப்பட்டது.
பல போக சாகுபடி நிலங்களையும் பல்வேறு பயிர்கள் விளையும் வளமான நிலங்களையும் கையகப்படுத்தக் கூடாது என்ற நிபந்தனை சேர்க்கப்பட்டது. ஓரிடத்தில் நிலங்களைப் பெருமளவில் கையகப்படுத்துவதாக இருந்தால், நில உடமையாளர்களில் குறைந்தபட்சம் 70% பேர் ஒப்புக்கொண்டால்தான் கையகப்படுத்த வேண்டும் என்றும் கூறப்பட்டது. நிலத்தைக் கையகப்படுத்தினால் சமூகத்துக்கு ஏற்படக்கூடிய பாதிப்புகளையும் சுற்றுச்சூழலுக்கு ஏற்படக்கூடிய ஆபத்துகளையும், உணவு (விளைச்சல்) பாதுகாப்புக்கு ஏற்படக்கூடிய இழப்புகளையும் கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டது.
ஒரே மூச்சில்…
புதிய அவசரச் சட்டத்தில் நில உடமையாளர்களிடம் ஒப்புதல் பெற வேண்டும் என்பதும், சமூகப் பாதிப்புகளைக் கணக்கில் கொள்ள வேண்டும் என்பதும், உணவுப் பாதுகாப்பை மதிப்பிட வேண்டும் என்பதும் ஒரே மூச்சில் ரத்துசெய்யப்பட்டுவிட்டன. இந்த விதிவிலக்குகள் நிலத்தைக் கையகப்படுத்துவதை எளிமையாக்கியது என்பதைவிட, 2013 சட்டத்தையே நிர்மூலமாக்கிவிட்டது என்பதே உண்மை. இதில் கூறப்பட்டுள்ள 5 முக்கிய விதிவிலக்குகளை ஆராய்வோம்.
1. பாதுகாப்பு - நாட்டின் பாதுகாப்புக்காக, பாதுகாப்புக் கான ஆயுத, தளவாட உற்பத்திக்காக நிலங்களைக் கையகப்படுத்தலாம். அதில் அடித்தளக் கட்டுமானத் திட்டங்களும் தனியார் பங்கேற்கும் திட்டங்களும் வரும்.
2. தொழில்துறைக்குத் தேவைப்படும் நிலங்கள் - இது ஏக்கர் கணக்கில் அல்ல, கிலோ மீட்டர் கணக்கில்கூடப் பரப்பளவில் நீளும்.
3. வீடமைப்புத் திட்டங்களுக்கான நிலம் - இதில், ‘வாங்கக்கூடிய விலையில்’ வீடுகள் கிடைக்கச் செய்வதற்காக நிலத்தைப் பெறுவது பற்றியது. ‘யார் வாங்கக்கூடிய விலையில்?’ என்பது இது அமலாகும் போதுதான் தெரியும்.
4. கிராமப்புற அடித்தளக் கட்டமைப்பு.
5. அடித்தளக் கட்டமைப்பு, சமூக அடித்தளக் கட்டமைப்பு ஆகியவற்றுக்காக. இதில் அரசு, தனியார் இணைந்து மேற்கொள்ளும் திட்டங்களும் அடக்கம். இவற்றுக்காகக் கையகப்படுத்தப்படும் நிலம், அரசின் வசம் இருக்கும். சாலைகள், இருப்புப் பாதைகள், துறைமுகங்கள், விமான நிலையங்கள், சுரங்கங்கள், மின்சாரத் துறை, எண்ணெய்-நிலவாயுக் குழாய்ப் பாதைகள், தொலைத்தகவல் தொடர்புக் கோபுரங்கள், அணைகள், வாய்க்கால்கள், கழிவுநீர்க் கால்வாய்கள், மருத்துவமனைகள், பள்ளிக்கூடங்கள், கல்லூரிகள், விற்பனைக் கூடங்கள், குளிர்சாதனக் கிடங்குகள், வேளாண் துறைக்கான பயன்பாடுகள், 3 நட்சத்திர நிலைகளுக்கு மேற்பட்ட ஹோட்டல்கள் என்று நிலங்களுக்கான தேவை விரிவடைந்துகொண்டே போகிறது. தனியார் பள்ளிக்கூடம் தொடங்கவும், மருத்துவமனைகள் கட்டவும் நிலங்களைக் கையகப்படுத்தி அரசு தரக் கூடாது என்று இருந்த தடைகளும் விலக்கப்பட்டுள்ளன.
புதிய அவசரச் சட்டமானது 1894-ம் ஆண்டு சட்டத்தைவிட ஒரு அம்சத்தில் மிகவும் மோசமாக இருக்கிறது. அந்தச் சட்டப்படி, பாதிக்கப்பட்ட நபர் நீதிமன்றத்திலாவது வழக்கு தொடுக்க முடியும். இப்போது அதற்கும் வழியில்லை. 2013 சட்டத்தில் விவசாயிகளுக்குச் சாதகமாக இருந்த அம்சங்களை நீர்த்துப்போகச் செய்யவே இந்த அவசரச் சட்டம் வழிசெய்துள்ளது. ‘2013 சட்டத்தின் கீழ் பயன்பெற முடியாத பிரிவுகளுக்காகவே’ இந்த அவசரச் சட்டம் என்கிறார் ஜேட்லி. பழைய சட்டத்தின் 105-வது பிரிவின் கீழ் 2 மாத அவகாசம் தந்து, அறிவிக்கை மூலமே அதைச் சாதிக்கலாம். இந்த அவசரச் சட்டமே தேவையில்லை.
நஷ்டஈடு எப்படி?
1894-ம் ஆண்டு சட்டத்தைவிட அதிக நஷ்டஈடுக்கு 2013-வது சட்டம் வழிவகுத்தது. அவசரச் சட்டம் இதைக் குறைக்கவில்லை. ஆனால் ‘வேறு வகையில்’ பாதிக்கிறது. நில உடமையாளர்களின் சம்மதத்தைப் பெறத் தேவை யில்லை என்பதால், அவர்களால் கூட்டுபேரம் மூலம் அதிகத் தொகையைப் பெற முடியாமல் போகிறது. ஏற்கெனவே, அடையாளம் காணப்பட்டு, இழப்பீடுகுறித்துப் பேச்சு நடந்த திட்டங்களில் நில உடமையாளர்களுக்கு இதனால் இழப்பு அதிகம்; காரணம், புதிய அவசரச் சட்டப்படி மாநில அரசின் விதிகள்படிதான் இழப்பீடு தீர்மானிக்கப்படும். ஹரியாணா அரசு இதையே வாய்ப்பாகக் கொண்டு, ஏற்கெனவே அறிவித்த தொகையைவிடக் குறைவாகத்தான் இழப்பீட்டை நிர்ணயித்திருக்கிறது. இதனால் தொழில் நிறுவனங்களுக்கு லாபம், விவசாயிகளுக்கு நஷ்டம். கையகப்படுத்தல் என்ற சிக்கலிலிருந்து விரைவாக விடுதலை பெறவே அவசரச் சட்டம் என்று கூறப்படுகிறது.
வங்கியில் வாடிக்கையாளரைச் சேர்த்துக்கொள்ள, மோட்டார் வாகன உற்பத்தியாளர்களுக்குப் புகை வெளியீட்டுக்கான தரத்தை நிர்ணயிக்கவெல்லாம் அவகாசம் தரப்படும்போது, நிலத்தைக் கையகப்படுத்த மட்டும் துரிதமாகச் செயல்படத் துடிப்பது ஏன்? தொழில் ஒப்பந்தங்களை முன்தேதியிட்டு ரத்துசெய்யக் கூடாது என்று நினைக்கும் அரசு, விவசாயிகளுக்கு ஒரே ஜீவாதாரமாக உள்ள நிலங்களைப் பறிப்பதில் மட்டும் வேகம் காட்டுவது ஏன்?
2013-ல் கொண்டுவரப்பட்ட சட்டத்தில் சில குறைகள் இருக்கலாம். நிலங்களைக் கையகப்படுத்தத் தாமதமாக்கும் சில பிரிவுகள் அதில் இருப்பதாகக் கூறப்பட்டாலும், அந்தச் சட்டத்தை நாம் அமல்படுத்தவேயில்லையே? அதற்குள் ஏன் அதை மாற்ற முடிவெடுக்க வேண்டும்? நிலங்களைக் கையகப்படுத்த நீண்ட தாமதம் ஆகிறது என்பது எவ்வளவு உண்மையோ, அதைவிட உண்மை அப்படி எதற்காக நிலம் கையகப்படுத்தப்பட்டதோ அந்தப் பயன்பாட்டுக்கு அந்த நிலத்தைக் கொண்டுவருவதில் ஏற்படும் தாமதமும்? 2013-வது ஆண்டு சட்டம் சரியில்லை என்று மாநில அரசுகள், அரசுத் துறை நிறுவனங்கள், தொழிலதிபர்கள் கருதினால், அதைப் பற்றி விவாதித்து அந்தக் குறைகளை நீக்கியிருக்கலாமே? 2013-வது வருஷத்திய சட்டம் காலதாமதத்தைத்தான் ஏற்படுத்தும் என்றால், எதிர்க் கட்சி வரிசையில் இருந்த பாரதிய ஜனதா அதை அப்போதே சொல்லியிருக்கலாமே? விவசாய நிலங்களை எளிதில் கையகப்படுத்திவிடாமல் இருக்க மேலும் கடுமையான பிரிவுகளை இதில் சேர்க்க வேண்டும் என்றுகூட சுஷ்மா ஸ்வராஜும் ராஜ்நாத் சிங்கும் அப்போது வாதாடினார்களே? அந்த மசோதாவை நீர்த்துப்போகச் செய்யக் கூடாது என்று சுமித்ரா மகாஜன் தலைமையிலான நாடாளுமன்றக் குழுகூட அப்போதைய அரசை வலியுறுத்தியதே?
பாஜகவின் பல்டி
இப்போது பாஜக எப்படிப் புதிய காரணங்களைக் கண்டுபிடித்திருக்கிறது? விவசாயிகளுடைய கோரிக்கை களும் கவனிக்கப்பட வேண்டியிருக்கும்போது, ஏன் எல்லோருமே தொழில்துறையினரின் கோரிக்கைகளை மட்டுமே செவிமடுக்கிறார்கள்? புதிய சட்டத்தால் பயன்பெறக் காத்திருக்கும் ரியல் எஸ்டேட் முதலாளிகள்குறித்து ஏன் யாருமே பேசத் தயங்குகிறார்கள்? இந்தக் கேள்விகளை யெல்லாம் எழுப்பினால், இந்த விவாதம் பொது நன்மையைக் குறித்தல்ல - அதிகாரத்தைக் குறித்து என்பது புரியும். ரியல் எஸ்டேட்காரர்கள் - தொழில்துறையினர் - பெருநிறுவனங்கள் ஒருபுறமும் ஏழை விவசாயிகள் மறுபுறமும் நிற்கிறார்கள். சமமான அதிகாரமற்ற இரு குழுக்களிடையேயான மோதல் என்பதால், நியாயங்கள் வெளிப்படவில்லை. இந்த மோதலில், நியாயத்தின் பக்கம் நிற்கத் தவறுவோமானால், மக்களுடைய நன்மைக்கான பொது விவாதம் என்ற ஜனநாயகத்தின் மூலமே வலுவிழந்துவிடும். நம் காலத்து அரசியலில் இதுதானா தர்மம்?
- யோகேந்திர யாதவ், தலைமை ஊடகத் தொடர்பாளர், ஆம் ஆத்மி கட்சி, தொடர்புக்கு: yogendra.yadav@gmail.com